- மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக அரசியல்வாதிகள் கையாளும் வழிமுறைகள் பெரும்பாலும் தொலைநோக்குப் பார்வையற்றதாகவும், வாக்கு வங்கி அரசியலை குறிவைப்பதாகவும் இருப்பது வழக்கம். அந்த வரிசையில் இணைகிறது மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அல்லது இட ஒதுக்கீடு போன்ற அறிவிப்புகள்.
- கடும் எதிர்ப்பு எழுந்ததன் காரணமாக, வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதைக் கட்டாயமாக்கும் கர்நாடக அரசின் சட்ட மசோதாவை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டபோதே அதற்கு கடுமையான எதிர்ப்பு எழும் என்பது அவருக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் நன்றாகவே தெரியும்.
- கர்நாடகத்தில் செயல்பட்டுவரும் தனியார் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பை கட்டாயமாக்கும் வகையில் "கர்நாடக மாநில உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் சட்ட மசோதா 2024'-க்கு முதல்வர் சித்தராமையா தலைமையில் கடந்த ஜூலை 15-ஆம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் மேலாண்மை தொடர்பான வேலைகளில் 50%, மேலாண்மை அல்லாத வேலைகளில் 70%, "சி', "டி' பிரிவு வேலைகளில் 100% கன்னடர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
- இந்த சட்டத்தின்படி, மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றால், கர்நாடகத்தில் பிறந்து, 15 ஆண்டுகளாக அங்கு வசிப்பவர்கள், கன்னடம் பேச, எழுத, படிக்கத் தெரிந்தவர்கள், ஒருங்கிணைந்த அமைப்பால் நடத்தப்படும் கன்னட மொழித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் உள்ளூர்வாசிகளாக கருதப்படுவார்கள். பத்தாம் வகுப்புத் தேர்வில் மொழிப் பாடமாக கன்னடம் படிக்காதவர்கள், கன்னடத் தேர்வைத் தனியாக எழுதித் தேர்ச்சி பெற வேண்டும். இந்த சட்ட விதிகளைக் கடைப்பிடிக்காவிட்டால் ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
- இந்த சட்ட மசோதாவுக்கு தனியார் தொழில் நிறுவனங்கள், தொழில் வர்த்தக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதனால், இந்த மசோதாவுக்கு அளிக்கப்பட்ட ஒப்புதலைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.
- அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 9-இல் மட்டுமே காங்கிரஸ் வென்றது. இந்தப் பின்னணியில், பெங்களூரில் கடந்த ஜூன் 27-ஆம் தேதி நடைபெற்ற கெம்பே கௌடா பிறந்த நாள் நிகழ்ச்சியில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் முதல்வராகும் வகையில் முதல்வர் சித்தராமையா வழிவிட வேண்டும் என விஸ்வ ஒக்கலிக மஹாசமஸ்தான பீடாதிபதி சந்திரசேகரநாத சுவாமி பகிரங்க வேண்டுகோள் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இதுபோதாதென்று, இரண்டு ஊழல் புகார்கள் பெரிய அளவில் வெடித்துக் கிளம்பியிருப்பது முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசைப் பெரும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது. கர்நாடக அரசுக்குச் சொந்தமான வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சிக் கழகத்தில் ரூ.187 கோடியை முறைகேடாகப் பரிமாற்றம் செய்தது தொடர்பான வழக்கில் பழங்குடியினர் நலத் துறை அமைச்சராக இருந்த பி.நாகேந்திரா, அவரது மனைவி மஞ்சுளா உள்ளிட்டோரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
- மைசூரில் முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்குச் சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர வளர்ச்சி ஆணையம் அண்மையில் கையகப்படுத்தியது. அதற்கு பதிலாக மாற்று நிலம் ஒதுக்கப்பட்டதில் பல்லாயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகார் பூதாகரமாகி உள்ளது. இப்படி அலையலையாக பிரச்னைகள் எழுந்ததையடுத்து, அவற்றைத் திசைதிருப்புவதற்காக தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு விவகாரத்தை முதல்வர் சித்தராமையா எடுத்துள்ளார் என்று எண்ணத் தோன்றுகிறது.
- இதற்கு முன்னால் ஹரியாணாவில் தனியார் நிறுவனங்களில் மண்ணின் மைந்தர்களுக்கே வேலைவாய்ப்பு என பேரவையில் இயற்றப்பட்ட சட்டத்தை பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றம் கடந்த நவம்பரில் ரத்து செய்து உத்தரவிட்டது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுப் பணிகளில் பிரிவு 3, 4 ஆகியவற்றில் 100% உள்ளூர்வாசிகளுக்கு ஒதுக்கப்படும் என்று சட்டப்பேரவை இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியபோதும் ஆளுநர் அதை திருப்பி அனுப்பிவிட்டார். அந்த மசோதா இப்போது கிணற்றில் போட்ட கல்லாகிவிட்டது.
- கர்நாடகத்தைப் போன்று ஆந்திரத்தில் இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து அந்த மாநில உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால், கர்நாடகத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டாலும் அது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படும்.
- 140 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நமது நாட்டில் 37% பேர் (சுமார் 52 கோடி) வேலைவாய்ப்புக்காக சொந்த மாநிலம்விட்டு இன்னொரு மாநிலத்துக்குச் செல்வதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இத்தகைய சூழலில் இதுபோன்ற சட்டம் பொருத்தமானதாக அமையாததுடன் பெரும் குழப்பத்தையே ஏற்படுத்தும்.
- தேசிய அளவில் மட்டுமல்ல, உலகளாவிய அளவிலும் வேலைவாய்ப்புக்காக புலம்பெயர்தல் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களைத் தவிர்ப்பது என்பது சகஜ வாழ்க்கையை ஸ்தம்பிக்கச் செய்துவிடும் என்பது முதல்வர் சித்தராமையாவுக்குத் தெரியாதது அல்ல. விபரீத முடிவுகள் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அரசியல்வாதிகள் உணர வேண்டும்.
நன்றி: தினமணி (22 – 07 – 2024)