TNPSC Thervupettagam

இதுவும் கடந்து போக

September 23 , 2023 460 days 347 0

யோகா

  • உடலை மட்டுமல்லாமல் மனதையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கயோகப் பயிற்சிகள் உதவுகின்றன. விருட்சாசனம் மனதை ஒருநிலைப் படுத்துகிறது. கோபத்தையும் மிகை உணர்வுகளையும் கட்டுப்படுத்துகிறது.
  • இதயத் துடிப்பைப் பராமரிப்பதுடன் மூளையின் செயல்பாட்டையும் யோகா தூண்டுகிறது. யோக முறைகளில் உள்ள சில பயிற்சிகள் மன அழுத்தத்தைக் குறைத்து, பதற்றத்தை நீக்கி மனதை அமைதிப்படுத்துகின்றன.

நடைப்பயிற்சி, உடற்பயிற்சி

  • நடைப்பயிற்சிகளும் உடற்பயிற்சிகளும் உடல் நலத்தை மட்டும் பேணு கின்றன என்று பலரும் தவறாகக் கருதுகிறோம். மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் மனதிற்குப் புத்துணர்வை ஊட்டவும் நடைப்பயிற்சிகளும் உடற்பயிற்சிகளும் நண்பனைப்போல் நமக்கு வழிகாட்டுகின்றன.
  • அவசரமாக ஓடிக்கொண்டிருப்பதற்குச் சிறு இடைவேளை விட்டு நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அவதானிக்கவும் நடைப்பயிற்சி உதவுகிறது. நாள்தோறும் செய்யும் உடற்பயிற்சிகள் மூலம் நமக்குள் நிதானம் பிறக்கும்.
  • மனதை ஆரோக்கியமாக வைத்திருந்தால் மட்டுமே உடலும் ஆரோக்கியமாக இருக்கும். மனதைப் பாதுகாக்க உடற் பயிற்சியும் நடைப்பயிற்சியும் அவசியம்.

மூச்சுப் பயிற்சி

  • பதற்றமான சூழ்நிலைகளைக் கையாள் வதற்கான பக்குவத்தை மூச்சுப் பயிற்சிகள் அளிக்கின்றன. பதற்றமாக உணரும்போது நன்றாக மூச்சை உள்ளிழுத்து வெளியே விட வேண்டும். பதற்றமான நேரத்தில் இந்த மூச்சுப் பயிற்சி நம்மை நிதானப்படுத்தும், இந்த நிதானம் நமது பதற்றத்தைத் தணித்து தெளிவான சிந்தனைக்கு வழிவகுக்கும். பதற்றத்தையும் குறைக்கும்.

பகிர்ந்து கொள்ளுதல் நலம்

  • மன நெருக்கடியான காலகட்டத்தில் துன்பங்களை நமக்குள்ளேயே போட்டு அழுத்திவைத்துக் கொண்டிருக்காமல் பிறரிடம் பகிர்ந்துகொள்வது மன நலத்திற்கு உதவும். பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்கிற எண்ணத்தை முதலில் தவிர்க்க வேண்டும். நண்பர்கள், பெற்றோரிடம் மன அழுத்தத்திற்கான காரணங்களை வெளிப்படையாகப் பகிர்வது கூடுதல் மனோபலத்தைத் தரும்.

உந்து விசை

  • எதிர்மறை விளைவுகளைக் கண்டு துவண்டுவிடாமல், அவற்றை உந்தித் தள்ளுவதற்கான விசையை நமக்கு நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டும். பிறரைச் சார்ந்திராமல் நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்ள வேண்டும். சிறு விஷயங்களுக்குக்கூட நம்மை நாமே பாராட்டிக்கொள்ளப் பழகினால் மனமும் உற்சாகமாக இருக்கும்.
  • ஆட்டோ சஜெஷன் ( Auto Suggestion) முறையின்படி நம்மிடம் இருக்கும் உள்ளுணர்வைத் தூண்டி நல்லஎண்ணங்களை மனதில் உருவாக்கிக் கொள்வதன் மூலம் மனம் புத்துணர்வுடன் இருக்கும்.

நேர்மறை சிந்தனை

  • அகத்தில் உருவாகும் எதிர்மறையான சிந்தனைகளைத் தவிர்த்து, எப்போதும் நேர்மறையான சிந்தனைகளுடன் இருப்பது மனதுக்கு நன்மை பயக்கும்.
  • நேர்மறை சிந்தனை வாழ்விற்கு அதிக நம்பிக்கையைக் கொடுக்கும். நமது எண்ணங் களையும் செயல்களையும் நல்வழிப் படுத்தும். மன அழுத்தத்திலிருந்து விடுபடவைக்கும்.

மருத்துவர்களை நாடுதல்

  • மன அழுத்தம் தீவிரமாக இருக்கும் நிலையில் உளவியல் மருத்துவரை அணுகி அதற்கான முறைசார்ந்த சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மன நல மருத்துவரை அணுகினால் சுற்றத்தாரும் சமூகமும் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்பது போன்ற பயனற்ற எண்ணத்தையும் அச்சத்தையும் தவிர்க்க வேண்டும்.

வாசிக்கப் பழகுவோம்

  • மனநலம் காப்பதில் புத்தக வாசிப்பு பெருமளவு உதவுவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மன நலச் சிகிச்சையில் புத்தக வாசிப்பும் மேலை நாடுகளில் பரிந்துரைக்கப்படுகிறது. வாசிப்புப் பழக்கம் புதிய உலகத்தை உருவாக்கிக் கொடுக்கிறது. அங்கே மன அழுத்தத்துக்கு இடம் இருக்காது, நம்பிக்கைகள் பிறக்கும்.
  • வாசிப்பின்போது அறிமுகமாகும் கதாபாத்திரங்களுடன் உணர்வுரீதியாக ஒன்றிப்போகும் வாய்ப்பும் கிடைக்கும். வாசிப்புப் பழக்கம் நமது பிரச்சினைகளைத் தீர்க்கும் மருந்தாகவும் சில நேரம் செயல்படுகிறது. அந்த வகையில் வாசிப்புப் பழக்கம் நமது எண்ணங்கள் குறுகிப்போகாமல் பரந்து விரிவதற்கும் தேவையற்ற பதற்றத்தைத் தவிர்ப்பதற்கும் உதவுகிறது.

பயணங்கள்

  • பரப்பரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கைக்குச் சிறு ஓய்வு கொடுத்து சிறு சிறு பயணங்களை மேற்கொள்வது மன ஆரோக்கியத்தைப் பராமரிக்கும். பயணங்களே வாழ்க்கையை யதார்த்தமாக அணுகும் மனநிலையை உருவாக்கும். மனம் நெருக்கடியிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக இயங்கப் பயணங்கள் வழிகாட்டும். பயணங்கள் மூலம் கிடைக்கும் அனுபவங்களும் நினைவுகளும் மனதைப் பக்குவகுப்படுத்தி வாழ்வுக்கான அர்த்தத்தைத் தருகின்றன.

புதியன தேடல்

  • வாழ்க்கையில் தேடல் அவசியம். படிப்பு, வேலை, குடும்பம் என்கிற வட்டத்தில் மட்டும் இயங்காமல் புதியவற்றைக் கற்றுக்கொள்வதில் ஆர்வத்தை நாம் வளர்த்துக்கொள்ளலாம். நீச்சல், ஓவியம், இசை, கைவினைப் பொருள்களைச் செய்வது என்பது போன்ற மனதை நிதானப்படுத்தும் செயல்பாடுகளில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

நம்பிக்கை

  • வாழ்க்கையில் தீராத பிரச்சினை என்று ஒன்றும் இல்லை. மன நலத்தைப் பாதிக்கும் கடினமான காலத்தை நிதானமாகக் கடக்கும் மனநிலைக்கு நம்மை நாமே பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இன்று நமது மன நலத்தைப் பாதிக்கும் ஒன்று நாளை சாதாரணமாகத் தெரியக்கூடும்.
  • இன்பமும் துன்பமும் வாழ்க்கையின் யதார்த்தம் . எந்தத் துன்பமும்நிரந்தரம் அல்ல இதுவும் கடந்து போகும் என்கிற புரிதல் நமக்குத் தேவை. எல்லாம் மாறும் என்கிற நம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் இருள் அகன்று புதிய வெளிச்சம் பிறக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories