- மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கிறார். பொதுவாகவே, இடைக்கால பட்ஜெட்டில் கொள்கை அளவிலான மாற்றங்களோ, பெரிய அறிவிப்புகளோ இருக்காது என்றாலும், தேர்தல் காலம் என்பதால் இந்த முறை கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்கலாம் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
- ஆனால், தேர்தல் வெற்றியை மனதில் கொண்ட பெரிய அளவிலான அறிவிப்புகள் இல்லாதது ஆரோக்கியமான விஷயம். அதேவேளையில், நீண்டநாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன.
- அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள்; சூரியசக்திப் பலகைகள் பதிக்கப்படும் திட்டம் மூலம் 1 கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம்; 9 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்குக் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி செலுத்துதல்; நடுத்தர வர்க்கத்தினருக்கான வீட்டு வசதித் திட்டம் என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.
- மின்சார வாகனங்களுக்கான சார்ஜ் மையங்களை அதிகரிப்பதுடன், உயிரி ஞெகிழி, உயிரி வேளாண் பொருள்கள் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம் கொண்டுவரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது, காலநிலை மாற்றச் சவால்களுக்கு முகங்கொடுக்கும் முனைப்பைக் காட்டுகிறது.
- 10 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சிகளும் பட்ஜெட்டில் பட்டியல் இடப்பட்டிருக்கின்றன. 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டிருப்பது; 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டிருப்பது; திறன் இந்தியா திட்டத்தின்கீழ் 1.4 கோடி இளைஞர்கள் பயிற்சியும், திறன் மேம்பாடும் பெற்றிருப்பது; 7 ஐஐடிகள், 7 ஐஐஎம்கள், 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள், 390 பல்கலைக்கழகங்கள் என ஏராளமான உயர்கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட்டிருப்பது; 596 பில்லியன் டாலர் நேரடி அந்நிய முதலீடு கிடைத்திருப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன.
- அதேவேளையில், வருமான வரி விதிப்பு விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை; நேரடி-மறைமுக வரி, இறக்குமதி வரி விதிப்பிலும் எந்த மாற்றங்களும் இல்லை என்பது அரசு உடனடியாகப் பெரிய மாற்றத்துக்குத் தயாராகவில்லை என்பதை உணர்த்துகிறது.
- அரசின் வருவாய் ஆதாரங்கள் அதிகரித்து, ஜிஎஸ்டி வசூல் வலுவடைந்த பிறகுதான் சமூகநலத் திட்டங்களில் மேலும் கவனம் செலுத்த முடியும் என ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலை தற்போது மாறிவிட்டது. 2024 ஜனவரி மாதம், ஜிஎஸ்டி வரி வசூல் 1.72 லட்சம் கோடியை எட்டியது. இது இதுவரையிலான ஜிஎஸ்டி வரி வசூலில் இரண்டாவது பெரிய வசூல் ஆகும். அதேவேளையில், 2023 ஏப்ரல்-டிசம்பர் காலக்கட்டத்தில் நிதிப் பற்றாக்குறை 55%ஆக உயர்ந்தது.
- இந்தச் சூழலில், நிதிச் சீர்திருத்தத்தில் பல ஆக்கபூர்வமான முன்னெடுப்புகள் தேவைப்படுகின்றன. சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், ஜிடிபியில் கல்வி வளர்ச்சிக்கான நிதி 6%-ஐத் தொடவில்லை. 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற அரசு உறுதிபூண்டிருக்கும் நிலையில், புதிதாக அமையவிருக்கும் அரசு இவற்றில் கவனம் செலுத்த வேண்டும். அறிவிப்புகள் சாதனைகளாக மாறுவதில்தான் ஓர் அரசின் வெற்றி இருக்கிறது.
நன்றி: தி இந்து (02 – 02 – 2024)