TNPSC Thervupettagam

ஆறுதல் தரும் பாலின விகிதம்

August 8 , 2023 393 days 326 0
  • சில மாதங்களுக்கு முன்பு ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் கோரும் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்துக்கு வந்தது. அவ்வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்ற நீதிபதி, ‘இன்றைக்கு பெரும்பாலான தம்பதிகள் குழந்தையின்றி இருக்கின்றனா். அல்லது ஒரு குழந்தையுடன் நிறுத்தி விடுகின்றனா். கல்வி பரவலே இதற்குக் காரணம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
  • ஆண் - பெண் பிறப்பு விகித வேறுபாடுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பெண்கள் நலன், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சா் ஸ்மிருதி இராணி எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘2014-2015-ஆம் ஆண்டு 918-ஆக இருந்த நாட்டின் பிறப்பு பாலினம் கடந்த ஆண்டு 933-ஆக அதிகரித்துள்ளது’ என்று கூறினார். இவ்விரு செய்திகளும் ஆண் - பெண் விகிதத்தில் ஆறுதல் அளிப்பதாகவும், எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாகவும் உள்ளன.
  • 1871-ஆம் ஆண்டு முதல், பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம். 2021-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பணி, 2020 ஏப்ரல் முதல் செப்டம்பா் மாதம் வரை மேற்கொள்ளப்பட இருந்தது.
  • ஆனால் பெருந்தொற்றுப் பரவலால் அப்பணியை மத்திய அரசு ஒத்தி வைத்தது. தற்போது, அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தோ்தலுக்குப் பின்னரே மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பணி நடைபெறும் என தெரிகிறது. இதனிடையே மத்திய உள்துறையின் கீழ் செயல்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையரகம் தற்போது நாடு முழுவதும் இப்பணியை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்திருக்கிறது.
  • ஒவ்வொரு முறையும் கணக்கெடுப்பு முடிவுகள் வெளியாகும்போது ஆறுதலான முடிவுகளும், அதிர்ச்சியான முடிவுகளும் வெளியாவதுண்டு. எழுத்தறிவு விகிதம் அதிகரிப்பு,  நகா்மயமாதல், ஆயுள்காலம் அதிகரிப்பு போன்ற தகவல்கள் ஆறுதல் அளிப்பவையாக இருக்கும். அதே வேளையில் ஆண் - பெண் பாலின விகிதம் அதிர்ச்சி அளிக்கும் வகையிலேயே உள்ளது.
  • இது அனைத்துத் தரப்பினரையும் கவலை கொள்ளச் செய்வதாக உள்ளது. பொதுவாக பிறப்பு பாலின விகிதம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் பிறக்கும் ஆண் - பெண் குழந்தைகளின் விகிதம் ஆகும். இந்த விகிதமானது 1,000 என்ற எண்ணிக்கை அடிப்படையில் அளவிடப்படுகிறது.
  • ஆண் குழந்தைகளின் மீதான ஆா்வம் மக்களிடையே முன்பு இருந்தது. கிராமம் நகரம் படித்தவா்கள் படிக்காதவா்கள் என்ற பாகுபாடின்றி அனைத்து தரப்பினரிடையேயும் இந்த ஆா்வம் இருந்தது. அதனால், ஆண் குழந்தை பிறக்கும் முன்பாக எத்தனை பெண் குழந்தைகளையும் பெற்றுக்கொள்ளும் நிலையில் இருந்தனா்.
  • நாளடைவில் மக்கள் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணா்வு, எழுத்தறிவு விகிதம் உயா்வு, அறிவியல் தொழில்நுட்பம் போன்றவற்றால் கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறியும் சோதனையில் ஈடுபட்டனா். கிராமங்களில் வசிக்கும் எழுத்தறிவு பெறாத பெண்களும் இது பற்றி அறிந்திருந்தனா். இதனால் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.
  • பின்னா் ஆண் குழந்தை வேண்டும் என்போர் முதல் குழந்தை பெண்ணாக இருக்கும் பட்சத்தில் இரண்டாவது குழந்தை கருவிலிருக்கும் போதே பாலினம் கண்டறிய விரும்பினா். முதல் குழந்தை ஆணாக இருக்கும் பட்சத்தில் அத்துடன் குழந்தைப்பேற்றை நிறுத்திக் கொள்ளும் மனநிலைக்கு மாறத் தொடங்கினா்.
  • இதனால் ஆண் குழந்தைகளுக்கு இணையான பெண் குழந்தைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு பத்தாண்டுக்கும் குறையத் தொடங்கியது. 1961-இல் 1,000 ஆண் குழந்தைகளுக்கு இணையான பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 976-ஆக இருந்தநிலையில், அடுத்த ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பிலும் மெல்ல மெல்ல குறையத் தொடங்கி 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற கணக்கெடுப்பில் இது 914-ஆக உள்ளது.
  • ஆணோ, பெண்ணோ இரு குழந்தை போதும் என்ற மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது. கணவன் - மனைவி இருவரும் பணியில் இருக்கும் வேளையில் முதல் குழந்தை ஆணாக இருக்கும் பட்சத்தில், அத்துடன் குழந்தைப்பேற்றை நிறுத்தி விடுகின்றனா். இரு பெண் குழந்தைகள் என்றாலும் அதை ஏற்றுக் கொள்கின்றனா்.
  • முன்பு படித்தவா்கள் மத்தியில் மட்டுமே இருந்து வந்த இந்த மனநிலை தற்போது பாமர மக்களிடையேயும் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் ஆண் குழந்தை மீதான ஈா்ப்பு மக்கள் மத்தியில் இன்னும் இருக்கவே செய்கிறது. இதில் கிராமங்கள், நகரங்கள், படித்தவா்கள், படிக்காதவா்கள் என்ற பாகுபாடு கிடையாது.
  • தனியார் ஆராய்ச்சி மையத்தின் சமீபத்திய ஆய்வு ஒன்று, இந்தியாவில் ஆண் குழந்தைகள் மீதான எதிர்பார்ப்பு குறைந்து வருவதாகவும், 2011-இல் 100 சிறுமியா்களுக்கு 111 சிறார்களாக இருந்த பிறப்பு விகிதம், 2019-2021 காலகட்டத்தில் 108-ஆகக் குறைந்துள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.
  • பல மாநிலங்கள் தனியாக குடும்பக் கட்டுப்பாடு தொடா்பான சட்டங்களை இயற்றுகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவா்களுக்கு அரசு வேலை கிடைக்காது. உத்தர பிரதேசத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவா்களுக்கு அரசு நல உதவிகளை நிறுத்திவிடும் மசோதா நிலுவையில் உள்ளது.
  • இந்தியா்கள் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளக் கூடாது என சட்டம் கொண்டுவர வேண்டுமென மக்களவையில் பலமுறை மசோதாக்கள் கொண்டு வரப்பட்டன. 2019-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மசோதாவுக்கு, கட்டாயக் குடும்பக் கட்டுப்பாட்டு வழிமுறைகளை விட விழிப்புணா்வு பிரசாரம் நல்ல விளைவுகளைக் கொடுத்திருக்கிறது என தெரிவிக்கப்பட்டது.
  • ஆனால், சட்டங்கள், கடுமையான நடவடிக்கைகள் இவற்றைக் காட்டிலும் விழிப்புணா்வு நடவடிக்கைகளே மிகுந்த பலனைத் தரும். ஆண் அல்லது பெண் எந்த குழந்தையாயினும் ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு மக்கள் மாறவேண்டும். அதற்கான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் ஆண் - பெண் விகிதம் ஆறுதல் அளிக்கும் வகையிலும், பாலினச் சமநிலை ஏற்படும் வகையிலும் இருக்கும்.

நன்றி: தினமணி (08  – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories