TNPSC Thervupettagam

இந்திய அறிவியலில் பன்மைத்துவம் இருக்கிறதா?

February 27 , 2025 5 hrs 0 min 16 0

இந்திய அறிவியலில் பன்மைத்துவம் இருக்கிறதா?

  • மத்திய அரசின் அறிவியல் - தொழில்நுட்ப அமைச்சகம் 2025ஆம் ஆண்டின் தேசிய அறிவியல் தின மையக் கருத்தாக ‘இந்திய இளைய சமுதாயம் அறிவியல் - புதுமைத் திறன்களில் உலகத் தலைமையேற்கும் அளவுக்கு வளர்ந்த இந்தியாவை மேம்படுத்தல்’ என்கிற இலக்கை அறிவித்துள்ளது. அறிவியலின் வளர்ச்சிக்குப் புதுமைச் சிந்தனை மிகமிக அவசியம். அதை இந்த அறிவிப்பு சரியாகவே வெளிப்படுத்துகிறது.
  • இன்று மனித குலம் காலநிலை மாற்றம், சுற்றுச்​சூழல் சீர்கேடு போன்ற பல்வேறு பிரச்சினை​களைச் சந்தித்து​வரு​கிறது. இதற்கான அறிவியல்​பூர்வமான தீர்வு​களைத் தேடிப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்கள் தீவிரமாக ஆராய்ச்சி செய்து​வரு​கிறார்கள். ஒரு பிரச்சினைக்கான தீர்வை இரண்டு பேர் சேர்ந்து யோசிப்​ப​தைவிட, பத்துப் பேர் சேர்ந்து யோசித்தால் மிக விரைவாகவும் மிகப் புதுமை​யாகவும் தீர்வுகள் கிடைக்​கும்.
  • இதேபோல் அறிவியல் ஆராய்ச்சியில் ஒரே தன்மை கொண்ட அறிவியல் அறிஞர்கள் ஈடுபடு​வதைவிட வெவ்வேறு இனம், வெவ்வேறு மொழி, வெவ்வேறு பண்பாட்டுப் பின்புலம் கொண்ட அறிஞர்கள் ஒன்றாக அமர்ந்து சிந்திக்​கும்​போது, அறிவியல் ஆராய்ச்சியில் புதுமைச் சிந்தனை விரைவாக உருவாகும். ஒரே பிரச்சினைக்கு வெவ்வேறு கோணத்தில் அணுகும் முறைகள் உருவாகும். இதன் மூலம் புதியபுதிய கண்டு​பிடிப்புகள் உருவாகும். அறிவியலில் இப்படி அனைத்து விதமான பின்புலம் கொண்ட​வர்​களுக்கான பிரதி​நி​தித்துவம் இருப்பதை ‘அறிவியலில் பன்மைத்துவம் (Diversity in Science)’ என்கிறோம்.
  • பன்மைத்து​வத்தின் அவசியம்:
  • இன்று உலகம் முழுவதும் இருக்கிற புகழ்​பெற்ற அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்​களில் பேசப்​படுகிற ஒரு முக்கிய கருத்​தாக்கம் ‘அறிவியலில் பன்மைத்து​வம்’. அறிவியல் துறைகளில் நோபல் பரிசு பெற்ற பல்வேறு அறிவிய​லா​ளர்கள் ‘அறிவியலில் பன்மைத்துவம்’ என்பது அறிவியல் வளர்ச்சிக்கு எவ்வளவு முக்கியம் என்பது குறித்​தும், தங்களுடைய ஆய்வகங்​களில் இப்பன்​மைத்து​வத்தை எட்டு​வதற்காக எடுக்கும் முயற்​சியைப் பற்றியும் பேசும் காணொளிகள் இணையத்தில் கொட்டிக் கிடக்​கின்றன.
  • மத்திய அரசின் அறிவியல் - தொழில்​நுட்ப அமைச்சகம் அறிவித்த 2025ஆம் ஆண்டுக்கான தேசிய அறிவியல் நாள் கருத்​தாக்கமான அறிவியலில் புதுச் சிந்தனைக்கு ‘அறிவியலில் பன்மைத்துவம்’ மிக முக்கியம். இந்திய நாட்டில் இருக்கும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்​களில் இந்தப் பன்மைத்துவம் இருக்​கிறதா என்று கேட்டால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. நாடு விடுதலை பெற்று 78 ஆண்டுகள் ஆகியும் நமது நாட்டின் வெவ்வேறு தரப்பட்ட மக்களின் பிரதி​நி​தித்துவம் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்​களில் எட்டப்​பட​வில்லை என்பது கசப்பான உண்மை.
  • இது ஏதோ பத்து இருபது வருடங்களில் ஏற்பட்ட பிரச்சினை என்று சொல்லிவிட முடியாது. சுதந்திர இந்தியா அறிவியல் தொடர்பான ஆராய்சிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்த காலத்திலிருந்தே, கவனித்து சரிசெய்யப்படாமல் விட்ட குறைபாடு. இது குறித்து 2023ஆம் ஆண்டு ‘நேச்சர்’ இதழில் ‘இந்திய அறிவியலின் பன்மைத்து​வம்​-​சாதித் தடைகள்’ என்கிற தலைப்பில் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியானது. இக்கட்டுரையில் கூறப்​பட்​டுள்ள தரவுகள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் அரசாங்​கத்​திட​மிருந்து பெறப்​பட்​ட​வை (2019-2020).

யாருக்குப் பிரதி​நி​தித்துவம்?

  • ஐஐடி போன்ற அறிவியல் உயர் ஆராய்ச்சி நிறுவனங்​களில், அனைத்துச் சாதியினரின் பிரதி​நி​தித்துவம் எப்படி இருக்​கிறது? முனைவர் படிப்பில் கிட்டத்தட்ட 2 சதவீத​மும், உதவிப் பேராசிரியர்​களில் 0.8 சதவீத​மும், இணைப் பேராசிரியர்​களில் 0.5 சதவீதத்​துக்குக் குறைவாகவும் பழங்குடி​யினர் இருக்​கிறார்கள். பேராசிரியர்​களில் ஒருவர்​கூடப் பழங்குடி​யினர் இல்லை. ஆனால், அனைத்துப் பிரிவு​களிலும் இந்திய அரசின் இடஒதுக்​கீட்டுக் கொள்கை​யின்படி பழங்குடி​யினர் 7.5 சதவீதம் இருக்க வேண்டும்.
  • அதேபோல், இந்த உயர் ஆராய்ச்சி நிறுவனங்​களில் முனைவர் ஆராய்ச்சிப் படிப்பில் 10 சதவீதம் பேர்தான் பட்டியல் சாதியினர். உதவிப் பேராசிரியர்​களில் 2.5 சதவீத​மும், இணைப் பேராசிரியர்​களில் 2 சதவீத​மும், பேராசிரியர்​களில் 0.5 சதவீதத்​துக்குக் கீழேயும் பட்டியல் சாதியினர் இருக்​கிறார்கள். ஆனால், பட்டியல் சாதி மாணவர்கள் மேற்கண்ட அனைத்துப் பிரிவு​களிலும் 15% இருக்க வேண்டும்.
  • அதேபோல், அனைத்துப் பிரிவிலும் இடஒதுக்​கீட்​டின்படி இதர பிற்படுத்​தப்​பட்​ட​வர்கள் 27.5% இருக்க வேண்டும். ஆனால், ஆராய்ச்சிப் படிப்பில் 25 சதவீதம், உதவிப் பேராசிரியர்​களில் 6 சதவீதம், இணைப் பேராசிரியர்​களில் 4 சதவீதம்தான் இதர பிற்படுத்​தப்​பட்​டோரின் பிரதி​நி​தித்துவம் இருக்​கிறது.
  • குறிப்பாக, பேராசிரியர்​களில் 1 சதவீதத்​துக்கும் குறைவு. இதர பிற்படுத்​தப்​பட்டோர் முனைவர் படிப்பில் ஓரளவு இடஒதுக்​கீட்டு சதவீதத்​துக்கு அருகில் வந்தா​லும், இணைப் பேராசிரியர், பேராசிரியர் பணியில் மிக மோசமான பின்னடைவு இருக்​கிறது.
  • ஐஐடி-யில் ஒரு பழங்குடியின, பட்டியல் சாதி அல்லது இதர பிற்படுத்​தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர் முனைவர் பட்டம் முடித்​தா​லும், அதே உயர் கல்வி நிறுவனங்​களில் பேராசிரியர்​களாகப் பணியில் சேர்வதில் சிக்கல் இருக்​கிறது என்பதையே இந்தத் தரவுகள் காட்டு​கின்றன. ஆனால், பொதுப் பிரிவினரைப் பொறுத்​தவரை​யில், முனைவர் பட்டப் படிப்பில் 63 சதவீதம், உதவிப் பேராசிரியர்​களில் 90.7 சதவீதம், இணைப் பேராசிரியர்​களில் 93.5 சதவீதம், பேராசிரியர்​களில் கிட்டத்தட்ட 98.5 சதவீதமும் இருக்​கிறார்கள்.

தொடரும் பின்னடைவு:

  • இந்திய அளவில் புகழ்​பெற்ற டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியர்கள் அனைவரும் 100% பொதுப் பிரிவினர். இந்த நிறுவனத்​துக்கு ‘சிறப்பு ஆராய்ச்சி நிறுவனம்’ என்கிற அந்தஸ்து அரசால் வழங்கப்​பட்டு, இடஒதுக்​கீட்டுக் கொள்கையைப் பின்பற்று​வ​திலிருந்து விலக்கு அளிக்​கப்​பட்​டிருக்​கிறது. பெங்களூரு ஐ.ஐ.எஸ்​.சி-யில் உதவிப் பேராசிரியர்கள் - இணைப் பேராசிரியர் பணிகளில் 90 சதவீதத்​துக்கு மேல் பொதுப் பிரிவினரும், மீதமுள்ள குறைந்த சதவீதத்​தில்தான் மற்ற பிரிவினர் இருக்​கின்​றனர். பேராசிரியர் பணியில் 96%-க்கு மேல் பொதுப் பிரிவினர் இருக்​கின்​றனர்.
  • ஜவாஹர்லால் நேரு பல்கலைக்​கழகத்தில் உதவி / இணை / பேராசிரியர் பணியிடங்​களில் ஓரளவு பிரதி​நி​தித்துவம் இருக்​கிறது. அதேபோல் நாடு முழுக்க இருக்கும் முதல் தர ஐஐடி-க்​களில் 90 சதவீதத்​துக்கும் மேல் பொதுப் பிரிவினர்தான் அனைத்துப் பணிகளிலும் இருக்​கின்​றனர். மத்திய தர ஐ.ஐ.டி-க்​களில் ஓரளவு அனைத்து வகுப்​பினரின் பிரதி​நி​தித்துவம் இருக்​கிறது. அதுவும் அரசாங்​கத்தால் அனுமதிக்​கப்பட்ட இடஒதுக்​கீட்டு அளவில் அல்ல.
  • இந்தியத் தொழில்​நுட்ப அமைச்​சகத்தால் 2016-2020 இடைப்பட்ட ஆண்டு​களில் வழங்கப்பட்ட முதுமுனைவர் இன்ஸ்பயர் ஆராய்ச்சித் தொகையைப் பெற்றவர்​களில் 80% பேருக்கு மேல் பொதுப் பிரிவினர், 12% இதர பிற்படுத்​தப்பட்ட பிரிவினர், 6% பட்டியல் சாதியினர், 0.7% பேர் பழங்குடியின மாணவர்கள். அதேபோல் சிறுபான்மைப் பிரிவினரின் பிரதி​நி​தித்து​வமும் மிக மோசமான நிலையில் இருக்​கிறது. மேலும், நாடு முழுக்க இருக்கும் முக்கியப் பல்கலைக்​கழகங்​களில் கலைப் பாடங்​களைவிட, அடிப்படை அறிவியல் பாடங்​களில் மிகக் குறைவான பட்டியல் சாதி / பழங்குடி மாணவர்கள் படிக்​கிறார்கள் என்று தரவுகள் தெரிவிக்​கின்றன.
  • இந்திய அறிவியல் ஆராய்ச்சியில் பன்மைத்துவம் எந்தளவுக்கு மோசமான நிலையில் இருக்​கிறது என்பதையே இந்தத் தரவுகள் காட்டு​கின்றன. நாடாளு​மன்​றத்​தி​லும், பொதுவெளி​யிலும் இப்பிரச்சினை குறித்து வலுவான குரல்கள் ஒலித்து​வரு​கின்றன. மத்திய அரசு, அனைத்துத் தரப்பு மக்களின் பிரதி​நி​தித்து​வத்தை உறுதிப்​படுத்த, அவ்வப்போது சில சுற்றறிக்கைகளை மட்டும் இந்த அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்​களுக்கு அனுப்பு​கிறது. இது போதாது.
  • உலக அளவில் அறிவியல் - தொழில்​நுட்​பத்தில் தலைமைத்துவத் திறனை இந்தியா அடைய விரும்​பி​னால், முதலில் அறிவியலில் ஒருமைத்து​வத்தை உடைத்துப் பன்மைத்து​வத்தை அடைய வேண்டும். அப்போதுதான் அறிவியல் துறையில் கடைக்கோடி இந்தி​யரின் பங்களிப்பும் இருக்​கும். இயற்கையின் பல்வேறு கேள்வி​களுக்குப் பல்வேறு கோணங்​களில் பதில்​களைத் தேட முடியும்​!

நன்றி: இந்து தமிழ் திசை (27 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories