- நாட்டு மக்கள் புலம்பெயர்தலுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையில் ஒரு உறுதியான இணைப்பு கருவியாக செயல்படுவது ‘ரெமிட்டன்ஸ்' என்று அழைக்கப்படும் புலம் பெயர்ந்தவர்கள் தாயகத்துக்கு அனுப்பும் சேமிப்பு பணமாகும்.
- ரெமிட்டன்ஸ் என்பது வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காக தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ சென்ற பொதுமக்கள் சம்பாதித்து தங்களின் சொந்த நாட்டில் உள்ள குடும்பத்தினருக்கு அனுப்பும் பணம் என்று சர்வதேச நாணய நிதியம் வரையறை செய்துள்ளது.
- ஒரு நாட்டுக்கு தேவைப்படும் அந்நியச் செலவாணியை பெற்றுத்தருவதில் புலம் பெயர்ந்தவர்கள் அனுப்பும் சேமிப்பு பணம்முக்கிய இடம் வகிக்கிறது. பல்வேறு வளரும் நாடுகளின் அயல் நாட்டு வாணிப செலுத்துநிலையில் ஏற்படும் பற்றாக்குறையை சமாளிப்பதில் இது முக்கிய பங்காற்றுகிறது.
- 2015-ம் ஆண்டு முதல் குறைந்தமற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களால் அனுப்பப்படும் சேமிப்பு பணம் அந்தநாடுகள் பெறும் அந்நிய நேரடி முதலீட்டை விட அதிகமாக உள்ளது.
- மேலும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கி போன்ற பன்னாட்டு அமைப்புகள் மூலம் பெறப்படும் அதிகாரப்பூர்வ வளர்ச்சி உதவியைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக புலம்பெயர்ந்தவர்களின் சேமிப்பு பணம் இந்த நாடுகளுக்கு கிடைத்து வருகிறது. குறைந்த வருமானம் உள்ள நாடுகளின் ஜிடிபி-யில் புலம்பெயர்ந்தவர்கள் அனுப்பும் பணத்தின் பங்கு 3சதவீதமாகவும், நடுத்தர வருமானம் உள்ள நாடுகளின் ஜிடிபி-யில் இதன் பங்கு 1.6 சதவீதமாகவும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
- 2008-ம் ஆண்டிலிருந்து உலக அளவில் புலம் பெயர்ந்தவர்களால் அனுப்பப்படும் சேமிப்பு பணத்தை பெறும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 2022-ம்ஆண்டில் மெக்சிகோ 60 பில்லியன் டாலரையும் சீனா 51 பில்லியன் டாலரையும் பிலிப்பைன்ஸ் 38 பில்லியன் டாலரையும் எகிப்து 32 பில்லியன் டாலரையும் பெற்றுள்ள நிலையில் 100 பில்லியன் டாலர் சேமிப்பு பணத்தை இந்தியா பெற்றுள்ளது.
- 1970-களில் இருந்து இந்த சேமிப்பு பணத்தை பெறும் முதல் 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதிலிருந்து இந்தியப் பொருளாதாரத்தில் புலம்பெயர்ந்தவர்களின் முக்கியத்துவத்தை அறிய முடிகிறது.
- 2016-17-ம் ஆண்டிலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் சேமிப்பு பணத்தை பெறுவதில் கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்கள் முன்னிலை வகித்து வந்தன. ஆனால் 2020-21-ம் ஆண்டிலிருந்து இந்த நிலைமை மாறி மகாராஷ்டிரா முன்னிலை வகிக்கிறது. புலம்பெயர்ந்தவர்கள் அனுப்பிய பணத்தில் 35 சதவீதத்தை மகாராஷ்டிரா பெற்றுள்ளது என்று ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.
- புலம்பெயர்ந்தவர்கள் அனுப்பும் சேமிப்பு பணம் இந்தியப் பொருளாதாரத்தின் பேரியல்மற்றும் நுண்ணினப் பொருளாதார காரணிகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நமது நாட்டின் அயல்நாட்டு வாணிப செலுத்து நிலையில்அதிகரித்து வரும் நடப்புக் கணக்கு பற்றாக்குறையினால் ஏற்படும் பாதக விளைவுகளை குறைப்பதில் புலம்பெயர்ந்தவர்கள் அனுப்பும் பணம் பெரும் பங்கு வகிக்கிறது.
- அமெரிக்க டாலர் மற்றும் இதர கரன்சிகளுக்கு நிகரான ரூபாயின் மதிப்பு நிலை பெறுவதற்கு அந்நிய செலவாணி அதிக அளவில் தேவைப்படுகிறது.புலம்பெயர்ந்தவர்கள் அனுப்பும் சேமிப்பு பணம் அந்நியச் செலவாணி பற்றாக்குறையை சமாளிக்க உதவுகிறது. இயற்கைச் சீற்றங்களின்போதும் பொருளாதார நெருக்கடிகளின்போதும் இந்த சேமிப்பு பணம் இந்திய அரசுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை
- புலம்பெயர்ந்தவர்கள் அனுப்பும் பணத்தைப் பெறுகின்ற அவர்களது குடும்பங்களின் வருமானம் உயர்ந்து வாங்கும் சக்தி அதிகரிக்கிறது. இதன் மூலம் குடும்பங்களின் நுகர்வு அதிகரித்து நாட்டின் ஜிடிபி வளர்ச்சிக்கு நேரடியாகவே உதவுகிறது. அவர்களின் குழந்தைகளின் கல்விக்காக அதிகம் செலவிட முடிகிறது. அவர்களின் வாழ்க்கைத் தரமும் உயர்கிறது. குடும்பங்களின் சேமிப்பு உயர்ந்து நாட்டின் முதலீட்டில் வளர்ச்சி ஏற்படுகிறது.
- சமீப காலங்களில் புலம்பெயர்தலில் அடிப்படை மாற்றம் ஏற்பட்டு வழக்கமாக செல்கின்ற வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளுக்கு பதிலாக மேம்பட்ட திறனுடன் அதிக வருமானம் கிடைக்கின்ற அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு அதிக அளவில் இந்தியர்கள் புலம்பெயர்ந்து வருகின்றனர்.
- ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி 2016-17-ம்ஆண்டில் இந்தியா பெற்ற புலம்பெயர்ந்தவர்களின் சேமிப்பு பணத்தில் 53.5 சதவீதம் வளைகுடா நாடுகளில் இருந்து வந்துள்ளது. அமெரிக்காவிலிருந்து 26.9 சதவீதமும், இங்கிலாந்தில் இருந்து 3 சதவீதமும் மற்றும் கனடாவில் இருந்து 1 சதவீதமும் வந்துள்ளது .
- 2020 ஆண்டில் ஏற்பட்ட கரோனா பெருந்தொற்றின் காரணமாக உலக அளவில் ஏற்பட்ட பொருளாதாரத் தேக்கம் பெட்ரோலிய விலையில் வீழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளில் பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்து வேலை வாய்ப்புபாதிக்கப்பட்டது.
- இதன் விளைவாக அந்நாடுகளில் பணியாற்றி வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பிய பணத்தின் அளவுபாதியாக குறைந்து 28.6 சதவீதமானது. அதேநேரம் அமெரிக்காவின் பங்களிப்பு 23.4 சதவீதமாகவும் இங்கிலாந்தின் பங்களிப்பு 6.8 சதவீதமாகவும் உயர்ந்தது.
- மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும்சிங்கப்பூர் போன்ற வளர்ந்த நாடுகளிலிருந்து வரும் சேமிப்பு பணத்தின் அளவு 36 சதவீதத்தை எட்டி விட்டதாக ரிசர்வ் வங்கியின் குறிப்பு தெரிவிக்கிறது.
- கரோனா பரவலினால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு இந்தியர்கள் அனுப்பும் சேமிப்பு பணத்தை மிகவும் பாதிக்கும் என்றஎதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில் 100 பில்லியன் டாலரை இந்தியா பெற்றுள்ளது. 2020-ம் ஆண்டில் 0.2 சதவீதம் மட்டுமே சேமிப்புபண வரத்தில் குறைவு ஏற்பட்டது. 2021-ம்ஆண்டில் 7.5 சதவீதம் உயர்ந்து 89.4 பில்லியன் டாலர் கிடைத்தது. 2022-ம் ஆண்டில் 12 சதவீதம் அதிகரித்து 100 பில்லியன் டாலராக (ரூ.8.17 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் ஜிடிபி யில் 2.9% ஆகும்.
- பருவநிலை மாற்றங்கள் மற்றும் புவி வெப்பமயமாதல் குறித்து வளர்ந்த நாடுகள் தங்களின் சுயநலத்திற்காக வளைகுடா நாடுகளின் பெட்ரோலிய உற்பத்தியையும் பயன்பாட்டையும் குறைக்கும்படி நெருக்கடி செய்து வருகின்றன. இதனால் அந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வேகம் பாதிக்கப்படலாம். மேலும் வளைகுடா நாடுகளில் பணியாற்றி வரும் புலம்பெயர்ந்த இந்தியர்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம்.
- புலம்பெயர் இந்தியர்கள் அனுப்பும் சேமிப்பு பணம் நாட்டின் வறுமையை குறைப்பதிலும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுவதால் இந்த பணத்தினை அதிக அளவில் பெறுவதற்கு ஏற்ற கொள்கைகளை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் அந்த பணம் சரியான முறையில் பயன்படுத்தப்படுவதற்கு உண்டான வழிவகைகளையும் அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்.
- இந்தியர்கள் அதிக அளவில் புலம்பெயர்ந்துள்ள நாடுகளின் ஜிடிபி,கச்சா எண்ணெய் விலை மற்றும் நாணய மாற்று விகிதம் போன்றகாரணிகள் இந்தியாவுக்கு வரும் சேமிப்புபண அளவை தீர்மானிப்பதில் முக்கிய பங்குவைக்கின்றன. குறிப்பாக வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்கள் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
- ஆகவே,புலம்பெயர் தொழிலாளர்களின் வருமானத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் உள்நாட்டில் முதலீட்டு வாய்ப்பு வசதிகளை உருவாக்கித்தர வேண்டும். சமீப காலமாக வளைகுடா நாடுகளில் அதிகரித்து வரும் வெளிநாட்டினருக்கு எதிரான மனப்போக்கு மற்றும் அந்நாட்டு அரசுகள் பின்பற்றத் தொடங்கியிருக்கும் அரேபிய தேசியமயக் கொள்கைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அந்நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நல்லுறவை ஏற்படுத்த இந்திய அரசு முயற்சிக்க வேண்டும்.
- அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்றவளர்ந்த நாடுகளுக்கு திறன் மேம்பட்ட தொழிலாளர்கள் அதிக அளவில் செல்வது வரவேற்கத்தக்க மாற்றம் என்றாலும் கரோனாதொற்று பரவலினால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு மற்றும் சீரற்ற பொருளாதார மீட்சியினாலும் வளைகுடா நாடுகளில் பணியாற்றி வருவோரின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் காரணிகளை இந்திய அரசு பொருட்படுத்தாமல் இருந்தால் அது கவலை அளிக்கும் விஷயமாக எதிர்காலத்தில் மாறும் என்பதில் ஐயமில்லை.
நன்றி: தி இந்து (01 – 05 – 2023)