TNPSC Thervupettagam

இசைக்கு இஸ்லாத்தில் தடையா?

October 16 , 2024 3 hrs 0 min 11 0

இசைக்கு இஸ்லாத்தில் தடையா?

  • பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அந்த நாட்டு தேசிய கீதம் வாசிக்கப்பட்டபோது, ஆப்கானிஸ்தானின் இடைக்கால துணைத்தூதர் ஹாஃபிஸ் முஹிபுல்லாஹ் ஷாகிரும் அவர் உதவியாளரும் எழுந்து நிற்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
  • பாகிஸ்தானின் தேசிய கீதம் இசையுடன் வாசிக்கப்பட்டதால்தான் அவர்கள் எழுந்து நிற்கவில்லை. இசை இஸ்லாத்திற்கு எதிரானது என பெஷாவரிலுள்ள ஆப்கன் துணைத் தூதரகம் கூறியுள்ளது. மேலும் ஆப்கன் தேசிய கீதத்தை இசையுடன் வாசிக்க அந்நாடு தடைவிதித்துள்ளது.
  • இசை இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டுள்ளதா? இஸ்லாத்தில் இசை ஹராமா? என்ற விவாதம் நீண்ட காலமாக நடந்து வருகிறது.
  • சமீப நாட்களில் தமிழ்நாட்டில் இந்த சர்ச்சை தீவிரமடைந்திருக்கிறது. முஸ்லிம் இசைக் கலைஞர்கள்மீது குறிப்பாக பெண்கள்மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இசைக் கலைஞர்களும் இசையைக் கேட்பவர்களும் பாவிகளாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். இது முஸ்லிம்களுக்கு மத்தியிலும் பொது சமூகத்திலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • இது போன்ற கடும் போக்குகள் இஸ்லாத்தின்மீது தவறான பார்வையை ஏற்படுத்த வழிவகுக்கும். உண்மையில் இசை குறித்த இஸ்லாத்தின் பார்வை என்ன? இஸ்லாம் இசையைத் தடைசெய்திருக்கிறதா? எதார்த்தத்தில் இசை ஹராமா? என்பதில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களிடையே சட்ட நிபுணர்களிடையே பல்வேறு கருத்துகள் காணப்படுகின்றன.
  • பாடுவதே ஹராம், இசைக் கருவிகளுடன் பாடுவது ஹராம், இசைக் கருவிகள் இல்லாமல் பாடலாம், ஆண்கள் மட்டும் பாடலாம், "தஃப்' எனப்படும் கஞ்சிரா இசைக்கருவியை மட்டும் இசைத்து பாடலாம், திருமணம், பண்டிகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் மட்டும் இசைக் கருவிகளுடன் பாடலாம், எல்லாக் காலங்களிலும் இசைக் கருவிகளுடன் பாடலாம் உள்ளிட்ட வேறுபட்ட கருத்துகளை ஆய்வின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. இவற்றுள் எல்லாக் காலங்களிலும் இசைக் கருவிகளுடன் பாடுவது ஹராமா என்பதுதான் முக்கியமான விவாதப்பொருளாக இருந்துவருகிறது.
  • மார்க்கச் சட்ட நிபுணர்களிடையே ஒருமித்த கருத்து இருந்தால் மட்டுமே ஒரு விஷயத்தை நிராகரிக்கவும், ஹராம் என்று தீர்மானிக்கவும் முடியும். கருத்து வேறுபாடுள்ள ஒரு விஷயத்தில் அதை நிராகரிக்கவோ ஹராம் என்று தீர்மானிக்கவோ கூடாது என்பது மார்க்கச் சட்டவியல் துறையின் ஒரு முக்கியமான விதி. அது இசை விஷயத்திலும் பொருந்தும் என எகிப்தின் புகழ்பெற்ற அல் அஸ்ஹர் பல்கலைக்கழக அறிஞர்கள் தெரிவித்துள்ளார்கள்.
  • அடிப்படையில் இசை ஹராம் என்று திருக்குர்ஆனில் எந்த வசனத்திலும் நேரடியாக குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் இசை ஹராம் என்று கூறும் அறிஞர்கள் தங்களுக்கு ஆதாரமாக பின்வரும் வசனங்களை மேற்கோள் காட்டுகிறார்கள்:
  • வீண் பேச்சுகளை விலைகொடுத்து வாங்குவோரும் மனிதர்களில் உள்ளனர். அறிவின்றி, இறைவழியிலிருந்து மக்களை வழி பிறழச் செய்வதற்காகவும் அதை ஒரு கேலிப் பொருளாக எடுத்துக் காட்டுவதற்காகவும் இவ்வாறு செய்கின்றனர். அவர்களுக்கு இழிவு தரும் வேதனைதான் உண்டு. (அல்குர்ஆன், அத்தியாயம்: 31, வசனம்: 6)
  • அவர்களில் உனக்கு இயன்றவர்களை உன் குரலால் நேர்வழியிலிருந்து நழுவச்செய்துவிடு (என்று இறைவன் ஷைத்தானிடம் கூறினான்). (அல்குர்ஆன், அத்தியாயம்: 17, வசனம்: 64)
  • அவர்கள் பொய் சாட்சி கூற மாட்டார்கள். வீண் கேளிக்கைகளைக் கடந்துசெல்ல நேர்ந்தாலும் கண்ணியமாகக் கடந்து சென்றுவிடுவார்கள். (அல்குர்ஆன், அத்தியாயம்: 25, வசனம்: 72)
  • மேற்கண்ட வசனங்களில் இடம்பெற்றுள்ள "வீண் பேச்சுகள்', "குரல்', "வீண் கேளிக்கைகள்' ஆகியவை பாடுவதைக் குறிக்கும் என்று பெரும்பாலான திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இசை ஹராம் என்று கூறும் அறிஞர்கள் இதை ஆதாரமாக முன்வைக்கிறார்கள். மேலும் பல நபி மொழிகளையும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அவற்றுள் முக்கியமாக பின்வரும் நபிமொழியை மேற்கோள்காட்டுகிறார்கள்:
  • "என் சமுதாயத்தில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் புரிவது, ஆண்கள் பட்டுத்துணி அணிவது, மது அருந்துவது, இசைக் கருவிகளை இசைப்பது ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: ஸஹீஹுல் புகாரி).
  • இஸ்லாம் இசையை தடைசெய்யவில்லை என்று கூறும் அறிஞர்கள், "மேற்கூறப்பட்ட வசனங்களில் எந்தவொரு பகுதியிலும் இசை ஹராம் என்று நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. விரிவுரையாளர்களின் கருத்துப்படி அவை இசையைக் குறிக்கும் என்று எடுத்துக்கொண்டாலும் மக்களை வழி கெடுக்கக் கூடிய பாடல் வரிகளைக் கொண்ட இசையையே அவை குறிக்கும் என்ற குறிப்பு மேற்கண்ட வசனங்களிலேயே உள்ளது'' என்று தெரிவிக்கிறார்கள்.
  • மேலும் அரபுலகின் மிக தொன்மையான கலைகளில் இசையும் ஒன்று. நபிகளார் பிறப்பதற்கு முன்பே "மிஃஸஃபா' எனப்படும் கம்பி இசைக் கருவிகளும் "மிஸ்மார்' எனப்படும் காற்று இசைக் கருவிகளும் தஃப் உள்ளிட்ட தாள இசைக் கருவிகளும் பல்வேறு இசை வடிவங்களும் இருந்துள்ளன.
  • ஆரம்ப காலங்களில் மது, மங்கை, பலதெய்வ வழிபாடு, குலப்பெருமை, பயணம், ஒட்டகம், குதிரை, போர், இரங்கல் உள்ளிட்ட பொருண்மைகளில்தான் பெரும்பாலான கவிதைகளும் இசைப் பாடல்களும் அமைந்திருந்தன. மது, விபசாரம், பலதெய்வ வழிபாடு ஆகியவை தடைசெய்யப்பட்டதற்குப் பிறகு அவற்றை ஊக்கப்படுத்தும் பாடல்வரிகளைக் கொண்ட இசையை மார்க்கம் தடைசெய்தது.
  • ஷைத்தானின் கருவிகள், விபசாரத்தின் மந்திரம் போன்ற இசைக் கருவிகள் பற்றிய கருத்துகள் அனைத்தும் மக்கள் மீண்டும் பழைய நிலைக்கு சென்றுவிடக் கூடாது என்ற அடிப்படையில் சொல்லப்பட்டவை.
  • மேலும் இசை ஹராம் என்பதற்கு ஆதாரமாக காட்டப்படும் பல நபிமொழிகள் பலவீனமானவை என்று அல்காழி அபூபக்ர் பின் அல்அரபி உள்ளிட்ட பல அறிஞர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஒருவேளை அவற்றை ஆதாரமாக எடுத்துக்கொண்டாலும்கூட முன்பு சொல்லப்பட்டதைப் போல் தீமையின் பால் மக்களை இழுக்கும் இசையையே மார்க்கம் தடை செய்திருக்கிறது என்று அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள்.
  • திருக்குர்ஆனைக் கேட்பதிலிருந்தும் இறைச் சிந்தனையிலிருந்தும் கடமைகளிலிருந்தும் மக்களின் கவனத்தைத் திருப்பும் இசையையும் தவறான சிந்தனைகளையும் உணர்வுகளையும் தூண்டும் இசையையுமே இஸ்லாம் தடை செய்துள்ளது என்பது இவர்களின் கருத்து. நல்ல கருத்துகளை உள்ளடக்கிய இசைக்கு மார்க்கத்தில் எந்த தடையுமில்லை என்பதே இவர்களின் நிலைபாடு.
  • நல்ல அர்த்தமுள்ள பாடல்களை பெருமானார் ரசித்துக் கேட்டிருக்கிறார்கள் என்பதற்கு பல்வேறு சான்றுகள் உண்டு. நபித்தோழர் ஷரீத் பின் சுவைத் அஸ்ஸகஃபி அவர்கள் கூறுகிறார்கள்: ஒருநாள் நான் பெருமானாரின் வாகனத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், "உமய்யா பின் அபிஸ் ஸல்த்தின் கவிதைகளில் ஏதேனும் உமக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள். "ஆம்'' என்றேன். "பாடு'' என்றார்கள்.
  • உடனே ஒரு பாடலைப் பாடினேன். "இன்னும் பாடு'' என்றார்கள். பிறகு இன்னொரு பாடலைப் பாடினேன். "இன்னும் பாடு'' என்றார்கள். இவ்வாறு பெருமானாருக்காக நூறு பாடல்களைப் பாடிக்காட்டினேன். (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்)
  • பெருமானாருக்கு அன்ஜஷா எனப்படும் அழகிய குரல் வளத்துடன் பாட்டுப்பாடி ஒட்டகமோட்டுபவர் ஒருவர் இருந்தார் என்கிற குறிப்பும் ஸஹீஹ் முஸ்லிம் என்ற நபிமொழித் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
  • இஸ்லாத்தில் இசை அனுமதிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு ஆதாரமாக ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், இப்னு மாஜா, நஸாயி உள்ளிட்ட முக்கியமான நபிமொழி தொகுப்புகளிலிருந்து சில நபிமொழிகளை இவர்கள் வரிசைப்படுத்தியிருக்கிறார்கள்.
  • நபித்தோழர் அனஸ் பின் மாலிக் அவர்கள் கூறுகிறார்கள்: பெருமானார் மதீனாவின் சில பகுதியைக் கடந்து சென்றபோது சில பெண்கள் கஞ்சிரா இசைக் கருவியை அடித்தவர்களாக பாட்டுப் பாடிக்கொண்டிருந்தனர். நபிகளாரைக் கண்ட அப்பெண்கள் பின்வரும் கவிதையை வாசித்தனர்:
  • பனூ நஜ்ஜாரைச் சேர்ந்த பெண்கள் நாங்கள் பெருமானார் எங்கள் அண்டைவீட்டாராக இருப்பது எவ்வளவு சிறப்பு மிக்கது.
  • அப்போது நபியவர்கள், "உங்கள்மீது நான் நேசம் வைத்துள்ளேன் என்பதை இறைவன் அறிவான்' என்று கூறினார்கள். (நூல்: இப்னு மாஜா) மேற்கண்ட நபிமொழிகள் பெருமானார் பாட்டை ரசித்திருப்பதையும், பெண்கள் பாடுவதற்கும், எல்லாக் காலங்களிலும் இசைக் கருவிகளுடன் பாடுவதற்கும் நபிகளார் அனுமதி வழங்கியிருப்பதையும் காட்டுகின்றன.
  • இன்று பல அரபி மத்ரஸாக்களில், மார்க்கக் கல்வி நிலையங்களில் "தஃப்' என்ற கஞ்சிரா இசைக் கருவியுடன் பாடல்கள் இசைக்கப்படுகின்றன. "கஞ்சிரா' இசைக் கருவி ஹலால் அனுமதிக்கப்பட்டது என்றால் கஞ்சிரா வகையைச் சேர்ந்த மற்ற தாள இசைக் கருவிகளும் அனுமதிக்கப்பட்டவைதானே என்ற கேள்வியில் நியாயம் இருக்கிறது.
  • ஒரு காலகட்டத்தில் ஒளிப்படம், விடியோ எடுப்பது ஹராம் என்ற நிலை இருந்தது. தற்போது அறிவியல் வளர்ச்சியையும் காலத்தின் தேவையையும் கருத்தில் கொண்டு அதற்கு அனுமதியளிக்கப்பட்டிருப்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற குரலும் கேட்கத் தொடங்கியிருக்கிறது.
  • இஸ்லாமிய மெய்யியல் அறிஞர்கள், சூஃபி ஞானிகள் இசை இதயத்தை மென்மையாக்கும். இறைக் காதலில் லயிக்க இசை ஒரு சிறந்த பாதை என்று தெரிவிக்கிறார்கள். பறவைகள், விலங்குகள், மரங்கள், இலைகள் என இயற்கையின் இசையைக் கேட்காதவன் குறைபாடுள்ளவன்; அவன் நடுநிலை தவறியவன் என்கிறார்கள் இமாம் கஸ்ஸாலி உள்ளிட்ட சூஃபி ஞானிகள்.
  • இராக்கைச் சேர்ந்த இமாம் அல் அஸ்ஃபஹானி, சிரியாவின் இமாம் அல்ஃபாராபி, யேமன் நாட்டின் இமாம் அஷ்ஷவ்கானி உள்ளிட்ட அறிஞர்களின் அரபு இசை நூல்கள் மிகவும் முக்கியமானவை; உலக அளவில் புகழ்பெற்றவை.
  • அந்த வகையில் நல்ல கருத்துகளை மனித உள்ளங்களில் எளிதாக கடத்த இசை ஒரு காரணமாக அமையுமானால் அதுவும் நல்லதே என்பதுதான் இசையை ஆதரிக்கும் அறிஞர்களின் கருத்து.
  • மதம், மொழி, எல்லைகள் கடந்து எல்லோரையும் இணைக்கும் முக்கிய கருவியாக இசை திகழ்கிறது. இச்சூழலில் இசை ஹராமா என்ற விவாதம் தேவையற்றது. காலத்தோடு பொருந்தாததும் கூட!

நன்றி: தினமணி (16 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories