TNPSC Thervupettagam

ஆறறிவால் என்ன பயன்

April 3 , 2024 274 days 231 0
  • சூடானில், 2023 ஏப்ரலில் தொடங்கிய உள்நாட்டு போருக்குப் பிறகு, ஏறத்தாழ 1.80 கோடி மக்கள் கடுமையான உணவுத் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகளும், முதியவர்களும் பசியால் இறப்பது அன்றாட நிகழ்வாகி இருக்கிறது. ஹைட்டியிலும் அதுதான் நிலை. காஸாவின் நிலைமை குறித்து சொல்லவே வேண்டாம்.
  • இந்தப் பின்னணியில் ஏனைய நாடுகளில் உணவுப் பொருள்கள் வீணாகின்றன என்கிற செய்தியைக் கேட்கும்போது ஒருபுறம் ஆத்திரமும், இன்னொருபுறம் அதிர்ச்சியும் எழுகிறது. பசியாலும் பட்டினியாலும் வாடும் சூடான், ஹைட்டி, காஸா உள்ளிட்ட பகுதிகள் குறித்தும், வளர்ச்சியடையாத பல ஆப்பிரிக்க, பசிபிக் கடல் பகுதி நாடுகளில் ஏழை எளிய மக்களின் நிலைமை குறித்தும் கிஞ்சித்தும் கவலைப்படாமல் உலகம் இயங்குகிறது என்றால் மானுடம் தோற்றுவிட்டது என்றுதான் பொருள்.
  • ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் ஓர் ஆய்வு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. "வீணாக்கப்படும் உணவுப் பதார்த்தங்கள் குறியீடு அறிக்கை 2024' மனித சமுதாயத்தில் காணப்படும் முரண்கேட்டை வெளிப்படுத்துகிறது. ஒருபுறம் உணவுக்கான தட்டுப்பாடும், இன்னொருபுறம் வீணாகும் உணவுப் பதார்த்தங்களும் சர்வதேச அளவில் உணவுப் பொருள்களின் விநியோகமும், நுகர்வும் முறையாக இல்லாமல் இருக்கும் இரட்டை நிலையை வெளிப்படுத்துகின்றன.
  • அந்த குறியீட்டு அறிக்கையின்படி, உலகில் 78 கோடிக்கும் அதிகமானோர் உணவுப் பொருள் தட்டுப்பாட்டால் கடும் பசியில் தவிக்கிறார்கள். அதேநேரத்தில், 1.05 பில்லியன் மெட்ரிக் டன் அளவிலான உணவுப் பதார்த்தங்கள் } அதாவது, மொத்த உணவுப் பொருள்களில் 5}இல் ஒருபங்கு } பயன்படுத்தப்படாமல் வீணாக்கப்படுகிறது. இந்த ஆய்வு 2022}இல் எடுக்கப்பட்டது. இப்போது நிலைமை இன்னும் மோசமாகி இருக்க வேண்டும்.
  • 2021}இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வை மேம்படுத்தியும், விரிவுபடுத்தியும் 2022}இல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளை இந்த ஆய்வு உட்படுத்தியிருக்கிறது. அந்த ஆய்வு தெரிவிக்கும் மிக முக்கியமான தகவல் என்னவென்றால், உணவை வீணாக்கும் மனப்போக்கு எந்தவொரு குறிப்பிட்ட பகுதியையும் சாராமல் எல்லா நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகிறது என்பதுதான்.
  • இந்தப் பிரச்னையை ஏதோ மேம்போக்கானது என்றோ, தவிர்க்கப்பட வேண்டியது என்றோ ஒதுக்கிவிட முடியாது. பணக்கார நாடு, ஏழை நாடு, அதிக வருவாய்ப் பிரிவினர், நடுத்தர வருவாய்ப் பிரிவினர் என்பது போன்ற வேறுபாடுகள் இல்லாமல் அனைத்துப் பிரிவினராலும் உணவுப் பதார்த்தங்கள் வீணாக்கப்படுவதை ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
  • பயிராகும் இடத்திலிருந்து சாப்பிடும் தட்டுக்கு வருவது வரையில் எல்லா நிலையிலும் உற்பத்தியாகும் உணவுப் பொருள்கள் வீணாகின்றன என்பதை அறிக்கை அடிக்கோடிட்டுக் குறிப்பிடுகிறது. உற்பத்தியான உணவுப் பொருள்கள் எப்படி மதிப்பீடுக்கு உள்ளாகின்றன, விநியோகிக்கப்படுகின்றன என்பது குறித்தும் அறிக்கை தெளிவாகவே சுட்டிக்காட்டுகிறது.
  • நாள்தோறும் 78.3 கோடி மக்கள் கடுமையான பசியிலும் பஞ்சத்திலும் தவிக்கும்போது, 19% உணவுப் பொருள்கள் வீணடிக்கப்படுகின்றன என்பது உடனடியாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய பிரச்னை. இந்தப் போக்குக்கு மக்களின் மனோபாவத்திலும் பழக்கவழக்கங்களிலும் மாற்றம் ஏற்படுவது அவசியம்.
  • உலகளாவிய நிலையில் ஒவ்வொரு வீட்டிலும் தனிப்பட்ட முறையில் வீணடிக்கப்படும் உணவுப் பொருள்கள் (பர் கேப்பிட்டா ஹவுஸ் ஹோல்ட் ஃபுட் வேஸ்ட் ஜெனரேஷன்) ஏறத்தாழ ஒரே மாதிரியாகக் காணப்படுவதையும் அறிக்கை குறிப்பிடுகிறது. அது பணக்கார நாடுகளுக்கு மட்டுமல்லாமல் உலகளாவிய பிரச்னையாகவும் இருக்கிறது.
  • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின்படி, தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தங்களில் மூன்றில் ஒருபங்கு நுகர்வதற்கு முன்பே வீணாக்கப்படுகிறது அல்லது கெட்டுப்போய் விடுகிறது. வீடுகளில் வீணாகும் உணவுப் பொருள்கள் குறித்த ஆய்வின்படி, இந்தியாவில் ஆண்டொன்றுக்கு ஒவ்வொருவரும் 50 கிலோ அளவிலான உணவை வீணாக்குகிறோம்.
  • இன்னொருபுறம், இந்தியாவிலுள்ள 74.1% மக்கள்தொகையினர் ஆரோக்கியமான உணவு கிடைக்காத நிலையில் இருக்கிறார்கள். கோடிக்கணக்கானோர் ஊட்டச்சத்துள்ள உணவு கிடைக்காமல் தவிக்கும் நிலையில், உணவுப்பொருள்கள் வீணாவதைத் தடுக்க வேண்டியது தார்மிகக் கடமையும்கூட.
  • இது ஏதோ பசி, பட்டினியுடன் மட்டுமே தொடர்புடைய பிரச்னை என்று புறந்தள்ளிவிடக் கூடாது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது. உலகளாவிய அளவிலான பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் 8% முதல் 10% வரை வீணாக்கப்படும் உணவுப் பொருள்களுக்கும் பங்கு உண்டு. உணவுப் பொருள்கள் வீணாவது மட்டுமல்லாமல் பருவநிலை மாற்றம், பல்லுயிர் பெருக்க இழப்பு, தண்ணீர்த் தட்டுப்பாடு உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கும் வழிகோலுகிறது.
  • அதிகரித்துவரும் குப்பைக்கூளங்கள், குடியிருப்புக்கும், விவசாயத்துக்குமான இடங்களை ஆக்கிரமித்து வருகின்றன. அவற்றில் சமைக்கப்பட்ட பதார்த்தங்கள், வீணாக்கப்படும், அழுகிப்போன காய்கறிகள், தானியங்கள் உள்ளிட்டவையும் குப்பைமேடுகளில் கலக்கின்றன. அவை குப்பைக்கூளங்களிலிருந்து உருவாகும் மீத்தேன் வாயு வெளியேற்றத்துக்கு காரணமாவதால் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு வழிகோலுகின்றன.
  • உலகம் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளப் போராடும் வேளையில் உணவுப் பொருள்கள் வீணாவதைத் தடுக்கும் முயற்சி அத்தியாவசியமானது. பொருளாதாரம், சுற்றுச்சூழல், சமூகக் கடமை ஆகியவை இதன் பின்னணியில் இருப்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

நன்றி: தினமணி (03 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories