TNPSC Thervupettagam

இடர்மிகு காலங்களில் வான் படை எவ்வளவு முக்கியமானதாகிறது?

April 30 , 2020 1724 days 1284 0

வான் சிறப்பு

  • பாகிஸ்தானின் வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு ஆணையரிடமிருந்து ‘ஏர்-இந்தியா’ நிறுவனத்துக்கு ஏப்ரல் தொடக்கத்தில் ஒரு பாராட்டுச் செய்தி வந்தது; கரோனா நோயைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்துகளையும், மருத்துவக் கருவிகளையும், ஐரோப்பியப் பயணிகளையும் பிராங்க்பர்ட் நகருக்கு இடைவிடாமல் கொண்டுசேர்க்கும் மனிதாபிமான சேவைக்கான பாராட்டு அது. இந்தியாவின் ‘வான் சிறப்பு’ என்ன என்பதை இச்செய்தி உணர்த்துகிறது!
  • கரோனா தொற்று தொடங்கிய உடனேயே சீனாவின் வூஹான் நகரில் சிக்கியிருந்த இந்தியர்களை ‘ஏர்-இந்தியா’ பாதுகாப்பாக மீட்டுவந்தது. அதிலிருந்து வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட இந்தியர்களையும், இந்திய நகரங்களிலிருந்து வெளியேற விரும்பும் வெளிநாட்டவர்களையும் அவரவர் இடங்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்துக்கொண்டிருக்கிறது.
  • இந்திய விமானப் படையின் ‘சி-17 குளோப்மாஸ்டர்’, ‘ஐஎல்-76’ ரக விமானங்கள் இதைச் செய்கின்றன. ஆப்கானிஸ்தானின் ஹேரட் நகரத்தில் உள்ள இந்தியத் தூதரகத்திலிருந்து அதிகாரிகளையும் அவர்தம் குடும்பத்தினரையும் மிக ரகசியமாக மீட்டுவரும் பணியை ‘சி-130 சூப்பர் ஹெர்குலிஸ்’ ரக விமானம் வெற்றிகரமாகச் செய்தது.
  • இந்திய விமானப் படையின் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் என்று மொத்தம் 58 வாகனங்கள் இப்போது கரோனா தொடர்பான பணிகளிலேயே தொடர்ந்து ஈடுபட்டுள்ளன.

மீட்பு நடவடிக்கைகள்

  • இலங்கையில் பெருவெள்ளம் ஏற்பட்டவுடன் 1957 மற்றும் 1978-களில் மீட்பு, உதவிப் பணிகளுக்குச் சென்றது இந்திய விமானப் படை.
  • 1991-ல் புயலின்போது வங்கதேசம் சென்றது. 2004-ல் சுனாமி ஏற்பட்டபோது, இந்துமாக் கடல் பகுதியில் உள்ள தீவுகளுக்கு இடைவிடாமல் சேவை செய்தது.
  • ‘ஐஎல்-78’ ரக விமானங்களின் எரிபொருள் டேங்குகளை இரவோடு இரவாக நீக்கிவிட்டு, அதைச் சரக்குப் போக்குவரத்து விமானமாக மாற்றிப் பயன்படுத்தியது. இதன்றியும் ஆறு ‘எம்ஐ-8’ ரக ஹெலிகாப்டர்கள் இலங்கையின் உதவிக்கு அனுப்பப்பட்டன.
  • சரக்குகளைக் கொண்டுபோய்ச் சேர்க்கும் சாகசம் என்றால், அது பெர்லின் நகருக்கு 23 லட்சம் சரக்குகளை 1948 ஜூன் முதல் 1949 செப்டம்பர் வரை கொண்டுபோன சாதனைதான் என்று இப்போதும் பேசுவர். அதற்கு இணையான – ஏன் அதை மிஞ்சும்படியான சாதனையை இந்திய விமானப் படை செய்ததை யாரும் பேசுவதில்லை.
  • 1990-ல் குவைத்துக்குள் இராக்கிய ராணுவம் ஊடுருவியது. அப்போது அம்மானிலிருந்து மும்பைக்கு இரண்டு மாதங்களுக்குள் 488 முறை பறந்து 1,10,000 இந்தியர்களை விமானப் படை கொண்டுவந்து சேர்த்தது. அந்த எண்ணிக்கை 1,76,000 என்றும் வேறுசில தரவுகள் தெரிவிக்கின்றன. இதை நிகழ்த்தியது ‘ஏர்-இந்தியா’ என்ற மக்கள் போக்குவரத்து விமான சேவைதான். ‘ஏர்-இந்தியா’ நிகழ்த்திய சாதனைகள் ஏராளம்.

இந்திய வான் படை ரகங்கள்

  • ‘ஐஎல்-76’ ரகத்தில் 10 விமானங்கள் கடந்த நாற்பதாண்டுகளாகப் பயன்பட்டுவருகின்றன. ‘ஏஎன்-32’ ரக விமானங்கள் நூறும் அப்படியே. ‘சி-17’ ரகத்தில் வாங்கப்பட்டுள்ள 11 பெரிய விமானங்கள் இனி அதிகப் பொறுப்பைச் சுமக்கும். பேரிடர் நிவாரணப் பணிகளில் ‘சி-130ஜே சூப்பர் ஹெர்குலிஸ்’ ஈடுபடுத்தப்படுகிறது.
  • இந்திய விமானப் படையில் ஹெலிகாப்டர் பிரிவு நல்ல வலுவுடன் கணிசமாகவே உள்ளது. ‘எம்ஐ-17’ ரக ஹெலிகாப்டர்கள் 250, ‘ஏஎல்எச் துருவ்’ ஹெலிகாப்டர்கள் 80, கனரக இயந்திரங்களைத் தூக்கவல்ல புதிய ‘சினூக்’ ஹெலிகாப்டர்கள் 15 உள்ளன.
  • இவை போக ‘சேட்டக்’/'சீட்டா’ ஹெலிகாப்டர்களும் நிறைய. குறுகலான பள்ளத்தாக்குகளுக்கும் உயரமான மலைப் பகுதிகளுக்கும் உகந்தவை இவை.
  • ஒரு சினூக் ஹெலிகாப்டரையே தனக்குள் சுமக்கும் வல்லமை உள்ளது ‘சி-17’. எனவே, பக்கத்திலும் தொலைவிலும் உள்ள நட்பு நாடுகளுக்கு இந்தியாவால் உதவ முடியும். இதற்கு முன்பிருந்த ஆட்சியாளர்களின் தொலைநோக்குப் பார்வையால் வான் படை வலிமையில் இந்தியா இப்போது உலகமே வியக்கும் அளவுக்கு இருக்கிறது. இது இப்படியே எதிர்காலத்திலும் தொடர, இப்போதைய தலைமையும் சிந்திக்க வேண்டும்.

எதிர்கொள்ளும் சவால்கள்

  • ‘துருவ்’, ‘சீட்டா’, ‘சேட்டக்’ ரகங்களைத் தவிர, எஞ்சியவை அனைத்தும் வெளிநாடுகளில் தயாரானவை. ‘ஐஎல்-76’, ‘ஏஎன்-32’, ‘ஆவ்ரோ’ ரக விமானங்கள் வயது காரணமாக வெகு விரைவில் படையிலிருந்து விலக்கிக்கொள்ளப்படும். இவற்றுக்கு மாற்று ரகங்களை வாங்க நிறையப் பணம் தேவை.
  • அதற்கு இப்போதிருந்தே திட்டமிட வேண்டும். எவ்வளவு தேவையோ அதில் 65%-க்கு மட்டுமே 2020-21 நிதியாண்டுக்கு உத்தேசமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. பருவநிலை மாறுதல்களால் கடுமையான மழை, புயல், நிலச்சரிவு ஆகியவை ஏற்படும் பிராந்தியம் நம்முடையது.
  • எனவே அதிக மீட்பு, உதவிப் பணிகளுக்கு எதிர்காலத்தில் இந்திய விமானப் படை செல்ல வேண்டியிருக்கும். பேரிடர் காலங்களில் உதவுவது போக, எல்லைகளைப் பாதுகாக்கவும், ராணுவப் படைகளை அதிக எண்ணிக்கையில் மிகக் குறைந்த காலத்தில் கொண்டுசேர்க்க வேண்டிய நிலையும்கூட தொடரும்.
  • வான் ஊர்திகளை அதிகம் பயன்படுத்தினால் அதிக பராமரிப்பும் தேவைப்படும். கணிசமான விமானங்களும் ஹெலிகாப்டர்களும் அயல்நாடுகளில் வாங்கியவை; எனவே, அவற்றைப் பழுதுபார்ப்புக்கு அனுப்பி வைத்தால், நமது தேவைகளுக்குக் குறைந்த எண்ணிக்கையிலேயே விமானங்கள், ஹெலிகாப்டர்கள் இருக்கும்.
  • கரோனா வைரஸ் தாக்குதலின் பின்விளைவாக நம்முடைய சமூகநலத் திட்டங்களுக்கும் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கும் நிறையப் பணத்தை அடுத்த சில ஆண்டுகளுக்கு ஒதுக்க வேண்டியிருக்கும். உற்பத்தித் துறை, வேளாண் துறை, சேவைத் துறைகளில் ஏற்பட்டுள்ள இடர்களால் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் கடுமையான சரிவு நிச்சயம்.
  • தனக்கு வேண்டிய நிதியைப் பெற நிதியமைச்சகத்திடம் தனது பேச்சுத்திறமையைப் பாதுகாப்புத் துறையும் முழுதாகப் பயன்படுத்த நேரும். இந்தப் பிராந்தியத்தில் நடைபெறும் புவியரசியல் நிலையைப் பார்க்கும்போது, வான்படையின் வலு இல்லாமல் இந்தியாவால் சிறப்பாகச் செயல்பட முடியாது.
  • அரசுத் துறை நிறுவனமான ‘ஏர்-இந்தியா’வைத் தொடர்ந்து அத்துறையிலேயே நீட்டிப்பது குறித்தும் அரசு பரிசீலிக்கலாம். ‘ஏர்-இந்தியா’ இல்லாமல் வான் வலிமையை இந்தியா கற்பனைகூடச் செய்ய முடியாது.

நன்றி: தி இந்து (30-04-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories