- மக்களாட்சி முறைக்கு சுதந்திரமான, நியாயமான தேர்தல்களே அடித்தளம். இந்த விஷயத்தில் இந்தியத் தேர்தல்கள் உலகிற்கே முன்னுதாரணமாக விளங்குகின்றன. இதற்காக, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கருக்கு நாடு நன்றிக்கடன்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணையம் மீது சந்தேகத்தைக் கிளப்பி, தேர்தல்களின் மதிப்பைக் குலைக்க யார் முயன்றாலும் அதை நாம் அனுமதிக்கக் கூடாது.
- உலகின் மாபெரும் ஜனநாயகத் திருவிழா தற்போது நிறைவடைந்துவிட்டது; தேர்தல் முடிவுகளும் வெளியாகிவிட்டன. சுமார் 141.72 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில், சுமார் 97 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் சுமார் 66% பேர் வாக்களித்தனர். உலகில் மிக அதிகப்படியான வாக்காளர்கள் பங்கேற்ற, மிகப் பெரும் தேர்தல் இதுதான் என்று கூறினால் மிகையல்ல. நமது தேர்தல் ஆணையம் சந்தேகத்துக்கிடமில்லாமல், அளப்பரிய சாதனையை செய்திருக்கிறது என்று தாராளமாகப் புகழலாம்.
- கடைசி கட்டத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்த சில வன்முறைச் சம்பவங்கள் தவிர, தேசிய அளவில் 18-ஆவது மக்களவைத் தேர்தல் மிகவும் அமைதியாகவே நடைபெற்றிருக்கிறது. தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும் தேர்தல் முடிவுகள் குறித்து யாருக்கும் அதிருப்தி இருப்பதில்லை. ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கும் வேட்பாளர்கூட தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகம் கொள்வதில்லை. இதனை நான் அனுபவபூர்வமாகவே கண்டிருக்கிறேன்.
- நான் ஐந்து முறை எம்எல்ஏவாக இருந்தவன். 1980 சட்டப் பேரவைத் தேர்தலில் எம்.ஜி.ராமசந்திரன் என்னை அண்ணாநகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக நிறுத்தினார். அத்தேர்தலில் திமுக தலைவர் மு.கருணாநிதியிடம் வெறும் 699 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றேன்.
- தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமற்ற தன்மை குறித்து நாடு முழுவதிலும் உறுதியான நம்பிக்கை இருக்கிறது. இதற்கு தேர்தல் ஆணையம் மிகுந்த தன்னாட்சி கொண்டதாக இருப்பதும், நடுநிலையாகச் செயல்படுவதுமே காரணம். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டால், உலகிற்கே முன்னுதாரணமாக இந்திய தேர்தல் முறை விளங்குகிறது.
- எனவேதான், இந்திய தேர்தல் நடைமுறைகளை விமர்சிக்கும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களின் அபத்தத்தைக் கண்டிக்க வேண்டியிருக்கிறது.
- உண்மையில் நமது தேர்தல் நடைமுறைகள் குறித்தும், ஜனநாயகம் குறித்தும் நாம் பெருமைப்பட வேண்டும். இன்றைய உலகில் இதுவே மிகச் சிறப்பானது. இது பற்றி உலக நாடுகளின் பாராட்டுச் சான்றிதழ் தேவையில்லை.
- இந்திய தேர்தல் ஆணையம் மீதான நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு என்ன காரணம் என்று அறிய வேண்டுமானால், நமது முந்தைய தேர்தல் அனுபவங்களை ஆராய வேண்டும். கூடவே, அமெரிக்காவிலுள்ள தேர்தல் நடைமுறைகளுடன் இந்திய தேர்தல் நடைமுறைகளையும் ஒப்பிட்டால், நமது சிறப்பு தெளிவாகப் புலப்படும்.
- இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகமும் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முறையும் இருப்பதை அனைவரும் அறிவோம். இரு நாடுகளின் தேர்தல் நடைமுறைகளிலுள்ள அடிப்படை வேறுபாட்டை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
- அமெரிக்கா என்பது 50 மாகாணங்களின் கூட்டாட்சி ஒன்றியமாகும். அங்கு அதிபர் தேர்தலை முன்னின்று நடத்துவது மத்திய (ஃபெடரல்) தேர்தல் ஆணையமாகும். அதேசமயம், அங்கு தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்கள் மாகாண அளவில் பரவலாக்கப்பட்டுள்ளன. அங்கு உள்ளூர் தேர்தலோ, அதிபர் தேர்தலோ எதுவாயினும், ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள தேர்தல் ஆணையத்திற்கு மாகாண அளவில் தேர்தலை நடத்துவதற்கு அதிகாரமுள்ளது.
- ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்தல் நடைமுறைகளை மாகாண அளவிலான தேர்தல் ஆணையமே தீர்மானிக்கும். அவற்றை ஒருங்கிணைப்பது மட்டுமே மத்திய தேர்தல் ஆணையத்தின் பணியாகும். அதிபர் தேர்தலைப் பொறுத்தவரை அதன் நிர்வாக மையமாக கூட்டரசு தேர்தல் ஆணையம் விளங்கினாலும், அதனுடன் மாறுபட்ட தேர்தல் விதிமுறைகளைக் கொண்ட மாகாண தேர்தல் ஆணையங்கள் செயல்படுகின்றன. வாக்காளர் பதிவு, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட தேர்தல் நடத்தை விதிமுறைகளை ஒவ்வொரு மாகாண பேரவைகளும் உருவாக்கிக் கொள்ளலாம். தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் கூட ஒவ்வொரு மாகாணமும் பல்வேறு இறுதி நாட்களைக் கொண்டிருக்கின்றன. இதனால் ஒவ்வொரு தேர்தலின்போதும் பெரும் குழப்பம் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.
- கடந்த 2020 அதிபர் தேர்தலின்போது 5 மாகாணங்களில் தேர்தல் முடிந்து ஒரு வாரத்திற்குள் முடிவு அறிவிக்கப்பட்டது. 28 மாகாணங்களில் தேர்தல் முடிவுகள் நவம்பர் 10 முதல் நவம்பர் 30-க்குள் அறிவிக்கப்பட்டன. 14 மாகாணங்களிலும் கொலம்பியா மாவட்டத்திலும் டிசம்பரில்தான் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஹவாய், ரோட் ஐலண்ட், டென்னஸ்ஸி ஆகிய மூன்று மாகாணங்களில் தேர்தல் முடிவை அறிவிப்பதற்கான கெடு தேதியே நிர்ணயிக்கப்படவில்லை.
- இந்தியாவிலும் இதேபோன்ற தேர்தல் முறை அமைந்திருக்கக் கூடும். ஆனால், அம்பேத்கர் என்ற தீர்க்கதரிசியின் அபார அறிவாற்றல் காரணமாக, நமக்கு மையப்படுத்தப்பட்ட தேர்தல் ஆணையம் கிடைத்தது. இதுதொடர்பான சட்டப்பிரிவை வடிவமைக்க இந்திய அரசியல் நிர்ணய சபையில் 1949 நவம்பர் 25-இல் நடந்த சில விவாதங்களை இங்கு நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.
- இந்திய அரசியல் சாசனத்தை வடிவமைப்பதற்காக அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை 1946 டிசம்பர் 9-இல் கூடியபோது அதில் அம்பேத்கர் சாதாரண உறுப்பினராக மட்டுமே இருந்தார். 1947 ஜனவரி முதல் 1947 ஜூலை வரை நடைபெற்ற சட்ட வரைவாக்கங்களில் அவர் நேரடியாக தொடர்பு கொண்டிருக்கவில்லை.
- ஆயினும், சுதந்திரம் பெறுவதற்கு சில வாரங்கள் முன்னர், 1947 ஜூலை இறுதியில் ஒரு முக்கியமான நிகழ்வு நடந்தது. உலகப்புகழ் பெற்ற அரசியல் சாசன மேதையான, பிரிட்டிஷ் அறிஞர் ஐவர் ஜென்னிங்ûஸ அரசியல் நிர்ணய சபையில் சேர்க்க மகாத்மா காந்தியின் ஒப்புதலைப் பெறுவதற்காக ஜவாஹர்லால் நேரு சென்றிருந்தார்.
- ""அந்நியரிடமிருந்து சுதந்திரம் பெறப் போகும் நாம், நமக்கான அரசியல் சாசனத்தை இயற்ற அந்நியரின் உதவியை நாடலாமா?'' என்று நேருவிடம் கேட்ட மகாத்மா காந்தி, இந்திய அரசியல் சாசன வரைவை வடிவமைப்பதில் சட்ட வல்லுநர் அம்பேத்கரின் உதவியைப் பெறுமாறு அறிவுறுத்தினார்.
- ஆரம்பத்தில் அம்பேத்கரை வரைவுக்குழுவில் சேர்க்க நேரு தயங்கினாலும், இறுதியில் மகாத்மா காந்தியின் அறிவுரையை ஏற்றார். அம்பேத்கர் நாட்டின் முதல் சட்ட அமைச்சராக 1947 ஆகஸ்ட் 15-இல் பொறுப்பேற்றார்; பிறகு அரசியல் சாசன வரைவுக் குழுவின் தலைவராக 1947 ஆகஸ்ட் 30-இல் நியமிக்கப்பட்டார்.
- அம்பேத்கர் தலைவராகப் பொறுப்பேற்றதும், அதுவரை உருவாக்கப்பட்ட வரைவுகள் அனைத்தையும் மீளாய்வு செய்து மறுவடிவமைத்தார். அவற்றில் முக்கியமானது, இந்தியாவில் பல்வேறு தேர்தல்களை சுதந்திரமாக நடத்துவதற்கான தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களை வரையறை செய்யும் சட்டப்பிரிவு ஆகும். அந்த வரைவு ஆரம்பத்தில் "வரைவு சட்டப் பிரிவு 289' என்று குறிக்கப்பட்டது. அதில், மத்திய, மாநில அளவில் வெவ்வேறு வகையான தேர்தல் ஆணையங்கள் இயங்கும் வகையில் விதிகள் வகுக்கப்பட்டிருந்தன. அவற்றை அம்பேத்கர் நிராகரித்தார்.
- நீண்ட விவாதங்களுக்குப் பிறகு பல திருத்தங்களுடன் அந்த வரைவு இந்திய அரசியல் சாசனத்தின் 324-ஆவது சட்டப் பிரிவாக வடிவமைக்கப்பட்டது. அந்தச் சட்டத்தின் அடிப்படையில்தான் சுதந்திர இந்தியாவில் இதுவரையிலான அனைத்து தேர்தல்களும் நடத்தப்பட்டுள்ளன.
- அரசியல் நிர்ணய சபையில் இதுதொடர்பான விவாதத்தின்போது, அம்பேத்கர் பேசியதாவது (ஆதாரம்: அரசியல் நிர்ணய சபை விவாதங்கள்- தொகுப்பு 8; பக். 903-905):
- "அவையோரே, இதிலுள்ள 289-ஆவது மூல வரைவின்படி (சட்டப் பிரிவு 324), மத்திய நாடாளுமன்ற இரு அவைகளுக்கு (மக்களவை, மாநிலங்களவை) தேர்தல் நடத்த மத்திய தேர்தல் ஆணையத்தையும், மாகாணங்களுக்கு (சட்டப் பேரவைகள்) தேர்தல் நடத்த ஆளுநர்கள் அல்லது முதல்வர்களால் அமைக்கப்படும் மாகாண தேர்தல் ஆணையங்களையும் உருவாக்க வேண்டும். அதனுடன் ஒப்பிடுகையில் இப்போதைய திருத்தப்பட்ட சட்ட வரைவு தீவிரமான மாற்றத்தைக் கொண்டிருக்கிறது.
- இதன்படி, நமது தேர்தல் நிர்வாக அமைப்பானது, மத்தியில் இயங்கும் ஒற்றை ஆணையமாகவும், அதற்கு உதவக் கூடிய பிராந்திய ஆணையர்களைக் கொண்டதாகவும் இருக்கும்.
- அவர்கள் மாகாண அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்க மாட்டார்கள். மாறாக அவர்கள் மத்திய தேர்தல் ஆணையத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் செயல்படுவார்கள். இதுவே அந்த தீவிரமான மாற்றம் ஆகும்.'
- தேர்தல் ஆணையத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் அவர் கூறியதாவது:
- "உச்சநீதிமன்ற நீதிபதியை எவ்வாறு எளிதாக நீக்க முடியாதோ, அதேபோல, மத்திய தேர்தல் தலைமை ஆணையரையும் நீக்க முடியாது.
- தேர்தலை நடத்தும் அமைப்பானது தேர்தல் காலத்தில் ஆட்சியில் இருக்கும் அரசு நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது என்று இந்த அவை கருதுமானால், அந்த அமைப்பானது அதிகாரவர்க்கத்தால் நீக்க இயலாததாக இருக்க வேண்டும். எனவே உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு அளிக்கப்படும் அதே தர நிலையை தலைமை தேர்தல் ஆணையருக்கு அளிக்கிறோம்' என்றார்.
- ஆயினும், இந்தியாவில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
- அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையே, வலுவான ஜனநாயகத்தை நமக்கு அளித்திருக்கிறது. தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என இயல்பாக ஏற்கும் மனோபாவத்தை அரசியல்வாதிகளுக்கு அளித்திருப்பதும், தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமான செயல்பாடுகள்தான்.
- இந்திய தேர்தல் ஆணையமானது, சுதந்திரமான அரசியல் சாசன அமைப்பாகும். இதுவே ஜனநாயகத்தை பாறை போல உறுதியாகக் காக்கிறது. எனவே தேர்தல் ஆணையத்தின் நேர்மை மீது போகிற போக்கில் தூற்றப்படும் வசைகளும் புகார்களும் நமது தேர்தல் ஜனநாயகம் மீதான தாக்குதல்களாகவே அமையும்.
- தேர்தல் ஆணையம் மீதான மக்களின் நம்பிக்கையைக் குலைப்பதென்பது தேர்தல் நடைமுறைகளைச் சீர்குலைப்பதாகும். இதுபோன்ற ஆதாரமற்ற புலம்பல்களை அனைவரும் கண்டிக்க வேண்டும். நமது அரசியல் சாசன அமைப்புகள் மீது திட்டமிட்ட ரீதியில் நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்.
நன்றி: தினமணி (05 – 06 – 2024)