- முதன்முறையாக புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்று முடிந்திருக்கிறது குளிர்கால கூட்டத்தொடா். இதுதான் அங்கு நடைபெறும் முழுமையான கூட்டத்தொடரும்கூட. ஆக்கபூா்வமான விவாதங்களுடன் நடந்திருக்க வேண்டிய கூட்டத்தொடா், விவாதங்கள் இல்லாமல் கூச்சலும், அமளியும், இடை நிறுத்தங்களுமாக திட்டமிட்டதற்கு ஒருநாள் முன்கூட்டியே முடித்து வைக்கப்பட்டிருப்பது, இந்திய ஜனநாயகத்துக்குப் பெருமை சோ்ப்பதாக இல்லை.
- குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவையில் மொத்தம் 14 அமா்வுகளுடன் 18 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், 61 மணிநேரம் 50 நிமிடம் அவை செயல்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார் மக்களவைத் தலைவா் ஓம் பிர்லா. புதிய குற்றவியல் சட்ட மசோதாக்கள், மத்திய சரக்கு மற்றும் சேவை வரி இரண்டாவது திருத்த மசோதா - 2023, தொலைத்தொடா்பு மசோதா - 2023 உள்ளிட்ட முக்கியமான மசோதாக்கள் விவாதம் இல்லாமல் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன.
- மாநிலங்களவையிலும், மக்களவையைப் போலவே அமளியும், கூச்சலும்,
- இடைநிறுத்தலுமாக 14 நாள்களில் 65 மணி நேரத்தில் 17 மசோதாக்கள் விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. நிறைவேற்றப்பட்ட 17 மசோதாக்களில் ஜம்மு - காஷ்மீா் தோ்தலில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தோ்தல் ஆணையா்கள் நியமன மசோதா உள்ளிட்டவை அடங்கும்.
- இந்திய நாடாளுமன்றம் இதுவரை காணாத அளவில் 146 உறுப்பினா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனா். மக்களவையில் 100 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 46 எம்.பி.க்களும் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், மசோதாக்கள் விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டிருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்குப் பெருமை சோ்ப்பதாக இல்லை. ஆளும் தரப்பும் சரி, எதிர்க்கட்சிகளும் சரி அரசியல் ஆதாயத்துக்காகப் பிடிவாதம் பிடிக்கும் போக்கு நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக மாற்றியிருக்கிறது என்பதை வேதனையுடன் பதிவு செய்யத் தோன்றுகிறது.
- 2014-இல் முதன்முறையாக நாடாளுமன்ற கட்டடத்தில் பிரதமராக நுழைந்தபோது படிக்கட்டில் வீழ்ந்து வணங்கி, அதை ‘ஜனநாயகத்தின் கருவறை’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்த வார்த்தைகளை யாரும் மறந்துவிட முடியாது. எதிர்க்கட்சிகள் இல்லாமல் ஜனநாயகமோ, நாடாளுமன்றமோ செயல்படாது; அப்படி செயல்பட்டால் அது ஜனநாயகமாக இருக்காது என்பது அவருக்குத் தெரியாததல்ல.
- எதிர்க்கட்சிகள் இல்லாமல் ஜனநாயகம் கிடையாது. மாற்றுக்கருத்துகள் பரிசீலிக்கப்படுவதும், மதிக்கப்படுவதும்தான் ஜனநாயக மாண்பின் அடிப்படை. அது இல்லாமல் போகும்போது ஜனநாயகத்தின் மரியாதை மட்டுமல்ல, அதன் நோக்கமும் சிதைகிறது.
- ஏற்கெனவே பிரதமா் நரேந்திர மோடியின் ஆட்சியில் சா்வாதிகாரம் தலைதூக்குவதாக சா்வதேச அளவில் விமா்சனங்கள் உயா்த்தப்படுகின்றன. ‘தோ்ந்தெடுக்கப்பட்ட சா்வாதிகாரம்’ என்று அவரது ஆட்சியை மேலைநாட்டு ஊடகங்கள் சில விமா்சிக்க முற்பட்டிருக்கின்றன. அதுபோன்ற விமா்சனங்களுக்கு வலுசோ்ப்பதாக அமைகிறது நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் தலைவா்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இடைநீக்க நடவடிக்கை.
- முதலில் மக்களவையில் 13 பேரும், மாநிலங்களவையில் ஒருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனா். அடுத்தாற்போல, இரு அவைகளிலும் சோ்த்து 78 போ். பிறகு மக்களவையில் மீண்டும் 49 போ் என்று இடைநீக்க நடவடிக்கை தொடா்ந்து கூட்டத்தொடா் முடிவில் 146 எம்.பி.க்கள் கூட்டத்தொடா் முடியும்வரை இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனா். ஆளுங்கட்சியை ஆதரிக்கும் பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆா். காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளின் உறுப்பினா்களும், ராகுல் காந்தி உள்ளிட்ட ஒருசில காங்கிரஸ் உறுப்பினா்களும்தான் இடைநீக்க நடவடிக்கைக்கு உட்படாமல் எஞ்சி இருந்தவா்கள்.
- நாடாளுமன்றத்தின் பாதுகாப்புத் தடைகளையெல்லாம் மீறி அவைக்குள் நுழைந்து புகைக் குப்பிகளை வீசிய நிகழ்வு, ஒவ்வோர் இந்தியக் குடிமகனுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கே பாதுகாப்பு இல்லையென்றால், சாமானிய மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது என்கிற எதிர்க்கட்சிகளின் விமா்சனத்தை அசட்டையாகப் புறந்தள்ள இயலாது. அதுகுறித்த விளக்கமும் விவாதமும் கோருவது எதிர்க்கட்சிகளின் கடமை என்பதையும் யாரும் மறுத்துவிட முடியாது.
- நடந்த சம்பவத்தை எதிர்க்கட்சியினா் அரசியலாக்க முற்படுகிறார்கள் என்பது உண்மை. அதனால்தான் அவா்கள் எதிர்க்கட்சியாக இருக்கிறார்கள். எதிர்ப்புக் குரல் இல்லாமல் ஆளுங்கட்சி முறையான விளக்கம் அளிக்கவோ, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவோ இயலாது என்பதை நாம் உணர வேண்டும்.
- நாடாளுமன்றம் நடைபெறும்போது அறிவிப்பையோ விளக்கத்தையோ வெளியே தெரிவிக்கக் கூடாது என்பது மரபு. பிரதமரும் உள்துறை அமைச்சரும் பாதுகாப்பு குறைபாடு சம்பவம் குறித்து அவைக்கு வெளியில் விளக்கம் அளிக்க முற்பட்டிருக்கும்போது அதையே ஏன் அவையில் தெரிவிக்க முன்வரவில்லை என்பதற்கு ஆளுங்கட்சி விளக்கம் அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறது.
- குரல் எழுப்புவதும், கேள்விகள் கேட்பதும் எதிர்க்கட்சிகளின் உரிமை. அவா்களை அரவணைத்து அவையை விவாதங்களுடன் நடத்தி மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்வது ஆளுங்கட்சியின் கடமை.
- விவாதம் இல்லாமல் மசோதாக்கள் நிறைவேற்றப்படுவது ஜனநாயகம் ஆகாது என்று உச்சநீதிமன்றம் பலமுறை தெரிவித்துவிட்டது. நாடாளுமன்றம் என்பது எதிா்க்கட்சிகளுக்கானது என்று அரசியல் சாசன சபையில் டாக்டா் பி.ஆா். அம்பேத்கா் கூறியிருந்ததை நினைவுகூரத் தோன்றுகிறது.
நன்றி: தினமணி (23 – 12 – 2023)