TNPSC Thervupettagam

ஆஸ்விட்ச்: ஒரு வதைமுகாமின் கதை

February 7 , 2020 1805 days 997 0
  • உலக வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட ஒரு முக்கியமான இடமான ஆஸ்விட்ச் மீண்டும் பேசப்படலாகியிருக்கிறது. இந்த ஆண்டு முழுமையுமே அது பேசப்படும். மனித குலம் மறக்கவே முடியாத இடங்களில் ஒன்றான அது எப்படி பேசப்படாமல் இருக்க முடியும்? நாஜிக்களின் ஆஸ்விட்ச் வதைமுகாமிலிருந்து யூதர்கள் விடுவிக்கப்பட்டதன் 75-வது ஆண்டு தற்போது அனுசரிக்கப்படுகிறது.
  • ஆஸ்விட்ச் ராணுவ வதைமுகாம் என்பது வெறும் முகாம் மட்டுமல்ல; நவீனக் கொலைக்களம். ஈவிரக்கமற்றவர்களிடம் அதிகாரமும் படைபலமும் சேர்ந்தால் என்ன ஆகும் என்பதற்கு உலக சாட்சியாக இருப்பது ஆஸ்விட்ச். ஜெர்மானிய நாஜி அரசு, இரண்டாம் உலகப் போரின்போது ஆக்கிரமித்த போலந்தின் தென்பகுதியில் ஆஸ்விட்ச் என்கிற சிற்றூரில் ராணுவ முகாமைத் திறந்தது. தங்களால் பிடிக்கப்படும் எதிரி நாட்டவர்களை அடிமைகளைப் போல் நடத்தி வேலைவாங்கவும், சித்ரவதை செய்யவும் இந்த இடத்தை அவர்கள் பயன்படுத்தினார்கள்.
  • போரில் ஜெர்மனிக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்த மமதையாலும், மனிதாபிமானம் அறவே இல்லாமல் வறண்டதாலும், ஐரோப்பிய நாடுகளில் தாங்கள் கைதுசெய்த யூதர்கள் அனைவரையும் வதைமுகாமில் நச்சுவாயுவைப் பயன்படுத்திக் கொன்று, பிறகு எரித்து சாம்பலை அந்த ஊருக்கு அருகில் இருந்த ஏரிகளில் கரைத்துவிட்டனர்.
  • விஷவாயுதான் என்றில்லாமல் அடித்துக் கொல்வது, சித்ரவதை செய்து கொல்வது, சுட்டுக் கொல்வது, கூர்மையான ஆயுதங்களால் கொல்வது என்று எல்லா கோரமான வழிகளையும் கடைப்பிடித்தார்கள். நச்சுவாயு போதிய அளவில் கிடைக்காதபோது, அக்னி குண்டத்தை மூட்டி அதில் யூதர்களை உயிரோடு தூக்கிப் போட்டும் பொசுக்கிக் கொன்றார்கள்.

75-ம் நினைவு நாள்

  • 1940 முதல் 1945 வரையில் இந்த மாபெரும் பாதகச் செயல் உலகின் பிற நாடுகளால் அறியப்படாமல் நடந்தது. ரஷ்யாவிலிருந்து புறப்பட்ட செஞ்சேனை வீரர்கள் போலந்தையும் ஆஸ்விட்சையும் கைப்பற்றிய பிறகுதான் இந்தக் கொடுமை நின்றது. யூதர்கள் மட்டுமல்லாது போலந்து, ருமேனியா, சோவியத் நாடுகளைச் சேர்ந்தவர்களும் சின்டி, ரோமா பழங்குடி மக்களும், தன்பாலின உறவாளர்களும், யெஹோவா விசுவாசிகளும், ஹிட்லரின் அரசியல் எதிரிகளும் இங்கே கொல்லப்பட்டனர். ஆஸ்விட்சில் மட்டுமல்ல, மேலும் 20 ஊர்களில் இதே போன்ற வதைமுகாம்கள் நடத்தப்பட்டன. சுமார் 30 சிறுமுகாம்களும் நடத்தப்பட்டன. ரேவன்ஸ்ப்ரக் என்ற ஊரில் பெண்களுக்கு மட்டுமே தனி வதைமுகாம் இருந்தது.
  • ஆஸ்விட்ச் முகாமுக்குச் சிறுவர்களாக அழைத்துவரப்பட்டு எப்படியோ உயிர் தப்பியவர்களில் சுமார் 200 பேர் தங்களுடைய முதிய வயதில் இங்கு வந்து, தங்களுடைய குடும்பத்தவர்கள், உறவினர்கள், நண்பர்களுக்காகக் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவர்களுடைய அடுத்த இரண்டு தலைமுறையினரும் உடன் வந்திருந்தனர். இஸ்ரேல், போலந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் அதிபர்களும் தலைவர்களும் வெவ்வேறு நாடுகளில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். ஆனால், இன்றைக்கும்கூட யூதர்களை வெறுப்பவர்கள் இருக்கின்றனர். இதைத் தடுக்க வேண்டும் என்று ஆஸ்விட்ச் முகாமுக்கு வந்த முதியவர்கள் மனமுருகக் கேட்டுக்கொண்டனர்.
  • 1947-ல் போலந்து இந்த முகாமை இறந்தவர்களுக்கான நினைவகமாக அறிவித்தது. இங்கே அருங்காட்சியகமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இடத்தை மீட்க செஞ்சேனை வந்த ஜனவரி 27-ம் தேதி ஆண்டுதோறும் நினைவுநாளாக அனுசரிக்கப்படுகிறது.
  • அடால்ஃப் பர்கர், ஆனி ஃபிராங்க், விக்டர் ஃபிராங்கிள், இம்ரி கெர்டஸ், பிரீமோ லெவி, ஐரீன் நெமிரோஃப்ஸ்கி, விடோல்ட் பிலிக்கி, எடித் ஸ்டெயின், சிமோன் வெலி, ரூடால்ஃப் வெர்பா, ஆல்பிரட் வெட்சியர், எல்லி வைசெல், எல்சி உரி உள்ளிட்டோர் ஆஸ்விட்ச் முகாமில் அடைக்கப்பட்டனர். ஆனி பிராங்க் 1929 முதல் 1945 வரை வாழ்ந்த சிறுமி. ஜெர்மனி நாட்டில் பிறந்து, வளர்ந்த அவர் தனது அக்கா, பெற்றோருடன் நெதர்லாந்து நாட்டுக்கு தப்பிச் சென்றார். ஆனால், அங்கு அவருடைய தந்தை கைதுசெய்யப்பட, அவர் பணிபுரிந்த கட்டிடத்தில் ரகசிய அறையில் யாருக்கும் தெரியாமல் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்தார் ஆனி.
  • அந்தக் கட்டிடத்தில் அப்படியொரு அறை இருப்பது தெரியாதபடிக்குப் புத்தக அலமாரியால் அதன் வாயிலை மறைத்து வைத்திருந்தனர். அப்போது தன்னுடைய நாட்குறிப்பில் அன்றாட நிகழ்வுகளை டச்சு மொழியில் எழுதிவந்தார். பிறகு, எப்படியோ ரகசிய போலீஸார் தெரிந்துகொண்டு அவரையும் அவருடைய அக்காவையும் ஆஸ்விட்ச் முகாமுக்குக் கொண்டுவந்தனர்.
  • பிறகு, பெர்ஜன்-பெய்சன் முகாமுக்குக் கொண்டுசென்று கொன்றுவிட்டனர். சிறைபட்ட அவருடைய தந்தை, நாஜிக்களின் வீழ்ச்சிக்குப் பிறகு விடுதலையாகி வீடு திரும்பியபோது, மகள்களின் நிலையை அறிந்தார். ஆனி எழுதிய நாட்குறிப்புகள் அவருக்குக் கிடைத்தன. 1947-ல் அதைப் புத்தகமாக வெளியிட்டார். உலகம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட மொழிகளில் அது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஆஸ்விட்ச் எப்படி வதைமுகாமானது?

  • ஆஸ்விட்ச் நகரில் ஒரு தொழிற்சாலையும் தொழிலாளர்களுக்கான குடியிருப்பும் இருந்த இடத்தை 1939 செப்டம்பரில் நாஜிக்கள் கைப்பற்றினர். அங்கே ராணுவக் குடியிருப்பு, அலுவலகம், போர்க் கைதிகள் முகாம் ஆகியவற்றை அமைத்தனர். முதலில், போலந்து நாட்டு அரசியல் கைதிகளையும், ஜெர்மானிய குற்றவாளிகளையும் அங்கே கொண்டுவந்தனர்.
  • அந்த குற்றவாளிகள் அங்கே முகாம் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர். அற்ப விஷயத்துக்குக்கூடப் போர்க் கைதிகளைக் கொடூரமாக அடிப்பது, சித்ரவதை செய்வது என்று வதையை அவர்கள் ஆரம்பித்தனர். சித்ரவதைகளை விதவிதமாகச் செய்து பார்த்தனர்.
  • 1941 ஆகஸ்டில் போலந்து, சோவியத் போர்க் கைதிகளை நாஜிப் படையினர் நச்சுவாயுவைப் பாய்ச்சிக் கொன்றனர். உடனே ஆஸ்விட்ச்-II என்ற பெயரில் வதைகூடத்தின் அடுத்த தொகுப்பைப் போர்க் கைதிகளைக் கொண்டே கட்டினர். அந்த வளாகத்தின் பரப்பளவு 472 ஏக்கர். அதற்குள் ரயில்கள் வருவதற்கு மூன்று தண்டவாளப் பாதைகளை அமைத்தனர். பிராக், வியன்னா, பெர்லின், வார்சா போன்ற நகரங்களுடன் ரயில்பாதை இணைக்கப்பட்டிருந்ததால், ஐரோப்பா எங்கும் கைதாகும் போர்க் கைதிகளும் ஆஸ்விட்சுக்கு உடனடியாகச் சரக்கு ரயில்களில் நிற்க வைத்தே கொண்டுவரப்பட்டனர்.
  • கடுங்குளிரில் பசியும் நோயுமாக வந்தவர்களை உடனடியாக மகளிர், சிறுவர்கள், நோயுற்றவர்கள், முதியவர்கள் என்று வகைப்படுத்தி இவர்களையெல்லாம் நேரடியாக விஷவாயுக் கூடங்களுக்குக் கொண்டுசென்று கொன்றனர். வந்தவர்களின் பெயர்களையோ, ஊரையோகூடப் பதிவுசெய்யவில்லை. நல்ல உடல் வலுவுடன் இருந்தவர்களைச் சிறிது காலம் அந்த முகாமில் கட்டிடப் பணிக்கும் பிற வேலைகளுக்கும் வைத்துக்கொண்டனர்.
  • அடுத்த கூட்டம் வந்ததும் முதலில் வந்தவர்களில் உடல் வலுவுடன் இருந்தவர்கள்கூடக் கொலைக்களத்துக்கு அனுப்பப்பட்டனர்.
  • விஷவாயு தீர்ந்துபோனபோது, தரையில் பெரிய நெருப்புக் குண்டத்தை ஏற்படுத்தி அதில் உயிரோடு தூக்கி வீசிக் கொன்றனர். இறந்தவர்களின் சாம்பலைப் பக்கத்தில் இருந்த பல ஏரிகளில் கரைத்தனர். இறந்தவர்கள் பற்றிய எந்தச் சுவடும் தெரியாமல் தடயங்களை அழித்தனர். அந்த இடத்துக்கு வந்தவர்களுக்கு உணவு, குடிநீர், மருந்து என்று எதையும் தராமல் பட்டினி போட்டனர். பட்டினிக்குச் சாவே மேல் என்று பலர் முடிவெடுத்தனர்.

11 லட்சம் சடலங்கள்

  • ஆஸ்விட்ச் முகாமுக்கு அழைத்துவரப்பட்ட 13 லட்சம் பேரில் 11 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். 9,60,000 யூதர்கள், 74,000 யூதர் அல்லாதவர்கள், 21,00 ரோமா பழங்குடியினர், 15,000 சோவியத் போர்க் கைதிகள், 15,000 பிற ஐரோப்பியக் கைதிகள் இறந்தனர். பட்டினி, நோய், உடல் வறட்சி ஆகியவற்றால் இறந்தவர்களும் ஆயிரக்கணக்கில் இருப்பார்கள். முகாம் காவலர்கள் தனிப்பட்ட விரோதங்களால் சிலரைக் கொன்றனர். கைதிகளை வைத்து செய்யப்பட்ட மருத்துவச் சோதனைகளிலும் பலர் இறந்தனர். 802 பேர் அந்தச் சோதனை முகாமிலிருந்து தப்பிக்க முயன்றனர், 144 பேர் மட்டுமே தப்பினர்.
  • 1945 ஜனவரியில் செஞ்சேனை, ஆஸ்விட்ச் நோக்கி வந்தது. அதற்குள் அங்கிருந்தவர்களில் பெரும்பாலானவர்களை ‘எஸ்எஸ்’ படையினர் ஜெர்மனி, ஆஸ்திரியாவுக்குள் இருந்த தங்களுடைய முகாம்களுக்குக் கொண்டுசென்றனர்.
  • சோவியத்தின் செஞ்சேனை, ஆஸ்விட்ச் முகாமுக்குள் சென்றபோது நாஜி, ஹிட்லரின் ‘எஸ்எஸ்’ படையின் மூத்த அதிகாரிகளும் இடைநிலை நிர்வாகிகளும் ஓடிவிட்டனர். முகாமில் இருந்த போர்க் கைதிகள் எழுந்து நிற்கக்கூடத் திராணியில்லாமல் தரையில் விழுந்து கிடந்தனர். அவர்களால் பேசக்கூட முடியவில்லை.
  • பட்டினியாலும் குளிராலும் உயிரிழக்கும் தறுவாயில் பலர் இருந்தனர். இந்தக் கொடூர முகாமின் தலைவராக ஹிட்லரின் கையாள் ஹென்றிச் ஹிம்லர் இருந்தார். அவர் பின்னர் போர்க் குற்றத்துக்காக விசாரிக்கப்பட்டார்; அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

நாஜிஸம் என்றால் என்ன?

  • ‘நேஷனல் சோஷலிசம்’ என்ற கொள்கையே ‘நாஜிஸம்’ என்றானது. ஜெர்மானியர்களுக்கும் தங்கள் இனம்தான் உயர்ந்தது என்ற கர்வம் உண்டு. ஆரியர்கள் என்று ஹிட்லர் தங்களை அழைத்துக்கொண்டார். அவர் அச்சு அசலான ஜெர்மானியரா என்கிற சந்தேகம்கூட வரலாற்றாசிரியர்களுக்கு உண்டு. ஆரிய இனம் ஆளப் பிறந்தது என்ற அகங்காரம் அவரிடம் நிரம்பியிருந்தது. தாங்கள் இனரீதியாகச் சுத்தமானவர்கள் என்று நினைத்தவர்கள், யூதர்களுக்கு எதிரானவர்கள், இனமேம்பாட்டியல் கருத்தாளர்கள் போன்றோர் இணைந்து ‘ஜெர்மானியர்கள்’ என்ற தேசிய அடையாளத்தில் இணைந்தனர். தங்களுடைய பிரதேசத்தையும் ஆளுகையையும் விரிவுபடுத்த முடிவெடுத்தார்கள். இப்படியாக ‘தேசிய சோஷலிஸ ஜெர்மானியத் தொழிலாளர்கள் கட்சி’ (நாஜி) உருவானது.
  • 1933-ல் நாஜிக்கள் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். முதலில் ஜெர்மனியில் இருந்த யூதர்களுக்கு எதிராக வன்முறைத் தாக்குதல்கள் தொடங்கின. அவர்கள் அரசு வேலையிலும் சட்டத் துறையிலும் பணியாற்றத் தடைவிதித்து நாடாளுமன்றம் சட்டமியற்றியது. ஜெர்மனியை விட்டு அவர்கள் வெளியேறும் வகையில் அலைக்கழிக்கப்பட்டனர். பொருளாதாரரீதியாக அழுத்தங்கள் தரப்பட்டன.
  • அவர்களுடைய வணிகத்துக்குச் சந்தைகளில் இடம் மறுக்கப்பட்டது. செய்தித்தாள்களில் விளம்பரம் செய்யக் கூடாது என்று தடுக்கப்பட்டனர். அரசு ஒப்பந்த வேலைகளும் யூதர்களுக்குத் தரப்படவில்லை. முத்தாய்ப்பாக, 1935-ல் ‘நூரம்பர்க் சட்டம்’ இயற்றப்பட்டது.
  • ‘ஜெர்மானிய மக்களுக்கும் அரசுக்கும் விசுவாசமாக இருப்பதை நிரூபிக்கிறவர்களும், ஜெர்மானிய ரத்த சொந்தம் உள்ளவர்களும் மட்டுமே ஜெர்மானியர்கள்’ என்று அந்தச் சட்டம் கூறியது. ஜெர்மானியர்கள் யூதர்களுடன் திருமண உறவுகொள்வதை ஒரு சட்டம் தடுத்தது.
  • முதலாம் உலகப் போருக்குப் பிறகு பிற ஐரோப்பிய நாடுகளால் கிட்டத்தட்ட அடிமைபோல ஜெர்மனி நடத்தப்பட்டதால், அந்நாட்டவர்கள் தாழ்மையுணர்ச்சி கொண்டனர். அரசின் ஸ்திரத்தன்மை குலைந்து நாட்டில் குழப்பம் ஏற்பட்டது. மக்கள் கடுமையாக உழைத்தும் வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லாமல் அதிருப்தியில் வாடினர்.
  • நாட்டை ஒற்றுமைப்படுத்தவும் மக்களுக்கு நம்பிக்கையளிக்கவும் யாருமில்லை. இந்தச் சூழலில் முதலாம் உலகப் போரில் பங்கு கொண்ட அடால்ஃப் ஹிட்லர் ராணுவத்திலிருந்து விலகி, பிறகு அரசியலில் ஈடுபட்டார்.

ஹிட்லரின் அவதாரம்

  • போர்ப்படையில் ராணுவ வீரர்களுக்குத் தலைமையேற்க தனக்குத் தந்த பேச்சுப் பயிற்சியை மக்களிடம் காட்டினார். ஜெர்மானியர்கள் உயர்ந்த ஆரிய குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இழந்த பெருமையை மீண்டும் மீட்க மக்கள் ஒன்றுதிரள வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.
  • சிறு வயதில் யூதர்களைப் பற்றிக் கேள்விப்பட்டவற்றை வைத்து ஜெர்மனியின் வீழ்ச்சிக்கு யூதர்கள்தான் காரணம் என்ற பிரமையை மக்களிடம் உருவாக்கினார். ஜெர்மனி மீண்டும் உலகத் தலைவராக விளங்க, தான் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று மக்களுக்குப் போதையூட்டினார். ஜெர்மானிய ராணுவமும் அவரைத் தலைவராக ஏற்றது. பிறகு, அவர் சர்வாதிகாரியாக மாறினார். அவருடன் இத்தாலியின் முஸோலினியும் சேர இரண்டாவது உலகப் போரின்போது இவ்விருவரும் முதல் கட்டத்தில் செல்வாக்கு செலுத்தினார்கள்.
  • சோவியத் ஒன்றியமும் அமெரிக்காவும் இந்தப் போரில் முதலில் இறங்காமல் ஒதுங்கி நின்றன. இதனாலும், ஹிட்லரும் முசோலினியும் தங்களுக்கு நிகர் எவருமில்லை என்று நினைத்தனர். ஜப்பானும் இவர்களுடன் ஒத்துழைத்தது.
  • ஆரிய இனத்துக்கு எதிரானவர்கள் யூதர்கள் என்று பேசி, அதை ஹிட்லரே தீவிரமாக நம்பத் தொடங்கினார். ஐரோப்பியக் கண்டம் முழுவதும் யூதர்களுக்கு எதிராக இருந்த வெறுப்பைப் பயன்படுத்திக்கொண்டார். ஜெர்மனியை மீண்டும் போர் இயந்திரமாக மாற்றி ஒவ்வொரு நாடாகக் கைப்பற்றினார். தான் கைப்பற்றிய நாடுகளில் இருந்த யூதர்களைக் கைதுசெய்து ஓரிடத்துக்கு அழைத்துவந்தார்.
  • ‘உலக மக்களின் ஒரே பிரச்சினை யூதர்கள்தான், அவர்களைக் கொன்றொழிப்பதுதான் பிரச்சினைக்குத் தீர்வு’ என்று முடிவுகட்டினார். அவர் எதை விரும்பினாலும் அதை மக்களிடையே பிரச்சாரம் செய்ய கோயபல்ஸ் அவருக்குக் கிடைத்தார்.
  • இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு இனி மூன்றாவது உலகப் போர் நடக்காது என்றே உலகம் நம்புகிறது. ஆனால், போர் வெறி பிடித்த ஆட்சியாளர்கள் எப்போது, எங்கே தோன்றுவார்கள் என்று சொல்ல முடியாது. போர் இல்லாத சமூகம் வேண்டும், மனித மாண்புகளை மதிக்கும் மாட்சிமை வேண்டும்; ஆஸ்விட்சும் ஜெர்மனியும் சொல்லும் வரலாற்றுப் பாடம் இவைதான்.

நன்றி: இந்து தமிழ் திசை (07-02-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories