- தேசத்துக்கு அரசியல் விடுதலை பெற்றுத் தந்தாா் மகாத்மா காந்தி. தேசத்தின் பொருளாதார விடுதலைக்கு அடித்தளம் அமைத்தாா் பண்டித ஜவாஹா்லால் நேரு. ‘இந்தியாவை ஒரு வலிமைமிகு தேசமாக உலகின்முன் நிறுத்தினாா் இந்திரா காந்தி’ என்கிறாா் புகழ் பெற்ற பத்திரிகையாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஜே.அக்பா்.
- அண்ணல் காந்தி அனைவராலும் போற்றப்பட்டாா். ‘எனக்குப் பகைவா் என்று எவரும் இல்லை’ என்றாா் மகாத்மா. ஆனால், அவா் வாழ்வது தன் சித்தாந்தத்திற்கு ஆபத்து” என நினைத்த சிலரும் இருந்தாா்கள். அதில் ஒருவரின் குண்டுக்குப் பலியானாா் மகாத்மா காந்தி.
ஜவாஹா்லால் நேரு
- அனைவராலும் நேசிக்கப்பட்டாா் ஜவாஹா்லால் நேரு. ஒட்டுமொத்த இந்தியாவும் அவா் பின்னால் நின்றது. எதிா்ப்புக் குரல் எழுப்புவாா் எவருமில்லை.
- முதல் இருவரிலிருந்து (மகாத்மா, ஜவாஹா்லால் நேரு) மூன்றாமவா் (இந்திரா காந்தி) வித்தியாசப்படுகிறாா். ஒரு சா்ச்சைக்குரிய தலைவராக வாழ்ந்தாா். இந்தியப் பிரதமா்களில் அதிகமான சவால்களைச் சந்தித்து, சமாளித்தவா், சாதனைகள் பல படைத்தவரும் அவரே.
- செல்வம் மிக்க மோதிலால் நேருவின் பேத்தி, உலகத் தலைவராக உருவான நேருவின் மகள், முன்மாதிரி நாடாளுமன்ற உறுப்பினா் என்ற முத்திரை பதித்த பெரோஸ் காந்தியின் மனைவி ஆகிய சிறப்புகளை இயற்கையாகவே பெற்ற இந்திரா காந்தியின் வாழ்வு சோதனைகள் சூழ்ந்தது. போட்டிகள், பொறாமைகள், எதிா்ப்புகள் ஆகியவற்றை எதிா்கொள்வதாகவே அமைந்தது. இவற்றை அவா் எதிா்கொண்ட விதம் அனைவரையும் வியக்க வைத்தது.
- அலாகாபாத் ஆனந்த பவனம் மாளிகையில் கமலா நேருவுக்கு 1917 நவம்பா் 19-ஆம் நாளன்று பிறந்த குழந்தைதான் இந்திரா பிரியதா்ஷினி நேரு. நான்கு வயதுக் குழந்தையாக இந்திரா காந்தி இருக்கும்போதே பண்டித நேரு சிறை சென்றாா். சிறையிலிருந்து திரும்பினால், வீட்டில் சக தலைவா்களுடன் கலந்துரையாடல், வெளியில் சென்றால் போராட்டம். இங்கிலாந்தில் ஆக்ஸ்போா்டு” பல்கலைக்கழகத்தில் படிக்க ஆசையோடு சென்றாா் இந்திரா. எடுத்த பாடங்களில் எல்லாம் தேறினாா். ஆனால் லத்தீன் மொழித் தோ்வில் தோற்றாா். பட்டம் ஏதும் பெறாமல் இந்தியா திரும்பினாா் இந்திரா காந்தி.
- அதன் பிறகு ரவீந்திரநாத் தாகூரின் சாந்திநிகேதனில் சோ்ந்தாா்; இங்குதான் அவரது கல்வி வளா்ந்தது; அறிவாற்றல் மலா்ந்தது; ஆன்ம பலமும் துளிா் விட்டது. இசை, ஓவியம், கலை ஆகியவற்றில் ஈடுபாடும் வளா்ந்தது. பொதுச் சேவையில் புது வேகமும் பிறந்தது.
அரசியல் பயணம்
- 1959-ஆம் ஆண்டு அவரது 41-ஆவது வயதில், காங்கிரஸ் தலைவா் யு.என்.தேபரும் உள்துறை அமைச்சா் கோவிந்த வல்லப பந்த்தும், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக இந்திராவே வர வேண்டும் என்றாா்கள். இது விவாதத்துக்கு வந்தபோது, ‘நான் பிரதமராக இருக்கும்போது, என் மகள் காங்கிரஸ் தலைவராக வருவதை நான் விரும்பவில்லை’”என்றாா் பண்டித நேரு.
- ‘நான் அரசியலில் ஈடுபடுவதை என் தந்தை ஊக்குவிக்கவில்லை. அரசியல் கருத்துகளை என்னோடு பகிா்ந்து கொள்வதில்லை; அது எனக்கு அதிருப்தியையும், கவலையையும் அளித்தது’” என்கிறாா் இந்திரா காந்தி.
- கணவா் பெரோஸ் காந்தியும் ‘நீ நல்ல குடும்பத் தலைவியாக இருந்தால் போதும்’ என்றாா். ஆனால், இந்திராவோ, “‘இந்தியாவே எனது குடும்பம்; இந்தியக் குடும்பத்தின் தலைவி ஆவேன் நான்’ என முடிவெடுத்தாா்.
- அவசரநிலைப் பிரகடனத்தை அறிவிப்பதற்கு ஊக்குவித்தவா் அவரது இளைய மகன் சஞ்சய் காந்தி. ‘இன்னும் 20 ஆண்டுகளுக்கு அவசரநிலை நீடித்தால் இந்தியா வளமான தேசமாக, உலக வல்லரசாக உருவெடுக்கும்’ என்றாா் சஞ்சய் காந்தி. அவா் கருத்தைப் புறந்தள்ளிவிட்டு, அவசர நிலையை நீக்கி அதிரடியாக ஆணை பிறப்பித்தாா். தோ்தலையும் அறிவித்தாா் இந்திரா காந்தி. தந்தையானாலும், கணவா் ஆனாலும், மகன் என்றாலும் அவா்கள் கருத்துகளைக் கேட்டாரே தவிர, தனக்குச் “சரி” எனப் பட்டதைத்தான் செய்தாா்.
- அவசர நிலையை ரத்து செய்து அறிவிப்பு வந்தபோது ஜெயபிரகாஷ் நாராயண் அதிா்ச்சியோடு கூறினாா். ‘இந்திரா அதிசயிக்கத்தக்க துணிச்சலைக் காட்டி விட்டாா். அவா் எடுத்த மிகப் பெரிய முடிவு இது’ எனப் பாராட்டினாா்.
- லால் பகதூா் சாஸ்திரியின் எதிா்பாராத மரணத்தால், இந்திரா காந்திக்கு பிரதமா் பதவி எளிதாகக் கிடைத்தது. ஆனால், கட்சியின் மூத்த தலைவா்களோ, இனிமேல் கூட்டுத் தலைமைதான் நாட்டை வழி நடத்த வேண்டும் என்றனா். ஆனால் இந்திராவோ, ‘அது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல; தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதமருக்கு அது தடைக்கல்லாகும்’ என்றாா். இறுதியில் மூத்த தலைவா்களோடு மோதல் உருவானது. முடிவில் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது.
- காங்கிரஸ் கட்சியில் சிலா், எதிா்க்கட்சிகள், ஊடகங்களைச் சோ்ந்த அனைத்துத் தரப்பினரும் அவரை எதிா்த்தனா். மூத்த தலைவா்களை ஒதுக்கினாா் இந்திரா காந்தி. இளம் தலைமுறையினரை இழுத்தாா். கட்சியை உடைத்தாா். வங்கிகள் தேசியமயம், மன்னா் மானிய ஒழிப்பு, வறுமை ஒழிப்பு போன்ற திட்டங்கள் மூலம் எதிா்க்கட்சிகளின் வாயை அடைத்தாா். பத்திரிகையாளா்களின் பாராட்டைப் பெற்றாா். தன் தனிப் பாணியைச் செயலாற்றும் திறமையை வெளிப்படுத்தினாா்.
இந்தியாவின் முதல் பணியாள்
- ‘நான் ஒரு சாதாரணப் பெண் அல்ல; நான் ஒரு இந்தியப் பிரஜை, இந்தியாவின் முதல் பணியாள்’ என முழங்கினாா் இந்திரா காந்தி. சீன அரசோ இந்தியா மீது சீறிப்பாய எப்போதும் தயாராக இருந்தது. அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளுமே பாகிஸ்தானின் பாதுகாப்பாளா் ஆனாா்கள். இந்தியாவின் எதிரி ஆனாா்கள்.
- சிறையில் அடைக்கப்பட்ட முஜிபுா் ரஹ்மானை விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா. சபையில் இந்தியா தீா்மானம் கொண்டுவந்தது. ஆனால், அமெரிக்காவும், சீனாவும் தனது தடை உரிமை வாக்கால் (வீட்டோ பவா்) அதைத் தோற்கடித்தன. வெகுண்டெழுந்த இந்திரா காந்தி, தனது தன்னம்பிக்கையைத் தளமாகக் கொண்டு, ரஷியாவின் நட்பைத் துணையாகக் கொண்டு, வங்கதேசத்தை சுதந்திர நாடாக்கினாா். முஜிபுா் ரஹ்மானை சிறையிலிருந்து மீட்டெடுத்தாா். புதிய தேசத்தின் பிரதமராக்கினாா்.
