இந்திய டி20 அணி, மனு பாகர், குகேஷ், அஸ்வின்... - ஆடுகள சாதனைகள்
- 2024-க்கு விடை கொடுக்கும் வேளையில், இந்த ஆண்டில் இந்தியா படைத்த சாதனைகளை கொஞ்சம் ரீவைண்ட் செய்வோம். கிரிக்கெட், ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், தடகளம், சதுரங்கம் உள்ளிட்டவற்றில் இந்தியா சாதனை படைத்துள்ளது.
- 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ரன்களில் த்ரில் வெற்றி பெற்றது. 2007-க்கு பிறகு இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. ரோஹித் சர்மா தலைமையிலான அணியில் கோலி, அக்சர் படேல், துபே, பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இறுதி ஓவரில் டேவிட் மில்லரின் கேட்ச்சை பிடித்து அசத்தி இருந்தார் சூர்யகுமார் யாதவ். அந்த கேட்ச் இந்தியா பட்டம் வெல்ல பிரதான காரணமாக அமைந்தது. சாம்பியன் ஆனதும் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றனர்.
பாரிஸ் ஒலிம்பிக்:
- ஜூலை - ஆகஸ்ட் மாத வாக்கில் பாரிஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்தியா ஆறு பதக்கங்களை வென்றது. ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றார். மற்ற ஐந்து பதக்கங்களும் வெண்கலம். இதில் மனு பாகர் இரண்டு வெண்கலம் வென்றிருந்தார். மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மற்றும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் சரப்ஜோத் சிங் உடன் இணைந்தும் பதக்கம் வென்றிருந்தார்.
- ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷனில் ஸ்வப்னில் வெண்கலம் வென்றார். மல்யுத்தத்தில் அமன் வெண்கலம் வென்றார். இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் ஸ்பெயினை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இருந்தது.
மனு பாகர்:
- நடப்பு ஆண்டில் இந்திய விளையாட்டு ஆர்வலர்கள் மறக்க முடியாத பெயர் என்றால் அது மனு பாகர் தான். 22 வயதான அவருக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் கிடைத்த அனுபவம் மோசமான அனுபவமாக அமைந்தது. ஆனால், பாரிஸில் அதை சாதனையாக மாற்றி அற்புத காம்பேக் கொடுத்திருந்தார் மனு. 48 மணி நேர இடைவெளியில் ஒலிம்பிக்கில் அடுத்தடுத்து இரண்டு பதக்கங்களை அவர் வென்று அசத்தினார்.
- ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்தார். “எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. நான் சிறப்பாக உணர்கிறேன். இது இந்தியாவுக்கு கிடைக்க வேண்டிய பதக்கம். நான் அதை செய்துள்ளேன். இந்தியா மேலும் பல பதக்கங்களை வெல்லும். அதற்கான தகுதி நம்மிடம் உள்ளது. நான் கடினமாக பயிற்சி செய்தேன். கடைசி வரை முழுமையாக போராடினேன். இந்த முறை வெண்கலம். அடுத்த முறை இன்னும் பெட்டராக இருக்கும்” என பதக்கம் வென்றதும் மனு நம்பிக்கையுடன் பேசி இருந்தார்.
ரோஹன் போபண்ணா:
- 43 வயதில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இரட்டையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அசத்தி இருந்தார் ரோஹன் போபண்ணா. மேத்யூ எப்டன் உடன் இணைந்து பட்டம் வென்றிருந்தார். இதன் மூலம் இரட்டையர் பிரிவில் முதலிடம் பிடித்த மூத்த வயது வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்காக 19 பார்ட்னர்கள் மற்றும் 61 முயற்சிகளை அவர் மேற்கொண்டிருந்தார்.
பாராலிம்பிக்கில் 29 பதக்கம் வென்று சாதனை:
- பாரிஸில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் 7 தங்கம், 9 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களை வென்று இந்தியா அசத்தி இருந்தது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த தங்கவேலு மாரியப்பன், துளசிமதி முருகேசன், மணிஷா ராமதாஸ், நித்யஸ்ரீ சிவன் ஆகியோர் பதக்கம் வென்றிருந்தனர். டோக்கியோ பாராலிம்பிக்கை காட்டிலும் (19 பதக்கங்கள்) இந்தியா கூடுதல் பதக்கங்களை இதில் வென்றிருந்தது.
- இதேபோல அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்ஷிப்பில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை பூஜா தோமர் படைத்தார். ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் முதல் முறையாக பதக்கம் வென்று இந்திய மகளிர் அணி சாதனை படைத்தது. மனிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா, அய்ஹிகா முகர்ஜி, சுதீர்த்தா முகர்ஜி மற்றும் தியா ஆகியோர் இடம்பெற்ற அணி வெண்கலம் வென்றிருந்தது.
குகேஷ் - செஸ்:
- உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரேனை வீழ்த்தி, தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். இதன்மூலம் 18 வயதேயான குகேஷ் இள வயது உலக செஸ் சாம்பியன் என்ற சாதனையை படைத்தார். 14 சுற்றுகள் கொண்ட உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் 3, 11 மற்றும் 14-வது சுற்றுகளை குகேஷ் வென்றிருந்தார். முதல் மற்றும் 12-வது சுற்றை டிங் லிரென் வென்றார். மற்ற அனைத்து சுற்றுகளும் டிராவில் முடிந்தது.
அஸ்வின் 500:
- கடந்த பிப்ரவரி மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 500-வது விக்கெட்டை வீழ்த்தி இருந்தார் அஸ்வின். அண்மையில் ஓய்வு பெற்ற அவர் ராஜ்கோட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஜாக் க்ராவ்லி விக்கெட்டை வீழ்த்தி இந்த சாதனையை எட்டி இருந்தார். அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெற்றார். 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 சதம் மற்றும் 537 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி உள்ளார்.
நன்றி: இந்து தமிழ் திசை (29 – 12 – 2024)