- இந்தியாவின் வளங்களை எடுத்துரைக்காத கவிஞர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு பல மொழிகளின் இலக்கியங்களிலும் இந்தியாவின் வளங்கள் பாடப்பட்டுள்ளன. இந்தியாவின் மொத்த சாகுபடி செய்யப்படும் பரப்பளவு 141 மில்லியன் ஹெக்டர். அதில் வெவ்வேறு காலநிலைகள் நீக்கமற நிறைந்து இருப்பதுடன் கிட்டத்தட்ட 73 மில்லியன் ஹெக்டர் நீர்ப்பாசன வசதியை உள்ளடக்கியுள்ளது. இதனால்தான் ‘சோலை நடுவில் சொக்குப் பச்சைப் பட்டுடை படர்ந்து கிடந்தது போல்’ வேளாண் நிலங்கள் காட்சியளிக்கின்றன.
- அத்தகைய சோலையின் வசந்த வாசலில் தஞ்சம் அடைய வேண்டுமானால் வேளாண் சுற்றுலா மட்டுமே ஆகச்சிறந்த வழியாகும். ஆம், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் வேளாண் சுற்றுலாவின் வருமானம் 20% அதிகரித்து வருவதாக வணிக பொருளாதார ஆய்விதழ் கூறுகிறது. அப்படி அந்த வருமானத்தை சாத்தியப்படுத்திய மகாராஷ்டிரா மாநிலத்தின் வேளாண் சுற்றுலா வரலாற்றை பற்றி கூறாமல் இந்தியாவின் வேளாண் சுற்றுலாவை எழுத முடியாது.
- மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் வேளாண்மைச் சுற்றுலா வளர்ச்சிக் கழகம்தான் முதன் முதலில் இந்தியாவில் வேளாண் சுற்றுலாவுக்கு விதை போட்டது. வேளாண்மைச் சுற்றுலா வளர்ச்சிக் கழகமானது 2004-ம் ஆண்டு பாண்டுரங் தவாரேவால் ஆரம்பிக்கப்பட்டது. 500 விவசாயிகளுக்கு பயிற்சியும், 152 வேளாண் பண்ணைகளும் தேர்வு செய்யப்பட்டன. அதன் பிறகு தேர்வு செய்யப்பட்ட பண்ணைகளில் நாளடைவில் வேளாண் சுற்றுலா செய்து வரும் விவசாயிகளின் வருமானம் 25% கூடுதலாக உயர்ந்தது.
- தொடர்ந்து வேளாண்மைச் சுற்றுலா வளர்ச்சிக் கழகமானது விவசாயிகளுக்கு வேளாண் சுற்றுலா சார்ந்த பயிற்சி அளிப்பது, அங்குள்ள இளைஞர்களை சுற்றுலா வழிகாட்டியாய் நியமிப்பது, சுற்றுலா வாசிகளுக்கு உணவு தயார் செய்ய மகளிர் சுயஉதவிக் குழுக்களை பணியமர்த்துவது, பள்ளிக் குழந்தைகளை அழைத்து வந்து வேளாண் பண்ணைகளை பார்வையிடச் செய்வது, இவற்றுடன் மாநில அரசாங்கத்துடன் தொடர்பு ஏற்படுத்தி புனே மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் வசதி ஏற்படுத்தித் தருவது எனப் பல பணிகளை செய்து வருகிறது.
- அதன் விளைவாக தற்போது மகாராஷ்டிராவில் மொத்தம் 328 பண்ணைகள் வேளாண் சுற்றுலாவை செயல்படுத்தி வருகின்றன. அதிலும் 2018 முதல் 2020 வரையிலான ஆண்டுகளில் 17 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாவாசிகள் வருகை புரிந்ததன் விளைவாக ரூ.60 கோடி வருமானமாக அங்குள்ள விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது.
- அத்துடன் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. வேளாண் சுற்றுலாவின் வளர்ச்சியைக் கண்ட மாநில அரசாங்கத்தின் சுற்றுலாத்துறை 2020-ஆம் ஆண்டில் வேளாண்சுற்றுலாவுக்கென்றே தனியாக கொள்கையை வகுத்தது. அந்தக் கொள்கையின்படி விவசாயிகள், கூட்டுறவு நிறுவனங்கள், வேளாண் ஆராய்ச்சி மையங்கள், வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வேளாண் சுற்றுலாவை ஆரம்பித்துக் கொள்ளலாம்.
- இதற்கு மாநில அரசின் சுற்றுலாத்துறை நேரடியாக சான்றிதழ் அளித்து அங்கீகாரம் தருகிறது. அத்தோடு அங்கீகாரம் பெற்றால் வங்கிகளில் கடன் மற்றும் இதர சலுகைகளையும் பெறலாம். இந்தக் கொள்கையின் படி வேளாண் சுற்றுலாவை ஆரம்பிக்க எண்ணுவோர் முதலில் இரண்டு முதல் ஐந்து ஏக்கர் அளவிலான நிலம் வைத்திருக்க வேண்டும்.
- அத்தோடு அந்த நிலத்தில் சுற்றுலாவாசிகள் தங்குவதற்கு ஏற்ற வகையில் போதிய அளவிலான அறைகளும், உணவு உண்ணும் இடமும் இருக்க வேண்டும். வேளாண் சுற்றுலா மையமாக பண்ணையை பதிவு செய்ய ஆரம்பத்தில் ரூ.2,500 கட்டணம் செலுத்த வேண்டும். அதனை ரூ.1000 கொடுத்து ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இவற்றை மகாராஷ்டிரா வேளாண் மற்றும் ஊரக சுற்றுலா வளர்ச்சிக் குழுவானது முறைப்படுத்தி ஊக்குவிக்கிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (08 – 04 – 2024)