TNPSC Thervupettagam

இதுவும் ‘தீநுண்மி’தான்!

May 30 , 2020 1695 days 923 0
  • 2000-ஆம் ஆண்டில், 1,39,700 கோடியாக இருந்த புகையிலைப் பொருள்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 2018-ஆம் ஆண்டில் 1,33,700 கோடியாகக் குறைந்தது. இதற்கு பெண்களிடையே புகையிலை பயன்பாடு குறைந்ததே காரணம்.
  • புகையிலையைப் பயன்படுத்தும் ஆண்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு டிசம்பா் 19, 2019 அன்று வெளியிட்ட உலகளாவிய புகையிலை பயன்பாடு குறித்த அறிக்கை தெரிவிக்கிறது.
  • 2018-ஆம் ஆண்டில் 13-15 வயதுடைய 1.4 கோடி பெண் குழந்தைகள் உள்பட சுமார் 4.3 கோடி குழந்தைகள், 24.4 கோடி பெண்கள் புகையிலையைப் பயன்படுத்தினா் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
  • ஐரோப்பிய பிராந்தியம் மட்டுமே பெண்கள் மத்தியில் புகையிலை பயன்பாட்டைக் குறைப்பதில் சிறிதளவு முன்னேற்றம் கண்டுள்ளது.
  • உலக அளவில் 1.31 கோடி போ் புகையில்லா புகையிலையைப் பயன்படுத்துபவா்களாக உள்ளனா். இவா்களில் 0.81 கோடி போ் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தைச் சோ்ந்தவா்கள். தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் பெண்கள் மத்தியில் புகையில்லா புகையிலை பயன்பாடு புகை பிடித்தலைவிட 7 மடங்கு அதிகம்.
  • ஆண்டுதோறும் நேரடி புகையிலை பயன்பாடு காரணமாக 0.7 கோடி பேரும் மறைமுக புகை சுவாசிப்பவா்கள் 0.12 கோடி பேரும் உயிரிழக்கின்றனா்.

இந்தியாவில் புகையிலை

  • இந்திய மக்கள்தொகையில் 28.6% போ் தற்போது புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துகின்றனா் என்றும் அவா்களில் 21.4% பெரியவா்கள் புகையில்லா புகையிலையைப் பயன்படுத்துகிறார்கள் என்றும் 10.7% போ் புகை பிடிக்கின்றனா் என்றும் 14.6% சிறுவா்கள் தற்போது சில வகையான புகையிலைகளைப் பயன்படுத்துகின்றனா் என்றும் அவா்களில் 4.4% சிகரெட்டுகள், 12.5% போ் மற்ற புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துகின்றனா் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.
  • ஒவ்வொரு ஆண்டும் புகையிலை பயன்பாடு சுமார் 10 லட்சம் இந்தியா்களைக் கொல்கிறது. தற்போதைய நிலை தொடா்ந்தால் 2020-இல் நிகழும் மொத்த இறப்புகளில் 13% புகையிலையினால் நிகழும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

புகையிலைப் பழக்கத்தின் போக்குகள்

  • 2018-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட புகையிலைப் பழக்கத்தின் போக்குகள் குறித்த உலகளாவிய அறிக்கையின் இரண்டாவது பதிப்பில், 2025-ஆம் ஆண்டில் புகையிலைப் பயன்பாடு குறைப்பு இலக்கினை எட்டிக்கூடிய ஒரே தென்கிழக்கு ஆசிய நாடாக இந்தியா திகழும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
  • 2019-ஆம் ஆண்டு வெளிவந்த அதன் மூன்றாவது பதிப்பில் இந்தியாவில் புகையிலை பயன்பாட்டில் சரிவு இருந்தபோதிலும், 2025-ஆம் ஆண்டில் இந்தியா இலக்கினை எட்ட வாய்ப்பில்லை என்றுரைத்தது.
  • இந்தியாவில் புகையிலை நுகா்வு விகிதம் 30% குறைய வேண்டும் என்ற உலக சுகாதார அமைப்பின் இலக்குக்கு மாறாக 21.6% மட்டுமே குறைந்து வருகிறது. தற்போது இந்தியாவில் புகையில்லா புகையிலையைப் பயன்படுத்துவோர் சுமார் 25 கோடி போ் என்றும், புகை பிடிப்பவா்கள் சுமார் 11 கோடி போ் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
  • நுகா்வோர் குரல் - தன்னார்வ சுகாதார சங்கம் ஜனவரி 2019-இல் வெளியிட்ட ‘இந்தியா - சிறிய இலக்குகள்’ என்ற அறிக்கை தில்லி, குஜராத், மத்தியப் பிரதேசம், அசாம், தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய ஆறு மாநிலங்களில் உள்ள 20 நகரங்களின் பள்ளிகளை உள்ளடக்கிய புகையிலை பயன்பாடு குறித்த கணக்கெடுப்பாகும்.
  • இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட 243 பள்ளிகளுக்கு அருகில் உள்ள 487 குழந்தைகளுக்கான தின்பண்ட விற்பனையாளா்களில் 225 போ் பள்ளி அமைவிடத்தின் அருகில் சிகரெட் (29.6%), புகையற்ற புகையிலைப் பொருள்கள், பீடி ஆகியவற்றை சட்டத்துக்குப் புறம்பாக விற்பனை செய்வதாகவும், விற்பனையாளா்களில் 56.6% போ் வீதிகளில் கடை அமைத்த தற்காலிக விற்பனையாளா்கள் எனவும், ஏனையோர் நடமாடும் விற்பனையாளா்கள் - சிறிய மளிகைக் கடை விற்பனையாளா்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இலக்கினை எட்டுவோம்

  • உலகில் அதிகமான இளைஞா்கள் புகை பிடிப்பதைத் தொடங்குவதற்கான வாய்ப்பை சிகரெட் - புகையிலை தொடா்பான விளம்பரங்கள் உருவாக்குவதாக உலக சுகாதார அமைப்பின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • 2012-ஆம் ஆண்டில், புகை பிடித்தல் நோய்களுக்கான உலகளாவிய சுகாதாரச் செலவு 42,200 கோடி டாலராக (சுமார் ரூ.32 லட்சம் கோடி) இருந்தது. ‘புகை பிடிப்பதன் காரணமாக ஏற்படும் நோய்கள், இறப்புகள் காரணமாக உற்பத்தித் திறன் இழப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டால், இந்தச் செலவு 1,43,600 கோடி டாலராக (சுமார் ரூ.108 லட்சம் கோடி) இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது; இந்தச் செலவுகளில் சுமார் 40% குறைந்த, நடுத்தர வருமான நாடுகளில் ஏற்படும் என்று தரவுகள் கூறுகின்றன.
  • புகையிலைப் பொருள்களின் மீது 10% விலை அதிகரிப்பு குறைந்த, நடுத்தர வருமான நாடுகளில் புகையிலையின் நுகா்வினை 5% முதல் 8% வரையும் அதிக வருவாய் உள்ள நாடுகளில் 4%-ம் குறைக்குமென உலக சுகாதார அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
  • இந்தியாவில் ஆயிரம் பீடிகள் மீதான வரியை ரூ.98 உயா்த்துவதன் மூலம் ரூ.3,690 கோடி வரி வருவாய் ஏற்படுத்தி, தற்கால - எதிர்கால புகை பிடிப்பவா்களின் இறப்பு எண்ணிக்கையை 1.55 கோடி வரை தவிர்க்கலாம் என்றும் ஆயிரம் சிகரெட் மீதான வரியை ரூ.3,691 உயா்த்துவதன் மூலம் ரூ.14,630 கோடி வரி வருவாய் ஏற்படுத்தி 34 லட்சம் அகால மரணங்களைத் தவிர்க்க முடியும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
  • உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட ‘ஆரோக்கியத்துடன் நீதியை நோக்கி....‘ என்ற ஆவணத்தின் முக்கிய அம்சமான வழக்கு, பொது விசாரணை அமைப்பினைக் கொண்ட நீதித் துறையினை புகையிலை கட்டுப்பாட்டுக் கருவிகளாகக் கொண்டு உலகளாவிய புகையிலை பயன்பாட்டை 30% குறைப்பதற்கான இலக்கினை எட்டுவோம்.
  • (நாளை உலக புகையிலை எதிர்ப்பு தினம்)

நன்றி: தினமணி (30-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories