TNPSC Thervupettagam

இது குழந்தைகளின் திருவிழா

June 12 , 2023 526 days 335 0
  • பள்ளிகள் திறந்திருக்கும் வரை எப்போது விடுமுறை என்று நாள்களை எண்ணுவோம். கோடை விடுமுறை தொடங்கிய ஓரிரு வாரங்களில் எப்போது பள்ளி திறக்கும் என்று ஏங்கிக் கொண்டிருப்போம். குழந்தைகளும் பெற்றோரும் ஆசிரியர்களும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் கல்விப் புத்தாண்டு வரப்போகிறது. பள்ளிகள் திறக்கப்போகின்றன.
  • குழந்தைகள் பள்ளித் திறப்பை எதிர்நோக்கிக் காத்திருப்பதற்கு முக்கியக் காரணம், நண்பர்கள், தோழிகள். ஆசிரியரைத் தவிர சம வயது உடையவர்களோடு வாழ்க்கையைச் செலவிடும் இடம் வகுப்பறை. சம வயதினரோடு பேசவும் பகிரவுமே குழந்தைகள் ஏங்குகிறார்கள். குழந்தைகளிடையே தயக்கமே இல்லாத பகிர்தலுக்கான களம் வகுப்பறை.
  • சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு ஏற்ப பள்ளிகள் இருக்கின்றன. நடுத்தர, உயர் வர்க்கத்தினரின் கனவுகளால் நசுங்கிக் கிடக்கும் குழந்தைகளே பொதுவாக அதிகம். அரசுப் பள்ளிகளின் நிலை வேறு. எல்லாக் காலமும் அங்கு மாற்றங்கள் பூத்தாலும் அவை பாலைவனச் சோலை மட்டுமே.

மகிழ்ச்சி தொடருமா?

  • பள்ளிகளைத் திறந்த ஓரிரு வாரங்களில் எப்போது விடுமுறை வரும் என்ற ஏக்கம் வருமா? அல்லது தொடக்கத்தில் இருந்த மகிழ்ச்சி தொடருமா? மகிழ்ச்சி தொடர வேண்டும் என்றால், அது எப்படி சாத்தியமாகும்?
  • பள்ளி, செயல்பாடுகளின் களமாக ஆகும்போது அங்குக் கற்றலும் கற்பித்தலும் கொண்டாட்டமாக மாறுகின்றன. வரும் கல்வியாண்டில் 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தால் தொடக்கப் பள்ளிகள் முழுவதும் செயல்பாடுகளின் களமாக மாறலாம். அதே நேரம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பழமையான கற்பித்தல் முறையே தொடர்கிறது. இதையும் 6 - 9 வகுப்புகள், 10 - 12 வகுப்புகள் என்று இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
  • 6 முதல் 9ஆம் வகுப்பு வரை படிப்பவர்களுக்குப் புத்தகப் பாடங்கள் தவிர ஏராளமான செயல்பாடுகள் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன. உலக சினிமா, கலை இலக்கியம், பொது அறிவு, அறிவியல் போன்ற திறன் சார்ந்த செயல்பாடுகளும் போட்டிகளும் குழந்தைகள், ஆசிரியரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. அவை சார்ந்த நடைமுறைக் குறைபாடுகள் இந்த ஆண்டில் சரி செய்யப்பட வேண்டும் என்றாலும், இவை சார்ந்து உருவாகியுள்ள சில மாற்றங்களும் முக்கியமானவையே.

பாடச்சுமை குறைய வேண்டும்

  • போட்டிகள், ஆசிரியர் - மாணவர் உறவை நெருக்கமடைய வைக்கும் முக்கியக் காரணிகள். அதே நேரம் பள்ளிகளில் நடத்தப்படும் போட்டிகள் வெறும் போட்டிகளாக இல்லாமல் திறன்களை வெளிப்படுத்தும் மேடைகளாக மாற வேண்டியது அவசியம்.
  • குழந்தைகள் திறன் சார்ந்த செயல்பாடுகள் இந்த ஆண்டில் இன்னும் அதிகரிக்கலாம். இவை ஒவ்வொன்றிற்கும் பாட வேளைகள் ஒதுக்கப்படுகின்றன. இப்படிப் பள்ளி நேரத்திற்குள் புதிதாக உருவாக்கப்படும் பாட வேளைகள், பாடம் நடத்துவதற்கான பாட வேளைகளைக் குறைக்கின்றன என்பதை மறந்துவிடக் கூடாது.
  • புத்தகச் சுமையைப் போல பாடச்சுமையும் அதிகமே. பாட வேளைகள் குறைந்தால் ஏற்கெனவே புத்தகங்களுக்குக் கீழே நசுங்கிக் கிடக்கும் குழந்தைகள் மேலும் நசுக்கப்படுவார்கள். பாட வேளைக்கு ஏற்ப பாடச்சுமையைக் குறைக்க வேண்டியது முக்கியம். இதைத் தாண்டியும் கையாள வேண்டியவை இருக்கின்றன.

உண்மை எதிரி

  • கலை, இலக்கியச் செயல்பாடுகளில் துடிப்பான மாணவன் அவன். அவனிடம் ஒரு விஷயத்தை ‘நாடகமாக ஆக்கு' என்று சொல்லிவிட்டால் போதும். பாடங்கள் அருமையான நாடகங்களாக உருமாறிவிடும். எட்டாம் வகுப்பில் படித்தபோது பத்தாம் வகுப்புப் பாடங்களைத் தனது நண்பர்களோடு சேர்ந்து நாடகங்களாக ஆக்கினான். அவர்கள் நடித்துக் காட்டியவை பத்தாம் வகுப்பு மாணவரிடையே மாற்றங்களை ஏற்படுத்தின. கோடை விடுமுறை முடிந்து ஒன்பதாம் வகுப்பிற்கு அவன் வந்துசேர்ந்தபோது, செயல்பாடுகளில் மாற்றங்களை உணர்ந்தேன், விசாரித்தேன். குடும்பச் சூழல் காரணமாக விடுமுறையில் வேலைக்குச் சென்றவன், போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறான்.
  • அவனோடும் பெற்றோரோடும் நிறைய பேசினோம். உளவியல் நிபுணர் மூலம் போதைப் பழக்கம் உள்ள மாணவர்களுக்குத் தொடர் ஆலோசனைகளை அளித்தோம். பழகுவதற்கு மிக எளிதாகவும் மறப்பதற்கு மிகக் கடினமாகவும் இருக்கும் தீய பழக்கங்களில் இருந்து ஒருவரை மீட்டெடுப்பது என்பது நீண்ட தொடர் செயல்பாடு. அதில் முழுமையான வெற்றி கிடைப்பதும் கடினம்.
  • இன்று வளரிளம் பருவக் குழந்தைகளின் போதைப் பழக்கம், நடத்தை முறை குறித்த புலம்பல்கள் ஆசிரியர்களிடம் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இவையே இரு தரப்பையும் எதிரியாக்கிப் பள்ளிக்குள் விபரீத விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அவை ஆண்டுதோறும் அதிகரிக்கின்றன. வளரிளம் பருவக் குழந்தைகள், ஆசிரியர்களிடையே கலந்துரையாடிப் பிரச்சினை களைத் தெளிவாக அறிய வேண்டும். அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைத் துறை சார்ந்த அறிஞர்கள் மூலம் உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும்.

அலறும் குரல்கள்

  • கடந்த ஆண்டு பொதுத் தேர்வுக்கு ஆயிரக்கணக்கானோர் வரவில்லை. இப்போது வரை அதற்குச் சரியான காரணம் என்ன என்று கண்டறிந்தோமா? இது போன்ற பலப்பல கேள்விகள் ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே போகின்றன. இதோ இந்த ஆண்டிலும் ‘பப்ளிக்', ‘பப்ளிக்' என்று 9ஆம் வகுப்பில் குரல்கள் எழத் தொடங்கும். 12ஆம் வகுப்பு வரை பொதுத்தேர்வு, மதிப்பெண், ‘படி, படி, படி’ என்று வளரிளம் பருவத்தினரின் மூளைக்குள் அலறும் குரல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. 10ஆம் வகுப்பிலிருந்து திறன்சார் செயல்பாடுகள் ஏதும் வழங்கப் படுவதில்லை. உடலை வலுவாக்கும் விளையாட்டும் பெரும்பாலும் இல்லை. தேர்வுக்கான பந்தயக் குதிரைகளாக மட்டுமே குழந்தைகளை நடத்துகிறோம்.
  • கல்வியில் மாற்றம் குறித்துப் பேசும் பலரும் வகுப்பறைச் சூழலை அறிந்திருப்பதில்லை. ‘ஆசிரியர்கள் வேலை செய்வதில்லை’ என்று பொத்தாம் பொதுவாகக் குறை சொல்லும் அபத்தத்திலிருந்து கல்வியாளர்களும் தப்பவில்லை. அவரவர் எதிர்கொண்ட சில அனுபவங்களை மாநிலம் முழுமைக்கும் பொதுமைப்படுத்திப் பேசிவிடுகின்றனர். பள்ளிக்கு வெளியிலிருந்து கல்வி பற்றிய கனவுகளைப் பேசுவோரும் பள்ளிக்குள் அனுபவபூர்வமாக உணர்ந்த ஆசிரியரும் குழந்தைகளும் கலந்துரையாட வேண்டும்.

நம்பிக்கை!

  • எதிர்காலத் தலைமுறை, சமூக அழுத்தங்களில் இருந்து விலகி நெடு நேரம் செலவிடும் இடம் பள்ளி. பள்ளியின் அழுத்தங்கள் தனியானவை. கல்வி என்றால் என்ன? வாழ்க்கை முறையை கற்றுத் தருவதா, வேலைக்கான தகுதியா? தகவல்களைத் தாண்டி வாழ்க்கை முறையைக் கற்கும் இடமாகப் பள்ளி இருக்குமா? குழந்தைகளுக்கு நம்பிக்கை அளிப்பதாகக் கல்வி இருக்கிறதா என்பதைப் போன்ற கேள்விகளை இன்றைய சூழலின் பின்னணியில் கலந்துரையாட வேண்டியதே கல்வியில் ஏற்படவுள்ள மாற்றங்களுக்கான தொடக்கப்புள்ளி. அதற்கான கலந்துரையாடலைப் பள்ளிக்குள் குழந்தைகள், ஆசிரியரிடமிருந்தே தொடங்க வேண்டும்.
  • ஏராளமான கேள்விகள், நிறைகள், குறைகள், கனவுகள் என எவ்வளவு இருந்தாலும் உயிர்ப்புள்ள குழந்தைகளும் ஆசிரியரும் கலந்துரையாடும் வகுப்பறைகளே எதிர்காலத்தின் ஒரே நம்பிக்கை.

நன்றி: தி இந்து (12 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories