- இந்திய மென்பொருள் சேவை நிறுவனங்களில் முதலீடு நடப்பாண்டில் கணிசமாக குறைந்துள்ளது. 2022-ம் ஆண்டு முதல் பாதியில் இந்திய மென்பொருள் துறைக்கு வந்த முதலீட்டுடன் ஒப்பிடுகையில் 2023-ம் ஆண்டின் முதல் பாதியில் முதலீடு 80 சதவீதம் சரிந்துள்ளது. 2022 ஜூன் வரையில் இந்திய மென்பொருள் துறையில் 3,406 மில்லியன் டாலர் முதலீடு வந்தது. ஆனால், 2023 ஆண்டின் முதல் பாதியில் 635 மில்லியன் டாலர் முதலீடு மட்டுமே வந்துள்ளது.
என்ன காரணம்
- கரோனா ஊரடங்கின்போது பொருளாதாரம் மிகப் பெரும் சரிவைச் சந்தித்த நிலையில், உலக அளவில் மத்திய வங்கிகள் மக்களிடையே பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் நிதிக் கொள்கையில் மாற்றங்கள் கொண்டுவந்தன. இதனால், மிகக் குறைந்த வட்டியில் கடன் கிடைத்தது. இந்தக் கடன்கள் பெரும்பாலும் பெரும் முதலீட்டாளர்கள் வசம் சென்றன.
- அதில் அவர்கள் கணிசமான பங்கை மென்பொருள் துறையில் முதலீடு செய்தனர். இதனால், மென்பொருள் நிறுவனங்கள் தங்கள் தொழிலை விரிவாக்கம் செய்ய ஆரம்பித்தன. பல புதிய திட்டங்களைத் தொடங்கின. ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரித்தன. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 70% அளவில் புதிதாக வேலைக்கு ஆட்கள் எடுத்தன. ஆனால், நிலைமை விரைவிலேயே மாறத் தொடங்கியது.
- கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சரிவிலிருந்து உலகம் மீண்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர் உலகின் பொருளாதாரத்தை மீண்டும் சரிவுக்குத் தள்ளியது. கச்சா எண்ணெய், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்தது.
- உலக அளவில் பணவீக்கம் உச்சம் தொட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் மாதத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்காக இயங்கிவந்த அமெரிக்காவைச் சேர்ந்த எஸ்விபி வங்கி திவால் நிலைக்கு உள்ளானது. இதைத் தொடர்ந்து மென்பொருள் துறையில் முதலீடு வருவது குறைந்தது. நிலைமையைச் சமாளிக்க, மென்பொருள் நிறுவனங்கள் மிகத் தீவிர வேலை நீக்கத்தில் இறங்கின.
- இந்திய மென்பொருள் துறையில் புதிய முதலீடுகள் 80 சதவீதம் குறைந்திருப்பது அத்துறையினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி: இந்து தமிழ் திசை (25 – 09 – 2023)