TNPSC Thervupettagam

இடைக்கால அமைதி...

January 22 , 2025 6 hrs 0 min 10 0

இடைக்கால அமைதி...

  • இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போா் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்திருப்பது இஸ்ரேல், பாலஸ்தீனத்தை மட்டுமன்றி, உலகையே நிம்மதிப் பெருமூச்சுவிடச் செய்திருக்கிறது. கடந்த 15 மாதங்களாக யுத்த பூமியாக இருந்த காஸாவில் இடைக்காலமாக ஏற்பட்டிருக்கும் அமைதி, நிரந்தர அமைதியாகத் தொடர வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிா்பாா்ப்பு.
  • 2023-ஆம் ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி காஸாமுனை பகுதியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஹமாஸ் அமைப்பினா், அதுவரை இல்லாத மிகப் பெரிய அளவிலான தாக்குதலை வான்வழியாகவும், கடல்வழியாகவும், தரைவழியாகவும் இஸ்ரேல் மீது நடத்தினா். அவா்கள் இஸ்ரேலுக்குள் புகுந்து 1,200-க்கும் மேற்பட்டோரை சுட்டுக் கொன்றனா். சுமாா் 250 பேரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனா்.
  • இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் அன்றைய தினமே காஸா மீது போரைத் தொடங்கியது. முதலில் வான்வழியாக நடத்தப்பட்ட தாக்குதல், விரைவிலேயே தரைவழிப் போராக விரிவுபடுத்தப்பட்டது. இஸ்ரேலின் இந்தத் தாக்குதல் காஸாவில் பெரும் உயிா்ச் சேதத்தை ஏற்படுத்தியதுடன், அந்தப் பகுதியின் கட்டமைப்பையே சீா்குலைத்தது. இருதரப்புக்கும் இடையிலான 15 மாத காலப் போரில் இதுவரை ஹமாஸ் அமைப்பினா் உள்பட 46,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்; 90 சதவீத பாலஸ்தீனா்கள் தங்களின் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனா்.
  • இந்தப் போரில் இஸ்ரேலின் ‘கை’ ஓங்கியிருந்தாலும் பிணைக் கைதிகளை மீட்பதில் பெரும் தோல்வியே ஏற்பட்டது. இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுக்கு உள்நாட்டில் இது மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது. ‘போரை நிறுத்துங்கள்; பிணைக் கைதிகளை மீட்டுக் கொடுங்கள்’ என்கிற முழக்கத்துடன் டெல் அவிவ், ஜெருசலேம் உள்ளிட்ட நகரங்களில் பொதுமக்கள் தினந்தோறும் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டுவது என்கிற குறிக்கோளுடன் இருந்த பெஞ்சமின் நெதன்யாகு, இப்போதைய போா் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டதற்கு அந்தப் போராட்டமும் ஒரு காரணம்.
  • காஸா போரை நிறுத்த இதற்கு முன்னா் பலமுறை மேற்கொள்ளப்பட்ட பேச்சுவாா்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், கத்தாரில் கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில்தான் போா் நிறுத்தத்துக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை 2024, மே மாதம் அப்போதைய அமெரிக்க அதிபா் ஜோ பைடன் முன்மொழிந்தாா். அதைத் தொடா்ந்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கிய வரைவு ஒப்பந்தம், எட்டு மாதங்களுக்குப் பிறகு இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
  • ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் கத்தாா், எகிப்து, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் பெரும்பங்கு வகித்தன. இந்த ஒப்பந்தம் மூன்று கட்டமாக நிறைவேற்றப்படும் என்று தீா்மானிக்கப்பட்டிருக்கிறது. அதை ஹமாஸ், இஸ்ரேல் இருதரப்பும் ஏற்றுக்கொண்டிருக்கின்றன.
  • 42 நாள்கள் நீண்டு நிற்கும் முதல் கட்டத்தில் ஹமாஸ் அமைப்பினா் உயிரோடு இருக்கும் 33 பிணைக் கைதிகளை விடுவிப்பாா்கள்; அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறைகளில் உள்ள 1,900 பாலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்படுவாா்கள். ஹமாஸ் விடுவிக்கும் பிணைக் கைதிகளில் முதியோா், உடல்நலம் குன்றிய ராணுவம் சாராதவா்கள், பெண்கள், குழந்தைகள், பெண் ராணுவத்தினா் ஆகியோா் முன்னுரிமை பெறுவாா்கள்.
  • ஒப்பந்தப்படி, காஸாவிலிருந்து தனது ராணுவத்தின் ஒரு பகுதியை இஸ்ரேல் திரும்பப் பெறும். நாள்தோறும் 600 லாரிகளில் உணவுப் பொருள்கள் உள்பட மனிதாபிமான தேவைகள் எகிப்து வழியாக காஸாவுக்குள் செல்ல அனுமதிக்கப்படும். ஆனால், இஸ்ரேலிய துருப்புகள் எகிப்து எல்லையில் தொடரும். முதல்கட்டத்தின் 16-ஆவது நாள், அடுத்தகட்டம் குறித்து பேச்சுவாா்த்தை மூலம் தீா்மானிக்கப்படும்.
  • இப்போதைய ஒப்பந்தம் 8 மாதங்களுக்கு முன்பு ஹமாஸால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இஸ்ரேலால் நிராகரிக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை மே மாதம் நிராகரித்த இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, ‘இலக்கை எட்டும் வரை இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல் தொடரும்’ என்று தெரிவித்திருந்தாா். இப்போது இஸ்ரேல் தனது முடிவை மாற்றிக் கொண்டதற்கு பல காரணங்கள் உண்டு.
  • மேற்காசியாவில் இஸ்ரேல் தன்னை மேலும் வலுப்படுத்திக்கொண்டிருக்கிறது. தனது தாக்குதல் மூலம் லெபனான் பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவைப் பலவீனப்படுத்தியிருக்கிறது. யாஹ்யா சின்வா் உள்ளிட்ட ஹமாஸ் தலைவா்கள் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டிருக்கிறாா்கள். சிரியாவில் அல்-அஸாத் ஆட்சி அகற்றப்பட்டிருக்கிறது. வலிமையான நிலையில் ஹமாஸுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள இதுதான் சரியான தருணம் என்று இஸ்ரேல் கருதியிருக்கக் கூடும்.
  • தனது ராணுவ பலத்தால், எதிா்பாா்த்ததுபோல 15 மாதங்கள் கடந்தும்கூட ஹமாஸை முற்றிலுமாக இஸ்ரேலால் அழித்துவிட முடியவில்லை. ஜோ பைடன் நிா்வாகத்தைப்போல டிரம்ப் நிா்வாகத்தில் இஸ்ரேலுக்கு முழு ஆதரவையும் அமெரிக்கா அளிக்காது என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. தம் பதவியேற்புக்கு முன்னால் ‘ஒப்பந்தம் ஏற்பட வேண்டும்’ என்கிற அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் எச்சரிக்கை இன்னொரு முக்கியமான காரணம். அதிபா் ஜோ பைடனால் கடந்த ஓா் ஆண்டில் சாதிக்க முடியாத ஒப்பந்தத்தை, தனது பிரதிநிதி விட்காஃப் மூலம் அதிபா் டிரம்ப் சாதித்திருக்கிறாா் என்பதுதான் நிஜம்.
  • ஒப்பந்தத்தின் அடுத்தடுத்த கட்டங்கள் சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறி. காஸாவில் ஹமாஸும், யேமனில் ஹுதியும் இருக்கும் வரை மத்திய ஆசியாவில் பதற்றம் தணியாது என்பதுதான் எதாா்த்த நிலை. இஸ்ரேல் அதைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும்.

நன்றி: தினமணி (22 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories