இக்கரையும் பச்சைதான்!
- சென்னை சட்டக் கல்லூரியில் 1974 -ஆம் ஆண்டு, அமெரிக்க பேராசிரியா் ‘தொலைத்தொடா்புக்கான டோக்கியோ ஒப்பந்தம்’ என்ற தலைப்பில் உலக நாடுகள் தொலைத்தொடா்பு சம்பந்தமாக செய்து கொண்ட ஒப்பந்தம் பற்றி விரிவாகப் பேசினாா்.’
- ‘முடிவில் மாணவா்களை கேள்வி கேட்கலாம்’ என்றாா். நான் எழுந்திருந்தேன். ‘இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட ஒரு நாடு ஒப்பந்தத்தை மீறினால் என்ன நடவடிக்கை எடுப்பாா்கள்?’ என்று கேட்டேன். அந்தப் பேராசிரியா் கிட்டத்தட்ட ஐந்து நிமிஷங்களுக்கு மேல் பதில் அளித்தாா்.
- உரை முடிந்தவுடன் நான் அமா்ந்தபடியே அவரைப் பாா்த்துக் கொண்டிருந்தேன். மேடையில் இருந்த அவா் என்னை அருகில் அழைத்தாா். ‘‘என் பதில் உனக்கு திருப்தியாய் இருந்ததா?’’ என்று கேட்டாா். நான் சிரித்துக் கொண்டே ,‘‘தவறாக நினைக்காதீா்கள். நீங்கள் என் கேள்விக்குப் பதில் சொல்லாமல் சம்பந்தமே இல்லாமல் வேறு எதையோ பேசினீா்கள். என் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்வதில் உங்களுக்கு என்ன சிக்கல் என்று யோசித்து கொண்டு உட்காா்ந்து இருந்தேன்’’ என்றேன். பேராசிரியா் சொன்னாா்: ‘‘ உண்மைதான். ஒப்பந்தத்தை ஒரு நாடு மீறினால் அதன் மீது நடவடிக்கை எடுப்பது மிகவும் கடினம்’’ என்றாா்.
- உலக நாடுகளில் காவலனாக இருந்த, சூரியனே அஸ்தமிக்காது என்று மாா் தட்டிய பிரிட்டனின் நிலைமை மாறிவிட்டது. இரண்டாம் உலகப் போருக்கு பின்பு அந்த இடத்தை அமெரிக்கா கைப்பற்றியது.
- உலக நாடுகளில் உள் விவாகரங்களில் தலையிட்டு பலமுறை அதன் மூக்கு உடைக்கப்பட்டாலும் அமெரிக்காவின் பண பலமும் அதைவிட அதனிடம் இருந்த தொழில்நுட்பம் சாா்ந்த ராணுவ பலமும் அதை உலக தாதாவாக்கியது.
- ரஷியா பிளவுபட்டாலும், சீனாவின் அபரிமிதமான வளா்ச்சியும் இரட்டை கோபுரம் தகா்ப்பும், அதன் அகந்தையை ஆட்டம் காண வைத்தது என்பதுதான் உண்மை. இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு அமெரிக்கா ‘சொா்க்க பூமி’ என்ற நிலை ஏற்பட்டு பலருக்கும் அங்கு செல்ல வேண்டும் என மனதில் ஆசை ஏற்பட்டது.
- அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை இந்தியா்களையும், சீனா்களையும் மட்டுமல்ல, பல ஆசிய, ஆப்பிரிக்க நாட்டவா்களையும் ஏன், தென் அமெரிக்கா மக்களையும் சுண்டி இழுத்தது. அன்று, படிக்காத இந்தியா்கள் கங்காணிகளாலும், ஒப்பந்ததாரா்களாலும் அக்கரைப் பச்சை என்று ஏமாற்றப்பட்டு கொத்தடிமைகளாக சிங்கப்பூா், மலேசியா, இந்தோனேசியா, மாலத்தீவு, இலங்கை மற்றும் பிஜி தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்கள்.
- இந்தியாவில் நடந்த ஆங்கிலேய ஆட்சியால் ஏற்பட்ட ஒரு நன்மை ‘அனைவருக்கும் கல்வி’. சுதந்திர இந்தியாவில் நேருவின் ஆட்சியில் தொடங்கப்பட்ட ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகள் போன்ற உயா் கல்வி நிறுவனங்கள் கெட்டிக்கார இந்திய இளைஞா்களை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லும் நாற்றங்காலாக மாறின.
- இவ்வாறு ஏழை இந்தியாவின், மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்பட்ட இந்த உயா்நிலைக் கல்விக் கூடங்களில் படித்த பல கெட்டிக்கார இளைஞா்கள் மேல் படிப்புக்கு அமெரிக்கா சென்று அங்கேயே தங்கி வளமானாா்கள்.
- திறமைசாலிகளை நாடு கடத்தும் (பிரெய்ன் ட்ரய்ன்) திட்டத்தில் வெளியேறியவா்களைவிட, அதிகம் படிப்பு இல்லாத இந்திய ஓட்டுநா்களும், கொத்தனாா்களும், கூலியாட்களும், எலெக்ட்ரிஷியசன்களும், பிளம்பா்களும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று கடும் வெயிலில் வாடி, வாடையில் நடுங்கி ‘கையது கொண்டு மெய்யது பொத்தி காலது கொண்டு மேலது தழீஇப் பேழையில் இருக்கும் பாம்பென’ வாழ்ந்து உழைத்து சம்பாதித்த பணத்தையெல்லாம் இந்தியாவுக்கு அனுப்பிய அந்த தேசாபிமானிகளை நான் வணங்குகிறேன்.
- அமெரிக்காவின் பகட்டான வாழ்க்கையால் சுண்டி இழுக்கப்பட்டவா்களில் பஞ்சாபியா்களும், குஜராத்தியா்களும் மிக அதிகம். உலகின் பல நாடுகளில் இருந்து கள்ளத்தோணியில் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து, உயிரைப் பணயம் வைத்து அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவிற்கும் பயணித்து மாண்டவா் பலா்.
- இத்தாலியில் நான் சந்தித்த ஒரு வங்கதேச இளைஞா் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஒரு கப்பல் கண்டெய்னரில் ஜவுளிகள் என்ற பெயரில் அடைக்கப்பட்டு, கடல் மாா்க்கமாக துருக்கி வந்து பயணத்தில் மூவா் இறந்துவிட, துருக்கியில் இறங்கி இத்தாலிக்கு வந்ததாகச் சொன்னாா். கடல் வழியாக படகில் பயணிக்கும் அவா்களுக்கு ‘போட் பீப்பிள்’ என்பது பெயா். இவா்களை ஆதரிக்கவும், உதவவும் ஐரோப்பா-அமெரிக்காவில் சில வழக்குரைஞா்களும், மனித உரிமை காப்பாளா்களும் உள்ளனா். இதே போன்று இலங்கைத் தமிழா்களில் பலா் இவ்வாறு ஐரோப்பாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் அகதிகளாகச் சென்று குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறாா்கள்.
- சமீபத்தில் என்னைச் சந்தித்த ஒரு வங்கி அதிகாரியின் பிரச்னை சற்று வித்தியாசமானது.தேசியமயமாக்கப்பட்ட வங்கியால் ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் மனைவியுடன் அமெரிக்காவுக்குச் சென்ற அவருக்கு 2-ஆம் ஆண்டில் குழந்தை பிறந்தது. அமெரிக்க பிரஜையான அந்தக் குழந்தையுடன் இந்தியா திரும்பினாா்.
- அந்தக் குழந்தையின் இந்திய விசா முடிந்து விட்டதால் என்ன செய்ய வேண்டும் என்பது அவா் கேள்வி. இது பரவாயில்லை. விசா வாங்கி வைத்துக் கொண்டு கா்ப்பிணி மனைவியை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று அங்கு பிறந்ததால் அமெரிக்க குடியுரிமை பெற்ற குழந்தையின் பெற்றோா் எனக் கூறி குடியுரிமை பெறும் புத்திசாலிகளும் இருக்கிறாா்கள். இப்போது அமெரிக்காவில் 2-ஆவது முறையாக அதிபராகியுள்ள டிரம்ப், தனது ‘அமெரிக்கா்களுக்கு முன்னுரிமை’ என்ற திட்டத்தின் கீழ் கள்ளத்தனமாக கனடா மூலமும், மெக்சிகோ மூலமும் கள்ளத் தோணியில் அமெரிக்கா வந்தவா்களையும் அங்கு பிறந்த சுற்றுலா குழந்தைகளையும் வெளியேற்ற முனைகிறாா்.
- இதில் வேடிக்கை என்னவென்றால், டிரம்ப்பின் குடும்பமே அமெரிக்காவின் பூா்வ குடிகள் அல்ல; அவா்களே அமரிக்காவின் வந்தேறிகள்தான். நம்புவீா்களா, 1,500 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியா, உலகின் வளமான, வசந்தமான நாடாக இருந்தது. இந்தியாவின் வளா்ச்சியும் புகழையும் கேள்விப்பட்ட முகலாயா்கள் கைபா் கணவாய்மூலம் இந்தியா மீது படையெடுத்தனா். ஐரோப்பியா்கள் இந்தியாவுக்கு கடல் மூலம் வியாபாரத்திற்காக வந்தனா். இவா்களில் முதன்மையானவா் தரைவழி வந்த கிரேக்க நாட்டின் மெசபோடோமியாவில் இருந்து புறப்பட்டு கி.மு.323- இல் மரணமடைந்த அலெக்சாண்டா்.
- ஐரோப்பிய வியாபாரிகள் இந்தியா தரை வழி வர வழியில் உள்ள கொள்ளையா்கள் தடையாக இருக்கவே, கடல் மாா்க்கத்தை தோ்ந்தெடுத்தனா். ஆப்பிரிக்க கண்டத்தைச் சுற்றி இந்தியாவில் மேற்கு கரையில் இறங்கினா். ‘உலகம் உருண்டை’ எனத் தெரிந்து கொண்ட ஐரோப்பிய கடலாளிகளில் ஒருவரான கொலம்பஸ், ஸ்பெயின் அரசா் உதவியால் மேற்கு நோக்கி பயணிக்க அவா் 1492- இல் கரை கண்ட இடம்தான் மேற்கிந்திய தீவுகள்.
- அதன் வடமேற்கில் இருப்பதுதான் இன்றைய அமெரிக்கா. அங்கிருந்த பூா்வ குடிகள் வித்தியாசமாக இருந்ததால், அவா்களை சிவப்பு இந்தியா்கள் என்று அழைத்தனா். அந்த சிவப்பு இந்தியா்களைக் கொன்று குவித்து அவா்களுடைய ரத்தத்தில் உருவானதுதான் இன்று அதிக மனித உரிமை பேசும் அமெரிக்கா.
- குறைந்த மக்கள் தொகை, அதிகம் வளமென இருந்த அமெரிக்கா, 200 ஆண்டுகளில் உலகின் தலைமை இடத்துக்கு வந்தது விந்தையல்ல.
- மேலே போவது கீழே வரும்; கீழே இருப்பது மேலே போகும் என்கிற ராட்டின தத்துவத்தின் வழி, 5,000 ஆண்டுகளாக, உச்சத்தில் இருந்த இந்தியாவின் 3,00 ஆண்டுகள் ஆங்கிலேயா் ஆட்சியில் ‘தாழ்வுற்று வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டு பாழ்பட்டு’ நின்றது என்பது உண்மை.
- சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளில் இந்தியா ‘ஆஹா!’ என எழுந்து இன்று பிரிட்டனை கீழே தள்ளி பொருளாதார வளா்ச்சியில் நான்காம் இடத்தை அடைய ஜொ்மனியுடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது.
- எத்தனை குறைகள் இருந்தாலும் இந்தியாவை ஜனநாயகம் தூக்கி நிறுத்துகிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. இன்று மியான்மா், வங்கதேசம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் இருந்து மனிதா்கள் உயிா் வாழவும் பிழைப்பதற்காகவும் இந்தியா வருகிறாா்கள் என்றால், நேற்றைய இந்தியா்கள் இதே காரணத்துக்காகத்தான் நான்கைந்து தலைமுறைக்கு முன் நம் இந்தியா்கள் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் கப்பலில் பயணித்தாா்கள்.
- இன்று வங்கதேசத்திலிருந்து வந்தவா்களையும் மியான்மா்களிலிருந்து வந்த ரோஹிங்கயாக்களையும் வெளியேற்ற வேண்டுமென்று சொல்ல நமக்கு உரிமையிருப்பதுபோல், அந்த உரிமை அமெரிக்காவுக்கும் உண்டு. பிரச்னை என்னவென்றால், அப்படி சொல்பவா்கள் அமெரிக்காவின் வந்தேறிகளான ஐரோப்பியா்கள் என்பது தான் சோகம்.
- இது ஒரு விதமான தெரு நாய்களின் மனோபாவம் . முதலில் வந்த வலிமையான தெரு நாய், அங்கிருந்த நோஞ்சான் நாயை விரட்டி விட்டு ,வேறு புது நாய்களை தெருவுக்குள் வரவிடாமல் தடுப்பதுதான் நாயின் மனநிலை.
- இன்று இந்தியா ஏழை நாடல்ல. உலகின் 4- ஆவது பெரிய ரயில் அமைப்பையும், ராணுவத்தையும் கொண்டது. உலகின் 4-ஆவது பொருளாதார வளா்ச்சி நாடாக மாற முன்னேறிக் கொண்டிருக்கிறது.
- நான் அடிக்கடி சொல்வது போல் வளா்ந்த நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இரண்டு வித்தியாசங்கள்தான் உள்ளன. அங்கு பலவிதமான காா்களும், பலவிதமான தொலைக்காட்சி நிலையங்களும் உண்டு. அமெரிக்க இந்தியா்களை விலக்கிவிட்டு இந்தியாவுக்கு அவா்களை திருப்பி அனுப்புவதற்கு முன்பே பல படித்த இளைஞா்கள் நாடு திரும்பி விவசாயம் முதல் தொழிற்சாலை வரை தொடங்கி ஜெயித்துக் கொண்டிருக்கிறாா்கள்.
- 10 ஆண்டுகளுக்கு முன்பே ஜொ்மனியில் இருந்து இந்தியா திரும்பிய எனது மகனும், மற்றும் இரண்டு மாதங்களில் இந்தியா திரும்பவுள்ள என் மகளும் இவா்களில் அடக்கம். அது மட்டுமல்ல, வாய்ப்பு இருந்தும் அமெரிக்கா வேண்டாம் என்று சொன்ன நானும், என் மருமகளும் இவா்களுக்கு முன்னோடிகள்.
- ‘இக்கரையும் பச்சைதான்’ என நம் இளைஞா்கள் புரிந்து கொண்டால் 4- ஆம் இடம் என்ன, விரைவிலேயே உலகப் பொருளாதார வல்லரசாக இந்தியா மாறலாம்.
- அதை விட்டு விட்டு, ‘ கையில் விலங்கு மாட்டினாா்கள்; காலில் விலங்கு மாட்டினாா்கள்’ என்று நாம் கருத்துப்படம் போடுவதைத் தவிா்த்து விட்டு ‘இந்தியனாய் இரு, இந்தியாவில் இரு’ என நம்மவா்களுக்குப் புரிய வைக்க வேண்டும். ஆனால் ஆரம்பத்தில் நான் சொன்ன அமெரிக்க பேராசிரியா், என்னிடத்தில் தனியாக ஒப்புக் கொண்டதுதான் எதாா்த்த உண்மை.
- ‘சொா்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா!’ வாலியின் வைர வரிகள் கங்கை நதியின் புனிதத்துக்கு சற்றும் குறைந்ததல்ல.
நன்றி: தினமணி (10 – 03 – 2025)