- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி–மார்க்சிஸ்ட் (சிபிஎம்) அலுவலகம் இந்தியாவின் எந்த ஊரில் இருந்தாலும் உள்ளே நுழைந்ததும் சுவரில் மாட்டியுள்ள பெரிய புகைப்படங்களைப் பார்க்காமல் இருக்க முடியாது. அவர்கள் அனைவரும் அனேக ஆண்டுகளுக்கு முன்னால் மறைந்துவிட்ட அயல் நாட்டவர்கள், அவர்களுக்கு அருகில் ஒன்றிரண்டு இந்தியர்களின் படங்களும் இருக்கக்கூடும்.
- சிபிஎம் அலுவலகங்களுக்குச் செல்ல உங்களுக்கு நேரம் கிடைக்காவிட்டால் போகிறது, சமூக ஊடகங்களில் இந்த ஆண்டு மே 19 முதல் அவர்கள் வெளியிட்ட பதிவுகளைப் பாருங்கள். ஹோசிமின் என்ற புரட்சியாளரைப் புகழ்ந்து பதிவுகளைப் பார்க்கலாம். அவருடைய பிறந்த நாளை ஒட்டியது அந்தப் பதிவு. அமெரிக்காவின் அக்கிரமத்தைக் கண்டித்த வியட்நாமிய கம்யூனிஸ்ட் தலைவர் அவர்!
- இந்திய இடதுசாரிகளுக்குள்ள பிரச்சினையே இதுதான். மாறும் காலத்துக்கேற்ப தம் அரசியலையும் மாற்ற மறுக்கும் அவர்களுக்குச் சம கால அரசியல் பிரச்சினைகளோ, உள்நாட்டிலேயே பின்பற்றக்கூடிய புரட்சிக்காரர்களோ இல்லை. ஏழைகளின் உரிமைகளுக்காக, வேலையற்ற இளைஞர்கள் – தொழிலாளர்களுக்காக, வாக்குரிமை மறுக்கப்பட்ட அப்பாவிகளுக்காக, மத – மொழிச் சிறுபான்மையினருக்காக இந்தியாவிலும் உலக அளவிலும் போராட இதைவிட உகந்த காலம் வேறு இல்லை.
- உலக அளவில் இடதுசாரிகளின் இயக்கம் மக்களுடைய பிரச்சினைகளுக்காக நெருப்பைக் கக்கிக்கொண்டிருக்கிறது. மாணவர்கள் எப்போதுமே முற்போக்கானவர்கள்; எனவே இயல்பாகவே இடதுசாரிகளாகத் திகழ்வார்கள். 1960களின் காலம் மீண்டுவிட்டதைப் போன்ற நிலை. உங்களுக்குத் தேவையெல்லாம் தாரிக் அலி போன்ற புரட்சிக்காரர்கள்தான்.
- நிறைய போராட்டங்கள் நடக்கின்றன. காஸாவில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் நடத்தும் தாக்குதலைக் கண்டித்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் கறுப்பர்களின் உயிரும் முக்கியம் என்ற போராட்டம், பால் புதுமையர்களின் தனியுரிமைகளை உறுதிசெய்யும் கிளர்ச்சி, பருவநிலை மாறுதலுக்குக் காரணமாகும் கரிப்புகை வெளியீட்டைக் குறைக்க வேண்டிய விழிப்புணர்வு, நிரந்தர வேலை - குறிப்பிட்ட நேர உழைப்பு - நியாயமான ஊதியம் எதுவுமில்லாமல் கசக்கிப் பிழியும் (கிக் முறை) சுரண்டல் ஆகியவற்றை எதிர்த்து உலகெங்கும் இடதுசாரிகள் போராடுகின்றனர்.
- இந்திய இடதுசாரிகள் இதைவிடப் பெரியதும் விரிவானதுமான பிரச்சினைகளுக்காகவும் போராடினர் என்பதை மறுக்கவில்லை. விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தனர். குடியரிமை சட்டத் திருத்தம் - குடிமக்கள் தேசியப் பதிவேடு கூடாது என்றனர். தொழிலாளர்களுடைய வேலைவாய்ப்பு – குறைந்தபட்ச ஊதிய உரிமைகளுக்காக ஊர்வலம் சென்றனர். அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்க எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.
- தன்னை தற்காத்துக்கொள்ள முடியாதவர்களுக்கு ஆதரவாக யாராவது துணிந்து போராடியாக வேண்டும். ஆனால், இந்தப் போராட்டங்களிலெல்லாம் 1980கள், 1990கள், ஏன் 1970களில் போடப்பட்ட முழக்கங்களை மட்டுமே தொடர்ந்து கேட்கிறோம்! (தெற்கு கல்கத்தா மக்களவைத் தொகுதி பொதுக்கூட்டத்தில் ஒரு தலைவர் ‘லால்… லால்… லால் சலாம்’ என்று முழுங்கியபோது அங்கே கூடியிருந்த கல்லூரி மாணவிகள் வியப்பில் ஆழ்ந்தார்கள்).
- தொடர்ந்து வழக்கமான பேச்சுகள்: தொழிலாளர்கள் உரிமைகள் காக்கப்பட வேண்டும், மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், விவசாயிகள் நலனைக் காக்க வேண்டும்; வகுப்புவாதம் கூடாது, பாசிஸத்தை அனுமதிக்க மாட்டோம், ஊழலை எதிர்த்துப் போராடுவோம்.
- சரி, சரி, சரி. ஆம், இத்துடன் சே குவேரா படம் பொறித்த சட்டை அணிதல்.
சமூக ஊடகங்கள்
- இதைவிட துடிப்பாக, சமூக ஊடகங்களில் பிரச்சினைகள் அலசப்படுகின்றன. உற்பத்தித் தொழில்களில் வேலைவாய்ப்பு குறைவது, விவசாயத் துறை எதிர்கொள்ளும் புதிய பிரச்சினைகள், கல்வியில் தரம் குறைவது – அதிலும் குறிப்பாக ஆரம்பக் கல்விக்கூடங்களில் தரம் இல்லாமலிருப்பது, நிரந்தரமற்ற பகுதிநேர வேலையில் தொழிலாளர்களைக் கசக்கிப் பிழிந்துவிட்டு குறைந்த ஊதியம் தருவது, சாமானிய மக்களால் சுவாசிக்க முடியாத அளவுக்கு நகரங்களில் காற்றில் கரிப்புகை கலந்து விஷமானது, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஆதரிப்பதாக அரசு பேசினாலும் அவை சந்திக்கும் பிரச்சினைகள் இவையெல்லாம்தான் சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்படுகின்றன. இணையதளத்தில் இளைஞர்களுடன் உரையாடும்போது இவற்றைக் கேட்க முடிகிறது.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ)
- செயற்கை நுண்ணறிவு, அவற்றின் தாக்கம் குறித்து உலக அளவில் பெரும் விவாதங்கள் நடக்கின்றன. இந்திய இடதுசாரிகள் இது தொடர்பாக என்ன செய்திருக்கிறார்கள்? ‘சாட்ஜிபிடி’யால் படைப்பாக்கத் திறனோடு செய்யும் வேலைகளுக்குப் போட்டி வந்துவிடுமா?
- சமூக – பொருளாதார நீதியை வழங்கும் வகையில், சுற்றுச்சூழல் துறையில் அதிக ஊதியத்துடனான புதிய வேலைவாய்ப்புகளை அளிக்கும் ‘பசுமை புதிய திட்ட கட்டமைப்பு’ பற்றி இப்போது அதிகம் பேசப்படுகிறது. இதில் இடதுசாரிகளுடைய கருத்து என்ன?
- இந்த உரையாடல்களை சரியாக வழிநடத்தும் சிந்தனை தலைமையிடம் இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் பொதுக்கூட்டங்கள், பேரணிகளில்தான் ஆர்வம் காட்டுகிறது, அதன் முழக்கங்கள் கேட்டுக் கேட்டுப் பழகிப்போன பழைய முழக்கங்களே, நடு நடுவில் வலதுசாரிகளை வசைபாடுவது தொடர்கிறது. இப்போது காங்கிரஸ் கட்சி மீது புதிய பாசம் ஏற்பட்டிருக்கிறது.
- இந்தியாவுக்கென்று பெர்னி சான்டர்ஸ், கிரேட்டா துன்பர்க், அலெக்சாந்த்ரியா ஒகாஸியோ-கார்ட்டெஸ், சன்னா மாரின்கள் எங்கே? எங்கே தலைமை, பிரச்சினைகளை அடையாளம் கண்டு முன்னெடுப்பது யார், சமகால பிரச்சினைகளுக்கான கோரிக்கைகள் எங்கே?
- தனிப்பட்ட சந்திப்புகளில் தோழர்கள் தங்களுக்குள் கேட்டுக்கொள்ளும் கேள்வி – டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவாலைப் போல கடந்த ஐம்பதாண்டுகளில் இடதுசாரிகளிடையே ஒரு தலைவர் ஏன் உருவாகவில்லை? ராகுல் காந்தி ஏன் மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக அடுத்து பதவி வகிக்கக் கூடாது? கட்சி இப்போது எதையெல்லாம் சொல்கிறதோ அதையே அவரும் மேடைகளில் பேசுகிறார்!
- நான் அரசியல் நிபுணன் அல்ல. இடதுசாரி ஆட்சியின் கீழ் வளர்ந்தவனுடைய கருத்துகள் இவை.
கொல்கத்தாவில் வளர்ச்சி
- வங்கத்தின் தலைநகரமான கொல்கத்தாவில்தான் 1980களிலும் 1990களிலும் சிறுவனாக இருந்து படிப்படியாக வளர்ந்தேன். கால்பந்து, சைக்கிள் சவாரி, நகரம் முழுக்க நடந்தே ஊர் சுற்றுவது அன்றாடக் கடமை. இந்திய மாணவர் சம்மேளனம் (எஸ்எஃப்ஐ) நடத்திய அனைத்துப் பொதுக்கூட்டங்களிலும் தவறாமல் பங்கு கொள்வேன்.
- அப்போதெல்லாம் இடதுசாரிகள் என்றால் சமூகத்தில் மதிப்பு. ஜார்ஜி லூகாஸ், அல்துஸர், கிராம்ஸி ஆகியோருடைய நூல்களைப் படிப்போம். சத்யஜித் ராய், மிருணால் சென், ரித்விக் கடக் திரைப்படங்களைப் பார்ப்போம். சமூக – பொருளாதார விவகாரங்கள் தொடர்பாக களைப்பூட்டும் கருத்தரங்குகள், விவாதங்கள், கலந்துரையாடல்களுக்கு ஒன்றுவிடாமல் போவோம். உலக வங்கியின் கொள்கைகளைக் கண்டிக்க கொல்கத்தாவில் ஷாகித் மினார் பகுதிக்குச் செல்வோம்.
- மார்க்சிஸ்ட்டுகள் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் வகையில் எங்களுடைய கதர் குர்தாவில் செந்நிற பேட்ஜையோ, கட்சிக் கொடியையோ குத்திக்கொள்வோம். அதற்குப் பொருள் என்னவென்றால், “நாங்கள் விவரம் தெரிந்தவர்கள், உலகை மேலும் வாழத் தக்கதாக்கும் அக்கறை எங்களுக்கு உண்டு, தேவைப்படும்போது நாங்கள் செயலில் இறங்குவோம்!” என்பதே ஆகும்.
- இவையெல்லாம் தெளிவில்லாத பாவனை, இருந்தாலும் நாங்கள் இவற்றில் ஏதோ நம்பிக்கை வைத்திருந்தோம்.
- டி.எஸ்.எலியட்டின் கவிதைகளில் அதிகம் தோய்ந்தவரான தோழர் ஜோதி பாசுவின் அரசு, நிலச் சீர்திருத்தங்களை மிகவும் நேர்த்தியாக செய்திருந்தது. அத்துடன் உள்ளாட்சி மன்றங்களுக்கு போதிய அதிகாரங்களை வழங்கியது. சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக இவை நிகழ்த்தப்பட்டன.
- ஒன்றியத்தை அப்போது ஆண்ட (காங்கிரஸ்) அரசு விரோத பாவத்துடன் இருந்த நிலையிலும், வங்கத்தில் வேளாண்மை உள்பட பல துறைகள் நன்கு நிர்வகிக்கப்பட்டன. (நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் நிலக்கரி – கனிமங்கள், கோதுமை – நெல் ஆகிய பொருள்களைக் கொண்டுசெல்ல ஆகும் மொத்த செலவை எல்லா மாநிலங்கள் மீதும் சமமாக திணிக்கும் ஒன்றிய அரசின் முட்டாள்தனமான முடிவால், வங்கம் உள்பட பல மாநிலங்கள் மிகவும் பாதிப்படைந்தன). எழுத்தறிவும் சுகாதார வசதிகளும் பெருகின. ஆனால், பகலில் நாள் முழுக்க மின் தடை நிலவியது.
- தொலைநோக்குப் பார்வை இல்லாமல் வங்க இடதுசாரி அரசு கடைப்பிடித்த ‘தொழிலாளர் ஆதரவு’ (வேலைநிறுத்த ஊக்குவிப்பு) கொள்கையால் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி அப்படியே பாதியாக சரிந்தது, அரசின் நிதிப் பற்றாக்குறை இரட்டிப்பானது. சில காலத்துக்குப் பிறகு எந்தத் தொழிலதிபரும் வங்கத்தில் தொழில் தொடங்கவே அஞ்சினார்கள்.
- மார்க்சிஸ்ட்டுகளைக் கண்டாலே வெறுக்கும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, “இடதுசாரிகள் ஆட்சிக் காலத்தில் சிறியதும் பெரியதுமாக 58,000 ஆலைகள் மூடப்பட்டன” என்கிறார். டன்லப், ஷாவாலஸ், டக்பேக், மெட்டல் பாக்ஸ், ஈஸ்டர்ன் பேப்பர் மில், சுலேகா, உஷா, சணல் ஆலைகள் என்று பல நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தியை நிறுத்திவிட்டன. மம்தாவின் தரவு மிகைப்படுத்தப்பட்டது என்று வைத்துக்கொண்டாலும் அதில் பாதியளவு நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன என்று நாம் வைத்துகொண்டால்கூட மாநிலத்துக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு அளவிட முடியாதது.
பெரும் வெளியேற்றம்
- நடுத்தர வகுப்பினருக்கு புதிய வேலைவாய்ப்புகளைப் பொருத்தவரை 1980கள் மிகப் பெரிய பேரழிவுக் காலமானது. கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு உள்ளூர் மாநகராட்சியில் எழுத்தாளர் வேலைக்காக ஏங்கினேன்.
- உலகளாவிய விஷயங்களைப் படித்திருந்தாலும் வேலையைப் பொருத்தவரை நான் போக நினைத்த உயரம் அவ்வளவுதான். படிப்பில் சராசரியாக இருந்த என்னால் வங்காள ‘பத்ரலோக் ஆசாமிகள்’ (மேட்டுக்குடிகள்) பெறும் உயர் பதவிக்குப் போட்டியிட முடியவில்லை. பி.ஏ. பட்டத்தை வைத்துக்கொண்டு (முதுகலைப் படிப்பை முடிக்காமல் பாதியில் வெளியேறிவிட்டேன்) விற்பனைப் பிரதிநிதி வேலைகளாகச் செய்து வங்கம் முழுவதும் பயணித்தேன். நல்ல வேளையாக, அந்த வாழ்க்கை நீடிக்கவில்லை.
- படித்த நடுத்தர வர்க்கம் வேலை தேடி மும்பை, டெல்லி மற்றும் இதர பெருநகரங்களுக்குச் சென்றது. ஏழைகள், முன்பதிவுசெய்யப்படாத இரண்டாம் வகுப்புப் பெட்டிகளில் ஏறி மஹாராஷ்டிரம், குஜராத், தென்னிந்திய மாநிலங்களுக்குச் செல்லத் தொடங்கினர். அவர்களில் பெரும்பாலானவர்கள் எந்தவிதத் தொழில் பயிற்சியும் தொழில் கல்வியும் பெறாதவர்கள்.
- மார்க்சிஸ்ட்டுகளுடைய வங்காளம் (Exploring Marxist Bengal c.1971-2011: Memory, History and Irony) என்ற புத்தகத்தில் தேவராஜ் பட்டாசார்யா குறிப்பிடுகிறார்: “படித்த நடுத்தர வர்க்கத்தினருக்குப் பொருளாதார வளர்ச்சி – வேலைவாய்ப்புக்கான மாற்று வழி எதையும் மார்க்சிஸ்ட் கட்சியால் காட்ட முடியவில்லை. எனவே, கணினி அறிவியல் மற்றும் அது தொடர்புள்ள கல்வி கற்ற நடுத்தர வகுப்பு வங்காளிகள் பிற மாநிலங்களை நோக்கிச் சென்றனர், பிற மாநிலங்களுக்கு மனிதவளத்தை அளிக்கும் சப்ளையராக வங்கம் திகழ்ந்தது.”
- 1990களில் நிலைமை சற்று மேம்பட்டது. நிதியமைச்சர் மன்மோகன் சிங் அறிமுகப்படுத்திய தாராளமயக் கொள்கை உதவியது. அளவில் பெரிதான ஹால்டியா பெட்ரோ-ரசாயனத் தொழிலகம் பூர்ணேந்து சாட்டர்ஜி என்ற தொழிலதிபரின் பகுதியளவு முதலீட்டில் உருவானது. துர்காபூர் உருக்காலை பகுதி ஆலைகளும் விரிவடைந்தன. சால்ட் லேக் பிரிவில் தகவல் தொழில்நுட்பத் தொழில்களுக்கான அடிக்கல் 2000 தொடக்கத்தில் நிறுவப்பட்டு பிறகு மாநிலத்தின் தகவல் தொடர்புத் தொழில் கேந்திரமானது.
- சிறியதும் பெரியதுமான பல நிறுவனங்கள் மீது வைத்திருந்த செல்வாக்கால் இடதுசாரிகள் அடுத்தடுத்து தேர்தல்களில் தொடர்ந்து வென்றனர். கல்வி – சுகாதாரம் தொடர்பான முற்போக்கு திட்டங்களும் சமூக நலத் திட்டங்களும் அவர்களுடைய வெற்றிக்கு உதவின. திரிணமூல் காங்கிரஸ் அவற்றை அப்படியே பின்பற்றுகிறது. எல்லா ஊர்களிலும் எல்லாப் பகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு உள்ளூர் கிளை ஒன்று நிச்சயம் இருந்தது.
- 1990களின் இறுதிப் பகுதியில், போதும் இந்தப் பதவி என்று தோழர் ஜோதிபாசு முடிவெடுத்தார், அவரைப் போலவே வயது முதிர்ந்த ஆயிரக்கணக்கான தோழர்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பை அனில் பிஸ்வாஸ், பிமன் போஸ், புத்த தேவ் பட்டாசார்யா ஏற்றனர். அனில் பிஸ்வாஸ், மார்க்சிஸ்டுகளுடைய சாணக்கியர். பிமன் போஸ் அரசியலைவிட்டு வெளியேறி சன்னியாசியாக விரும்பினார். புத்த தேவ் பெரிய சிந்தனையாளர், ஆனால் செயல்படுவது குறைவு. சிங்கூரில் டாடா நிறுவனத்துக்கு நானோ கார் தயாரிக்க இடம் தரலாம் என்ற அவருடைய முடிவு, இதர தோழர்களைப் பதற்றத்தில் ஆழ்த்தியது.
புத்த தேவின் மாற்றம்
- வங்கத்தில் மீண்டும் தொழில் வளர்ச்சி ஏற்பட அனுமதிப்பது என்ற முடிவை புத்த தேவ் எடுத்தார். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் வங்கத்துக்கு வர வேண்டும் என்று விரும்பினார். இந்த நேரத்தில் அனில் பிஸ்வாஸ் இறந்தது பெரிய துயரமாகிவிட்டது. மம்தா தலைமையிலான போராட்டங்களை அடக்க புத்த தேவ் தவறிவிட்டார்.
- ஜேஎன்யுவில் படித்த மேல்தட்டுச் சிந்தனையாளர்களான பிரகாஷ் காரத், சீதாராம் யெச்சூரி இருவருமே வங்கத்தைத் தொழில்மயமாக்க புத்த தேவ் எடுத்த முடிவுகளை எதிர்த்தனர் என்று கூறப்படுகிறது, இப்போது அவர்கள்தான் மார்க்சிஸ்ட் கட்சியை வழிநடத்துகின்றனர்.
- மார்க்சிஸ்ட் கட்சியின் வீழ்ச்சிக்குப் பிரகாஷ் காரத்தான் காரணம் என்று கட்சிக்காரர்கள் பலர் கூறுகின்றனர். காரத் மீது அவர்கள் பெரிய புகார்ப் பட்டியலே வாசிக்கின்றனர். அணு உலைக்கு மூலப்பொருள் வாங்குவது தொடர்பான முடிவுக்காக, மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு வெளியிலிருந்து அளித்த ஆதரவைத் திரும்பப் பெறும் முடிவை அவர்தான் எடுக்க வைத்தார். தேர்தல் கூட்டணி தொடர்பாக சீதாராம் யெச்சூரியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சிக்குள் அணிகள் உருவாவதை ஊக்குவித்தார். தான் கட்டியிருந்த விலையுயர்ந்த ஆப்பிள் நிறுவன வாட்சை மாநிலங்களவையில் காட்டினார் என்பதற்காக இளம் தலைவர் ரீதாவிரத முகர்ஜியைக் கட்சியைவிட்டு வெளியேற்றினார் என்று பல குற்றச்சாட்டுகள் காரத் மீது உண்டு.
- நீண்ட காலமாக அரசியலில் இருந்தாலும் பிரகாஷ் காரத்தும் சீதாராம் யெச்சூரியும் இதுவரை எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டதில்லை; இனியும் போட்டியிட மாட்டார்கள்.
- 2005 முதல் 2015 வரையில் கட்சியின் பொதுச் செயலராக இருந்த காரத், இறுக்கமானச் சித்தாந்த நிலைப்பாட்டால் கட்சியை முன்னகர்த்த முடியாமல் செய்துவிட்டார் என்று கட்சியினர் கூறுகின்றனர். ஆனால், சிங்கூர் விவகாரத்தில் காரத் எடுத்த முடிவுதான் சரி என்பேன். தேவதைகளே கால் வைக்க அஞ்சும் இடத்தில், துணிந்து கால் வைத்ததால் புத்த தேவ் பட்டாசார்யா கசப்பான பாடத்தைப் படித்ததுடன் கட்சியையும் ஆட்சியிலிருந்து இறக்கக் காரணமாகிவிட்டார். மார்க்சிஸ்ட்டுகள் போராட்டங்களில் கடைப்பிடிக்கும் அதே உத்திகளைக் கையாண்டார் மம்தா, மார்க்சிஸ்ட் தொண்டர்களிலேயே பலர் கட்சியிலிருந்து வெளியேறி மம்தா கட்சியில் சேர்ந்துவிட்டனர்.
புதிய முகங்கள், பழைய நிலைப்பாடுகள்
- 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள வங்கத்தில் கட்சி பல புதுமுகங்களைக் களம் இறக்கியது. மேலோட்டமாகப் பார்க்கையில், இது நல்ல விஷயம்; ஆனால் பலன் தரவில்லை.
- இளம் வேட்பாளர்களுடைய நேர்காணல்களை ஆவலுடன் பின்பற்றினேன். கடந்த காலத்திலிருந்து விடுபட விரும்புகிறார்கள். ஆனால் ஆழ்ந்து கவனித்தால், கல்லூரிக் காலத்தில் கேன்டீனில் எழுப்பிய அதே முழுக்கங்களை மறக்காமல் தொடர்ந்து எழுப்புகின்றனர். 1980களைப் போலவே இப்போதும் போராட்ட மனோபாவத்திலேயே இருக்கின்றனர்.
- போராடுவது ஒரு அம்சம். அதேசமயம் யாருக்காகப் போராடுகிறோமோ அவர்களுக்கு மாற்று வழிகளையும் காட்டுவது அவசியம்; அது எப்படி என்று நரேந்திர தாமோதர் தாஸ் மோடியிடம் கேட்டால் சொல்வார்.
ஐந்து அம்ச திட்டங்கள்
- இடதுசாரிகள் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க எனக்குத் தெரிந்த விதத்தில் ஐந்து யோசனைகளை முன்வைக்கிறேன்:
- முதலில் கட்சிக்கான சட்டகத்தைப் புதுப்பியுங்கள். மார்க்சிஸத்தில் பழுது ஏதுமில்லை. இப்போதைய சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப கட்சியின் கொள்கைகள் திட்டங்கள் இருக்க வேண்டும். ஏழைகள் மீது நீங்கள் கரிசனமாக இருக்கலாம் – கையில் ஆப்பிள் நிறுவன வாட்சை கட்டிக்கொண்டு; காரத்திடம் இதை யாராவது சொல்ல வேண்டும். சமத்துவம் (சோஷலிஸம்) பேசாத கட்சி எது? காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆஆக – அவ்வளவு ஏன் பாஜககூட ஏழைகளுக்கு ஆதரவாகத்தான் பேசுகிறது? சோஷலிஸம் என்பது பொதுப் பெயர், மக்கள் ஏற்கும் விதத்தில் இதை எப்படிச் சொல்வது என்று மார்க்சிஸ்ட் தலைமை சிந்திக்க வேண்டும்.
எல்லாவற்றிலும் சிவப்பைக் காணாதீர்கள்:
- வலதுசாரிகளைப் போலவே இடதுசாரிகளும் எந்த ஒரு சிறிய நிகழ்வையும் ஊதிப் பெரிதாக்கிவிடுகின்றனர். மக்களுடைய பிரச்சினைகளை முன்வைக்க அவர்களுடன் பேசுங்கள். டெல்லி மாநகரில் குறைந்த வருவாயுள்ள மக்கள் ஆயிரக்கணக்கில் சைக்கிள்களில்தான் பயணிக்கின்றனர். அவர்கள் பெட்ரோல்-டீசலில் ஓடும் வாகனங்கள் அல்லாத மின்சார சைக்கிள்களை குறைந்த விலையில் வாங்க - நகர அளவில், மாநில அளவில், தேசிய அளவில் - இடதுசாரிகள் போராடினால் என்ன தவறு? சாலைகளைத் தரமாகவும் போக்குவரத்துக்குப் பாதுகாப்பாகவும் மாற்றுங்கள், விபத்தைக் குறையுங்கள் என்று ஏன் போராடக் கூடாது?
- அடித்தட்டு மக்களிடையே கட்சியை செல்வாக்குப் பெறச் செய்ய வேண்டும். இதற்காக தேர்தல் அரசியலை சில காலம் மறந்தால்கூட நல்லது. ஒரு காலத்தில் டெல்லி மாநகர ஆட்டோ டிரைவர்களிடையே ஆஆக மிகுந்த செல்வாக்குடன் இருந்தது. அவர்களுடைய பிரச்சினைகளுக்காக ஆஆக போராடியது. அடித்தட்டு மக்களிடையே இடதுசாரி கட்சிகள் பெரிய இயக்கமாக உருவெடுக்க வேண்டும்.
- பிரகாஷ் காரத், சீதாராம் யெச்சூரிகளுக்கு விடைகொடுங்கள்; அவர்கள் கட்சியின் மார்கதர்சிகளாக இருந்து ஆலோசனைகளை வழங்கட்டும். கட்சி நிர்வாகத்தை துடிப்புள்ள, புதிய சிந்தனையுள்ள தோழர்கள் மேற்கொள்ளட்டும். இளைஞர்களை ஒரேயடியாக நம்பி அவர்களிடம் மட்டுமே கட்சியை ஒப்படைக்கவும் வேண்டாம். இந்தப் பொருளை வாங்கினால் இவையெல்லாம் இலவசம் என்பதால் மட்டுமே பொருள்கள் விற்பனையாகிவிடாது, அது நுகர்வோர்களுக்குப் பயன்படுவதாகவும் இருக்க வேண்டும். இளம் தோழர்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும், கல்லூரி கேன்டீன் உரையாடல்கள் மட்டும் போதாது.
- மேட்டுக்குடி மனோபாவம், செல்வாக்கு மறைய வேண்டும். மேல்தட்டு மக்கள், மெத்தப் படித்தவர்கள், முற்பட்ட சாதியினர் ஆகியோரின் செல்வாக்கால் கட்சி மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறது. கட்சியில் முகர்ஜிக்கள், பானர்ஜிக்கள், காரத்துகள், யெச்சூரிகள் அதிகம். சாஹாக்கள், மண்டல்கள், ஜாதவ்கள், மல்ஹார்கள் எங்கே? நிர்வாகக் குழுக்களில் பெண்கள் எங்கே? (பிருந்தா காரத்தை உதாரணம் காட்ட வேண்டாம்). மார்க்சிஸ்ட்டுகள் தேன் கலந்த எலுமிச்சை தேநீரை குடித்துக்கொண்டிருந்த வேளையில் பாஜக, பல சுற்றுகள் சுற்றி ஏராளமான மகளிரைக் கட்சியில் சேர்த்துவிட்டது.
டிஜிட்டலைக் கையாளுங்கள்:
- மார்க்சிஸ்ட் கட்சி இணையதளத்தைக் கையாளாமல் இல்லை. ஆனால், அதில் சுய பெருமை, சுய பாராட்டுகள், பாலிவுட் டியூன்களுடன் பாடல்கள், உரையாடல்களாகவே இருக்கிறது. மக்களுக்குச் சொல்ல புதிய கருத்துகள் இல்லை, புதிய பாணி இல்லை. உங்களுக்குக் கற்பனை வறட்சி என்றால் குறைந்தபட்சம் பாஜகவின் ஊடக பிரச்சாரத்தைப் பார்த்தாவது கற்றுக்கொள்ளுங்கள். மார்க்சிஸ்ட் கட்சி மீண்டும் புத்துயிர் பெறுவது - நவீன காலத்துக்கேற்ப தொழில்நுட்பங்களையும் உத்திகளையும் கருத்துருக்களையும் கையாள்வதில்தான் இருக்கிறது. விளிம்புநிலை மக்களுக்காகவும் உழைக்கும் வர்க்கத்துக்காகவும் பாடுபடும் பாரம்பரியம் தொடர வேண்டும், புதிய தலைமுறை ஆதரவாளர்களை கட்சி நிறைய பெற வேண்டும்!
நன்றி: அருஞ்சொல் (09 – 06 – 2024)