இந்த ஆண்டில் சராசரி ஊதிய உயர்வு 9.4 சதவிகிதம் ஆக இருக்கும்
- ஆண்டு பிறந்துவிட்டாலே ஊதிய உயர்வு எப்படி இருக்கும் என்பதுதான் சம்பளதாரர்கள் அதிகம் விவாதிக்கும் விஷயமாக இருக்கும். இன்றைய இந்தியாவின் வேகமான வளர்ச்சி கட்டமைப்பை உருவாக்குவதில் திறமையான இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. அதனால்தான் தொழில் துறையில் அவர்களுக்கான தேவையும் அதிகமாக உள்ளது. பொதுவாக திறமையான ஊழியர்களை எந்த நிறுவனமும் இழக்க விரும்புவதில்லை. அவர்கள் கேட்கும் சம்பளத்தை தர தயாராகவே இருக்கின்றனர். இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் உயர்ந்து வருவதால் செலவுகளை சமாளிக்க அவர்கள் ஊதிய உயர்வை எதிர்பார்க்கிறார்கள்.
- மனிதவள ஆலோசனை நிறுவனமான மெர்சரின், தொழில்நுட்பம், உயிர் அறிவியல், நுகர்வோர் பொருட்கள், நிதி சேவைகள், உற்பத்தி, வாகனம், பொறியியல் உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கிய 1,550-க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் ஆய்வு நடத்தியது. அதன் அடிப்படையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஊதிய உயர்வு என்பது சராசரியாக 8 சதவீதமாக இருந்து வந்துள்ளது. ஆனால், இந்த ஆண்டு மாத சம்பளதாரர்களுக்கான சராசரி ஊதிய உயர்வு 9.4 சதவீதமாக இருக்கும் என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இது, பணியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மின்சார வாகனங்களின் எழுச்சி மற்றும் மத்திய அரசின் "மேக் இன் இந்தியா" திட்டங்களின் முயற்சியால் வாகனத் துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு 8.8 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் அதிகரிக்கும் என்ற கணிப்புடன் அத்துறை முதலிடத்தில் உள்ளது.
- இரண்டாவது இடத்தில் உள்ள பொறியியல் துறையில் ஊதிய உயர்வு இந்தாண்டு 8 சதவீதத்தில் இருந்து 9.7 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, உற்பத்தி சூழல் அமைப்பில் ஏற்பட்டுள்ள எழுச்சியை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. இந்தியாவில் துடிப்பான மற்றும் திறமையான இளைஞர்களுக்கு தேவை அதிகரித்து வருவதால் இந்த ஆய்வில் கலந்து கொண்ட 37 சதவீத நிறுவனங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளன.
- அதேநேரம், முந்தைய பணியிலிருந்து விலகுவோர் விகிதம் 11.9 சதவீதம் என்ற அளவில் நிலைபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. போட்டி திறன்மிக்க சந்தையை எடுத்துக்காட்டும் வகையில் விவசாயம், ரசாயனம், சேவை நிறுவனங்களில் இந்தவிகிதம் சற்று அதிகமாக இருக்கும். திறன்மிகு பணியாளர்களுக்கான சந்தை வாய்ப்பு இந்தியாவில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை சந்தித்து வருகிறது. அதன்படி, 75 சதவீதத்துக்கும் மேலான நிறுவனங்கள் செயல்திறனுடன் இணைந்த ஊதியத் திட்டங்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன. நிறுவனங்களின் இந்த போக்கு திறமைகளை ஈர்ப்பதற்கும், தக்கவைத்துக்கொள்வதற்கான போட்டி சந்தையை சிறப்பாக நிலைநிறுத்தவும் உதவும் என மெர்சர் இந்தியா கேரியர் நிறுவன தலைவர் மன்சி சிங்கால் கூறுகிறார்.
- எது எப்படியோ? உயர்கல்வி முடித்து வேலைவாய்ப்பு சந்தைக்குள் அடியெடுத்துவைக்கும் மாணவர்கள் புத்தக அறிவை மட்டும் நம்பியிருக்காமல் வேலைக்கான தங்களது தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், திறமையான இளைஞர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்புதான்.
நன்றி: இந்து தமிழ் திசை (10 – 02 – 2025)