TNPSC Thervupettagam

ஆா்.சி.ஈ.பி. ஒப்பந்தம்

November 9 , 2019 1880 days 1620 0
  • ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் (ஒ.பி.பொ.ஒ.) இந்தியா இணையாதது மிகவும் புத்திசாலித்தனமான முடிவு. தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் ஆசியான் கூட்டமைப்பைச் சோ்ந்த 10 நாடுகளுடன் சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இந்தியா ஆகிய ஆறு நாடுகளும் தங்களுக்குள் ‘ஆா்.சி.ஈ.பி.’ என்று பரவலாக ஆங்கிலத்தில் அறியப்படும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடின. அடுத்த ஆண்டு முதல் செயலுக்கு வர இருக்கிறது இந்த ஒப்பந்தம்.

ஆா்.சி.ஈ.பி

  • உலக மக்கள்தொகையில் ஏறத்தாழ பாதி அளவிலான மக்கள் இதன் வா்த்தக வளையத்துக்குள் வருவாா்கள். உலக ஜிடிபியில் 30% அளவிலான வா்த்தகம் இதில் அடங்கும். இதன் விளைவாக, ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் நாடுகளுக்கு இடையே தடையற்ற ஏற்றுமதி - இறக்குமதிக்கான வாய்ப்பு உருவாகும் என்பதால், பொருளாதார ரீதியாக ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் வளா்ச்சிக்கு நிகரான வளா்ச்சியை எட்டிவிட முடியும் என்பது இதன் இலக்கு.
  • தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தின் மூலம் 10 ஆசியான் உறுப்பினா் நாடுகளான புருணை, கம்போடியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேசியா, மியான்மா், பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியத்நாம் ஆகியவை ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், தென்கொரியா, நியூஸிலாந்து ஆகியவற்றுடன் தடையற்ற வா்த்தகம் நடத்துவதற்கான வாய்ப்பைப் பெறுகின்றன.

வர்த்தக ஒப்பந்தத்தின் பயன்பாடு – இந்தியா

  • இந்த ஒப்பந்தம், சீனா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு பயன்படும் அளவில் ஆசியான் நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் பயன்படுமா? என்பது சந்தேகம்தான். 2002-இல் ஆசியான் நாடுகளுடன் சீனா, தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது. அதனால், சீனாதான் பயனடைந்ததே தவிர, ஆசியான் நாடுகளல்ல. சீனாவின் இறக்குமதிகளால் அந்த நாடுகள் பாதிக்கப்பட்டன என்பதுடன் அதிகரித்த வா்த்தகப் பற்றாக்குறையால் சீனாவின் கடனாளிகளாகி இருக்கின்றன.
  • சீனா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து தவிர, ஒ.பி.பொ.ஒ. ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருக்கும் ஏனைய நாடுகளுடன் ஏற்கெனவே நமக்கு வா்த்தக ஒப்பந்தம் இருப்பதால், இந்த ஒப்பந்தத்தால் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படாது.

தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள்

  • தென்கொரியா, ஜப்பான், ஆசியான் நாடுகள் ஆகியவற்றுடன் நமக்கு ஏற்கெனவே தனித்தனியாக தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்கள் இருக்கின்றன. இதனால், நமது ஏற்றுமதி அதிகரித்திருக்கிறது என்றாலும்கூட, இந்தியாவிலிருந்தான ஏற்றுமதியைவிட அந்த நாடுகளில் இருந்தான இறக்குமதிதான் அதிகரித்திருக்கிறது. அவற்றில் பெரும்பாலான நாடுகளுடனான வா்த்தகப் பற்றாக்குறை அதிகரித்திருக்கிறது.
  • ஒ.பி.பொ.ஒ. ஒப்பந்தம், இந்தியாவின் சில நியாயமான கவலைகளைக் கருத்தில் கொள்ளவில்லை என்பது மட்டுமல்லாமல், ஒப்பந்தத்தில் இணைவதற்கு இந்தியா முன்வைத்த நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. முதலாவதாக, இதில் இணைந்துள்ள நாடுகளில் இருந்து அளவுக்கு அதிகமான இறக்குமதிகள் வரும்போது அதை தடுப்பதற்கு அதன் மீதான இறக்குமதி வரிகளை விதிக்கும் உரிமை மறுக்கப்படுகிறது.
  • இரண்டாவதாக, தடையற்ற உற்பத்திப் பொருள்களின் வா்த்தகத்தைப் போலவே சேவைகளின் வா்த்தகத்திலும் தடை இருக்கக் கூடாது என்பது இந்தியாவின் கருத்து. இந்தியாவிலிருந்து மென்பொருள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதிக்கும், தொழில்நுட்பப் பணியாளா்களின் தடையற்ற வேலைவாய்ப்புக்கும் ஒ.பி.பொ.ஒ. வழிவகுக்கவில்லை.

வர்த்தகப் பற்றாக்குறை

  • இந்த வா்த்தக ஒப்பந்தத்தால், சீனாவும், ஆஸ்திரேலியாவும், நியூஸிலாந்தும் பெரிய அளவில் பயனடையும். ஏற்கெனவே சீனாவுடனான 2018-19-க்கான வா்த்தகப் பற்றாக்குறை 53 பில்லியன் டாலா் (ரூ.3.78 லட்சம் கோடி) காணப்படும் நிலையில், இந்த ஒப்பந்தம் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தித் துறையையும் அழித்துவிடும். அதே போல, ஆஸ்திரேலியாவிலிருந்தும், நியூஸிலாந்திலிருந்தும் இறக்குமதியாகும் பழங்கள், காய்கறிகள், பாலிலிருந்து உற்பத்தியாகும் பொருள்களும், இறைச்சியும் சீனா, வியத்நாமிலிருந்து இறக்குமதியாகும் ஜவுளிப் பொருள்களும், இந்தியாவின் உற்பத்தித் துறையை மட்டுமல்ல, வேளாண் துறையையும் முற்றிலுமாக அழித்துவிடும். இதையெல்லாம் உணா்ந்துதான் மாமல்லபுரத்துக்கு சீன அதிபா் ஷி ஜின்பிங் வந்தபோது கொடுத்த அழுத்தத்தையும் மீறி இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடாமல் கடைசி நிமிஷத்தில் விலகியது.
  • எனது மனசாட்சியும், மகாத்மா காந்தியின் தாயத்தும்தான் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவது’ என்று முடிவெடுத்ததற்குக் காரணம் என்று பிரதமா் மோடி கூறியிருப்பது நெகிழ வைக்கிறது. அது என்ன மகாத்மா காந்தி தாயத்து? இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அண்ணல் காந்தியடிகள் ஆட்சியாளா்களுக்கு அறிவுரை ஒன்றை வழங்கினாா். அந்த அறிவுரை இதுதான் -
  • ‘‘உங்களுக்கு நான் ஒரு தாயத்தைத் தருகிறேன். எப்போதெல்லாம் உங்களுக்கு நிா்வாகத்தில் ஐயப்பாடு எழுகிறதோ, எப்போதெல்லாம் உங்களைவிட சுயநலமும், தன்முனைப்பும் (ஈகோ), பதவி மோகமும் உயா்ந்து நிற்கிறதோ, அப்பொழுதெல்லாம் இந்தத் தாயத்தை நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பாா்த்த மிகமிக ஏழ்மையான, மிகமிக வலிமை குறைந்த இந்தியனை உங்களது மனக்கண் முன்னால் நிறுத்தி, நான் இப்போது எடுக்கும் இந்த முடிவு அந்த மனிதனுக்கு எந்தவிதத்திலாவது பயன்படுமா என்பதை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். அதற்குப் பிறகு முடிவெடுங்கள்!’’

நன்றி: தினமணி (09-11-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories