TNPSC Thervupettagam

இடைக்கால பட்ஜெட்டின் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்

February 1 , 2024 347 days 282 0
  • ஒரு நிதி ஆண்டுக்கான வரவுகள், எதிர்பார்க்கப்படும் செலவுகள், நிதி ஒதுக்கீடு போன்றவை அடங்கிய முழுமையான நிதிநிலை அறிக்கையாக நாடாளுமன்றத்தில் அல்லது சட்ட மன்றத்தில் அரசால் சமர்ப்பிக்கப்படும் நிதி அறிக்கைவரவு-செலவு அறிக்கை’ (பட்ஜெட்) எனப்படுகிறது.
  • பொதுவாக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவாதத்துக்குப் பின்னர், தேவைப்படும் திருத்தங்கள் செய்யப்பட்டு, பட்ஜெட் நிறைவேற்றப்பட வேண்டும். இது ஒரு முழுமையான பட்ஜெட்டுக்கான வரையறை. முழுமையாகத் தயார் செய்ய இயலாத பட்ஜெட், இடைக்கால பட்ஜெட் எனப்படுகிறது.

எப்போது இடைக்கால பட்ஜெட்

  • இத்தகைய இடைக்கால பட்ஜெட்டைத் தயார்செய்து நாடாளுமன்றத்தில் வைக்க வேண்டிய சூழ்நிலை ஓர் அரசுக்கு இரண்டு தருணங்களில் உருவாகிறது. ஒன்று, ஒரு நிதி ஆண்டுக்குள்ளாக ஓர் அரசு புதிதாகப் பொறுப்பேற்கும்போது; மற்றொன்று, ஒரு நிதி ஆண்டைப் பூர்த்திசெய்யாமல் தனது பதவிக் காலத்தை நிறைவுசெய்யும் தருணம். இந்த இரண்டு இடைக்கால பட்ஜெட்டுகளுக்கும் அவற்றின் தன்மையில் அடிப்படை வேறுபாடுகள் உண்டு.
  • முதல் வகையில், முழுமையாக மக்கள் ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்கும் அரசு, ஒரு நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டைச் சமர்ப்பிக்க முடியாத காரணத்தால் இடைக்கால பட்ஜெட்டைத் தயார்செய்து நாடாளுமன்றத்தின் முன்வைக்கிறது. இந்த அறிக்கையில், மக்களுக்கான புதிய திட்டங்கள் இடம்பெறும். பொதுவான பட்ஜெட்டின் எல்லா அம்சங்களும் இதில் இடம்பெறும். இதன் மீது போதுமான விவாதம் நடத்தப்பட வேண்டும். பின்னர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.
  • ஒரு நிதி ஆண்டை நிறைவுசெய்ய இயலாத ஓர் அரசு இரண்டாம் வகை இடைக்கால பட்ஜெட்டைச் சமர்ப்பிக்கிறது. அது ஒரு காபந்து அரசைப் போன்றது. தனக்கு எந்தத் தேதி வரை ஆட்சியில் இருக்க மக்கள் வாக்களித்து உரிமை அளித்தார்களோ அதற்கு மேல் புதிய வாக்குறுதிகளை வழங்கவோ, பதிய நலத் திட்டங்களை அறிவிக்கவோ அந்த அரசுக்கு எந்தவிதமான தார்மிக உரிமையும் இல்லை.
  • மீண்டும் அதே ஆட்சிதான் அமையும் என்ற நம்பிக்கை ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் இருந்தாலும், மக்கள் வாக்களித்த காலத்துக்குப் பிந்தைய காலத்துக்கான திட்டங்களை வகுக்க அந்த அரசுக்கு உரிமை இல்லை. எனவேதான் பல முக்கியப் பதவிகளில் இருப்போர், தங்கள் பதவிக் காலம்முடிய மூன்று மாதங்கள் இருக்கும் நிலையில், எந்த முக்கிய முடிவையும் எடுக்கக் கூடாது என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.
  • தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட்டில் ஓர் ஆண்டுக்கான முழு பட்ஜெட் இடம்பெற்றிருந்தாலும், அது அடுத்த அரசு அமையும் வரையிலான சில மாதங்களுக்கான நடப்புக் கணக்குகள், செலுத்த வேண்டிய வட்டி, ராணுவச் செலவினம் போன்ற அத்தியாவசியச் செலவினங்களுக்குக் கொடுக்கப்படும் ஒப்புதலே.
  • ஆனால், தற்போது தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட் அறிக்கைகள் ஒரு பொது பட்ஜெட்டைப் போலவே நாடாளுமன்றத்தில் வைக்கப்படு கின்றன. தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட் அறிக்கை என்பதே எல்லோருக்கும் மறந்துவிட்டது‌.

மாறிப்போன நடைமுறை

  • பொது பட்ஜெட்டைப் போலவே இடைக்கால பட்ஜெட் அறிக்கையின் மீதும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகின்றன. தேர்தலுக்கு முந்தைய வரவு-செலவு அறிக்கை என்பதால், அதில் வாக்காளர்களைக் கவரும் அறிவிப்புகள் இருக்கும். இலவசங்கள் இடம்பெறும். புதிய நலத்திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளும் வெளியாகும் என்கிற எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகின்றன.
  • ஆட்சியாளர்கள் இடைக்கால பட்ஜெட் அறிக்கைக்குப் பொது பட்ஜெட் அறிக்கையைவிடவும் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கிவிட்டனர். விலைவாசி உயர்வால் அதிருப்தி அடைந்துள்ள மக்களை அமைதிப்படுத்துவது போன்ற அறிவிப்புகள் வருவது இயல்பானதாகிவிட்டது. பருவமழை பொய்த்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் இழப்புகளை ஈடுசெய்யும் அறிவிப்புகள் இடைக்கால பட்ஜெட்டில் ஒட்டிக்கொள்கின்றன.
  • விலைவாசி ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்கிற எண்ணம் ஆட்சியாளர்களுக்கு ஏற்படுவதால் அதற்கேற்ப அறிவிப்புகள் வெளியாகின்றன. வருமான வரி உச்சவரம்பை மாற்றுதல், கார்ப்பரேட் வரி விகிதங்களை மாற்றி அமைத்தல், மறைமுக வரிகளில் மாற்றம், ஏற்றுமதி-இறக்குமதி வரிகளில் மாற்றம் ஆகியவையும்கூட இடைக்கால பட்ஜெட்டில் மேற்கொள்ளப்படுகின்றன.
  • இவையெல்லாம் செய்யவே கூடாதவை. ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் ஓர் அரசு என்ன செய்ததோ அதைச் சொல்லி வாக்கு கேட்பதும், ஆட்சிக்கு வந்தால் சமகாலத்தில் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்போம் என்று கூறி மக்களிடையே வாக்கு கேட்பதும்தான் நியாயமானதாக இருக்கும். தற்போது அந்த நடைமுறைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன.
  • சமீப காலமாகவே பெண் வாக்காளர்கள், இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளைக் கவர வேண்டும் என்கிற செயல்திட்டமும் இடைக்கால பட்ஜெட் மூலம் வகுக்கப்படுகிறது. அடுத்து வரும் ஐந்தாண்டு ஆட்சிக்கு அச்சாரமிட நிதிநிலை அறிக்கையில் ஆட்சியாளர்கள் அறிவிப்புகளை இடம்பெறச் செய்யத் துடிக்கின்றனர்.
  • இவ்வாறாக, ஒரு இடைக்கால பட்ஜெட்டை, முழு பொது பட்ஜெட்டைப் போன்று மாற்றுகிறார்கள். இடைக்கால பட்ஜெட் என்பது மீதம் இருக்கும் சில மாதங்கள் அரசை நடத்திடத் தேவையான வரவு-செலவுக் கணக்குக்கு ஒப்புதல் பெறுவது என்ற நிலையைத் தாண்டி, ‘பெரிய எதிர்பார்ப்புகள் வேண்டாம்என்று நிதியமைச்சர் அறிவிக்கும் அளவு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
  • அதேவேளை, இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்புகள் இருக்கும் என்பதைச் சூசகமாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிலைமை இப்படியே தொடர்ந்தால் ஒரு கட்டத்தில், இடைக்கால பட்ஜெட் என்பது பொது பட்ஜெட்டைவிடவும் முக்கியத்துவம் உடையதாக மாறிவிடும்.

விவாதம் அவசியம்

  • இடைக்கால பட்ஜெட்டில் ஓர் அரசு, ஓர் ஆண்டுக்கான பொதுவான செலவுகளைத் தொகுக்கலாம்; தற்போதைய வரி - வரி அல்லாத வருவாய் இனங்கள் மூலம் கிடைக்கும் நிதியை மதிப்பீடு செய்யலாம். சில நேரங்களில், ‘தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் காலக்கட்டத்தில் மட்டுமே இத்தகைய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்என்ற தவறான புரிதல் இருக்கிறது.
  • மிகக் குறுகிய காலமே ஆட்சியில் இருக்கப்போகிறவர்கள், ஒரு குறிப்பிட்ட தேதிக்குப் பின்னர், தற்போதைய ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க முடியாது.‌ அதை ஒட்டி வாக்குறுதிகளை வழங்குவது குற்றம் என்றசட்ட வரையறை இல்லாவிட்டாலும், அது குற்றமே. பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கு முந்தைய நாள் பொருளாதார ஆய்வறிக்கையை அரசின் சார்பில் நிதி அமைச்சர் தாக்கல் செய்வது வழக்கம். இந்தப் பொருளாதார ஆய்வறிக்கைதான் உண்மையில் ஒரு வரவு-செலவு அறிக்கையின் வழியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிப் பகிர்வு, அந்த நாட்டில் எத்தகைய விளைவுகளை உருவாக்கியது என்பது பற்றிய உண்மையான மதிப்பீடு.
  • பட்ஜெட் அறிக்கையைக் காட்டிலும் முக்கியத்துவம் மிக்கவை அதன் மேல் எழுப்பப்படும் விவாதங்கள். அரசு ஒதுக்கிய நிதி ஒதுக்கீடு ஒரு திட்டத்துக்கு ஒதுக்கிய நிதி சென்று சேர்ந்ததா, சேர்ந்திருந்தால் எவ்வளவு சதவீதம் பலனளித்துள்ளது என்பதை அவதானிக்கக் கிடைக்கும் வாய்ப்பு அது. இதுவரை பொருளாதார ஆய்வறிக்கையின் பொருள் உணர்ந்து ஆழமான விவாதங்கள் அதன் மீது எழவில்லை.
  • அத்தகைய விவாதங்கள் தேர்தலை ஒட்டிய இடைக்கால பட்ஜெட் அறிக்கையைச் சமர்ப்பிக்கும்போது நேர்ந்தால், எங்கே அது ஆளும் அரசுக்குச் சாதகமாகப் போய்விடுமோ என்று கருதி, அதை இடைக்கால பட்ஜெட்டின்போது சமர்ப்பிப்பதுகூடத் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒரு மாண்பு இருக்கிறது. அது, மீதமிருக்கும் சில மாதங்களுக்கு நடப்புச் செலவுகளுக்கு மக்கள் மன்றத்தில் ஓர் ஆட்சி ஒப்புதல் பெறுவது மட்டுமே. சார்ந்தோர் கவனிக்க வேண்டிய விஷயம் இது!

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories