- வழக்கமாக வீட்டுத்தோட்டத்திற்குத் தேன்சிட்டு, மாங்குயில், இரட்டைவால் குருவி, மரங்கொத்தி, தவிட்டுக் குருவி, மீன்கொத்தி, கிளி எனப் பல பறவைகள் வரும். சில பறவைகள் மரங்களில் கூடு கட்டி வாழ்வதும் உண்டு.
- சென்ற நவம்பரில் வீட்டின் பின்புறமிருந்து ஓர் அழகிய கூவல் கேட்டது. மரங்களில் தேடியபோது எந்தப் பறவையும் தென்படவில்லை. மீண்டும் அந்த இனிய கூவலைப் பின்வாசல் பக்கமிருந்து கேட்ட போதுதான் வாசற்படியில் ஓர் அழகிய சிறு பறவை அமர்ந்திருந்தபடி கூவியதைக் கண்டேன்.
- அப்படியோர் அழகிய வண்ணப் பறவையை முன்பு பார்த்ததில்லை. பல நிறங்களில் பட்டுப்போல மினுங்கும் இறகுகளும் காராமணிப் பயறுபோல் பளபளக்கும் கண்களுமாக அரிய ஆபரணம்போல் அது இருந்தது. அதை ஒளிப்படம் எடுத்துக்கொண்டேன்.
ஏன் வந்தது
- எப்படி, எங்கிருந்து வந்தது என்றும் ஏன் மரங்களை நாடிச்செல்லாமல் வாசல் படிக்கட்டில் வந்து காத்திருந்தது என்பதும் புரியவில்லை. டேராடூனில் காட்டியல் படிப்பவரும் பறவை ஆர்வலருமான மகன் தருணுக்கு அலைபேசியில் அந்தப் பறவையைக் காட்டியபோது வியப்படைந்தார்.
- பல காலமாக அவர் பார்க்கக் காத்திருந்த, அரிதாகக் கண்ணில் படும் ஆறுமணிக்குருவி என்னும் இந்தியப் பிட்டா (Indian pitta) அது என்றார் உற்சாகமாக. எங்கள் வீட்டுப் பகுதிக்கு அக்குருவி வந்திருப்பதை அவரால் நம்பவே முடியவில்லை. கானுயிர் ஒளிப்படக்காரரான அவரிடமிருந்தே ஆறுமணிக் குருவியைப் பற்றி மேலும் அறிந்துகொண்டேன்.
- அறிவியல் பெயராக Pitta brachyura என்பதைக் கொண்டிருக்கும் இக்குருவி, இந்தியாவிலும் இலங்கையிலும் தென்படும் ஒரு பறவை. பிட்டா என்பது தெலுங்கில் ‘சிறு குருவி’ என்று பொருள்படும். சிற்றினப்பெயர் brachyura என்பதற்கு ‘குறுகிய வால் கொண்ட’ என்று பொருள்.
- இந்தப் பறவை குறித்த முதல் பதிவு, கிழக்கிந்திய கம்பெனி மதராசப் பட்டினத்தில் நியமித்த அறுவை சிகிச்சை மருத்துவரும் பறவை ஆர்வலருமான எட்வர்ட் பல்க்லி என்பவரின் குறிப்பில் உள்ளது. அதில் இப்பறவையின் கோட் டோவியம், பொன்னுக்கி பிட்டா என்னும் பெயருடன் 1713இல் பிரசுரமானது.
பற்பல பெயர்கள்
- சொல்லிவைத்ததுபோல் அந்தி சாய்கையிலும் அதிகாலையிலும் கூவுவதால் ஆறுமணிக்குருவி எனப் பெயர் இருந்தாலும், தமிழ்நாட்டில் இப்பறவைக்குப் பொன்னுத் தொட்டான், பச்சைக்காடை, காசிக்கட்டிக் குருவி, காசுக்கரடி, தோட்டக்கள்ளன், கஞ்சால் குருவி எனப் பல பெயர்கள் உள்ளன. மலையாளத்தில் காவி என்றும், இந்தியில் நவ்ரங் என்றும் அழைக்கப்படுகிறது. தாழ்ந்த கிளைகளிலும், தரையில் உதிர்ந்து கிடக்கும் சருகுளுக்கு உள்ளும் இரைதேடும் இவற்றை வெகு அரிதாகவே காணமுடியும்.
- இலங்கையில் அவிச்சியா (avichchiya) என்றழைக்கப்படும் இப்பறவை, இலங்கையின் புத்தாண்டைஒட்டி அங்கு வருவதால் புதிய நன்மைகளைக் கொண்டுவரும் பறவையாகக் கருதப்படுகிறது. மயில்தனது பல நிறங்கள் கொண்ட தோகையை பிட்டா உள்ளிட்ட பறவைகளின் இறகுகளிலிருந்து எடுத்துக்கொண்டதாகவும் அதைக் குறிப்பிட்டே, “என் இறகுகளை எடுத்துக்கொண்ட மயிலைக் குறித்து அடுத்த, புத்தர் இங்கு வரும் வரை நான் புகார் சொல்லிக்கொண்டிருப்பேன்’’ என்று பிட்டா மீண்டும் மீண்டும் பாடுவதாகவும் இலங்கையில் கருதப்படுகிறது.
- இதன் முதுகு அழகிய பச்சையிலும்இறகு நீலக் கறுப்பு, வெள்ளை கலந்தும், உடலின் அடிப்பகுதி மஞ்சளிலும், வாலடி அடர் சிவப்பிலும், கழுத்து வெண்மையாகவும், கண்களைச் சுற்றி வெள்ளை, கறுப்புத் தீற்றலுமாகக் காணப்படும். அலகு அடர் சாம்பல் நிறத்திலும் கால்கள் இளஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கும்.
- இவை ‘வீட் டியூ’ அல்லது ‘வீட் பியோ’ என இரண்டு ஒலிகளாகவோ, ‘க் வீட் வியூ’ என மூன்று ஒலிகளாகவோ மீண்டும் மீண்டும் கூவும். கூவுகையில் தலையைப் பின்னுக்குத் தள்ளி அலகை மேல்நோக்கி உயர்த்திக்கொள்ளும். ஆணும் பெண்ணும் இணைந்தும் பல பறவைகள் சேர்ந்து கூட்டாகவும் குரலெழுப்பும்.
- சிறு பூச்சிகள், புழுக்கள், கறையான், வண்டு, சிலந்தி, சுவர்க்கோழி, சிள்வண்டு, மண்புழு, சிறு நத்தைகள், மரவட்டைகளை இவை உண்ணும். அலகால் கற்களையும் சருகுகளையும் புரட்டி அடியிலிருக்கும் பூச்சிகளையும்கூடப் பிடித்து உண்ணும்.
வழிமாறி வந்ததோ
- இப்பறவை முள்காடுகள், இலையுதிர்காடுகள், அடர்ந்த பசுமைமாறாக் காடுகளில் வாழும். இமயமலையின் அடிவாரக் காடுகள், மத்திய, மேற்கு இந்திய மலைப்பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யும் இவை, குளிர்காலத்தில் இந்தியா முழுவதற்கும் இலங்கைக்கும் வலசை செல்லும். சில வேளைகளில் பயணவழியில் களைத்துப் போய் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள தோட்டப் பகுதிகளுக்கும் வழிமாறி வந்து விடுவதும் உண்டு
- அப்படித்தான் எங்கள் வீட்டுவாசலுக்கும் இப்பறவை வந்திருக்கக் கூடும். வீட்டுத்தோட்டத்தில் மூங்கில் புதர்களுக்குள் அங்கும் இங்குமாகப் பறந்துகொண்டிருந்த பிட்டா சில மணி நேரத்துக்குப் பிறகு சென்று பார்க்கையில், அங்கில்லை.
- செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் இவை தென்னிந்தியாவிற்கு வலசை வரும். ஏப்ரல்-மே மாதங்களில் வடக்கு நோக்கிப் பயணிக்கும். இப்படி வலசை செல்லும்போதுதான் குடியிருப்புப் பகுதிகளின் மரங்களிலும் ஜன்னல் விளிம்புகளிலும் பால்கனியிலுமாக எதிர்பாரா இடங்களில் இவற்றைக் காண முடியும். இப்படிக் காணும் வேளையில் இவற்றைக் கையால் பிடிப்பதையோ, பிடிக்க முயல்வதையோ தவிர்க்க வேண்டும். அருகில் வளர்ப்புப் பூனைகள் இருந்தால் இப்பறவையைப் பிடித்துவிடும்.
- மிகவும் களைத்துப்போன பறவை களை, தேவைப்பட்டால் மட்டும் ஓர் அட்டை டப்பாவில் வைத்து சில மண் புழுக்களைக் கொடுக்கலாம். எனினும் கையில் பிடித்து ஊட்டவோ, வற்புறுத்தி நீரைக் குடிக்க வைக்கவோ தேவையில்லை. ஒரு குவளையில் நீரை வைத்துவிட்டால், தேவைப்பட்டால் அதுவே பருகும். பிறகு ஓரளவிற்குக் களைப்பு நீங்கியவுடன் அவற்றை வெளியில் விட்டுவிடலாம்.
- எளிதில் காண முடியாத இக்குருவி வீட்டு வாசலுக்கு வந்தது ஆச்சரியம்தான். அடர்ந்த செடிகள் கொண்ட தோட்டம் கொண்ட வீடென்பதால் வலசை செல்லும் வழியில் தவறுதலாகக்கூட இங்கு வந்திருக்கலாம். அல்லது புறநானூற்றில் சத்திமுத்த புலவர் செங்கால் நாரையைத் தன் வீட்டுக்கு அனுப்பி, தனது வறுமை நிலையைப் பற்றித் தகவல் சொல்லச் சொன்னதுபோல், யாரேனும் இக்குருவியிடம் ஏதேனும்சொல்லி அனுப்பி இருப்பார்களோ? எப்படியாகினும் அந்த நாள் அப்படியோர்அரிய பறவையைக் காணும்படி எனக்கு அருளப்பட்டிருந்தது.
நன்றி: இந்து தமிழ் திசை (10 – 02 – 2024)