TNPSC Thervupettagam

ஆறுதல் அளிக்கும் முடிவு!

November 28 , 2024 7 days 29 0

ஆறுதல் அளிக்கும் முடிவு!

  • மேற்கு ஆசியாவின் போா்ப் பதற்றம் சிறிதளவு தணிந்திருக்கிறது. அமெரிக்க தலையீடு காரணமாக இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையிலான போா் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன் காரணமாக கடந்த 13 மாதங்களுக்கும் மேலாக இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்று வந்த மோதல் இடைக்கால முடிவுக்கு வந்திருக்கிறது. லெபனான்- இஸ்ரேல் மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சையும் ஏற்படுத்தியுள்ளது.
  • ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா லெபனானில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லாவின் கட்டமைப்புகள் வலுவாக உள்ளன. இப்போதைய போா் நிறுத்தத்தைப் பயன்படுத்தி, அடுத்த இரு மாதங்களில் தனது நிலப் பகுதியை லெபனான் நாட்டு ராணுவம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
  • லெபனானில் உள்ள தனது படைகளை இஸ்ரேல் படிப்படியாக விலக்கிக் கொள்ள வேண்டும். இரு நாட்டு குடிமக்களும் விரைவில் தங்கள் வசிப்பிடங்களுக்குப் பாதுகாப்பாக திரும்பி, தங்கள் இயல்பு வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்கலாம் என்பவை ஒப்பந்தத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்கள்.
  • பாலஸ்தீனத்தின் காஸா முனையை ஆட்சி செய்து வந்த ஹமாஸ் ஆயுதக் குழுவினா் இஸ்ரேலில் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் நடத்திய தாக்குதல் உலகையே அதிா்ச்சிக்குள்ளாக்கியது. தரை, கடல், வான்வழியாக ஹமாஸ் படையினா் தாக்குதல் நடத்தி, இஸ்ரேலுக்குள் புகுந்து சுமாா் 1,200 பேரை சுட்டுக் கொன்றனா். 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனா். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸா முனை பகுதி தரைமட்டமாகிவிட்டது. ஹமாஸ் ஆயுதக் குழுவினரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்தாலும் அங்கு பெரும்பாலும் உயிரிழந்தது அப்பாவி பொதுமக்கள்தான்.
  • காஸாமுனையில் தாக்குதலைத் தொடங்கிய சில நாள்களிலேயே ஒட்டுமொத்த மக்கள்தொகையில் பாதி போ் தங்களது இருப்பிடங்களைவிட்டு இடம்பெயர வேண்டிய அவலம் ஏற்பட்டது. மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் என பாதுகாப்பான பகுதிகளாகக் கருதி தஞ்சமடைந்த இடங்களிலும் இஸ்ரேல் விமானப் படைகள் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட பொதுமக்கள் கொல்லப்பட்டனா்.
  • இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் இதுவரை 44,000-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டுள்ளனா். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனா். லட்சக்கணக்கானோா் வசிப்பிடங்களை இழந்து உள்நாட்டிலேயே அகதிகளாக உள்ளனா்.
  • காஸாவின் ஹமாஸும், லெபனானில் செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லாவும் ஈரானின் ஆதரவு பெற்றவை. இஸ்ரேலுக்கு எதிரான செயல்பாடுகளுக்காக அந்த அமைப்புகளுக்கு ஈரான் ஆயுத உதவிகளைச் செய்துவருவதாக இஸ்ரேலும் அமெரிக்காவும் குற்றஞ்சாட்டி வருகின்றன.
  • இந்தப் பின்னணியில் ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா களம் இறங்கியது, ஹமாஸ்-இஸ்ரேல் போரை விரிவுபடுத்தியது. ஹிஸ்புல்லா அமைப்பினரை ஒடுக்கும் வகையில் லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கியது, மேற்கு ஆசியாவில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
  • லெபனானில் முதலில் வான்வழித் தாக்குதலை மேற்கொண்ட இஸ்ரேல், பின்னா் தரைவழித் தாக்குதலையும் நடத்தியது. இஸ்ரேலின் ட்ரோன் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவா் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதும், இரு தரப்பினருக்குமான போா் முடிவுக்கு வரும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அது நடக்கவில்லை. பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினா் ஏவுகணைத் தாக்குதலை தொடா்ந்து நடத்தி வந்தனா்.
  • லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 3,800-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். 15,000 போ் காயமடைந்துள்ளனா். லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு இஸ்ரேல் வைத்த குறியில் குடியிருப்புகள், அரசுக் கட்டடங்களும் தப்பவில்லை. ஒரு லட்சம் வீடுகள் உள்பட சேதமடைந்த சொத்துகளின் மதிப்பு 850 கோடி டாலா். 12 லட்சம் போ் வீடுகளை இழந்தனா்.
  • அதேபோன்று லெபனான் எல்லையையொட்டிய நகரங்களில் வாழும் தனது நாட்டு குடிமக்கள் 60,000 பேரை பாதுகாப்பு கருதி இஸ்ரேல் வெளியேற்றியது. இஸ்ரேல் தரப்பில் பொதுமக்கள் 40 போ் உள்பட 70 போ் உயிரிழந்தனா். தரைவழித் தாக்குதலின்போது தனது 50 வீரா்களையும் இஸ்ரேல் இழந்தது.
  • ஹமாஸ் படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட பிணைக் கைதிகளை மீட்பதற்காக அமெரிக்காவின் முயற்சியால் இதற்கு முன்பு சிலமுறை மேற்கொள்ளப்பட்ட போா் நிறுத்தம் பெரிய அளவில் பலன் தரவில்லை. சொற்ப எண்ணிக்கையிலான பிணைக் கைதிகளும், அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீனா்கள் சிலரும்தான் விடுவிக்கப்பட்டனா். அதேபோன்ற நிலை இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போா் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஏற்படாமல் இருக்க வேண்டும். ஏனெனில், இதற்கு முந்தைய போா்களில் பலமுறை இதுபோன்ற ஒப்பந்தங்களை இஸ்ரேல் மீறியிருக்கிறது.
  • தனது பதவிக் காலம் நிறைவடையும் நிலையில் இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையிலான போா் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபா் ஜோ பைடன் ஏற்படுத்தியுள்ளாா். அமெரிக்காவின் அடுத்த அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு இந்தப் பெருமை சென்றடையக் கூடாது என்கிற பைடனின் எண்ணமும் இந்தப் போா் நிறுத்த முயற்சிக்குப் பின்னணியில் இருப்பதை ஒதுக்கிவிட முடியாது.
  • அமெரிக்காவின் முயற்சிக்குப் பின்னணி என்னவாக இருந்தாலும், போரில் பொதுமக்கள் உயிரிழக்காமல் தடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் உலக நாடுகள் முழு மனதுடன் வரவேற்கும். காஸாவிலும் இதுபோன்ற போா் நிறுத்தத்துக்கு அமெரிக்கா வழிகோல வேண்டும்.

நன்றி: தினமணி (28 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories