TNPSC Thervupettagam

இதயத்தின் கூப்பாடு

September 28 , 2024 108 days 131 0
  • விளையாட்டு, தடகளப் பயிற்சி, உடற்பயிற்சி, ‘ஜிம்’ இவை எல்லாமே ஆரோக்கியத்துக்கு அவசியம்தான். இதய நலம் காப்பதற்கு இவை தேவைதான். அதேநேரம், ‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’ என்பதைப் போல, கடுமையான விளையாட்டுப் பயிற்சிகளால் இதயத்துக்கு ஆபத்தும் வருகிறது என்கிறார்களே, ஏன்?
  • ராமகிருஷ்ணன் காந்தி இந்தியாவின் பிரபல தடகளப் பயிற்சியாளர். வயது 56. ஒரு நாள் காலையில் நீண்ட பயிற்சிக்குப் பிறகு வீட்டுக்குத் திரும்பினார். மறுநாள் காலையில் அவரது அறையில் மயங்கிக் கிடந்தார். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக அறிவித்தனர்.
  • மேற்கு வங்கத்தின் இளம் வயது டேபிள் டென்னிஸ் வீராங்கனை அர்பிதா நந்தி போட்டியின் இடையே மயங்கி விழுந்து உயிரிழந்தார். தேசிய அளவிலான கைப்பந்து வீராங்கனை 24 வயதான சாலியாத் திடீரென நெஞ்சுவலி வந்து உயிரிழந்தார். மிகச் சமீபத்தில் நடந்த அகால மரணம் இது. திண்டிவனத்தில் 32 வயது நிரம்பிய கிரிக்கெட் பந்துவீச்சாளர் பாலாஜி கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவை எல்லாமே ஒரு பானைச் சோற்றுக்குச் சில பதங்களே.

இது ஏன் ஏற்படுகிறது?

  • விளையாட்டு/தடகள வீரர்களுக்கும், ‘ஜிம்’ பயிற்சியாளர்களுக்கும், பளு தூக்குபவர் களுக்கும் வில்லனாகக் காணப்படுவது, தடித்த இதயம். ‘ஹைப்பர்டிரோபிக் கார்டியோ மயோபதி’ (Hypertrophic cardiomyopathy - HCM) என்பது இதன் மருத்துவ மொழி.
  • அதாவது, தடித்த இதயத் தசை நோய். சென்ற வாரம் பார்த்த விரிந்த இதயத்தைப் போலவே (Dilated Cardiomyopathy – DCM) இதுவும் ஒரு மாற்றம் கண்ட மரபணுவால் ஏற்படுவது; வம்சாவளியில் வருவதுதான். இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 60-70% பேருக்கு வலுவான மரபணு அடிப்படை இருக்கிறது. அவர்களின் வம்சாவளியிலும் இந்தப் பாதிப்பு இருந்தவர்களைக் காண முடிகிறது.
  • சொன்னால் நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கும். எந்த ஓர் அறிகுறியும் வெளியில் காட்டாமல், இப்படி ஒரு வில்லன் உடலுக்குள் மறைந்து இருப்பது ஆரம்பத்தில் தெரியாது என்பதுதான் துயரம். இது குழந்தைப் பருவத்திலும் தெரியாது; வாலிப வயதிலும் தெரியாது. பெரும்பாலும் இது நடுத்தர வயதில்தான் தெரியவரும். வாலிபத்தில் இதயத்துக்கான மருத்துவப் பரிசோதனைகள் செய்தால் அவற்றில் தெரியக்கூடும்.

எப்படி ஏற்படுகிறது?

  • காட்டுத் தேனீக்கள் மொத்தமாக வந்து முகத்தில் கொட்டினால் எப்படி இருக்கும்? முகம் தடித்து வீங்கிவிடுமல்லவா? அப்படித்தான், வம்சாவளியில் இந்த வகை இதயப் பிரச்சினை உள்ளவர்களின் வாரிசுகளுக்கு, மரபணுப் பிறழ்வு (Mutation) காரணமாக இதயம் தடித்து வீங்கிவிடும்.
  • குறிப்பாக, விளையாட்டு வீரர்களுக்கும், நீண்ட கால ‘ஜிம்’ பயிற்சியாளர்களுக்கும் 20லிருந்து 30 சதவீதம் வரை இதய வீக்கம் கடுமையாக இருக்கும். உடல் பருமன் உள்ளவர்களால் எப்படி வேகமாக ஓட முடியாதோ அப்படித்தான், தடித்துப் போன இத யத்தால் இயல்பாகத் துடிக்க முடியாது. இத னால், உடலுக்குள் ரத்தம் செலுத்த சிரமப்பட்டு ‘இதயச் செயலிழப்பு’ ஏற்படும்.
  • இன்னும் பலருக்கு இதயம் முறையாகத் துடிப்பதிலும் பிரச்சினை உண்டாகும். எப்படி யென்றால், தடித்துப்போன இதயத்தின் தசைகளுக்குப் போதுமான ரத்தம் செல்ல வழியில்லை. அப்போது இதயத் துடிப்பின் லயம் மாறிவிடும். லகான் இழந்த குதிரையின் ஓட்டம்போல் இதயத் துடிப்பு எகிறிவிடும்.
  • இது திடீரென்றுதான் ஏற்படும். அப்போது நெஞ்சு வலி, சுவாசம் முட்டுதல், மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும். விளையாட்டின் மீதுள்ள ஆர்வத்தில் இதை அலட்சியப்படுத்துபவர்களே அதிகம். இந்த அறிகுறிகள் இதயத்தின் ‘கூப்பாடு’ என்பதை அறியாமல் அநேக விளையாட்டு வீரர்கள் எப்போதும்போல் கடுமையான பயிற்சிகளில் ஈடுபடும்போது, கட்டுப்பாடு இழந்த வாகனம் விபத்துக்கு உள்ளாகிற மாதிரி திடீர் மரணம் ஏற்படுகிறது.

எப்படித் தெரிந்து கொள்வது?

  • பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் கடுமையான உடற்பயிற்சிகளை மேற் கொள்வதில்தான் ஆர்வமாக இருக்கிறார்கள். எனவே, ஆரம்பக்கட்டங்களில் இவர்கள் ‘இசிஜி’ (ECG) பார்க்க வேண்டும். அதில் மாற்றங்கள் தெரிந்தால், அடுத்து எக்கோ கார்டியோகிராம் (ECHO) மேற்கொள்ள வேண்டும்.
  • வம்சாவளியில் இதயநோய் வந்துள்ளவர்கள் அனைவரும் 12 வயதுக்கு மேல் வருடத்துக்கு ஒருமுறை ‘இசிஜி’, ‘எக்கோ’ பரிசோதனை இரண்டையும் மேற்கொள்ள வேண்டும். இப்போது ‘இதய எம்ஆர்ஐ’ (Cardiac MRI) ஸ்கேன் வந்திருக்கிறது. இது ஒரு நவீன இதயப் பரிசோதனை. இதில் இதயத்தின் தசை அமைப்பும், ‘லப்..டப்...’ துடிப்பின் உயிர்ப்பும் தெளிவாகத் தெரிந்துவிடும்.
  • விளையாட்டு வீரர்களும், ‘ஜிம்’ பயிற்சியாளர்களும் இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்ட பிறகே பயிற்சிகளைத் தொடங்க வேண்டும். அதோடு நின்று விடாமல் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்தப் பரிசோதனைகளை மேற் கொள்ள வேண்டும். பிரச்சினை இருந்தால் இதய நல மருத்துவர் ஆலோசனைப்படி நடந்துகொள்ள வேண்டும்.

சிகிச்சை உள்ளதா?

  • தடித்த இதயத்தைக் கண்டறிந்துவிட்டால், அதைச் சமாளிக்க பலதரப்பட்ட சிகிச்சைகள் உள்ளன. பிரச்சினை ஆரம்பநிலையில் இருந்தால், மாத்திரைகளே போதும். ஆபத்தான நிலை என்றால், தடித்த இதயத் தசைகளை அகற்றும் அறுவைசிகிச்சை (Transaortic Septal Myectomy) உள்ளது. ‘ஆல்கஹால் அப்லேசன்’ (Alcohol Ablation) என்னும் முறையில் தசைத் தடிமனைக் குறைக்க வழி இருக்கிறது. இன்னும் மோசமான நிலைமை என்றால், ‘ஐசிடி’ (ICD) என்னும் கருவியை நெஞ்சில் பொருத்தி, எகிறும் இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தி உயிர் காக்கவும் முடிகிறது.

மரபு மட்டுமே காரணமல்ல:

  • ஆராய்ச்சி ஒன்றில் தடித்த இதயமுள்ள 46 விளையாட்டு வீரர்களைத் தொடர்ந்து ஐந்து வருடங்களுக்குப் பின் தொடர்ந்தார்கள். அவர்களில் 18 பேர் இளம் வயதிலேயே தீவிரமான மாரடைப்பு வந்து உயிர் மீண்டார்கள். 9 பேர் ஆய்வு ஆரம்பித்த இரண்டு வருடங்களில் உயிரிழந்தார்கள். 'கடுமையான விளையாட்டும் உடற்பயிற்சிகளும் இதயத்துக்கு ஆபத்து தருவதற்கு மரபு மட்டுமே காரணமல்ல, விளையாட்டு வீரர்கள் மேற்கொள்ளும் மோசமான வாழ்க்கை முறைகளும்தான்' என்பதே அந்த ஆராய்ச்சியின் முடிவு.

நன்றி: இந்து தமிழ் திசை (28 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories