- இந்தியாவில் தேசியப் பால்வள வாரியம் அமல்படுத்திய வெண்மைப் புரட்சியின் விளைவாக, பால் உற்பத்தித் திட்டங்கள் மூலம், கிராமப்புறங்களில் அதிக எண்ணிக்கையில் குஜராத்தின் ‘ஆனந்த்’ மாதிரி (அமுல்) கூட்டுறவுச் சங்கங்கள் தொடங்கப்பட்டன. அவை பால், தயிர், பால் சார்ந்த பொருள்களைத் தயாரித்து நுகர்வோருக்கு விற்பனை செய்கின்றன. தமிழ்நாட்டில் ஆவின், கர்நாடகத்தில் நந்தினி, குஜராத்தில் அமுல் போன்றவை அதுபோன்று உருவாக்கப் பட்ட நிறுவனங்கள்தான்.
- இதன்மூலம் பால் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்கிற பால் வீணாவது தவிர்க்கப்பட்டது. பாலைப் பாதுகாத்து, பதப்படுத்தி நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் பால் தேவையைப் பூர்த்தி செய்ய முடிந்தது. பாலுக்கென நிரந்தரச் சந்தையும் ஏற்பட்டது. ஆக்கபூர்வமான இந்த முன்னெடுப்புகளால், 1997 முதல் பால் உற்பத்தியில் இந்தியா உலகளவில் முதலிடம் வகித்துவருகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பால் உற்பத்தியின் பங்களிப்பு 4.2% ஆகும்.
- நாட்டில் பல மாநிலங்களிலும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாகப் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. குஜராத் (275 லட்சம் லிட்டர்), கர்நாடகத்தைத் (73 லட்சம் லிட்டர்) தொடர்ந்து மூன்றாம் இடத்திலுள்ள தமிழ்நாட்டில், ஆவின் நிறுவனம் தினமும் சுமார் 37 லட்சம் லிட்டர் பாலைக் கொள்முதல் செய்கிறது; தினமும் 206 லட்சம் லிட்டர் பால் தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது. கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் தயாரிக்கப்படும் பால், பால் பொருள்கள் ‘ஆவின்’ என்ற பெயரிலேயே விற்பனை செய்யப்படுகின்றன.
மூன்று அடுக்குகள்:
- ஆவின் நிறுவனம் என்று ஒற்றைப் பெயரில் அழைக்கப்பட்டாலும், இதன் பின்னணியில் மூன்று அடுக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. இதைத்தான் ‘அமுல்’ மாதிரி கூட்டுறவுச் சங்கங்கள் என்கிறார்கள்.
அடுக்கு 1:
- கிராம அளவில் செயல்படும் தொடக்கப் பால் கூட்டுறவு சங்கங்களே மூன்றடுக்குப் பால் கூட்டுறவு அமைப்புகளின் அடித்தளம். இக்கூட்டுறவு அமைப்புகளே பால் உற்பத்தியாளர்களுடன் நேரடித் தொடர்பு கொண்டவை. உள்ளூர் தேவை போக, உபரிப் பாலை மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களுக்கு இவை வழங்குகின்றன.
அடுக்கு 2:
- மாவட்டக் கூட்டுறவுஎல்லைக்கு உள்பட்ட பகுதியில் உள்ள தொடக்கப் பால்உற்பத்தியாளர்கள், இரண்டாம் அடுக்கில் உள்ள மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் உபரிப் பாலை வாங்கி, பதப்படுத்தி நுகர்வோருக்கு விற்பனை செய்வார்கள்; அத்துடன் பால் பொருள்களையும் தயாரிப்பார்கள்.
அடுக்கு 3:
- தமிழ்நாடு கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் இணையம் என்பது மாநில அளவிலான தலைமைப்பால் கூட்டுறவுச் சங்கம். இதில் மாவட்டக் கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களே உறுப்பினர்கள். இவர்கள் பாலைக் கொள்முதல் செய்து பதப்படுத்தி சென்னைபோன்ற பெருநகரில் பால் விற்பனை செய்கிறார்கள்.
கூட்டுறவு அமைப்புகளின் பங்களிப்பு:
- தமிழ்நாட்டில் 27 மாவட்டக் கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் உள்ளன. இதில் உறுப்பினர்களாக 9,673 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. இதில் அங்கம் வகிக்கும் 3.99 லட்சம் பால் உற்பத்தியாளர்கள்தான் 37 லட்சம் லிட்டர் பாலை உற்பத்தி செய்கின்றனர்.
- இதில் உள்ளூரில் பால் விற்பனை போக, உபரிப் பால் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மாவட்டக் கூட்டுறவு ஒன்றியங்களுக்கு வழங்கப்படுகிறது. இப்படிப் பெறப்படும் பால் பல்வேறு நிலைகளில் தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, நுகர்வோருக்குப் பால் பாக்கெட்டுகளாக விற்பனை செய்யப்படுகிறது.
- தமிழ்நாட்டில் 1958இல் பால்வளத் துறையை அரசு ஏற்படுத்தியது. பிறகு அனைத்து பால் கூட்டுறவுச் சங்கங்களின் மீதான சட்டபூர்வ, நிர்வாகக் கட்டுப்பாடுகள் 1965இல் பால்வளத் துறைக்கு மாற்றப்பட்டன. 1972இல் இத்துறையின் வணிக நடவடிக்கைகள் கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டன.
- 1981இல்தான் ‘அமுல்’ பாணியில்தமிழ்நாட்டில் ஆவின் என்ற மூன்றடுக்குப் பால் சார்ந்த கூட்டுறவு முறை உருவாக்கப்பட்டது. பிற கூட்டுறவு அமைப்புகள்போல இந்த மூன்றடுக்கு பால் கூட்டுறவு அமைப்புகளும் 1983 முதல் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டப்படி நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
நன்றி: இந்து தமிழ்திசை (01 – 06 – 2023)