TNPSC Thervupettagam

ஆறு வாரங்களில் அதிகரிக்காது தன்னம்பிக்கை

October 14 , 2024 95 days 137 0

ஆறு வாரங்களில் அதிகரிக்காது தன்னம்பிக்கை

  • பெண்கள் தங்கள் வாழ்வுரிமைக் காகவும் அனைத்துத் தளங்களிலும் தங்களின் இருப்பை உறுதிசெய்யவும் போராடியதைத் தொடர்ந்து அவர்களுக்கான அங்கீகாரம் ஓரளவுக்குக் கிடைக்கத் தொடங்கியது. சுவாசிப்பதற்கும் வாழ்வதற்கும் உள்ள வேறுபாட்டைப் பெண்கள் உணரத் தொடங்கியபோதே உரிமைக்குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. உயிரோடு இருப்பதற்குச் சுவாசித்தால் மட்டும் போதும். ஆனால் வாழ்வதற்கு? இந்தக் கேள்விதான் பெண்ணுரிமைக் குரல்கள் உலகம் முழுவதும் சேர்ந்தொலிக்கக் காரணமாக அமைந்தது.
  • கல்வியின் மூலம் அறிவும் ஞானமும் பெற்ற பெண்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தனர். வெறும் போகப் பொருளாக மட்டுமே தாங்கள் கையாளப்படுவதற்கு எதிரான தங்களது நிலைப்பாட்டை உணர்த்தினர். பெண்கள் மீது கட்டமைக்கப்பட்ட இலக்கணங்களையும் அடையாளங் களையும் கேள்வி கேட்டனர். நாடுகள் தோறும் பெண்களுக்கான உடையும் கலாச்சாரமும் வேறுபட்டாலும் அடிப் படையில் அவர்கள் அனைவருமே நுகர்வுப் பொருளாக மட்டுமே பாவிக்கப்படுவதை எதிர்த்தனர். காட்சிப் பொரு ளாக அவர்கள் நடத்தப்படு வதைக் கண்டித்தனர்.

இதுவல்ல ‘அழகு’

  • 1900களின் மத்தியில் பரவலாகக் கவனம் பெறத் தொடங்கிய ‘அழகி’ப் போட்டிகள் பெண்ணிய வாதிகளை எரிச்சலூட்டின. ‘மிஸ் அமெரிக்கா’ நிகழ்ச்சிக்கு எதிராக அமெரிக்கப் பெண்கள் 1968இல் நடத்திய போராட்டம், பெண்கள் மீதான கற்பிதங்களுக்குக் கடிவாளம் போடுவதாக அமைந்தது. பெண்களின் உடலைக் காட்சிப்படுத்தும் இது போன்ற ‘அழகி’ப் போட்டிகள், பிற்போக்குத் தனமானவை மட்டுமல்ல தீவிர பெண் வெறுப்பு சிந்தனை கொண்டவை என்பது போராட்டக்காரர்களின் வாதம். சிலரது வியாபாரத்தைப் பெருக்கும் நோக்கில் 1900களின் தொடக்கத்தில் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது ‘மிஸ் அமெரிக்கா’ அழகிப்போட்டி. அமெரிக்கப் பெண்களின் தோற்றத்தை மட்டுமே குறிவைத்து இந்தப் போட்டிகள் நடத்தப்படுவது பெண்ணுரிமைக்கு எதிரானது எனப் பெண்ணியவாதிகள் வாதிட்டனர்.
  • அழகை மட்டுமல்லாமல் அந்தப் பெண்களின் அறிவையும் மையப் படுத்தியதாக இந்தப் போட்டி இருக்கும் என்று ஆரம்பத்தில் சொல்லப் பட்டாலும், போகப் போக விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு அழகு என்கிற ஒற்றைப் புள்ளியில் மட்டுமே வந்து நின்றது. 18 முதல் 28 வயதுக்குள்பட்ட திருமணம் ஆகாத, ஒல்லியான, துறுதுறுப்பான, தன்பாலின ஈர்ப்பு இல்லாத பெண்கள் குறிப்பாக, அமெரிக்க வெள்ளையினப் பெண்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனு மதிக்கப்பட்டனர். இந்த விதிமுறைகள் பெண்ணுரிமைக்கு எதிரானவை மட்டு மல்ல, நிறவெறியை ஆதரிக்கும் விதத்தில் இருக்கின்றன எனப் பெண்கள் போராடினர்.

அழகால் அதிகரிக்குமா தன்னம்பிக்கை?

  • அன்றைக்கு அமெரிக்காவில் தொடங்கிய அழகிப் போட்டி கலாச்சாரம் இன்று ‘உலக அழகி’, ‘பிரபஞ்ச அழகி’ என வளர்ந்து உள்ளூர் அழகிப் பட்டங்கள் வரை தொடர்வது வேதனை யானது. ஒரு பெண்ணின் உடலமைப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என ஆண்களால் கட்டமைக்கப்பட்ட வடிவத்தைப் பெறுவதே பெரும்பாலான பெண்களின் இலக்காகத் திட்டமிட்டு மாற்றப்பட்டது. தன் தோற்றம், நிறம் சார்ந்த குற்றவுணர்வுக்குப் பெண்களை ஆளாக்குவதன் பின்னணியில் கோடிக் கணக்கில் பணம் புரளும் ‘அழகு வர்த்தகம்’ அடங்கியிருக்கிறது.
  • உலக மயமாக்கலுக்குப் பிறகு இது அதிகரிக்கத் தொடங்கி இன்று அதன் உச்சத்தில் இருக்கிறது. தங்கள் படிப்பாலும் செயலாலும் கிடைக்காத தன்னம்பிக் கையைச் சிவப்பழகு கிரீம்கள் தருவதாகக் கட்டமைக்கப்பட்ட விளம் பரங்களைப் பெண்கள் பலர் நம்பவைக்கப்பட்டனர். ஆறே வாரங்களில் சிவப்பழகு கிடைத்துவிடும் என்கிற அழகுசாதனப் பொருள்கள் தயாரிப்பு நிறு வனங்களின் போலியான வாக்குறுதிகளை நம்பி வருடக் கணக்கில் அந்தக் களிம்புகளைப் பூசும் பெண் களும் உண்டு. இது அந்தப் பெண்களின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல. அழகு சார்ந்து அவர்கள் மீது சுமத்தப்படும் சமூக நிர்பந்தமே அவர்களை அப்படிச் செய்யத் தூண்டுகிறது.

பெண்களை அவமதிக்கும் செயல்

  • அமெரிக்கக் காவல் அதிகாரி ஒருவரால் ஆப்ரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் ஃபிளாயிடு என்பவர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை யடுத்து 2020இல் உலகம் முழுவதும் நிறப் பாகு பாட்டுக்கு எதிரான குரல் கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து சிவப்பழகு கிரீம்களையும் பலர் எதிர்க்கத் தொடங்கினர். அதன் விளைவாகத் தெற் காசிய நாடுகளில் பெரு மளவில் விற்பனையான ‘ஃபேர் அண்டு லவ்வி’ சிவப்பழகு கிரீமின் பெயரை ‘க்ளோ அண்டு லவ்லி’ என யுனிலிவர் நிறுவனம் மாற்றியது. அழகு சார்ந்து பெண்களின் மீது திணிக்கப்படும் கற்பிதங் களுக்கு இது ஒரு சோற்றுப் பதம்.
  • ‘மிஸ் அமெரிக்கா’ போட்டியை எதிர்த்துப் போராட்டம் நடத்தியவர்களில் ஒருவரான கரோல் ஹானிஷ், கட்சி வேறுபாடுகளின்றிப் பெண்கள் அனை வரும் இத்தகைய போட்டிகளை எதிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். ‘எல்லாப் பெண்களும் அழகானவர்களே’, ‘கால்நடைகளைப் போலப் பெண்களை அணிவகுக்கச் செய்வது அவர்களை அவமதிக்கும் செயல்’, ‘ஒடுக்குமுறையால் ஏற்படும் காயங்களைப் பெண்களின் மேக் அப் மறைத்துவிடுமா’ என்பது போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைக் கையில் ஏந்திப் பெண்கள் போராடினர். ‘மிஸ் அமெரிக்கா’ போட்டியை எதிர்ப்பதற் கான பத்துக் காரணங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரத்தைப் பெண்கள் விநியோகித்தனர். தனி நபர் நடிப்பு மூலமும் சொற்பொழிவு மூலமும் தங்களது கருத்துகளைப் பார்வை யாளர்கள் மத்தியில் விதைத்தனர்.

இது தனிப்பட்ட பிரச்சினையல்ல

  • தங்கள் பாலினம், உடல், கருக் கலைப்பு உரிமை, வீட்டு வேலை பகிர்வு போன்றவை பெண்களின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல என்று வாதிட்டார் அமெரிக்கப் பெண் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த கரோல் ஹானிஷ். இவை எல்லாமே பெண்களின் ‘உரிமை’ என்று சொன்னதோடு, அவரவர் பிரச்சினைக்கு அவரவரே குரல்கொடுக்க வேண்டும் என்கிற பிற்போக்குக் கருத்தையும் எதிர்த்தார். ‘ஆண்கள் வீட்டுவேலையிலும் குழந்தை வளர்ப்பிலும் பங்கெடுக்க வேண்டும் என ஒரு பெண் சொன்னால் அது அவருடைய கணவரைப் பற்றிய தனிப்பட்ட புகார் அல்ல. பெண்கள் தங்கள் உரிமைகளுக்காகக் குரல்கொடுக்கும்போதெல்லாம் அதை அவர்களது தனிப்பட்ட பிரச்சினையாகச் சுருக்குவதை இந்தச் சமூகம் காலம்காலமாகச் செய்து வருகிறது. பெண்களின் தனிப்பட்ட விஷயம் அனைத்திலுமே அரசியல் இருக்கிறது. அரசியல் என்பது தேர்தல் அரசியல் அல்ல. பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் அரசியல் இது’ என எழுதினார் கரோல் ஹானிஷ்.

ஒற்றுமையே பலம்

  • தங்கள் உரிமைகளுக்காக 1900களின் மத்தியில் போராடிய பெண்கள், ‘பகுத்தறிவு’ப் பெண்ணியத்தை முன்வைத்தனர். பெண்கள் மீது சுமத்தப்பட்டிருந்த அறிவியலுக்குப் புறம்பான கட்டுக்கதைகளை அவர்கள் உடைத்தெறிந்தனர். மதத்தின் பேரிலும் உளவியல்ரீதியாகவும் போலி வரலாற்றின் அடிப்படையிலும் பெண்கள் மீது திணிக்கப்பட்ட பழமை வாதங்களை இவர்கள் எதிர்த்தனர். பெண்களைப் பண்டமாகப் பார்க்காமல் சக மனுஷியாகப் பார்க்கும் மார்க்ஸிய எதார்த்தவாத நடைமுறையை இவர்கள் முன்மொழிந்தனர். ‘ஒவ்வொரு பெண்ணும் தனித்தனியாகப் போராடு வது எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத் தாது; பெண்கள் அனைவரும் ஏதோவோர் அமைப்பாக ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் உரிமை கிடைக் கும்’ என்பது இவர்களது வாதம்.

அவளுக்கென்று ஒரு ‘பணம்’

  • பெண்கள் தங்களுக்கென்று தனி பணப்பையை வைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய அமெரிக்க வாக்குரிமை - பெண்ணுரிமைப் போராளி சூசன் பி ஆண்டனியின் கருத்தோடு கரோல் உடன்பட்டார். பெண்களின் பொதுவெளிப் பங்களிப்பில்லாமல் இது சாத்தியப்படாது என கரோல் சொன்னார். ‘பெண்கள் வீட்டைவிட்டு வெளியேறி வேலைக்குச் சென்று பொருளாதாரத் தற்சார்பை உருவாக்கிக் கொள்ளாதவரை அவர்களுக்கு விடுதலை இல்லை. பெண்களின் பொது வாழ்க்கைச் செயல்பாட்டை உறுதிசெய்யும் வகையில் குழந்தை வளர்ப்பு மையங்களை அரசு நடத்துவதை வலியுறுத்தி நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும். பெண்களும் பணியாற்ற உகந்த வகையில் பணியிடங்களைச் சமத்துவ நோக்கில் கட்டமைக்க வேண்டும்’ என்றார் கரோல். பெண்ணுரிமைப் போராட்டங்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கு இந்தப் போராட் டங்கள் துணைநின்றன.

நன்றி: இந்து தமிழ் திசை (14 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories