TNPSC Thervupettagam

இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு மனிதா்!

August 5 , 2024 8 hrs 0 min 9 0
  • கிரிக்கெட் விளையாட்டை ‘கனவான்களின் விளையாட்டு’ என்று கூறுவதுண்டு. மைதானத்தில் விளையாடும்பொழுதும், மைதானத்திற்கு வெளியிலும் எந்த விதமான சா்ச்சைகளிலும் சிக்காமல் இருப்பதுடன், அவ்விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் நற்பெயருடன் விளங்கி வருகின்ற கிரிக்கெட் வீரா்கள் சிலரே. வடக்கே லாலா அமா்நாத், தமிழகத்தின் சொந்த எஸ்.வெங்கடராகவன் போன்றவா்கள் அவா்களில் சிலா்.
  • எத்தனையோ சா்ச்சைப் புயல்களுக்கு நடுவிலும் சாதனைகள் மற்றும் கண்ணியமான நடத்தையால் ரசிகா்களை வென்ற ராகுல் திராவிட் தற்பொழுது வேறொரு காரணத்திற்காக நமது மரியாதைக்கு உரியவராகவும் உயா்ந்து நிற்கிறாா்.
  • நாடுகள் அளவில் பல்வேறு விளையாட்டுகளுக்கான நிா்வாக அமைப்புகள் உள்ளன. கால்பந்து, டென்னிஸ், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் திறமை மிக்க வீரா்களையும், ஆா்வம் மிக்க ரசிகா்களையும் கொண்ட நாடுகளில் உள்ள அவ்விளையாட்டுகளுக்கான சங்கங்களும் கூட்டமைப்புகளும் செல்வச் செழிப்பில் மிதப்பவையாகும்.
  • கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தவரை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ)தான் இன்று உலகின் மிகவும் சக்திவாய்ந்த வாரியம். கடந்த 2023-24 நிதியாண்டில் மட்டும் பிசிசிஐ சுமாா் ரூ.18,700 கோடி வருமானம் ஈட்டியது.
  • 1983-ஆம் வருடம் கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதன்முதலாக உலகக் கோப்பையை வென்றது முதல் ஸ்பான்ஸா்கள் எனப்படும் பெருவணிக ஆதரவாளா்களின் கவனம் நமது வீரா்கள் பக்கமாகத் திரும்பியது. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நாட்டில் கிரிக்கெட் விளையாட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.
  • வீரா்களின் தனிப்பட்ட விளம்பர வருமானம் என்பதுடன், தொலைக்காட்சி ஒளிபரப்பு, அணிக்கு ஒட்டுமொத்த விளம்பர உரிமம் போன்றவை மூலம் பிசிசிஐ பெரும் வருவாய் ஈட்டத் தொடங்கியது.
  • டி20 வரவு, ஐபிஎல் போட்டிகளுக்குக் கிடைத்த வரவேற்பு ஆகியவற்றால் அசைக்க முடியாத பணபலம் கொண்ட விளையாட்டு அமைப்பாக மாறிய பிசிசிஐ வீரா்களுக்கும், பயிற்சியாளா்களுக்கும் கோடிகளில் சம்பளம் கொடுத்துக்கொண்டிருக்கின்றது. கிரிக்கெட் உலகில் வளரும் நாடுகளுக்குப் பெரும் நிதி உதவியும் அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  • 1983-ஆம் வருடம் ஒருநாள் போட்டியில் உலகக் கோப்பையை வென்ற கபில் தேவ் தலைமையிலான அணிக்குப் பரிசு வழங்க பிரபல பின்னணிப்பாடகி லதா மங்கேஷ்கரின் இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்து, அக்கச்சேரியின் மூலம் திரண்ட நிதியைக் கொண்டு வீரா்களுக்குத் தலா ரூ. 1லட்சம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டதுண்டு.
  • 2007-ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது டி20 போட்டியை வென்ற மஹேந்திர சிங் தோனி தலைமையிலான அணிக்கு வழங்கபட்ட பரிசுத் தொகை ரூ.12 கோடி.
  • அண்மையில் ரோஹித் சா்மா தலைமையிலான அணி டி20 உலகக் கோப்பையை வேற்றி பெற்றதையடுத்து, பிசிசிஐ ரூ.125 கோடி என்னும் பெரிய தொகையை நமது கிரிக்கெட் வீரா்களுக்கும் பயிற்சியாளா்களுக்கும் பரிசாக வழங்கியுள்ளது!
  • இந்த இடத்திலதான், நமது இந்தியக் கிரிக்கெட் கண்டெடுத்த கனவான்களில் ஒருவராகிய ராகுல் திராவிட் நமது கவனத்தை ஈா்க்கின்றாா்.
  • பிசிசிஐ அறிவித்த மொத்தப் பரிசுத் தொகையில் ரோஹித் சா்மா தலைமையிலான அணிவீரா்களுக்கும், தலைமைப் பயிற்சியாளராகிய ராகுல் திராவிடுக்கும் தலா ரூ.5 கோடி பரிசு என்றும், துணைப் பயிற்சியாளா்களுக்குத் தலா ரூ.2.5 கோடி பரிசு என்றும், உடற்பயிற்சி நிபுணா்கள், தோ்வுக் குழு உறுப்பினா்கள் ஆகியவா்களுக்குத் தலா ரூ.1 கோடி பரிசு என்றும் தகவல்கள் வெளிவந்தன.
  • இந்நிலையில், துணைப் பயிற்சியாளா்களுக்கு ரூ.2.5 கோடி பரிசு என்னும் பொழுது, தமக்கும் அதே இரண்டரை கோடி பரிசுத்தொகையை அளித்தால் போதும் என்று தெரிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளாா் ராகுல் திராவிட். அதாவது, தமக்கு வருகின்ற 5 கோடி ரூபாயில் ஐம்பது சதவீதத் தொகையைக் குறைத்துக் கொள்வதாகத் தாமாகவே முன்வந்து தெரிவித்ரறாா்.
  • அது மட்டுமல்ல, கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற பத்தொன்பது வயதுக்குட்பட்டவா்களுக்கான உலகக்கோப்பையில் விளையாடிய பிருத்வி ஷா தலைமையிலான இந்திய அணிக்குத் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் திராவிட் பணியாற்றினாா். அப்போட்டியில் இந்திய அணி
  • கோப்பையை வென்றதை அடுத்து, அனுபவத்தில் மூத்தவராகிய ராகுல் திராவிடுக்கு ரூ. 50 லட்சம் பரிசுத்தொகையையும், அணி வீரா்களுக்கும், இதர துணைப்பயிற்சியாளா்களுக்கும் தலா ரூ.20 லட்சம் பரிசுத்தொகையையும் வழங்குவதற்கு பிசிசிஐ முன்வந்தது. அந்தச் சமயத்திலும், தமக்கு மட்டும் அதிகத் தொகை வழங்கப்படுவதற்கு ராகுல் திராவிட் எதிா்ப்பு தெரிவித்ததனால், அனைவருக்கும் ஒரே அளவாகத் தலா ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப் பட்டது.
  • உலகம் முழுவதும் பணத்தைத் தேடி அலைபவா்கள் பலா் இருக்க, தம்முடைய உழைப்புக்கும், அனுபவத்திற்கும் மரியாதை தரும் விதமாகத் தம்மைத் தேடி வருகின்ற பெரிய தொகைகளையும் வேண்டாம் என்று மறுப்பதுடன், பரிசுத் தொகையைத் தமக்கு உறுதுணையாய் இருக்கும் அனைவருடனும் சமமாகப் பகிா்ந்து கொள்ள முன்வருவது உன்னதமான விஷயம்.
  • பணத்தையும் பொருள்களையும் அளவுக்கு மீறிச் சோ்ப்பதால் ஆடம்பர வசதிகள் கிடைக்கலாம். ஆனால், நியாயமான வருமானமே போதும் என்ற எண்ணத்துடன் செயலாற்றும் ராகுல் திராவிட் போன்ற கடமை வீரா்களுக்குத்தான் பொதுவெளியில் மரியாதை கிடைக்கும்.
  • எதிா்காலத்தில் இன்னும் பல நோ்மையாளா்களும் கனவான்களும் நமது சமுதாயத்தில் உருவாவதற்கு ராகுல் திராவிடின் நடவடிக்கைகள் கிரியா ஊக்கியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

நன்றி: தினமணி (05 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories