- தமிழ்நாடு அரசு தொடங்கிய ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம், எதிர்பார்த்த பலனை அளித்திருப்பதாக வெளியாகும் செய்திகள் நம்பிக்கையளிக்கின்றன. சமீபத்தில், மாநிலத் திட்டக் குழு இது தொடர்பாக நடத்திய ஆய்வின் மூலம், இத்திட்டத்தால் ஏற்பட்டிருக்கும் பலன்கள் தெரியவந்திருக்கின்றன.
- ஒருகாலத்தில் மருத்துவர்கள் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று மருத்துவம் பார்க்கும் நிலை இருந்தது. மக்கள்தொகை அதிகரிப்பு, மருத்துவத் துறை வணிகமயம் எனப் பல்வேறு மாற்றங்களுக்குப் பின்னர், அந்த நிலை ஏறத்தாழ வழக்கொழிந்துவிட்டது.
- மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் செல்ல முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு இது சிரமம் அளிக்கும் விஷயமாகவே தொடர்ந்தது. இந்நிலையில், 2021 ஆகஸ்ட் 5 அன்று, ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் தொடங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் சாமனப்பள்ளி கிராமத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்த இந்தத் திட்டம், தற்போது இரண்டு ஆண்டுகளை நிறைவுசெய்யவுள்ளது.
- இதற்கான முன்னோடித் திட்டங்கள் ஏற்கெனவே தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்தன என்றாலும், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் விதம் பரவலான வரவேற்பைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, வீட்டிலேயே ஆரம்பநிலை சிகிச்சை, சரியான நேரத்தில் மருந்துகள் விநியோகம் போன்றவை இத்திட்டத்தின் மூலம் சாத்தியமாகியிருப்பதை இந்த ஆய்வு வெளிக்கொணர்ந்திருக்கிறது.
- நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கான சிகிச்சைகள், இயன்முறைப் பயிற்சிகள், மருந்து, மாத்திரை வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஒரு மருத்துவக் குழு உருவாக்கப்பட்டிருக்கிறது. மகளிர் சுகாதாரத் தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று மருந்து, மாத்திரைகளை வழங்கிவருகின்றனர். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறையின்கீழ் அமல்படுத்தப்பட்டிருக்கும் இத்திட்டம், தொடங்கிய ஒரே ஆண்டில் 83 லட்சம் நோயாளிகளுக்குச் சிகிச்சை கிடைக்க வழிவகை செய்தது.
- இந்நிலையில், இத்திட்டத்தின் செயல்பாடு குறித்து 6,503 பேரிடம் மாநிலத் திட்டக் குழு சார்பில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட 4,793 பேர் (73.7%), கடந்த ஓராண்டாக நீரிழிவுப் பரிசோதனை செய்துகொண்டவர்கள். இவர்களில் 3,433 பேர் (71%) இந்தத் திட்டத்தின் மூலம் தங்கள் உடலில் சர்க்கரை அளவைப் பரிசோதித்துக்கொண்டவர்கள். இதில் 2,383 பேருக்கு வீட்டிலேயே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
- மற்றவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ்வரும் மருத்துவ நிறுவனங்களில் பரிசோதித்துக் கொண்டவர்கள். இதில் 1,325 பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 54.03% பேருக்கு இந்தத் திட்டத்தின்கீழ் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் பலர் அரசு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுவருகின்றனர்.
- இத்திட்டம் முறையாகச் செயல்படுத்தப்படுவதில்லை எனும் புகார்களும் இருக்கவே செய்கின்றன. அப்படியான பின்னடைவுகளை அடையாளம் கண்டு, அவற்றை விரைவில் சரி செய்வதும் அரசின் கடமை. அர்ப்பணிப்புடன் இத்திட்டத்தைச் செயல்படுத்தும் மருத்துவப் பணியாளர்களையும் தன்னார்வலர்களையும் ஊக்கப்படுத்தும் நடவடிக்கைகளும் அவசியம். பணி அழுத்தம் காரணமாக இதில் சில முறைகேடுகள் நடப்பதாகவும் விமர்சனங்கள் உண்டு. அரசு அதற்கும் முகம்கொடுத்துச் செயல்பட வேண்டும்.
நன்றி: தி இந்து (19 – 04 – 2023)