- அலைச்சல் மிச்சமாகிறது என்பதால் அப்பாவி மக்கள் பலர், போலி நிறுவனங்களின் செயலிகள் மூலம் கடன் பெற்றுப் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கின்றனர்; பலர் உயிரிழந்துள்ளனர். இது போன்ற சம்பவங்களுக்குக் கடன் செயலிகள் குறித்த முறையான விழிப்புணர்வு இல்லாததே முக்கியக் காரணமாகும்.
போலிகளைக் கண்டறிதல்:
- வங்கி, வங்கி சாராத நிதி நிறுவன அமைப்புகள் இந்திய மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு உள்பட்டவை. வங்கி சாராத நிதி நிறுவனங்கள், இந்திய கம்பெனி சட்டம் 2013இன் கீழ் முறைப்படி பதிவுசெய்யப்பட்டவை.
- இவற்றின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது. இந்த விதிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்களே போலிக் கடன் செயலிகளைக் கையாளுகின்றன. 2022இல் மத்திய நிதி அமைச்சகம், ‘போலிக் கடன் செயலிகள்’, அதன் விளைவுகள் குறித்து நிதித் துறைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை மேற்கொண்டது. இதன்படி ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு உட்பட்ட கடன் செயலிகள் மட்டும், ‘ஒயிட் லிஸ்ட்’ என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டன. இவற்றை மட்டும், ‘கூகுள் பிளே ஸ்டோ’ரில் வைக்க அனுமதி வழங்கப்பட்டது.
- இதனையடுத்து, கூகுள் நிறுவனம் முறையற்ற இரண்டாயிரம் கடன் செயலிகளை முடக்கியது. ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி இந்தியாவில் ஆண்ட்ராய்டு அலைபேசிகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளத் தக்க 1,100 கடன் செயலிகளில், 600 செயலிகள் சட்டத்துக்குப் புறம்பானவை எனத் தெரிய வருகிறது. கூகுள் நிறுவனத்துக்குத் தமிழ்நாடு காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவு எழுதிய கடிதத்தின் அடிப்படையில், 4 மாதங்களில் 221 போலிக் கடன் செயலிகளைக் அந்நிறுவனம் நீக்கியுள்ளது.
விளைவுகளும் வழக்குகளும்:
- போலிக் கடன் செயலியால், சென்னையில் உணவு விடுதி மேலாளர் ஒருவர் கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். செயலி மூலம் கடன் வாங்கிய தமிழ்நாட்டு இளைஞர் ஒருவர், கடனைத் திருப்பிச் செலுத்தாததால் அந்த நிறுவனம் அவரைப் பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பியது. அதனால் அவரும் தற்கொலை செய்துகொண்டார். 2021இல் தெலங்கானாவில் ஆறு பேர் இப்படி உயிரை மாய்த்துக்கொண்டனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற உயிரிழப்புகள் நடந்துவருகின்றன.
- தேசியக் குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி, போலிக் கடன் செயலிகள் சார்ந்த சைபர் கிரைம் குற்றங்கள் 2021இல் 61ஆக இருந்தன, 2022இல் 900 ஆக (1,300%) அதிகரித்துள்ளது. 2021இல் தெலங்கானாவில் மட்டும் 107 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
- கடன் குறித்த சுய அறிவு: வாழ்க்கையில், பலருக்குக் கடன் தவிர்க்க முடியாத ஒன்றுதான். ஆனால், அதை எப்படி, யாரிடம், எதற்காகப் பெறுகிறோம் என்பது முக்கியமானது. ஆவணங்களோ அலைச்சலோ இல்லாமல் கடன் பெறலாம் என்ற எண்ணத்தை முதலில் தவிர்க்க வேண்டும்.
- விபரீதம் புரியாமல் கடன் வாங்கி இன்னலுக்கு உள்ளாவதைத் தவிர்க்க விழிப்புணர்வு அவசியம். அதை அரசும் பொதுச் சமூகமும் இணைந்தே ஏற்படுத்த வேண்டும். வங்கிகளும் கடன் கேட்டு அணுகுபவர்களை முறையாக வழிநடத்தி அவர்களின் தேவைகளைத் துரிதமாகப் பூர்த்தி செய்ய முன்வர வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (04 – 08 – 2023)