- மருத்துவ அறிவியல் வார இதழான ‘லான்செட்’ கடந்த மாதம் வெளியிட்ட ‘நகர்ப்புற – கிராமப்புற தொற்று நோயியல் ஆய்வறிக்கை’, மரணத்தை அதிகம் ஏற்படுத்துவதில் இதய நோய்கள் முதலிடம் வகிப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. ஐந்து கண்டங்களின் 21 நாடுகளில் வெவ்வேறு வருமான விகிதங்களில் உள்ளவர்களிடையே நடத்திய நோயறியியல் ஆய்வு இது.
- உயர் வருமான மக்களைக் கொண்ட நாடுகளில் இதய நோய்க்கு ஆளாவோர் எண்ணிக்கை விகிதாச்சாரத்தில் அதிகம். ஆனால், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. வளரும் நாடுகளில் ஏழைகளுக்கு வரும் இதய நோய் எண்ணிக்கையில் குறைவு. ஆனால், அவர்களில் உயிரிழப்போர் எண்ணிக்கை விகிதாச்சாரத்தில் அதிகம்.
மரணங்கள்
- புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடையும் மரண எண்ணிக்கையைப் போல மூன்று மடங்காக இருக்கிறது ஏழை நாடுகளில் இதய நோயாளிகளின் இறப்பு. தரமான மருத்துவ சிகிச்சை என்பது இந்தியாவில் பெரும்பாலானவர்களுக்கு எட்டாக் கனவாகவே தொடர்கிறது.
- தொற்றாத, ஆனால் கடுமையான நோய்களுக்கு ஆளாவோர் மருந்து மாத்திரைகளுக்காகத் தங்களுடைய சொந்தப் பணத்தைத்தான் அதிகம் செலவழிக்க நேர்கிறது. இந்த நோய்களுக்காக அரசு செலவிடுவதைவிட நோயாளிகள் செய்யும் செலவு 2014-15 கணக்குப்படி 62.6% ஆக இருக்கிறது.
- இதனாலேயே பலர் மருந்து மாத்திரைகளைத் தொடர்ச்சியாகச் சாப்பிட முடியாமல்போகிறது. இந்தியாவில் சில மாநிலங்களில் மட்டுமே அனைவருக்கும் சுகாதாரக் காப்பீட்டு வசதி அளிப்பதில் ஓரளவுக்கு வெற்றி கிட்டியிருக்கிறது. மத்திய அரசின் மருத்துவ உதவித் திட்டங்களும், மாநில அரசுகளின் திட்டங்களும் வேகம் பெற்றுவருவது நல்ல அறிகுறிதான் என்றாலும் அதை மேலும் துரிதப்படுத்துவதில் முனைப்புக் காட்ட வேண்டும்.
தேசியத் திட்டங்கள்
- புற்றுநோய், நீரிழிவு, இதய நோய்கள், பக்கவாதம் ஆகியவற்றைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் தேசியத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்களை அரசு அடையாளம் கண்டு சிகிச்சையளிக்க வேண்டும்.
- ஆய்வறிக்கையின்படி, பாதிக்கப்பட்டவர்களில் பெரும் பாலானவர்கள் கல்வியறிவு குறைந்தவர்களாக இருப்பது பொதுவான அம்சமாகத் திகழ்கிறது. வீடுகளுக்குள்ளான காற்று மாசும், வீட்டுக்கு வெளியிலான காற்று மாசும் இதய நோய்க்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
காற்று மண்டலம்
- ஆலைகள், மோட்டார் வாகனங்கள், வயல்களில் எரிக்கப்படும் தாள்கற்றைகள் போன்றவை காற்று மண்டலத்தை நஞ்சாக்குவது உறுதியாகி யிருக்கிறது.
- இந்தக் காற்று மாசுகளைப் போக்க சட்டம் இயற்றுவதுடன் தொடர் நடவடிக்கைகளையும் அக்கறையுடன் எடுக்க வேண்டும். பிற நாடுகளில் இந்தப் பிரச்சினைகளை எப்படித் தீர்த்தார்கள் என்று கவனித்துப் புதிய வகையில் தீர்வுகாண முயல வேண்டும். தொற்றாத நோய்களைக் கட்டுப்படுத்துவதில்தான் அரசின் செயலாற்றலே இருக்கிறது.
- கல்வியறிவும் சுகாதார விழிப்புணர்வும் ஊட்டப்பட்டால் பல நோய்களைத் தவிர்த்துவிடலாம் என்பது உறுதிப்படுகிறது. அதேபோல, சுற்றுச்சூழலைத் தூய்மைப்படுத்துவது என்பது பருவநிலை மாறுதலால் ஏற்படும் விளைவுகளைக் கட்டுப்படுத்த மட்டுமல்ல; குடிமக்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்கவும்கூட. இதை அரசும் சமூகமும் உணர வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (26-11-2019)