TNPSC Thervupettagam

இதய நோய்கள் அச்சம் வேண்டாம், அலட்சியமும் வேண்டாம்

June 10 , 2023 581 days 764 0
  • தொற்றா நோய்களால் ஏற்படும் மரணங்களில் பெருமளவு கார்டியோ வாஸ்குலர் நோய்கள் (சிவிடி) எனும் இதய நோய்களால் ஏற்படுகின்றன. இதயம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் இவற்றில் அடங்கும். பொதுவாக, இந்த நோய்களின் தாக்கம் 40 வயதுக்கு மேல் அதிகம் இருக்கும்.
  • வயல்களில் பாயும் நீரானது வரப்பு, பாத்தி களின் வழியே அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடைவதைப் போன்றதுதான் நமது உடலின் ரத்த ஓட்டம். நீரின்றி வயல் வாடுவது போன்று, நமது உடலில் ரத்த ஓட்டம் தடைபடும் பகுதிகள் பாதிப்பைச் சந்திக்கின்றன. பாதிக்கப் படும் அந்தப் பகுதி இதயமாக இருந்தால், அது பேராபத்தில் முடியும்.

இதய நோய்களின் வகைகள்

  • இதயத் தமனி நோய்
  • ஒழுங்கற்ற இதயத் துடிப்புகள்
  • பிறவி இதயக் குறைபாடுகள்
  • இதயத் தசை நோய்
  • இதய வால்வு நோய்

இதயத் தமனி நோய்:

  • 40 வயதிலோ அல்லது அதற்கு முன்பாகவோ ஏற்படும் மன அழுத்தம் அல்லது கவலை, நமது உடலில் நெகட்டிவ் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கும். இதன் காரணமாகத் தூக்கமின்மை, பயம், பதற்றம், உளவியல் நெருக்கடி உள்ளிட்டவை ஏற்படும். இவை ரத்தக் குழாய்களின் நிலைத்தன்மையைக் குலைக்கும். அவற்றின் சுவர்கள் சிறிது சிறிதாகப் பழுதடைந்து, விரிசல்விடத் தொடங்கும்.
  • இது இதயத் தமனிகளில் கொழுப்பு படரும் (பிளேக்குகள்) சாத்தியத்தை ஏற்படுத்தும். பிளேக்குகளின் உருவாக்கம் அத்ரோஸ்கிளரோசிஸ் எனப்படுகிறது. தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களில் பாசி படிவது போன்ற நிலை இது. இதயத் தமனிகளினுள் படியும் கொழுப்பு, அதன் உள்ளளவைக் குறைப்பதால், இதயத்துக்கும் உடலின் பிற பகுதிகளுக்கும் செல்லும் ரத்த ஓட்டம் குறையும். இதன் காரணமாக, மாரடைப்போ, மார்பு வலியோ, பக்கவாதமோ ஏற்படலாம்.

அறிகுறிகள்

  • மார்பு வலி, மார்பு இறுக்கம்.
  • மார்பு அழுத்தம், மார்பு அசௌகரியம்.
  • மூச்சுத் திணறல்.
  • நடக்கும்போது மூச்சு வாங்குதல்.
  • கழுத்து, தாடை, தொண்டை, மேல் வயிற்றுப் பகுதி அல்லது முதுகு, கால்கள் அல்லது கைகளில் வலி.

மாரடைப்பு:

  • இதயத் தமனி நோய்களால் படியும் கொழுப்பு இதயத் தமனிகளிலோ அல்லது வேறு பகுதிகளிலோ ரத்தத்தை உறையவைத்து ரத்தக்கட்டிகளை (கிளாட்) ஏற்படுத்தும். இந்த ரத்தக் கட்டிகள் இதயத்துக்கு ரத்தம் செல்லும் பாதையை அடைப்பதாலோ சுருக்குவதாலோ ஏற்படுவதே மாரடைப்பு.
  • இதயத்துக்கு மூன்று ரத்தக் குழாய்கள் செல்கின்றன. இந்த மூன்று ரத்தக் குழாய்களிலும் அடைப்பு ஏற்பட்டால் அது மிகவும் மோசமான நிலை. ஏதாவது ஒரு ரத்தக் குழாயில் மட்டும் அடைப்பு இருக்கும் என்றால், அதை ஆஞ்சியோகிராம் சிகிச்சையின் மூலம் ஸ்டென்ட் பொருத்திக் குணப்படுத்திவிட முடியும்.
  • ஒழுங்கற்ற இதயத் துடிப்பு (அரித்மியாஸ்) - இதயத் துடிப்பின் வேகம் 90க்கு மேல் அல்லது 60க்கு கீழ் செல்லும்போது ஏற்படும் பாதிப்பு இது. மார்பு வலி அல்லது அசௌகரியம், மயக்கம், படபடப்பு, லேசான தலைவலி, வேகமான இதயத் துடிப்பு (டாக்ரிக்கார்டியா), மூச்சுத் திணறல், மெதுவான இதயத் துடிப்பு (பிராடி கார்டியா) போன்றவை இதன் அறிகுறிகள்.
  • பிறவி இதயக் குறைபாடுகள்: பிறவி இதயக் குறைபாடு, குழந்தை வயிற்றில் வளரும்போதே உருவாகிறது. இதயத்தில் ரத்த ஓட்டத்தை இது பாதிக்கும். சில மருத்துவ நிலைமைகள், மருந்துகள், மரபணுக்கள் போன்றவை பிறவி இதயக் குறைபாடுகளின் அபாயத்தை அதிகரிக்கும்.
  • வெளிர் சாம்பல் அல்லது நீல நிறத்தில் சருமம் அல்லது உதடுகள் (சயனோசிஸ்), கால்கள், வயிறு அல்லது கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீக்கம், உணவளிக்கும்போது குழந்தைக்கு ஏற்படும் மூச்சுத் திணறல், குறைந்த உடல் எடை போன்றவை இதன் அறிகுறிகள்.
  • இதய வால்வு நோய்: இதயத்தின் வால்வுகள் சரியாக வேலை செய்யாதபோது இந்த நிலை ஏற்படுகிறது. இதயத்தில் உள்ள வால்வுகளே ரத்தம் ஒரே திசையில் ஓடுவதை உறுதிப் படுத்துகின்றன. இவை பாதிக்கப்படும்போது ரத்தம் எதிர்த் திசையில் பயணிக்கும். இது உடலில் ரத்த சுழற்சியைப் பாதிக்கும்; ரத்த ஓட்டமும் தடைப்படும்.
  • கீல்வாதக் காய்ச்சல் இதற்கான முக்கியக் காரணம். பிறவிக் குறைபாடுகள், பாக்டீரிய பாதிப்பு ஆகியவற்றாலும் கூட இது ஏற்படலாம். பொதுவாக, இந்தப் பாதிப்பு குழந்தைகளுக்கே அதிகம் ஏற்படுகிறது. மார்பு வலி, மயக்கம், சோர்வு, ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, மூச்சுத் திணறல், கால்கள் அல்லது கணுக்காலில் வீக்கம் போன்றவை இதன் அறிகுறிகள்.
  • இதயத் தசை நோய் (கார்டியோமையோபதி) - இதில் இடது வென்ட்ரிக்கிள் இயல்பைவிடக் கடினமாகவோ, பெரிதாகவோ அல்லது தடிமனாகவோ மாறும். இதன் காரணமாக, காலப் போக்கில் நோயாளியின் இதயம் பலவீனமடையும். இதயம் ரத்தத்தைச் சரியான முறையிலும், சரியான அளவிலும் பம்ப் செய்யும் திறனை இழக்கும் என்பதால் இதயச் செயலிழப்பு ஆபத்து அதிகரிக்கும்.
  • இது மரபு வழியாக ஏற்படலாம். மாரடைப்பு, நோய்த்தொற்றுகள், புற்றுநோய் மருந்துகள், விஷம் உள்ளிட்ட காரணங்களாலும் இது ஏற்படலாம். எக்கோ பரிசோதனையின் மூலம் இந்த நோயை எளிதில் கண்டறிய முடியும். மயக்கம், தலைச்சுற்றல், சோர்வு, மூச்சுத் திணறல், ஒழுங்கற்ற இதயத் துடிப்புகள், கால்கள், பாதங்களில் வீக்கம் போன்றவை இதன் அறிகுறிகள்.

என்ன செய்ய வேண்டும்?

  • ‘செக் யுவர் நம்பர்ஸ்’ என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். நமது உடலின் எடை, ரத்தத்தின் சர்க்கரை அளவு, கொழுப்பு அளவு, ரத்த அழுத்தம், ரத்த அணுக்களின் எண்ணிக்கை போன்ற அளவீடுகளைத் தகுந்த இடைவெளிகளில் பரிசோதித்துக் கட்டுக்குள் வைப்பது ஆபத்தை பெருமளவு தவிர்க்க உதவும்.
  • நாம் உடல் எடையில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். பி.எம்.ஐ. அளவு எப்போதும் 30க்குள் இருப்பது ஆபத்தைக் குறைக்கும். முக்கியமாக, நமது இடுப்பளவில் கூடுதல் கவனம் தேவை. இடுப்பளவு ஆண்களுக்கு 90 செ.மீக்கு உள்ளும், பெண்களுக்கு 95 செ.மீக்கு உள்ளும் இருக்க வேண்டும். இந்த அளவைத் தாண்டினால், அடிவயிற்றில் கொழுப்பு சேரத் தொடங்கும். இதயத் தமனி நோய்களுக்கு இதுவே முக்கிய காரணமும்கூட. இவை தவிர கட்டுப்படுத்தப்படாத உயர் ரத்த அழுத்தமும் ஆபத்தானது.
  • ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தாமல் இருப்பது அல்லது அதற்கான சிகிச்சையை முறையாகத் தொடராமல் இருப்பது ரத்தக் குழாய்களில் அடைப்பு அல்லது வெடிப்பை ஏற்படுத்தும். நாற்பது வயதைத் தாண்டிவிட்டாலே, உடல்நலனில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்குவது இதயத்தைக் காக்கும். ஆரோக்கிய வாழ்க்கைமுறை மாற்றங்களை நமது இயல்பாக மாற்ற வேண்டும்.
  • போதுமான அளவு தூக்கம் (7 முதல் 9 மணிநேரம் வரை) மிகவும் அவசியம். தினமும் குறித்த நேரத்தில் தூங்கி, குறித்த நேரத்தில் எழுவது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும். வறுத்த, பொறித்த உணவு வகைகளுக்குப் பதிலாக அவித்த உணவு வகைகளைச் சாப்பிடவேண்டும்.
  • கவலைகளைப் புறந்தள்ளி மனதை மகிழ்வுடன் வைத்துக்கொள்ளப் பழகுவது, மன அழுத்தத்தைக் குறைக்கும். யோகா, தியானம் போன்றவை இதற்கு உதவும். உளவியல் பிரச்சினைகளுக்கு உடனடி கவனம் முக்கியம். தேவைப்பட்டால், மனநல மருத்துவர் அல்லது ஆலோசகரிடம் (counsellor) ஆலோசனையைப் பெற்று அதிலிருந்து மீள வேண்டும்.
  • முக்கியமாக, இதய நோய் தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக இ.சி.ஜி அல்லது டிரெட் மில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஒருவேளை அந்தப் பரிசோதனை முடிவுகள் நார்மலாக இருந்தும் அறிகுறிகள் தொடர்ந்தால், தயங்காமல் ஆஞ்சியோகிராம் செய்துகொள்வது நல்லது. அலட்சியமோ அறியாமையோ இன்றி போதிய விழிப்புணர்வுடன் இருந்தால், இதய நோய்களால் ஏற்படும் மரணங்களைக் கிட்டத்தட்ட முழுமையாகத் தடுத்து விட முடியும்.

நன்றி: தி இந்து (10 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories