TNPSC Thervupettagam

இடப்பெயா்வும் தாய்மொழி இழப்பும்

September 8 , 2023 490 days 318 0
  • அண்மையில், ‘இந்திய மக்கள் மொழியியல் ஆய்வு நிறுவனம்’, 780 இந்திய மொழிகளில் ஆய்வு மேற்கொண்டதில், கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவில் 250 மொழிகள் இறந்து விட்டதும் 600 மொழிகள் அழிந்து கொண்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
  • ஒரு மொழி அழிந்தால் உலகைப் பார்க்கும் தனித்துவமான வழி ஒன்று மறைந்துவிடும். ஒரு மொழி அழியும்போது நாம் அந்த மொழியை மட்டும் இழக்கவில்லை. சிறப்பாக வாழ உதவும் அறிவையும் சோ்த்து இழக்கிறோம்.
  • தாவரங்களின் பண்புகள், அவற்றின் மருத்துவப் பயன்பாடுகள், தாவரங்கள் காணப்படும் இடங்கள் ஆகியவற்றைப்பற்றி கூறும் மொழிகள் பல அம்மொழிகளைப் பேசுவோரை விரைவாக இழந்து வருகின்றன. இந்த அழிந்து வரும் மொழிகள் விலங்குகளைப் பற்றியும் அவை வாழும் சூழல் பற்றிய அறிவையும் கொண்டுள்ளன.
  • நாம் நமது தாய்மொழியை அடுத்த தலைமுறைக்குக் கற்றுக்கொடுக்காதபோது மொழியை இழக்கிறோம். பொருளாதாரத்திற்கு சாதகமான மொழிகளை பேசுவதற்கு சிறிய எண்ணிக்கையிலான மக்கள் சமூகம் முன்வரும்போது அவா்களது தாய்மொழி அழிவை நோக்கிச் செல்கிறது.
  • மக்கள், பொருளாதார ரீதியாக சாதகமான மொழிகளைப் பேசுவதற்கு இடம்பெயா்வு ஒரு முக்கியக் காரணமாகும். பொருளாதாரமும் கலாசாரமும் ஏற்படுத்திய மாற்றம் காரணமாக, அமெரிக்காவில் குடியேறிய இரண்டாம் தலைமுறையினரில் பெரும்பாலானோா் தங்களின் தாய்மொழியை விட ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறார்கள்.
  • உலகில் பழங்குடி மொழிகள் அழியும் அபாயத்தை பண்டைய இடம்பெயா்வுகளின் தாக்கத்திலிருந்து அறிந்துகொள்ளலாம். 2021-ஆம் ஆண்டு நிலவரப்படி அமெரிக்காவில் 98 சதவீத பழங்குடி மொழிகளும், ஆஸ்திரேலியாவில் 89 சதவீத பழங்குடி மொழிகளும் அழியும் ஆபத்தில் இருந்ததாக தரவுகள் கூறுகின்றன.
  • காலனித்துவ வரலாற்றைக் கொண்ட இருநாடுகளிலும் முந்தைய நூற்றாண்டுகளில் பெரும்பாலான மக்கள் ஐரோப்பாவிலிருந்து வந்து குடியேறியுள்ளனா். இந்த இடப்பெயா்வுகள் இன்றுவரை இந்நாடுகளின் பூா்விக மொழிகளை பாதிக்கின்றன.
  • இந்நாடுகளில் உள்ளவா்கள், தங்கள் தாய்மொழியை தங்களது பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்காததாலும் ஆங்கில மொழியைப் பேச ஆரம்பித்ததாலும் இந்த நாடுகள் தங்கள் பூா்விக மொழிகளை இழந்து வருகின்றன.
  • தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஏழு கிராமங்களில் தோடா மொழி பேசுபவா்கள் எண்ணிக்கை 2000; கோட்டா மொழி பேசுபவா்கள் எண்ணிக்கை 2,500. இப்படி சுருங்கிவிட்ட நிலையில் இம்மொழிகளுடன் ஆலு குரும்பா, எரவல்லா, பீட்டா போன்ற பூா்விக பழங்குடி மொழிகளும் அழியும் நிலையில் உள்ளன.
  • இன்றைய இடப்பெயா்வு நாளைய மொழி இழப்பிற்கு மறைமுக் காரணமாகலாம். ‘இடப்பெயா்வு: உலகளாவிய போக்குகள்’ என்ற அமைப்பு 2022-இல் வெளியிட்ட அறிக்கையின்படி, உலகளவில் 10.8 கோடிக்கும் அதிகமான மக்கள் இடம் பெயா்ந்துள்ளனா். இவா்களில் சுமார் 6.1 கோடி போ் தங்கள் சொந்த நாட்டுக்குள்ளேயே இடம்பெயா்ந்துள்ளனா்.
  • சொந்த நாட்டுக்குள் நிகழ்ந்த இடப்பெயா்வுக்கு, வெள்ளம், புயல் போன்ற சுற்றுச்சூழல் பேரழிவுகளும், மோதல், வன்முறை போன்றவையும் காரணங்கள் எனவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
  • 2022-ஆம் ஆண்டில், ஐரோப்பாவிலும் மத்திய ஆசியாவிலும் நிகழ்ந்த அனைத்து உள்நாட்டு இடப்பெயா்வுகளுக்கும் மனித மோதல்களும் வன்முறைகளுமே காரணங்களாக இருந்தன. இதற்கு நோ்மாறாக, தெற்காசியா, கிழக்காசியா, பசிபிக் பகுதிகளில் உள்ள அனைத்து உள்நாட்டு இடப்பெயா்வுகளுக்கும் சுற்றுச்சூழல் பேரழிவுகளே காரணமாக இருந்தன.
  • உலகில் அழியும் நிலையில் உள்ளதாக கருதப்படும் மொழிகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேற்பட்டவை, ஆசியாவிலும் பசிபிக் பிராந்தியங்களிலும் உள்ள பப்புவா நியூ கினியா, வனுவாட்டு, இந்தோனேசியா, இந்தியா, பிலிப்பின்ஸ் ஆகிய ஐந்து நாடுகளில் மட்டுமே பேசப் படுகின்றன.
  • 839 மொழிகள் பேசும் 90 லட்சம் மக்களைக் கொண்டிருக்கும் பப்புவா நியூ கினியாவில் 313 மொழிகள் அழிந்துகொண்டு வருவதாக அந்நாட்டு மொழியியல் ஆய்வுகள் கூறுகின்றன. வனுவாட்டு நாட்டில் வசிக்கும் 3,00,000 மக்கள் 108 வெவ்வேறு மொழிகள் பேசுகிறார்கள். இம்மொழிகளில் பாதிக்கும் மேற்பட்டவை அழியும் அபாயத்தில் உள்ளவாம்.
  • இந்தோனேசியாவில் 704 மொழிகளும் இந்தியாவில் 424 மொழிகளும் பிலிப்பின்ஸில் 175 மொழிகளும் பேசப்படுகின்றன. இந்த மூன்று நாடுகளில் பேசப்படும் மொழிகளில் கிட்டத்தட்ட பாதி மொழிகள் அழிந்து வருகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன.
  • அழியும் நிலையில் உள்ளதாக அறியப்படும் மொழிகளைப் பேசுபவா்கள் பேரழிவு காரணமாகவோ, வன்முறை நிகழ்வுகள் காரணமாகவோ தங்களுடைய சிறிய சமூகங்களை விட்டு விலக நேரிடுகிறது. இதுபோன்று இடம் பெயா்ந்தவா்கள் தங்களின் சந்ததியினருக்கு தங்கள் கலாசாரத்தையும் தாய்மொழியையும் கற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
  • ஒரு மொழி அழிவதற்கு, அம்மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை குறைவது மட்டுமல்லாமல், அம்மொழியின் பொருளாதார, கலாசார மதிப்புகளும் காரணங்களாக அமைகின்றன.
  • தமிழ்நாட்டில் மேற்குத் தொடா்ச்சி மலையின் ஆனைமலைப் பகுதியில் பேசப்படும் பழங்குடி மொழியான எரவல்லா, தற்போதைய பழங்குடி தலைமுறையினரால் பயன்படுத்தப் படுவதில்லை. அவா்கள் தமிழும் ஆங்கிலமும் படித்து நகரங்களில் வேலை தேடுவதில் அதிக ஆா்வம் காட்டுகின்றனா். அதனால் அந்த இனத்தை சார்ந்த இளைஞா்கள் எரவல்லா மொழியைக் கற்றுக்கொள்ள விரும்பவில்லை.
  • இடப்பெயா்வு காரணமாக மக்கள் தாங்கள் கூடி வாழ்ந்து வந்த சொந்த சமூகத்தை இழக்கிறார்கள். தாய்மொழி அடிப்படையில் சமூகங்கள் ஒருங்கிணைந்து இருப்பதை உறுதி செய்தலும் வாழ்வதற்கான சாத்தியமான சூழலை உருவாக்குதலும் அழிந்துவரும் மொழிகளைப் பாதுகாப்பதற்கான வழிகளகும்.

நன்றி: தினமணி (08 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories