TNPSC Thervupettagam

ஆளுநர் vs அரசு: வார்த்தைகள் தடிக்க ஆரம்பித்து விட்டதே!

January 14 , 2025 10 days 61 0

ஆளுநர் vs அரசு: வார்த்தைகள் தடிக்க ஆரம்பித்து விட்டதே!

  • இந்தாண்டு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் உரையைப் படிக்காமல் கோபித்துக் கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியதில் இருந்தே திமுக தலைவர்களுக்கும் ஆளுநருக்கும் இடையிலான வார்த்தைப் போர் தீவிரமடைந்து விட்டது.
  • ஆளுநரின் செயலுக்கு திமுக-வின் கண்டனம், ஆளுநரின் ‘ட்வீட்’, முதல்வரின் விமர்சனம், ஆளுநரின் பதில், அமைச்சர்களின் ஆவேச அறிக்கைகள் என மோதல் போக்கு நிற்காமல் சென்று கொண்டிருக்கிறது. இருதரப்பிலிருந்தும் சிறுபிள்ளைத்தனம், ஆணவம், வெட்கக்கேடானது, கைக்கூலி, தன்னிலை மறந்துவிட்டாரா, அவமானச்சின்னம், திமிர் போன்ற வார்த்தை பயன்பாடுகள் ஒரு மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான உறவை அளவுகடந்து மோசமடையச் செய்துள்ளது.
  • இத்தகைய போக்கு மாநிலத்தின் வளர்ச்சிக்கும் அரசு நிர்வாகத்துக்கும் எந்த வகையிலும் பயனளிக்காது. அரசு நிர்வாகத்தின் தேர் முன்னேற்றப் பாதையில் செல்வதற்கும் இடையூறாக அமையும்.
  • இந்திய ஜனநாயகத்தில், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலேயே மத்திய அரசும், மாநில அரசும் இயங்குகின்றன. அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலராக குடியரசுத் தலைவர் இருக்கிறார். அவரது பிரதிநிதி என்ற முறையில் மாநில அரசை கண்காணிக்க ஆளுநர் நியமிக்கப்படுகிறார்.
  • அரசு நிர்வாகம் ஜனநாயகத்தில் வகுத்தளிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின்படி இயங்குகிறதா என்பதை கண்காணிக்கும் பொறுப்பு மட்டுமே ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் குறை இருந்தால், அதை குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அளித்தால் அவர் சட்டப்படியான நடவடிக்கை எடுப்பார். மற்றபடி அரசியல்வாதியாக ஒரு ஆளுநர் செயல்பட சட்டத்தில் இடமில்லை.
  • இன்னும் சொல்லப்போனால், அரசியல் வாதியாக அல்லது அதிகாரிகளாக இருப்பவர்கள் தங்கள் விருப்பு, வெறுப்பு மற்றும் அரசியல் சார்பை உதறிவிட்டு அமரும் நாற்காலிதான் ஆளுநர் நாற்காலி. ஆர்.என்.ரவி தனது கொள்கைகளை, கருத்துகளை சுதந்திரமாக பொதுவெளியில் பேச முழு உரிமை உண்டு.
  • ஆனால், மேதகு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது சொந்த கருத்துகளை, விருப்பு வெறுப்புகளை, விமர்சனங்களை வெளிப்படுத்த இடமில்லை. சென்னை மாகாணமாக இருந்த காலத்தில் இருந்து தமிழக சட்டப்பேரவை, அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்குட்பட்டு இயங்கி வருகிறது. விதிகளை மீறினால் சட்டப்பேரவையைக் கலைக்கும் அதிகாரம் கூட மத்திய அரசிடம் இருக்கும்போது சபை நடைமுறைகளில் குற்றம் காண்பது முறையல்ல. அதேநேரம், ஆளுநர் என்பவர் யாருக்கும் அடிமையல்ல என்பதையும் ஆளுங்கட்சியினர் மனதில் கொள்ள வேண்டும்.
  • அவருக்குள்ள தனிப்பட்ட கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில், சனாதனம் உள்ளிட்ட சில கொள்கை முரண்பாடுள்ள விஷயங்களை பேசும்போது, ஒரு அரசியல்வாதியின் கருத்தாக அதை பார்க்கக் கூடாது. அவரது பேச்சை அவரது சொந்தக் கருத்தாக மதிக்க வேண்டுமே தவிர, எதிர்க்கட்சி அரசியல்வாதிக்கு இணையாக அவரை கருதிக் கொண்டு ஆளுங்கட்சி தரப்பில் பதிலடி கொடுப்பதும் ஏற்புடையதல்ல.
  • ஆளுநர் நாற்காலிக்கு உரிய மரியாதையை மாண்பை காக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அதில் அமர்ந்திருப்பவர்களுக்கும் உண்டு; மாநில அரசுக்கும் உண்டு. தரம் தாழ்ந்த தடித்த சொற்களால் விமர்சிப்பதும் சேறு வாரி இறைப்பதும் இருதரப்புக்கும் அழகல்ல.

நன்றி: இந்து தமிழ் திசை (14 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories