TNPSC Thervupettagam

ஆலயங்கள் யாவிலும் அறப்பணிகள் பெருகட்டும்

September 27 , 2021 1202 days 941 0
  • முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் 2012 செப்டம்பரில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலிலும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலிலும் தொடங்கிவைத்த முழுநாள் அன்னதானத் திட்டத்தை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் ஆகிய மேலும் மூன்று கோயில்களுக்கு விரிவுபடுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.
  • கர்நாடகத்தின் தர்மஸ்தலத்திலும் ஆந்திரத்தின் திருப்பதியிலும் அளிக்கப்பட்டுவரும் முழுநாள் அன்னதானத் திட்டங்கள் பசிப் பிணி தீர்க்கும் தலையாய அறப்பணியை நாள்தோறும் நினைவுபடுத்திவருபவை.
  • அவற்றை முன்மாதிரியாகக் கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள ஐந்து பெருங்கோயில்களில் தற்போது இந்த அறப்பணி நடந்துவருவது பெருமைக்குரியது.
  • ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 2002-ல் தொடங்கப்பட்ட பகல்நேர அன்னதானத் திட்டத்தையும் இதே போல வாய்ப்புள்ள அனைத்துக் கோயில்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
  • அறநிலையத் துறையின் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தும்வகையில் கோயில் நிர்வாகம் தொடர்பான அனைத்து சுற்றறிக்கைகளும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப் படும் என்ற அறிவிப்பும் மிக முக்கியமானது.
  • இது அரசின் அனைத்துத் துறைகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டியதும்கூட. கோயில்களுக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் பற்றிய விவரங்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுவருவது இவ்வளவு காலமும் இத்துறையைச் சூழ்ந்திருந்த இருளை அகற்றும் என்ற நம்பிக்கையை உருவாக்குகிறது.
  • கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியிலும் அறநிலையத் துறை தீவிரம் காட்டிவருகிறது.
  • இன்னும் நிலுவையிலிருக்கும் குத்தகை பாக்கி, வாடகைகள் வசூலிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட காலகட்டங்களில் விவசாய நிலங்களுக்குக் குத்தகையிலிருந்து விலக்கும் அளிக்கப்பட வேண்டும். அதுபோலவே பெருந்தொற்றுக் காலத்தில் வாடகையிலிருந்து விலக்களிப்பது பற்றியும் பரிசீலிக்க வேண்டும்.
  • கோயில்களின் சார்பாக 10 புதிய கல்லூரிகளையும் ஒரு சித்த மருத்துவமனையையும் தொடங்குவதற்கு அறநிலையத் துறையால் திட்டமிடப்பட்டுள்ளது.
  • கோயில்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமின்றி கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள், நூலகங்கள், நுண்கலைகளின் பயிற்சிக்கூடங்கள் என்று பல்வேறு செயல்பாடுகளின் மையங்களாக விளங்கிவந்துள்ளன.
  • கோயில்களைச் சார்ந்து நடந்துவந்த அறப்பணிகளில் கல்வியும் மருத்துவமும் தொடர்வதற்கு திமுக அரசு அக்கறை காட்டுவது வரவேற்புக்குரியது.
  • இந்து சமய அறநிலையத் துறையால் ஏற்கெனவே 36 பள்ளிகளும் 5 கல்லூரிகளும் ஒரு தொழில்நுட்பக் கல்லூரியும் நடத்தப்பட்டுவருகின்றன.
  • அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் என்று தமிழகம் முழுவதும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டுவருகின்ற நிலையில், அறநிலையத் துறை தொடங்கவிருக்கும் கல்லூரிகளும் அதே வகையில் அமையாமல், கலை மற்றும் பண்பாடு தொடர்பில் கூடுதல் முக்கியத்துவம் அளிப்பவையாக இருக்க வேண்டும்.
  • சிற்பம், ஓவியம், கட்டிடவியல், இசை, நடனம், சமயவியல், மெய்யியல், தொல்லியல், கல்வெட்டியல், சுவடியியல் தொடர்பான படிப்புகளுக்கான மையமாகவும் அவை இருக்க வேண்டும்.
  • கோயில்களுடன் தொடர்புடைய இந்தத் துறைகள் அனைத்தையும் உள்ளடக்கிய தனிப் பல்கலைக்கழகத்தையும்கூட அறநிலையத் துறை வருங்காலத்தில் திட்டமிடலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (27 - 09 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories