TNPSC Thervupettagam

இந்திய மருந்தியல் துறையில் புதிய மைல்கல்

May 11 , 2024 50 days 114 0
  • உணவே மருந்து என்பதிலிருந்து நகர்ந்து மருந்தே உணவு என்பதை நோக்கி நமது வாழ்க்கை சென்றுகொண்டிருக்கிறது. மருந்து தயாரிக்கும் துறையில் இந்தியா உலக அளவில் முன்னணி வகிக்கிறது.
  • மருந்துப் பொருள்களான மாத்திரை, கேப்சூல், ஊசிமருந்து (tablet, capsule, injection) போன்றவற்றைத் தயாரிப்பதில் சிறந்து விளங்கினாலும் அந்த மருந்துப் பொருள்களில் உள்ள நோயைக் குணப்படுத்தும் மருந்து மூலக்கூறுகள் (API-active pharmaceutical ingredient) கண்டுபிடிப்பு மற்றும் பயன்பாட்டுத் துறையில் நாம் பின்தங்கி உள்ளோம்.
  • இந்த மருந்து மூலக்கூறுகள்தான் நோயைக் கட்டுப்படுத்தும் அல்லது குணப்படுத்தும் வேலையைச் செய்கின்றன. நாம் இந்த மருந்து மூலக்கூறுகளை ஆராய்ச்சியின் மூலம் கண்டு பிடித்து, பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது என்பது மிகவும் குறைவு.
  • மாறாக, மற்ற நாடுகளின் மருந்து மூலக்கூறு கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி அதன் மூலம் மருந்துப் பொருள்களைத் தயாரித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவருகிறோம். இந்த நிலையில் மருந்து மூலக்கூறு கண்டுபிடிப்புத் துறையில் இந்தியாவும் தற்போது இணைந்துள்ளது.
  • இந்திய அறிஞர்களால் 2008இல் கண்டுபிடிக்கப்பட்ட ஆன்டிபயாடிக் (antibiotic) மூலக்கூறான Enmetazo bactum கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றுகட்டப் பரிசோதனைகள் மூலம் குணப்படுத்துவதற்குக் கடினமான சிறுநீரக நோய்த் தொற்றைக் குறைந்த எதிர்வினைகளுடன் குணப்படுத்த வல்லது என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ஆன்டிபயாட்டிக் மூலக்கூறானது முதன்முறையாக உணவு - மருந்து தரக் கட்டுப்பாட்டு மையம் (FDA), ஐரோப்பிய மருந்துக் கழகத்தால் (EMA) அங்கீகரிக்கப்பட்டு மருத்துவப் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த மூலக்கூறை ஆர்க்கிட் பார்மா (Orchid Pharma) என்கிற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
  • அல்லேக்ரா தெரபியூட்டிக்ஸ் (Allecra Therapeutics) என்கிற ஜெர்மனி நிறுவனம் மூன்று கட்டப் பரிசோதனைகள் மூலம் Enmetazo bactum+Cefepime கூட்டு மருந்தானது கிராம் நெகட்டிவ் பாக்டீரியாவால் (gram-negative bacteria) வரும் சிறுநீரக நோய்த்தொற்றைக் குறைக்க வல்லது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மருந்து மூலக்கூறு முழுமையாக இந்தியாவில் நமது நாட்டு ஆராய்ச்சி யாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இதே போன்று புதிய மருந்து மூலக்கூறு கண்டுபிடிப்பில் நமது பயணத்தைத் தொடர்ந்தால் உலக அளவில் மருத்துவத் துறையில் நமது பங்களிப்பும் அதிகரித்து இந்தியாவின் பொருளாதாரமும் உயரும். இந்த ஆராய்ச்சி வெற்றியால் நமது மருத்துவத் துறை புதிய உயரத்தில் பயணிக்கும்.
  • மேலும், மத்திய, மாநில அரசுகளும் மருந்து மூலக்கூறு தொடர்பான ஆராய்ச்சிகளை ஊக்குவித்து அதற்காக அதிக நிதி ஒதுக்கினால் வரும் காலத்தில் இன்னும் பல புதிய மருந்து மூலக்கூறுகள் கண்டுபிடிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி: இந்து தமிழ் திசை (11 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories