- வெப்பம்தான் உலகை இயக்கிக் கொண்டிருக்கும் பேராற்றல். எந்தவொரு நாளிலும் உலகின் எல்லாப் பகுதியிலும் ஒரே வெப்பநிலை நிலவுவதில்லை. ஒரே நேரத்தில் -80 பாகை குளிர் நிலவும் இடங்களும் 50 பாகை வெப்பம் நிலவும் இடங்களும் வெவ்வேறு பகுதிகளில் உண்டு.
- பூமியின் சராசரி வெப்பநிலை எப்படிக் கணக்கிடப்படுகிறது? ஆண்டின் பல்வேறு காலங்களில் பல்வேறு இடங்களில் புவிப்பரப்பில் நிலவும் அன்றாட வெப்பநிலை பதியப்பட்டு, அவற்றின் சராசரியே உலகின் வெப்பநிலையாகக் குறிப்பிடப்படுகிறது.
- புவிப்பந்து தனது அச்சில் மணிக்கு 1,670 கிலோமீட்டர் வேகத்தில் சுழன்றவாறே, சூரியனை நீள்வட்டப் பாதையில் வலம்வந்துகொண்டிருக்கிறது. இப்படி ஒரு முறை வலம்வருவதற்கு 365.25 நாள்களை எடுத்துக்கொள்கிறது.
- புவியின் அச்சு சூரியனுக்குச் செங்குத்தாக இல்லாமல் 23.5 பாகை சாய்வாக உள்ளது. நீள்வட்டப் பாதையில் சுழலும் பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தொலைவு ஆண்டில் நான்கு முறை மாறுபடுகிறது. இதனால் சூரியனின் ஈர்ப்புவிசை மாறும். அதன் காரணமாக, புவிக்கோளின் அச்சு சாய்ந்து மீளும்.
- சரி, பூமி சுற்றுவதற்கும் நம் வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு? இதைச் சார்ந்துதான் நம் வாழ்க்கைச் சக்கரம் சுழன்றுகொண்டிருக்கிறது! பருவகாலச் சுழற்சியின் அடிப்படையான பல வகைக் காற்றுகளும், நெடுங்கடல் நீரோட்டங்களும் பூமியின் சுழற்சியினால்தான் சாத்தியப்பட்டிருக்கின்றன.
வெப்ப ஆற்றலின் பெருங்கிடங்கு:
- உலக வெப்பநிலையை முறைப்படுத்துவதாக அமைவது நீரியல் சுழற்சி. கடல், மேகம், பனி, பனிப்பாறை, மழை, ஆறு என்பதாக நீரின் இயற்பியல் வடிவ மாற்றம் இதில் முக்கியமான பங்காற்றுகிறது. உலகின் 70% பரப்பைப் பொதிந்திருக்கும் பெருங்கடல்கள் வெப்ப ஆற்றலின் பெருங்கிடங்கு.
- கடல்நீர் வெப்ப ஆற்றலை விழுங்கி நீராவியாக, மேகமாக மாற்றுகிறது; காற்றுப் போக்கில் பயணிக்கும் மேகங்கள் வெப்பத்தை இழந்து மழையாக, பனியாக மாறுகின்றன; காற்றில் கலந்திருக்கும் ஈரம் துருவப் பகுதிகளில் உறைபனியாக மாறுகிறது. வெப்பத்துக்குப் பிரதிவினையாற்றும் நீரின் இந்த வடிவ இயல்பு மாற்றங்களே உலகின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தி வருகின்றன.
- சீரான மழைப்பொழிவுக்கு மழைக்காடுகள் தேவை. மழைக்காடுகளின் அழிவும், பசுமைப் போர்வையின் சிதைவும் உலகின் பருவநிலைப் போக்குகளில் அதிரடியான மாற்றங்களை உண்டாக்குகின்றன. வறட்சி, பெருவெள்ளம் போன்ற பேரிடர்களுக்கும் காரணமாகின்றன. முன்வினைப் பயன் என்பது வேறொன்றுமல்ல.
- மனிதன் காட்டையும் கடலையும் அழிக்கத் தொடங்கியபோது உயிரினங்களின் வாழிடங்கள் அழியத் தொடங்கின. அந்த அழிவு மனித குலத்துக்கு நேரத் தொடங்கியிருக்கும் பேரழிவின் முத்தாய்ப்பே. ஆயுத மோதல் களையும் போர்களையும் மட்டுமே நாம் வன்முறையாகக் கருதுகிறோம். வன்முறையின் ஆதி வடிவம் இயற்கையின்மீது மனிதன் நிகழ்த்திய மீறலே.
1.5 பாகை:
- தொல்லியல் வரலாற்றில் கடல் மட்டம்25 மீட்டர் உயர்ந்திருந்தது என்கிறார்கள். கடைசி உறைபனிக் காலம் ஏறத்தாழ 21,000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்துள்ளது. அதற்குப் பிறகு வளிமண்டல வெப்பநிலை சராசரியாக மூன்று பாகை உயர்ந்திருக்கிறது. அதன் விளைவுகளைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
- இன்று டெமாக்ளஸின் வாள்போல மனித குலத்தின்மீது தொங்கிக் கொண்டிருக்கும் சவால், பொ.ஆ. (கி.பி.) 2060க்குள் எகிறப்போகும் 1.5 பாகை செல்சியஸ் வெப்பம். ஆண்டுதோறும் வெளியேறும் 5,100 கோடி டன் பசுங்குடில் வளியை (கரிம வளி உள்பட) கையாள்வது நம் முன்னால் இருக்கும் மிகப் பெரிய சவால். 85 கடலோர நாடுகளில் கடல் மீன்வளம் உள்ளிட்ட உணவு உற்பத்திக்குக் கரிம வளிச் சுமை மிகப்பெரிய அச்சுறுத்தல்.
வறட்சி, பெருவெள்ளம்:
- தென்மேற்குப் பருவமழை இந்தியாவின் உணவு உற்பத்திக்கு அடிநாதமாக இருந்து வருகிறது. வானம் பார்த்த பூமிக்குக் கண்மாய் களும் ஏரிகளுமே நம்பிக்கை நாயகர்கள். 1950களில் பருவமழை பொய்த்து இந்தியாவில் பெருவறட்சியும் உணவுப் பஞ்சமும் ஏற்பட்டது மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. ‘நம்மீது திருவாளர் பருவமழை இரக்கம் காட்டவில்லை, நாம் என்ன செய்வது!’ என்று அரசு கையை விரித்தது. அந்தச் சூழலில்தான் ‘வேளாண்மை செழிக்க அணைகளைக் கட்டவேண்டும்’ என்னும் கருத்து உருவானது. பிற்காலத்தில் அணைகளே அடித்தள மக்களுக்குத் துயரமாகக் கவிந்தது வேறு கதை.
பெருவெள்ள மேலாண்மை:
- இப்போது அதுவல்ல பேசுபொருள். எல் நினோக்கள் தென்மேற்குப் பருவமழையைப் பலவீனப்படுத்தியிருப்பதோடு, வடகிழக்குப் பருவமழையைத் தீவிரப்படுத்தியும் உள்ளன. அதனுடன் புயல்களும் சேர்ந்தே வருகின்றன. பயிர்களுக்கும் மீன்களுக்கும் தேவைப்படும் நேரத்தில் மழைநீர் கிடைக்கவில்லை; வடகிழக்குப் பருவமழை வந்தால், காலம் தவறி வருகிறது, குறுகிய காலத்துக்குள் கொட்டித் தீர்க்கிறது.
- நிலப்பரப்பினால் அப்பெருவெள்ளத்தைக் கையாள முடியவில்லை. 80 நாள்களில் பெய்ய வேண்டிய மழை 30 நாள்களில் கொட்டித்தீர்த்தால் நிலத்தால் அதை உள்வாங்க முடியுமா? போதாக்குறைக்கு ஏரிகள், கண்மாய்கள் உள்ளிட்ட பல நீர்ப்பிடிப்புப் பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன; மழைநீர் வடிகால், மறுகால் வழித்தடங்கள் இடைமறிக்கப்பட்டிருக்கின்றன;
சென்னைக்கு நேர்ந்த சாபம்:
- நகர்ப்புறங்களின் நிலப்பரப்புகள் கட்டுமானங்களால், காங்கிரீட் தளங்களால், வண்ணக் கற்பாதைகளால் (paver blocks) மூடப்பட்டிருக்கின்றன. ஆங்காங்கே மிச்சம் மீதியிருக்கும் நிலப்பரப்புகள் இந்நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பெருவெள்ளப் பேரிடர்களைத் தவிர்க்க முடியாது என்பதல்ல; தவறான நிலப் பயன்பாட்டு முறைகளால் அதற்கு நாமே சிவப்புக் கம்பளம் விரித்துவைத்திருக்கிறோம் என்பதே உண்மை.
- நகர்ப்புற நிலப்பரப்பில் வழமையாக 50%தான் கட்டுமானம் (Floor Space Index 1:1) அனுமதிக்கப்பட்டு வந்தது. 2020இல் அது 1.0:1.5 ஆக உயர்த்தப்பட்டது; பெருந்தொற்றுக் கால கட்டுமானத் தேக்கத்துக்கு வட்டியும் முதலுமாக இப்போது அந்த விகிதம் 1.0:2.6 என்று உயர்த்தப்பட்டுவிட்டது. போதாக்குறைக்கு, பெருநகர எல்லைக்குள் பிரீமியம் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- மாடிகளின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி கருவூலத்தை நிரப்பிக்கொள்ளும் சூத்திரம். 2024 பிப்ரவரியில் பள்ளிக்கரணையில் ஒரு நடுத்தரக் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரைத் தற்செயலாகச் சந்திக்க நேரிட்டது. ‘இனிமேல் சென்னைப் பெருநகரத்தின் விரிவாக்கம் பரப்பில் அல்ல, மும்பையைப் போல செங்குத்து விரிவாக்கம்தான் (vertical expansion)’ என்று பெருமை பொங்கச் சொல்லிக்கொண்டார் அந்த இளைஞர். தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன, முழம் என்ன?
- பெருந்தொற்றுக் கால வீடு அடங்கலுக்குப் பிறகு சென்னையில் 30, 40 மாடி அடுக்ககங்கள் கிடுகிடுவென உயர்ந்துகொண்டிருக்கின்றன. இதன் நிகர விளைவு என்னவாக இருக்கும்? நகர்ப்புற நன்னீர்த் தேவையும் திட, திரவக் கழிவுச் சுமையும் கன்னாபின்னாவென்று எகிறும்.
- சென்னை என்னும் கடற்கரைப் பெருநகரத்தின் பசுமைப் பரப்புகளும், நீர்ப்பரப்புகளும் ஏற்கெனவே குறைந்து போயிருக்கின்றன; கடல்மட்ட உயர்வு சென்னையின் கடல் நோக்கிய நிலப் பகுதிகளை மிரட்டிக் கொண்டிருக்கிறது. இதற்கு அரசு முகம் கொடுப்பதாகத் தெரியவில்லை.
- 2021 இல் பொறுப்பேற்ற தமிழ்நாடு அரசு, சென்னைப் பெருநகரில் பெருவெள்ளப் பேரிடர்களைத் தவிர்க்கும் வழிமுறைகளை அரசுக்குப் பரிந்துரைக்கும் பொருட்டு, ஓர் உயர்நிலை ஆலோசனைக் குழுவை அமைத்தது. பருவமழைப் பெருவெள்ள மேலாண்மையில் முக்கியப் பங்காற்றிவந்த நீர்நிலைகள், கொற்றலையாறு, எண்ணூர் ஓடை, பக்கிங்ஹாம் கால்வாய் போன்ற நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்டெடுப்பதோடு, அவற்றை இணைக்கும் வடிகால்களைச் சரிசெய்வது இதில் முக்கியமான வேலை. சிக்கலின் மையமே ஆக்கிரமிப்புகள்தான்.
- உயர்நிலை ஆலோசனைக் குழுவின் அறிக்கையில் இதற்கான பரிந்துரை ஏதும் இடம் பெற்றதாகத் தெரியவில்லை. மேம்போக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம், அவ்வளவுதான்.
நன்றி: இந்து தமிழ் திசை (18 – 05 – 2024)