TNPSC Thervupettagam

இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத் திருத்தம்: தேவை மறுஆய்வு!

September 24 , 2019 1935 days 1000 0
  • மருத்துவர்களின் தேசம் தழுவிய எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் தேசிய மருத்துவ ஆணைய மசோதா ஜூலை முதல் வாரத்தில் நிறைவேறியது. இதில் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது 32-வது ஷரத்து. இந்தியாவின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையே அசைக்கப்போகும் அஸ்திரம் இது என்பது இப்போது தெரியாது; பின்னால் புரியும். ‘
  • அரசுப் பணியாற்றும் மருத்துவ உதவியாளர், ஆய்வகப் பணியாளர், மருந்தாளுநர், செவிலியர் உள்ளிட்ட மூன்றரை லட்சம் உதவிப் பணியாளர்களுக்கும் பயிற்சிகொடுத்து, அவர்களும் நவீன மருத்துவம் பார்ப்பதற்கு உரிமம் வழங்கப்படும்’ என்கிறது இந்த ஷரத்து. மருத்துவர்கள் எதிர்க்கும் மிக முக்கியமான ஷரத்து இதுதான்.
  • நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 75% பேர் கிராமத்தில்தான் வாழ்கின்றனர். அதேநேரம், கிராமப்புற மருத்துவமனைகளில் 26% மருத்துவர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். பட்டதாரி மருத்துவர்கள் கிராமங்களில் பணிபுரிய ஆர்வம் காட்டுவதில்லை; துணை சுகாதார மையங்களிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய மருத்துவர்கள் இல்லை.
  • இதனால், கிராமப்புற மக்களுக்குத் தேவையான சிகிச்சை கிடைப்பதில்லை. இந்தக் குறையைத் தீர்ப்பதற்கு ‘கம்யூனிட்டி ஹெல்த் ப்ரொவைடர்’ எனும் பெயரில், நவீன மருத்துவ உரிமம் பெற்ற உதவியாளர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். இவர்கள், கிராமப்புற மக்களுக்கு ஆரம்பகட்ட நவீன சிகிச்சையைத் தருவார்கள்’ என்கிறது மத்திய அரசு.

புரியாத புதிர்கள்

  • நாட்டில் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். இந்தியாவில் 1,655 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். இந்த இடைவெளியைக் குறைப்பதற்கு யார் வேண்டுமானாலும் மருத்துவம் பார்க்கலாம் என அனுமதித்தால், அது தவறான அணுகுமுறை ஆகிவிடும். இதன் விளைவால் உண்டாகும் ஆரோக்கியக் கேடுகள் நாட்டின் பொருளாதார வளத்தையே வீழ்த்திவிடும்.
  • முன்பு சீனாவில் மூன்றாண்டுக் காலம் மருத்துவம் படித்த ‘வெற்றுக்கால் மருத்துவர்கள்’ (Barefoot doctors) பணிபுரிந்தனர். இவர்களால் ஏற்பட்ட அநேக நலக்கேடுகளைக் கவனித்து சீனா அந்த மருத்துவப் படிப்பை நிறுத்திவிட்டது. மருத்துவத் துறையில் ‘குறுக்குவழி’யில் தீர்வுகாண முயல்பவர்களுக்கு உலக அளவில் பாடம் புகட்டிய வரலாறு இது.
  • இந்திய கிராமங்களில் ஏற்கெனவே போலி மருத்துவர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. அரைகுறை மருத்துவ அறிவுடன் கிராம மக்களின் ஆரோக்கியத்துடன் அவர்கள் விளையாடிவருவது இரு அரசுகளுக்கும் தெரிந்ததே! இவர்களைக் கட்டுப்படுத்துவதே கடினமாக இருக்கும்போது, இப்போதைய புதிய ஏற்பாட்டின் தொடர் விளைவாக நாடு முழுவதும் இன்னும் அதிகமாகப் போலி மருத்துவர்கள் உருவாகக்கூடும் என்பதை உணர மறுப்பது புரியாத புதிர்.
  • நவீன மருத்துவத்தில் உலகத் தரமான மருத்துவர்களை உருவாக்கப்போகிறோம் என்று சொல்லி, மருத்துவர் ஆவதற்கும் முதுநிலைப் படிப்புக்கும் ‘நெக்ஸ்ட்’ என்னும் பொதுத் தேர்வை இதே மசோதா மூலம் முன்மொழியும் மத்திய அரசு, கிராமப்புற மக்களுக்கு நவீன மருத்துவம் செய்வதற்கு மருத்துவ உதவியாளர்களுக்குக் குறுகிய காலப் பயிற்சி கொடுத்தால் போதும் என்று கருதுவது அடுத்த புதிர்.
  • ஆரோக்கியம் என்பது மக்களின் பொதுச்சொத்து. அதைப் பாதுகாக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. அதற்கு மனிதராகப் பிறந்த அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சைதான் தேவை.
  • அதை முறைப்படி வழங்க வேண்டியதை மூடிமறைத்து, கிராமப்புற மக்களுக்கு ‘மருத்துவ உதவியாளர்கள்’ சிகிச்சை அளிக்கலாம்; நகர்ப்புற மக்களுக்குப் பட்டதாரி மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள் என்று அரசே வேறுபடுத்துவது வேதனைப்படுத்தும் விஷயம்.

கேள்விக்குறியாகும் எதிர்கால மருத்துவம்

  • அடுத்து, மருத்துவ உதவியாளர்கள் கிராமங்களில்தான் பணிபுரிவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? கிராமப்புற அரசு வேலையை விட்டுவிட்டு, நகர்ப்புறங்களில் சொந்தமாக மருத்துவமனை தொடங்கினால் நவீன மருத்துவர்களுக்குப் போட்டியாளர்கள் ஆவார்களே... அதைத் தடுப்பது யார்? முறைப்படுத்துவது யார்? இவர்கள் குறிப்பிட்ட வரையறைகளுக்குள்தான் மருத்துவம் பார்க்க முடியும் என்கிறது 32-வது சரத்து.
  • ஆனால், அந்த வரையறைகள் என்னென்ன? அந்த எல்லைகளைத் தாண்டினால் என்ன தண்டனை? அதைக் கண்காணிப்பது யார்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இதில் பதில் இல்லை. இப்படிப் பல விளக்கங்கள் இல்லாத இந்த மசோதா, எவ்வித மாற்றமும் இல்லாமல் சட்டமாகி நடைமுறைக்கு வருமானால், இந்தியாவில் போலி மருத்துவர்கள் உருவாவதை ஊக்குவிக்கும் முயற்சியாகவே மத்திய அரசின் இந்த நடவடிக்கை பார்க்கப்படும். மேலும், நவீன மருத்துவப் படிப்புக்குத் தேவையான ‘நீட்’, ‘நெக்ஸ்ட்’ போன்ற தேர்வு அழுத்தங்களும் பொருளாதார அழுத்தங்களும் இதில் இல்லை என்பதால், இப்படிக் குறுக்குவழியில் மருத்துவர் ஆவதையே இனி அநேகரும் விரும்பக்கூடும். அப்போது எதிர்கால இந்தியாவில் தரமான மருத்துவர்களுக்குப் பஞ்சமாகிவிடும்.
  • கிராமப்புற மருத்துவமனைகளில் பணிபுரிய மருத்துவர்களைக் கவர்வதற்கு இந்த மசோதாவில் எந்த முன்னெடுப்பும் இல்லை என்பது பெருங்குறை. மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியத் தயங்குவதற்கு முக்கியக் காரணம், அங்கு சரியான உள்கட்டமைப்பு வசதி, கழிப்பறை வசதி, தண்ணீர் வசதி இருப்பதில்லை என்பதுதான். மருத்துவருக்கான ஓய்விடமும் தங்குமிடமும் பாதுகாப்பாக இருக்காது.
  • விரும்பி வரும் மருத்துவரைக்கூட எளிதில் சோர்வடையச் செய்யும் விதமாக, நிறைய ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருந்து இருக்காது. மருந்து இருந்தால் அதை விநியோகிக்க ஊழியர் இருக்க மாட்டார். அறுவைச் சிகிச்சைக் கருவிகள், நோய்க்கணிப்புக் கருவிகள், வாகனம், ஆம்புலன்ஸ், ஜெனரேட்டர் இருக்கும். ஆனால், அவை இயங்கும் நிலையில் இருக்காது அல்லது அவற்றை இயக்க ஆள் இருக்காது.

என்ன செய்ய வேண்டும்?

  • முதலில், மருத்துவப் பணிக்கான அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்த அரசு சுகாதாரத் துறையினர் முன்வர வேண்டும். அடுத்து, மருத்துவம் படித்தவர்கள் குறைந்தது 3 ஆண்டுகள் கிராமங்களில் பணிபுரிவதைக் கட்டாயமாக்குவது, அவர்களுக்குக் கூடுதலாக ஊதியம் வழங்குவது, முதுநிலைப் படிப்பில் அதிக இடங்களை ஒதுக்குவது, பதவி உயர்வில் முன்னுரிமை கொடுப்பது, மருத்துவக் கல்லூரி டீன் மற்றும் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆவதற்கு மருத்துவர்கள் கிராமங்களில் பணிபுரிந்திருக்க வேண்டும் என்று விதிமுறையை நிர்ணயிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் கிராமங்களில் பணிபுரிய மருத்துவர்கள் நிச்சயம் ஆர்வம் காட்டுவார்கள்.
  • மக்களின் ஆரோக்கியம் காப்பதற்கு இப்படியான வழிகளில் எதிர்கொள்வதை விட்டுவிட்டு, அரசாங்கமே இரண்டாம் தர மருத்துவர்களை உருவாக்குவது கிராம மக்களுக்குச் செய்யும் அநீதி மட்டுமல்ல; இந்திய எதிர்கால சமூக நலனுக்கே ஆபத்தும்கூட!

நன்றி: இந்து தமிழ் திசை (24-09-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories