- கரோனா பெருந்தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு எழுவதற்குள், உக்ரைன் – ரஷ்யா போரினால் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் கடந்த 2 ஆண்டுகளாக ஸ்தம்பித்துள்ளது. அமெரிக்காவிலும் பொருளாதார பின்னடைவு ஏற்படும் என கூறப்பட்டது. ஆனால், பெடரல் ரிசர்வ் வட்டி வீதத்தை அடிக்கடி மாற்றி அமைத்ததால் அதுபோன்று எதுவும் நடக்கவில்லை. ஆனால், மேற்கண்ட இரண்டு நிகழ்வுகளும்இந்தியா, சீனாவில் பிரதிபலிக்கவில்லை. 2023 நவம்பரில் இந்திய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மதிப்பு முதல் முறையாக 4 லட்சம் கோடி டாலரை(ரூ.332 லட்சம் கோடி) தொட்டு சாதனை படைத்தது. இது, 2007-ல் ஒரு லட்சம் கோடி டாலரையும், 2021-ல் மூன்று லட்சம் கோடி டாலரையும் எட்டியது.
- இப்படி கடந்த 4ஆண்டுகளில் இந்திய பங்குச்சந்தைகள் அபரிமிதமாக வளர்ச்சி கண்டுள்ளன. கரோனா பெருந்தொற்று காலத்திலும், அதற்கு பிறகும், அமெரிக்க டாலரில் நடந்து வந்த வர்த்தக நடைமுறைகளை மாற்றினோம். இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்வதற்கான அடித்தளத்தை வலுவாக அமைத்திருக்கிறோம். தற்போது கச்சா எண்ணெய் வர்த்தகம் இந்தியரூபாயில் நடந்திருப்பது, யாரும் யோசித்துப்பார்க்க முடியாத ஓர் அதிசயம். மேலும், கருப்பு பணப்புழக்கத்தை ஒழிக்க 2000 ரூபாய் நோட்டுகள் முழுமையாக வாபஸ் பெறப்பட்டன. சந்திரயான் -3 விண்கலத்தை நிலவில் தரையிறக்கும் திட்டம் மிகக்குறைந்த செலவில் வெற்றி பெற்றது.
- கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, அமெரிக்காவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் ஏற்பட்டது. இந்தியாவிலும் பணவீக்கம் பெரும் சவாலை ஏற்படுத்தியது. ஆனால் பின்னர் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த பொருளாதார சூழலில்தான் 2024 -ம் ஆண்டு பிறந்திருக்கிறது.
- கடந்த காலங்களின் செயல்பாடுகளை வைத்து இந்த ஆண்டு இந்திய பொருளாதாரம் எப்படி இருக்கப்போகிறது என்று பார்ப்போம்: 2023-24-ம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7சதவீதமாக இருக்கும் என்று மத்திய ரிசர்வ் வங்கி டிசம்பர் மாதம் கணிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் 6.7 சதவீதத்துடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பிரகாசமாக தொடங்கும் என்றும் கணித்திருக்கிறது. 2023 -24ல் பணவீக்கம்5.4 சதவீத மாக இருக்கும். 2024-25-ல் 5.2 சதவீதமாக பணவீக்கம் குறையும்என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
தேர்தலுக்கு பிறகு முதலீடு அதிகரிக்கும்
- மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் உட்கட்டமைப்பு திட்டங்கள், சேவை நிறுவனங்களில் முதலீடுகள் அதிகரிக்கும். மின்சார வாகனங்கள், சோலார் பேனல் தயாரிப்பு, கனரக தொழில்களில் கார்பன் வெளியீட்டை குறைக்கும் திட்டங்களில் உள்நாட்டு முதலீடு அதிகரிக்கும்.
- இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில், மொத்த வெளிநாட்டு கடன் 18% ஆக உள்ளது. தென்கொரியா, தாய்லாந்து, தென்னாப்ரிக்கா நாடுகளில் இது 40 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கிறது. கடந்த 10 ஆண்டுக்கு முன்பு, உலகின் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் நாம் 11-வது இடத்தில் இருந்தோம்.
- இப்போது 5-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறோம். அடுத்த 5ஆண்டுகளில்5டிரில்லியன் டாலர் அளவுக்கு இந்திய பொருளாதாரம் அதிகரித்து, உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறும் என்பதே உலக பொருளாதார அமைப்புக்களின் கணிப்பு.
சாப்ட்வேர், ஜவுளி துறை பின்னடைவு
- மேலும், 2023-ம் ஆண்டில், இந்தியாவில், உற்பத்தி துறை சிறப்பாக இருந்தாலும், ஜவுளி, பின்னலாடை, சேவை, சாப்ட்வேர் துறைகள் பெரிய அளவில் வளர்ச்சி காணவில்லை. திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையில், வழக்கத்தைவிட 40%அளவிலேயே உற்பத்தி இருந்தது.
- குறு, சிறு நடுத்தர தொழில் துறைகளுக்கு போதுமான பணப்புழக்கம் கிடைக்கவில்லை. இதனால், தொழிலை விரிவுபடுத்த முடியாமல், பல நிறுவனங்கள் ஸ்தம்பித்துள்ளன. இந்த துறைகளுக்கு 2024-ம் ஆண்டும் கொஞ்சம் சவாலாகவே இருக்கும்.
- ஐரோப்பிய நாடுகளை போலவே ஜப்பானிலும் மந்தநிலை நிலவுகிறது. அமெரிக்கா 2023-ம் ஆண்டில் மந்த நிலையில் இருந்து கொஞ்சம் தப்பியது. ஆனால், அமெரிக்காவின் பொருளாதார நிலவரம்பொதுவாக இந்திய சந்தைகளையும் பாதிக்கும். காரணம், அங்கு, பெடரல் வட்டி வீதம்மாறும்போது, அது நமது பங்குச்சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
- அமெரிக்காவில் வட்டி வீதம்குறையும்போது அங்கிருக்கும் முதலீடுகளை இந்திய பங்குச்சந்தைகளுக்கு மாற்றுகிறார்கள். அங்கே நிலவரம் சரியாகும்போது, இங்கு முதலீடு செய்ததை அமெரிக்க சந்தைகளுக்கு கொண்டு போகிறார்கள். ஆனாலும் இவையெல்லாம் நம்மை பெரிய அளவில் பாதிப்பதில்லை.
- காரணம், நம்நாட்டில், உள்நாட்டு முதலீடு அதிக அளவு வளர்ந்திருக்கிறது. இதுவே நமது பங்குச்சந்தைகளை ஸ்திரமாக வைத்திருக்கிறது. உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடு இந்தியாதான். நமது மக்கள் சக்தியும், இளைஞர்கள் சக்தியும், அயராத உழைப்பும் நமது நிறுவனங்களை திறம்பட வழிநடத்துகிறது.
நல்ல நிலையில் இந்திய வங்கிகள்
- நமது நாட்டில் வங்கிகள் சிறப்பான இடத்தை பிடித்துள்ளன. வங்கி பங்குகள் நன்றாக உள்ளன. வங்கிகளின் வளர்ச்சியே, நாட்டின் வளர்ச்சிக்கு சாட்சி. புதிய அவதாரம் எடுத்திருக்கும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்துக்கு பல துறைகளும் மாற்றம் கண்டு வருகின்றன.
- இதனால், வேலை வாய்ப்பு பறிபோகும் என்று பயம் இருந்தால்கூட, பணிகள் குறைந்து,உற்பத்தி அதிகரித்து லாபமும் அதிகரிக்கும். புவிசார்ந்த அரசியல் நெருக்கடிகளை தாண்டி, நாட்டில் பல பொருளாதார சீர்திருத்தங்களை மத்திய அரசு தைரியமாக அமல்படுத்தி இருக்கிறது. 2024 -ம் ஆண்டு மத்தியில், உலக அளவிலும், இந்திய அளவிலும் சிறிய பொருளாதார சுணக்கம் இருக்க வாய்ப்புள்ளது.
- அதன்பின் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி கணிசமாக உயர அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன. மத்தியில் அடுத்து எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், 2030-ம் ஆண்டில், உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ச்சி பெறும். அந்த நம்பிக்கையுடன் புதிய ஆண்டை வரவேற்போம்.
நன்றி: இந்து தமிழ் திசை (01 – 01 – 2024)