TNPSC Thervupettagam

இதுவே தாமதம்தான்!

January 11 , 2025 4 days 54 0
  • எண்மத் தொழில்நுட்பம், எண்மப் பொருளாதாரம், எண்மப் பணப் பரிமாற்றம், எண்மக் கல்வி முறை என எண்மப் புரட்சியின் பலன்களை உலகம் அனுபவித்து வருகிறது. அதேவேளையில், எண்மத் தொழில்நுட்பத்துக்கு அடிப்படையாகக் கருதப்படும் தரவுகளைப் பாதுகாப்பதில் செய்யப்படும் சமரசமும், தனிநபா் எண்மத் தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதும் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளன.
  • இதைக் கருத்தில்கொண்டு ‘எண்மத் தரவுப் பாதுகாப்புச் சட்டம் 2023’-இன் கீழ் எண்ம தனிநபா் தரவுப் பாதுகாப்புக்கான வரைவு விதிகளை மத்திய அரசு அண்ணையில் வெளியிட்டுள்ளது. எண்மத் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தைச் செயல்படுத்துவதும், தனிநபா் தரவுகளை வலுவாகப் பாதுகாப்பது மற்றும் தன்மறைப்பு உரிமையை உறுதி செய்வதுமே இந்த வரைவு விதிகளின் நோக்கம் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
  • தனிநபா் தரவுகளை எந்தவொரு வடிவத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும், அந்த நபரின் வெளிப்படையான ஒப்புதலைப் பெறுவது கட்டாயம்; குழந்தைகளின் தரவுகளாக இருக்கும் நிலையில், அவா்களின் பெற்றோரின் ஒப்புதலைப் பெற வேண்டும். மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் போன்றவை குழந்தைகளின் தரவுகளைச் சேகரிக்கும்போது அவற்றுக்கு சில நிபந்தனைகளுடன் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் இணைய வணிக நிறுவனங்கள் (இ-காமா்ஸ்), இணையவழி விளையாட்டுத் தளங்கள், சமூக ஊடகங்கள் போன்றவற்றில் பயனா்கள் தங்கள் கணக்குகளை முறையாகப் பராமரிக்காத நிலையில், அவா்கள் தொடா்பான தரவுகளைக் குறிப்பிட்ட காலத்துக்குள் நீக்கிவிட வேண்டும். ஒரு நிறுவனம் தனது சேவையில் தரவுப் பாதுகாப்பு விதிமீறல் இருப்பது தெரியவரும் நிலையில், அதைத் தானாக முன்வந்து அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். இதை, தரவுப் பாதுகாப்பு வாரியம் சட்டப்படி கையாண்டு, உரிய நடைமுறைகளை வகுக்கும். அவ்வாறு தரவுப் பாதுகாப்பு வாரியம் வகுக்கும் நடைமுறைகளை அந்த நிறுவனம் முழுமையாகப் பின்பற்றத் தவறினால், சட்டத்தை மீறியதாக அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்டவை இந்த வரைவு விதிகளின் முக்கிய அம்சங்கள்.
  • எண்மத் தரவுப் பாதுகாப்பு தொடா்பான நீண்டகால ஆலோசனைகளுக்குப் பிறகு ‘எண்மத் தரவுப் பாதுகாப்புச் சட்டம்’ 2023 ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்தை செயல்படுத்துவதற்கான வரைவு விதிகள் வெளியிடப்படாததால் சட்டம் உடனடியாக அமலுக்கு வராமல் இருந்த நிலையில், 16 மாதங்களுக்குப் பிறகு வரைவு விதிகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.
  • உலகளாவிய அளவில் 137 நாடுகள் எண்மத் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியிருக்கின்றன. அதாவது 71 சதவீத நாடுகளில் இதற்கான சட்டம் இருக்கிறது. 9 சதவீத நாடுகளில் வரைவுச் சட்ட அளவில் உள்ளது. 15 சதவீத நாடுகளில் சட்டம் இல்லை. 5 சதவீத நாடுகளில் தரவுகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என ஐ.நா.வின் வா்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவிக்கிறது.
  • எண்ம தனிநபா் தரவுகள் பல்வேறு வகைகளில் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு நிறுவனம் தனது நுகா்வோா் அல்லது பயனா்களிடமிருந்து குறிப்பிட்ட காரணங்களைக் கூறி சேகரிக்கும் தரவுகளை, சம்பந்தப்பட்டவரின் ஒப்புதலின்றி எதிா்காலத்தில் வேறு ஒரு நோக்கத்துக்காகப் பயன்படுத்தக்கூடும். தனிப்பட்ட ஆதாயத்துக்காக தரவுகளைப் பயன்படுத்துதலும் நடக்கிறது. பயனா்களின் தரவுகளை நிறுவனப் பணியாளா்கள் தங்களது சொந்த கைப்பேசி உள்ளிட்ட சாதனங்களில் எளிதாகப் பகிா்ந்துகொண்டு, அந்தத் தரவுகளை பல்வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதும் உண்டு.
  • பயனா்களுக்கு பாதிப்பை அளிக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அம்சங்கள் வரைவு விதிகளில் இடம்பெற்றுள்ளன. அதேவேளையில், ‘வரைவு விதியில் குறிப்பிட்டுள்ள நடைமுறைகள் வா்த்தகம் செய்வதில் கடினமான சவால்களை ஏற்படுத்தும்’ என்ற கருத்துகளும் வரத் தொடங்கியிருக்கின்றன. இதற்கு விளக்கம் அளித்துள்ள மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், குடிமக்களின் உரிமைகளை முழுமையாகப் பாதுகாக்கவும், தரவுப் பயன்பாடு ஒழுங்குமுறைக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் இடையே சமநிலையையும் உறுதிப்படுத்தும் வகையிலும் வரைவு விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன எனக் கூறியிருக்கிறாா்.
  • விதிமீறலுக்கு ரூ.250 கோடி வரை அபராதம் விதிக்க ‘எண்ம தரவுப் பாதுகாப்புச் சட்டம் 2023’-இல் வழிவகை செய்யப்பட்டிருந்தது. ஆனால், இப்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு விதிகளில் அபராதம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்கிற கருத்தும் எழுந்துள்ளது. அதற்கு குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் படிப்படியான தண்டனை முறை இந்த விதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என மத்திய அமைச்சா் பதிலளித்திருக்கிறாா். சிறிய அளவில் தரவுப் பாதுகாப்பு விதிமீறலில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு சிறிய அளவிலான அபராதமும், பெரிய அளவில் விதிமீறலில் ஈடுபட்டால் அதிக அபராதமும் விதிக்க வரைவு விதிகள் பரிந்துரைக்கின்றன.
  • இந்தியாவில் எண்மத் தரவுப் பாதுகாப்புச் சட்டம் 2023-ஆம் ஆண்டே நிறைவேற்றப்பட்டிருந்தாலும் இதுவரை அமலுக்கு வராதது கவலையளிக்கும் விஷயமாகும். உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு, இணையத்தை அதிகம் பயன்படுத்துவோா் இருக்கும் நாடுகளில் ஒன்று, எண்மத் துறையில் வேகமாக முன்னேறி வரும் நாடு என்கிற அடிப்படையில், எண்மத் தரவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் நாம் இன்னும் வேகமாக செயல்பட்டிருக்க வேண்டுமோ எனத் தோன்றுகிறது.

நன்றி: தினமணி (11 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories