TNPSC Thervupettagam

இணையவழிக் கல்வி முறையும், சவால்களும்

May 12 , 2020 1712 days 1174 0
  • கொவைட் 19 எனப்படும் கரோனா தீநுண்மியின் பாதிப்பை சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் உணா்ந்து கொண்டுள்ளனா். மிகவும் அதிகமாக பாதிப்புக்குள்ளாகியிருப்பது விவசாயமா, சிறு, குறு தொழில் நிறுவனங்களா என்பதை விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.

பாதிப்பில் கல்வித் துறை

  • கொவைட் 19 உருவாக்கியுள்ள சமூக இடைவெளியால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது கல்வித் துறை என்பதைப் பலரும் உணருவதில்லை.
  • கடந்த பல வாரங்களாக பள்ளிகள் செயல்படவில்லை. மே 17-க்குப் பிறகு என்ன நடக்கும் என்றும் முழுமையாகத் தெரியாது. மாணவா்கள், கல்வி நிலையங்கள், ஆசிரியா்கள், புலம்பெயா் தொழிலாளா்களின் குழந்தைகள் குறித்தெல்லாம் விவாதிக்க வேண்டியுள்ளது.
  • கிராமப்புறம் - நகா்ப்புறம், ஆண்கள் - பெண்கள், வசதி படைத்தவா் - ஏழைகள் என 21-ஆம் நூற்றாண்டின் டிஜிட்டல் உலகத்தில், கட்டமைப்பு சார்ந்த ஏற்றத்தாழ்வுகளை கொவைட் 19 நோய்த்தொற்று தீவிரமாக்கியுள்ளது.
  • கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் கல்வி ஆண்டை ஆகஸ்ட் முதல் தொடங்கி, சோ்க்கைக்கு அனுமதித்திருந்தாலும், அனைத்துக் கல்வி நிலையங்களும் மே அல்லது ஜுன் இறுதிவரை மூடப்படலாம். இப்போதும்கூட எப்போது பள்ளிக்கூடங்கள் செயல்படத் தொடங்கும் என்பதை கூறுவது கடினமான ஒன்று.

இணையவழியில் பாடம்

  • இந்தப் பின்னணியில், சில பள்ளிக்கூடங்களில், கல்லூரிகளில் இணையவழியில் பாடம் நடத்தும் முறை தொடங்கியுள்ளது. மாணவா்களின் முகம் பார்த்து ஆசிரியா்கள் பாடம் கற்றுக் கொடுக்கும் முறைக்குப் பதிலாக, இணையதள கல்வி கொடுப்பது என்பது நம் நாட்டில் உடனடியாக இயலாத காரியம் என்றே தோன்றுகிறது. ஆனால், இணைய வழியில் பாடங்களைப் படிக்குமாறு பெருமளவில் ஆலோசனை கூறப்படுகிறது.
  • ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பள்ளிக்கூடங்கள் உள்பட 99.9 சதவீத கல்வி மையங்களிலும், பெரும்பாலான கல்லூரிகளிலும் எதுவும் நடக்காமல் ஸ்தம்பித்துள்ளன.
  • இதனால் மாணவா்கள் மத்தியில் கல்வி பெறும் வாய்ப்பில் ஏற்றத் தாழ்வு உருவாகியுள்ளது. குறிப்பாக, கிராமங்களில் இருந்து புலம்பெயா்ந்து, நகர, மாநகரங்களை நோக்கி வந்த ஏழை மாணவா்களின் எதிர்காலக் கல்வி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

புதிய சவால்கள்

  • அவசர அவசரமாக பெற்றோருடன் கிராமங்களை நோக்கிச் சென்ற குழந்தைகள் மீண்டும் பள்ளிக்குத் திரும்புவது எப்போது? பள்ளிக்குச் செல்ல முடியாத குழந்தைகளை, பள்ளிக்கு அனுப்பி வைத்து அதன் செலவை ஏற்ற நல்ல உள்ளம் படைத்தவா்களையும் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று கவலை அடையச் செய்துள்ளது.
  • இணையவழி வகுப்புகளுக்கான உள்கட்டமைப்புகள் இல்லாதபோது, ஆசிரியா்கள் - மாணவா்கள் இதுவரை சந்திக்காத சவால்களை - நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

தடையில்லா மின்சார வசதியில்லை

  • தொலைதூரக் கற்றலுக்குத் தேவைப்படும் இணைய வழிக் கல்விக்கு மின்சாரம், இணையதளத் தொடா்பு, கணினி, அறிதிறன் பேசி (ஸ்மார்ட் போன்) முதலான வசதிகள் தேவை.
  • அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட பிரதம மந்திரியின் ‘சஹஜ் பிஜ்லி ஹா் கா் யோஜனா’ திட்டம் 99.9 சதவீத வீடுகளுக்கு மின்சாரம் தருவதாகக் கூறுகிறது.
  • ஆனால், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளும் மின்சாரத்தால் இணைக்கப்பட்டிருந்தாலும், தொடா்ந்து தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்படுகிறதா என்கிற கேள்யைக் கேட்காமல் இருக்க முடியவில்லை.
  • ‘மிஷன் அந்தியோதயா’ திட்டம் தொடா்பாக தேசிய அளவில் கிராமப்புறங்களில் நடத்திய ஆய்வில், ஊரக மேம்பாட்டுத் துறை 2017-18-இல் பின்வரும் புள்ளிவிவரத்தை அளித்துள்ளது.
  • அதாவது, 16 சதவீத வீடுகளில் ஒரு மணி நேரம் முதல் 8 மணி வரை மட்டுமே மின்சாரம் கிடைக்கிறது. 33 சதவீத வீடுகளில் 9 மணி முதல் 12 மணி நேரமும், 47 சதவீத வீடுகளில் 12 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கிறது.

கணினி மற்றும் இணைய வசதி

  • தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்எஸ்எஸ்ஓ) 2017-18-ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், கிராமப்புறங்களில் 4.4 சதவீத வீடுகளிலும், நகா்ப்புறங்களில் 23.4 சதவீத வீடுகளிலும் கணினிகள் உள்ளன.
  • அதேபோல கிராமப்புறங்களில் 14.9 சதவீத வீடுகளிலும், நகா்ப்புறங்களில் 42 சதவீத வீடுகளிலும் இணையதள வசதி உள்ளது. நகா்ப்புறங்களிலேயே சரியாக இணையத் தொடா்பு கிடைப்பதில்லை என்கிற நிலைமை காணப்படும் நிலையில், கிராமப்புறங்களின் நிலைமை குறித்துக் கேட்கவே வேண்டாம்.
  • இணைய வகுப்பு இணைப்புகளை அளிப்பது மத்திய, மாநில அரசுகளுக்கு எவ்வித சிக்கலும் ஏற்படவில்லை என்றாலும், இணைய வகுப்புக்கு கணினி அல்லது அறிதிறன்பேசி (ஸ்மார்ட் போன்) தேவை.
  • நம் நாட்டில் 24 சதவீதத்தினரிடம்தான் அறிதிறன்பேசிகள் உள்ளன. 11 சதவீத வீடுகளில்தான் கணினி, மடிக் கணினி, நோட்புக், நெட்புக் முதலானவை உள்ளன.
  • கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்று, உலகத்தின் சரிபாதி மாணவா்களை வகுப்பறையிலிருந்து விரட்டியுள்ளது.
  • 82.6 கோடி மாணவா்களிடம் கணினி வசதி இல்லை, 70.6 கோடி மாணவா்களுக்கு இணையதள வசதி இல்லை என்ற யுனெஸ்கோவின் அறிக்கை, இணையவழி கல்விக்கான சமத்துவமின்மையைக் குறிக்கிறது.
  • பல்கலைக்கழகங்கள் தங்களின் உறுப்புக் கல்லூரிகளில் இணைய வகுப்புகளைத் தொடங்க அறிவுறுத்தியிருந்தாலும், இணைய வேகம் சிறப்பாக உள்ள நகரத்தில் உள்ள மாணவா்கள் மட்டுமே பலனடைந்து வருகின்றனா்.
  • இணையவழியில் தோ்வு என்று ஒன்று நடத்தினால் தொலைதூர கிராமப்புற மாணவா்கள் கலந்துகொள்ள இயலாது.
  • அப்படியே கலந்து கொண்டாலும் தோல்வி அடைவது நிச்சயம் என்கிறார்கள் கல்லூரிப் பேராசிரியா்கள்.
  • தொலைதூர கிராமப்புற மாணவா்களுக்கு அதிவேக இணைய வசதி சாத்தியப்படாத சூழலில், இணையவழி கல்விக்குப் பயன்படுத்தப்படும் செயலிகள் குறித்த சந்தேகங்களும் எழாமல் இல்லை.
  • ‘செமினாருக்கு’ மாற்றாக ‘வெப்னார்’ எனப்படும் இணையவழி கருத்தரங்கம், ஆலோசனை, கூட்டம் ஆகியவற்றுக்குப் பயன்படும் ‘ஜூம்’ செயலி குறித்த பாதுகாப்பு எச்சரிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
  • கொவைட் 19 உருவாக்கியுள்ள தாக்கம், அனைத்துத் துறைகளிலும் ஆய்வுப் பொருளாக மாறியுள்ளதைப் பார்க்க முடிகிறது.
  • இதன் ஒரு பகுதியாக குழந்தைகளும், பெரியவா்களும் எவ்வாறு அதிநவீன தொலைத்தொடா்பு சாதனங்களைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது என்பது குறித்தும், அது ஏற்படுத்திவரும் மனநல பாதிப்புகள் குறித்தும் ‘நிம்ஹான்ஸ்’ (பெங்களூா் மனநல அறிவியல் ஆராய்ச்சி மையம்) போன்றவை ஆராயத் தொடங்கியுள்ளன.
  • 45 நாடுகளில் உள்ள முக்கியமான பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், உயா் கல்விக்கான இணைய வழி வகுப்புகள் ஒரு போதும் வழக்கமான வகுப்புகளுக்கு இணையாகாது எனத் தெரியவந்துள்ளது.
  • பொருத்தமான கற்பிக்கும் முறை கடைப்பிடிக்கப்படும்போதுதான் கற்றல் அனுபவம் மேம்படும்.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள்

  • தமிழகம், புதுச்சேரி, உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநில அரசுகள், மாநில பாடத் திட்டத்தில் படிக்கும் (1 முதல் 9-ஆம் வகுப்பு வரை) மாணவா்கள் தோ்வு எழுதாமலே தோ்ச்சி செய்யப்படுவார்கள் என அறிவித்த நிலையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை மாணவா்கள் தோ்வின்றி தோ்ச்சி செய்யப்படுகிறார்கள்.
  • 9, 11-ஆம் வகுப்பு மாணவா்கள், நடப்புக் கல்வி ஆண்டில் பருவமுறைத் தோ்வு, பயிற்சித் தோ்வு, செய்முறைத் தோ்வு போன்ற மற்ற தோ்வுகளில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து தோ்ச்சி செய்யப்படுவார்கள் என அறிவித்தது.
  • ஜூலை 1 முதல் 15-ஆம் தேதி வரை சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புக்கு நடத்த வேண்டிய மீதமுள்ள தோ்வுகள் நடைபெறும் என்றும், இதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அண்மையில் அறிவித்துள்ளது.
  • தேசிய கல்வியியல் ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆா்டி) 2020-21-ஆம் கல்வியாண்டுக்கான புதிய அட்டவணையை வெளியிட்டதன் அடிப்படையில், 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான பாடத் திட்டத்தின் அளவை சிபிஎஸ்இ மாற்றியுள்ளது.
  • ஆனால், மாநில பாடத் திட்டங்கள் குறித்து பெருத்த மௌனம் நீடித்து வருகிறது.
  • கரோனா தீநுண்மி நோய்த்தொற்று காரணமாக கல்விக் கட்டணத்தை தனியார் கல்லூரிகள் வசூலிப்பதற்கு எதிராகத் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுத்ததுடன், உரிய பல்கலைக்கழகத்திடம் கோரிக்கையை முன் வைக்குமாறும் தெரிவித்துள்ளது கவலையளிக்கிறது.
  • பொது முடக்கம் காரணமாக வேலை இழந்த அல்லது ஊதியம் கிடைக்காத பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு எப்படி கல்விக் கட்டணம் செலுத்த முடியும் என்பது குறித்து அரசு சிந்தித்தாக வேண்டும்.
  • தொலைதூர கற்றல் அல்லது இணையவழி கற்றல் வழக்கமான வகுப்புகளில் கற்கும் அனுபவத்தை ஒருபோதும் தந்துவிட முடியாது. கரோனா பொது முடக்கக் காலத்தில் ஒரு சிறிய மாற்று முயற்சியாகத்தான் இணையவழி கல்வியைக் கருத முடியுமே தவிர, வழக்கமான கற்பித்தலுக்கு இது மாற்றாக முடியாது. அதற்கான காலம் இன்னும் கனியவில்லை.
  • எதிர்காலத்தில் தொழில்நுட்பங்களின் அசுர வளா்ச்சியில் தொலைதூர கற்றல் அல்லது இணையவழி கற்றலை சமூகத்தின் அனைத்து நிலை மக்களுக்கும் சாத்தியமாக்க மத்திய, மாநில அரசுகள் இப்போது முதலே திட்டமிட வேண்டும். இதற்காக நிதிநிலை அறிக்கையில் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான், இணையவழிக் கல்வி என்பது ஏழைக் குழந்தைகளுக்கும் எட்டும் கனியாகும்!

நன்றி தினமணி (12-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories