- சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு எதிரே இந்தோ சார்சனிக் கட்டிடக் கலையில் எழுப்பப்பட்ட 115 வருட பிரிட்டிஷார் காலத்தைய கட்டிடத்தை, அப்பகுதியைக் கடப்பவர் எவரும் தவறவிட்டு விட முடியாது. பரபரப்பான, நெரிசல் மிகுந்த போக்குவரத்தில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, சற்றே உள்ளடங்கியிருக்கும் அக்கட்டிடம் பலரின் கனவு நிலம்; வரலாற்றைத் தேடுபவர்களுக்குக் கருவூலம்; ஆய்வாளர்களின் கற்பகத் தரு; எழுத்தாளர்களின் கதைச் சாவடி; மூதாதையர் நிலங்களின் தாவாக்களைத் தீர்த்துக் கொள்ள நில ஆவணம் தேடி வரும் பொதுமக்களின் துயர் நிவாரணி. அந்நியர் ஆட்சியின் நானூறு வருட வரலாற்றையும் காகிதங்களில் புதைத்துக் கொண்டு, புறத்தில் பேரமைதியுடன் நின்றிருக்கும் அந்தக் கட்டிடம் உலகளவிலான ஆய்வாளர்களின் வேடந்தாங்கல். ஆசியாவின் பழமையான ‘தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி’, தமிழகத்தின் பெருமைகளில் ஒன்று.
கடிதங்களுக்கு ஒரு கட்டிடம்:
- 1640ஆம் ஆண்டு சென்னையில் வர்த்தகர்களாய்க் காலூன்றிய ஆங்கிலேயர் அடுத்த முப்பதாண்டுகளுக்குள் தங்களுக்கென்று கடிதப் பராமரிப்பு முறைகளை வரையறுத்துக் கொண்டார்கள். சென்னையில் அவர்கள் ஆட்சிப் பரப்பு விரிவடைய விரிவடைய அவர்களுக்கிடையே பரிமாறப்பட்ட கடிதங்களும் வளர்ந்தன. வந்தவாசிப் போர் வெற்றியின் மூலம் புதுச்சேரியும் நவாபுகளின் ஆட்சிப்பகுதியும் ஆங்கிலேயர் வசம் வந்தன. 1801ஆம் ஆண்டில் நடந்த காளையார்கோயில் போரின் வெற்றிக்குப் பின், மெட்ராஸ் ராஜதானி முழுமையாக ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 1670 முதல் 1720 வரை 50 தொகுதி கடிதங்கள் மட்டுமே அவர்களிடம் இருந்தன. 1751 முதல் 1800-க்குள் ஐநூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகள் சேர்ந்துவிட்டன.
- 1800க்குப் பிறகு நிர்வாகம், நீதித் துறை, நிலவரி வசூல், சுதேசி சமஸ்தானங்களுடனான அரசியல் பரிவர்த்தனைகளால் எண்ணற்ற கடிதங்கள் சேர்ந்தன. செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் கவுன்சில் அரங்கில்தான் தொடக்கத்தில் கடிதங்கள் பராமரிக்கப்பட்டு வந்தன. பெண்டிங் பிரபு சென்னையின் கவர்னரானபோது, கோட்டையின் வடபகுதியில் ஓரிடத்தைக் கடிதங்களுக்கான அறையாக்கினார். 1823ஆம் ஆண்டு, கோட்டை பழுதுபார்க்கப்பட்டபோது, தலைமைச் செயலகத்தின் முதல் தளத்துக்குக் கடிதங்கள் மாற்றப்பட்டன. 1888ஆம் ஆண்டு தரைத் தளத்துக்கு மாற்றப்பட்ட பின், தலைமைச் செயலகத்தின் ஒரு பிரிவாக, அதிகாரி ஒருவரின் கீழ் செயல்பட்டு வந்தது. நாளும் பொழுதுமாய்ப் பெருகிய கடிதங்களுக்குப் போதிய இடமில்லாத நிலையில், கடிதங்களுக்கென்று தனியாக ஒரு கட்டிடத்தை அரசாங்கம் யோசித்தது. 1909ஆம் ஆண்டு மெட்ராஸ் ரெக்கார்ட் ஆபிஸாகத் தொடங்கப்பட்ட ஆவணக்காப்பகம், 1967ஆம் ஆண்டு மெட்ராஸ் மாநில ஆவணக்காப்பகமாகி, பின் தமிழ்நாடு ஆவணக்காப்பகமாகி, பின் தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறை ஆகியிருக்கிறது.
- ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஹென்றி டாட்வெல் தொடங்கி, ஆவணக்காப்பகத்தை முழுமையான பயன்பாடுள்ள ஓர் ஆய்வு வளமையமாக மாற்ற முயன்ற பி.எஸ்.பாலிகா உள்ளிட்ட பேராளுமைகள் இதன் காப்பாட்சியாளர்களாய் இருந்துள்ளனர். ஆவணம் என்பதில் தாளில் எழுதப்பட்ட ஏடுகளுடன் புத்தகங்கள், வரைபடங்கள், நிலவரைகள், புகைப்படங்கள், ஓலைச்சுவடிகள் உள்ளிட்டவையும் அடங்கும். அரிய வரைபடங்களும் நிலவரைகளும் புத்தகங்களும் ஆவணக்காப்பகத்தில் உள்ளன.
ஆவணப் பாதுகாப்பு:
- ஆவணக்காப்பகம் என்றாலே நூற்றாண்டு பழமையும் சோம்பலும் கொண்ட இடமாகப் பலரின் மனத்துக்குள் கற்பனை எழும். ஏதோ ஒரு சுயதேவை எழுந்து ஒரே ஒரு ஆவணத்தைத் தேடி, அதற்குள் சென்றுவிட்டால், தூங்க விடாமல், தேடு தேடு என்று மனத்தைத் துளைத்தெடுத்து, விரட்டிக்கொண்டிருக்கும் மாயசக்தி அங்கிருப்பதை உள்நுழைந்தவர்கள் அறிவார்கள். காரணம், கற்பனைகளைவிட உண்மைகள் சுவாரசியமானவை.
- முதன்மையான வரலாற்று ஆதாரமிருக்கும் ஆவணக்காப்பகங்களின் மீதான கவனம் இந்திய அளவில் குறிப்பிடத்தக்க வகையில் இல்லை. வரலாற்றைச் சொல்லும் கோயில்கள், அரண்மனைகள், கட்டிடங்களுக்கு உலகளவில் முக்கியத்துவம் இருக்கிறது. உலகப் பாரம்பரியக் கட்டிடங்களாக அவை அங்கீகரிக்கப்பட்டு, போதிய நிதி ஒதுக்கப்பட்டு முறையாகப் பராமரிக்கப்படுகின்றன. பாதுகாக்கப்படுகின்றன. மண்ணுக்குள் புதைந்த வரலாற்றை எழுப்பும் தொல்லியல் ஆய்வுகளுக்கும் முக்கியத்துவம் அளித்து, அதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அகழாய்வின் முடிவுகள் அச்சிடப்பட்டு, பரந்த தளத்தை அடைகின்றன. கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு, அந்தந்த மாநில அரசாங்கத்தால் தொடர் பதிப்புகளாக வெளியாகின்றன. கல்வெட்டுகள், செப்பேடுகள் போலில்லாமல் காகிதத்தில் எழுதப்பட்ட ஆவணங்களுக்கு ஆயுள் குறைவென்பதால் அவற்றைப் பாதுகாக்கக் கூடுதல் கவனம் தேவை.
- ஆவணங்களின் பாதுகாப்பு குறித்த கவனக் குவிப்புக்காக ஜூன் 9ஆம் தேதி சர்வதேச ஆவணக்காப்பக தினம் 2007-இல் அறிவிக்கப்பட்டது. 1948ஆம் ஆண்டு பாரீஸில் சர்வதேச ஆவணக்காப்பக கவுன்சில் உருவாக்கப்பட்ட தினமான ஜூன் 9ஆம் தேதியே ஆவணக்காப்பக நாளாகவும் அறிவிக்கப்பட்டது. அதையொட்டி, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் ஆவணக்காப்பக நாள்/வாரம் கொண்டாடப்படுகிறது. ஆவணப் பாதுகாப்பு, அனைவருக்கும் ஆவணப் பயன்பாடு இவையே இக்கொண்டாட்டத்தின் அடிப்படைகள். உலகின் பல நாடுகள் ஆவணங்கள் பாதுகாப்புக்கென்று சட்டமியற்றியுள்ளன. டெல்லி தேசிய ஆவணக்காப்பகம், யூனியன் பிரதேசங்களின் ஆவணக்காப்பகங்களுக்குமாக இந்தியாவில் பொது ஆவணங்கள் சட்டம் 1993ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
- தமிழ்நாட்டில் 1986ஆம் ஆண்டு, ஆவணப்பாதுகாப்புக்கான தீர்மானம் ஒன்று உயர்கல்வித் துறையால் இயற்றப்பட்டு, வழிகாட்டுதல் வழங்கப்பட்டிருக்கிறது. இன்னும் சட்டம் இயற்றப்படவில்லை.
புதிய வரலாறு எழுத...
- பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின் ஆவணக்களஞ்சியமான தமிழ்நாடு ஆவணக்காப்பகம், ஆவணங்கள் பாதுகாப்புச் சட்டம், டிஜிட்டல் ஆவணக்காப்பகம், புதிய கட்டிடங்கள், ஆவணங்களின் பராமரிப்புக்கென்று அறிவியல் முறையிலான வழிகாட்டுதல், ஆய்வுக்கு வழிகாட்டியாக வல்லுநர் குழு என்று ஐம்பதாண்டுகளாக உலகளவில் நடந்து வரும் மாற்றங்களைத் தனக்கும் எதிர்நோக்கி, காத்திருக்கிறது.
- பண்டைய இந்தியா, இடைக்கால இந்தியாவின் வரலாறுகள் இந்திய வரலாற்று அறிஞர்களால் எழுதப்பட்டுள்ளன. விரிவான ஆய்வுகளும் நடத்தப்பட்டுள்ளன. இந்தியாவின், தமிழகத்தின் நவீன வரலாறு இந்தியர்களின் பார்வையில் இருந்து இன்னும் முழுமையாக எழுதப்படவில்லை. பிரிட்டிஷார் எழுதி வைத்துவிட்டுச் சென்ற புத்தகங்களை அடிப்படையாக வைத்துத்தான் நாம் நம் வரலாற்றைப் படித்துக் கொண்டிருக்கிறோம். புதிய வரலாறு எழுத, ஆவணக்காப்பகத்தில் இருக்கின்ற ஆவணங்களே முதன்மை ஆதாரங்கள். ஆவணக்காப்பகங்களே வரலாற்றின் காப்பகங்கள்.
- ஜூன் 9 சர்வதேச ஆவணக்காப்பகங்கள் தினம்
நன்றி: இந்து தமிழ் திசை (16 – 06 – 2024)