ஆழ்துளை துயரங்கள்: ஒரு பொறியாளர் கூட நாட்டில் இல்லையா?
- மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவனை 16 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் உயிருடன் மீட்டனர். ஆனால், மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் சிறுவன் உயிரிழந்துவிட்ட சோக சம்பவம் நடந்துள்ளது.
- கடந்த 23-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் கோத்புட்லி பகுதியில் 700 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை சேத்னாவை மீட்கும் பணி 8-வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவுக்குப் புதிதல்ல. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் பல தசாப்தங்களாக நடந்து கொண்டேதான் இருக்கின்றன.
- ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்படும்போது அதை முறையாக மூட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள், நீதிமன்றங்கள் பல வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளன. இருப்பினும் அதை பலரும் பின்பற்றாமல் இருப்பதும், கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொள்வதும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற காரணமாக அமைகின்றன.
- வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவது, கண்காணிப்பது ஒருபுறம் இருந்தாலும், ஒரு குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிட்டால், கால விரயம் ஏற்படாமல் காப்பாற்றுவதற்கு நம்மிடம் என்ன நடைமுறை உள்ளது. சின்ன குழிக்கு அருகே பொக்லைன் உதவியுடன் நாள் கணக்கில் நேரம் எடுத்துக் கொண்டு பெரிய குழி தோண்டி, குழந்தை இருக்கும் இடத்தை அடைவதே காலம் காலமாக நாம் பின்பற்றி வரும் நடைமுறை. குறுகலான இடுக்குகளில் சிக்கியுள்ள குழந்தை சுவாசமின்றி, உணவின்றி நாள் கணக்கில் இருப்பதால் உயிரிழப்பு ஏற்படுகிறது.
- குழந்தையைக் காப்பாற்ற எடுத்துக் கொள்ளும் அவகாசத்தை குறைத்தால் ஒரு குழந்தைகூட உயிரிழக்காமல் காப்பாற்ற முடியும். அதற்கான ஒரு கருவியை, தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்க இந்தியாவில் ஒரு பொறியாளர்கூட இல்லையா? என்பதே இப்போதைய கேள்வி.
- தற்போதைய தொழில்நுட்ப யுகத்தில் ரோபோட்கள் வந்துவிட்டன; கடல்நீருக்குள்ளும், வானிலும் பறக்கும் ஆளில்லா ட்ரோன்கள் வந்துவிட்டன. ஆழ்துளைக் கிணறுக்கு தோண்டப்படும் குழியின் விட்டம் எந்தெந்த அளவுகளில் இருக்குமோ, அதற்கேற்ப வெவ்வேறு அளவுகளில் ரோபோட்களை தயாரித்து அவற்றை தலைகீழாக உள்ளே இறக்கி, குழியில் சிக்கியுள்ள குழந்தையின் கரங்களைப் பிடித்து மேலே தூக்கி வரும் வகையில் தொழில் நுட்பத்தை உருவாக்க முடியாதா?
- நம் பொறியாளர்கள் நினைத்தால் நிச்சயம் முடியும். ஒரு குழந்தையின் அளவுக்கே ரோபோட் உருவாக்கி, சுவாசக் கருவி வசதியுடன் தொடர் இணைப்புக் கம்பிகளை இணைத்து கருவியை உருவாக்குவது சாத்தியமே. தற்போது தேசிய பேரிடர் மீட்புக் குழு, மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ளன. அவர்களுக்கு அந்தக் கருவியை வழங்கினால், இதுபோன்ற விபத்துகள் நடக்கும்போது ஒரு மணி நேரத்துக்குள்ளாக அவர்களால் குழந்தைகளை உயிருடன் மீட்க முடியும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மனது வைத்தால் மட்டுமே அது சாத்தியம்.
நன்றி: இந்து தமிழ் திசை (31 – 12 – 2024)