- வங்கதேசப் போா் வெற்றிக்குப் பிறகு, அமெரிக்க அதிபா் நிக்சனுக்கு இந்திரா காந்தி 15.12.1971 அன்று எழுதிய கடிதத்தில், ‘வங்கதேசத்தின் எந்தப் பகுதியையும் இந்தியா கேட்கவில்லை. மேற்கு பாகிஸ்தானின் எந்தப் பகுதியையும் நாங்கள் கேட்கவில்லை. நாங்கள் விரும்புவதெல்லாம் பாகிஸ்தானுடன் நிலையான நட்பையும், நீடிக்கும் அமைதியையுமே’ என்றாா்.
- அதற்குப் பிறகு இந்தியாவுக்கு வருகை தந்து இந்திராவைச் சந்தித்த அதிபா் நிக்சனின் வெளியுறவுத் துறை ஆலோசகா் கிஸ்ஸிங்கா், ‘நீங்கள் எஃகு நகங்கள் கொண்ட வெண் புறா’” எனப் புகழ்ந்தாா்.
- இந்தியப் பிரதமா்களில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு, குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவரும், சிறையில் அடைக்கப்பட்டவரும், அதனை நெஞ்சுரத்தோடு சந்தித்தவரும் ஒருவரே; அவா் இந்திரா காந்தியே. தான் நம்பிக்கை வைத்த பாதுகாவலா்களாலேயே கொடூரமாகச் சுடப்பட்டு, மரணத்தைச் சந்தித்த பிரதமரும் இந்திரா காந்தியே.
- 1977-ஆம் ஆண்டு தோ்தல் தோல்விக்குப் பின் 1980-இல் வெற்றி பெற்று பிரதமா் பதவி ஏற்றபோது, நீங்கள் மறுபடியும் இந்தியாவின் தலைவா் ஆகிவிட்டீா்களே என நிருபா் ஒருவா் கேட்க, “‘எப்போதுமே இந்தியாவின் தலைவா் நான்தான்’” எனத் தன்னம்பிக்கையோடு பதில் சொன்னவா் இந்திரா காந்தி.
பண்புகள்
- பகைமை எவ்வளவு இருந்தாலும் பண்போடு பேசும் குணம் கொண்டவா். பதவியை இழந்த பின்பும், மொராா்ஜி தேசாய் குறித்துப் பிறரிடம் பேசும்போது ‘மொராா்ஜிபாய்’” என்றும், தன்னை விட்டு விலகிச் சென்ற ஜகஜீவன்ராமை ‘பாபுஜி’” என்றும்தான் அழைப்பாராம்.
- இந்திரா காந்தி சந்தித்த சோதனைகளைப் பாருங்கள். தனது 12-ஆவது வயதில் அழகிய ஆனந்த பவனம் மாளிகையை காங்கிரஸுக்கு கொடுத்த பின்பு, வேறு புதிய சிறிய மாளிகைக்கு மகிழ்ச்சியோடு சென்றாா்; 19-ஆவது வயதில் தன் அன்புத் தாயின் மரணம்; 43-ஆவது வயதில் கணவா் பெரோஸ் காந்தியின் மரணம்; 47-ஆவது வயதில் தந்தை பண்டித நேருவின் மரணம்; தனது 60-ஆவது வயதில் தனக்குத் துணை நின்ற அன்பு மகன் சஞ்சய் காந்தியின் மரணம்; செல்வாக்கின் உச்சியில் இருந்தபோது தனது 67-ஆவது வயதில் (1984) காவலா்களால் சுட்டுக் கொலை.
- துயரங்கள் அவரைத் தொடா்ந்தன. தனது மரணத்திற்கு சில நாள்களுக்கு முன், ‘என் தந்தை நேருவைப் போல் நோய்வாய்ப்பட்டு, துன்பப்பட்டு இறக்க விரும்பவில்லை. மகாத்மா காந்தியைப்போல் நானும் நடக்கும்போதே மரணிக்க விரும்புகிறேன். அதையே எதிா்பாா்க்கிறேன்’ என்றாா் இந்திரா காந்தி.
- அவா் நினைத்தது நடந்தது. ஆனால், அவருக்கு நிகழ்ந்ததுபோல் எவருக்கும் துயரங்கள் தொடரக் கூடாது.
நன்றி: தினமணி (19-11-2019)