- இந்தியாவில் எத்தனை மொழிகள் இருக்கின்றன என்னும் வினாவுக்கு இன்றைய நவீன யுகத்தில்கூடத் துல்லியமான விடை கிடைப்பதில்லை. அங்கீகரிக்கப்படாத மொழிகள் காலப்போக்கில் முற்றாக அழிந்துபோன வரலாற்றை உணர்ந்து, இந்திய மொழிகள் பேராயத்தை அமைப்பது காலத்தின் தேவை.
இந்தியாவின் மொழி வரலாறு
- ஐரோப்பியர்கள் இந்தியத் துணைக்கண்டத்தின் மொழிகளைப் பற்றிப் பரந்துபட்ட ஆய்வை மேற்கொள்ளும்வரை மொழிகளின் எண்ணிக்கை பற்றி யாரும் கவலைப்படவில்லை. இந்தியா ஒரு நவீன நாடாகப் பரிணமிப்பதற்கு முன்பு, ஒவ்வொரு மொழியும் தனக்கென ஒரு நிலப்பரப்பையோ பண்பாட்டுப் பரப்பையோ வைத்துக்கொண்டிருந்தன. ஒவ்வொன்றும் சுதந்திரமாகவே இயங்கின; புதிய மொழிகளும் தோன்றிக்கொண்டிருந்தன. பிற நாடுகள் அல்லது கண்டங்களுடன் ஒப்பிட்டால், இந்தியத் துணைக்கண்டத்தின் இந்தப் பன்மைத்துவம் வியக்கவைக்கிறது.
- ஆனால், இந்தியா என்கிற நவீன நாடு உருவான பிறகு எல்லாம் மாறத் தொடங்கியது. அந்த மாற்றங்களை ஒவ்வொரு மொழி சார்ந்த மக்களும் ஏற்றுக்கொண்டு, தம்மை இந்தியராக உணரத் தொடங்கினார்கள். பெரும் போராட்டங்கள் இன்றி இது நிகழ்ந்தது. இதற்குக் காரணம் நவீன இந்தியாவைக் கட்டமைத்தவர்களா அல்லது அதற்கு ஒத்துழைத்த மக்களா என்னும் கேள்வி முக்கியமானது.
- ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ என்கிற நூலில் இந்தியாவில் 15 பெரும் மொழிகளும் நூற்றுக்கும் மேற்பட்ட பேச்சு மொழிகளும் இருப்பதாக ஜவாஹர்லால் நேரு குறிப்பிட்டிருந்தார். ஆனால், சுதந்திர இந்தியாவின் பிரதமரான பின்னர், இதையே தனது இந்திய மொழிகளுக்கான கொள்கையாக அவர் வகுப்பார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. இந்திய அரசமைப்புச்சட்டம் உருவாக்கப்பட்டபோது, அதன் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாக 16 இந்திய மொழிகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட்டன.
- பிறகு, மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை நடைமுறைப்படுத்த மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைப்புக் குழு அமைக்கப்பட்டது. அப்போது, “மொழிவாரி மாநிலங்கள் என்பது வியப்பாக இருக்கிறது. உண்மையில் உங்களால் மொழிவாரி மாநிலங்களை அமைக்க முடியாது. ஒரு மாநிலத்தை அமைத்துவிட்டு, அதில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியை அம்மாநிலத்தின் மொழியாக அமையுங்கள்” என்று அக்குழுவுக்கு டாக்டர் அம்பேத்கர் பரிந்துரைத்தார்.
- இந்த எச்சரிக்கை தொடக்கத்தில் புரிந்துகொள்ளப் படவில்லை. ஆனால், பிரச்சினையை ஆய்வுசெய்த குழு, அவரது பரிந்துரையின் ஆழத்தைப் புரிந்துகொண்டது. ஏனெனில், 1951 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி சுமார் 783 தாய்மொழிகள் இந்தியாவில் பேசப்படுவதாக மதிப்பிடப்பட்டிருந்தது.
- எனவே, ஒரு மொழிக்கு ஒரு மாநிலம் என்பது சாத்தியமில்லை என்பதைக் குழு உணர்ந்து கொண்டது. இறுதியில், அம்பேத்கரின் வழிகாட்டுதலே நடைமுறைக்கு வந்தது. சரி, 1951ஆம் ஆண்டு வெளியான மொழிகளின் எண்ணிக்கை இறுதியானதுதானா?
கவனம் பெறாத தகவல்
- 1961 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது இந்தியாவில் 1,652 மொழிகள் இருப்பதாக அறியப்பட்டது. 1971 கணக்கெடுப்பில் மேலும் 700 மொழிகள் புழங்குவதும் தெரியவந்தது. இந்தத் தொகை ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் வளர்ந்துகொண்டே வந்தது.
- இந்தப் புள்ளிவிவரங்கள் குறித்து மக்களவையில் ஒரு கேள்விக்குப் பதிலளித்த பண்பாட்டுத் துறையின் அப்போதைய அமைச்சர் ஜெயபால் ரெட்டி, “1991 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 1,576 மொழிகள் வகுப்புவாரியாக அணி பிரிக்கப்பட்டன. 1,796 மொழிகள் இந்தப் பட்டியலுக்குள் இன்னும் கொண்டு வரப்படவில்லை. இவற்றில் 18 மொழிகள் அதிகாரபூர்வ அரசு மொழிகள்.
- மீதமுள்ள மொழிகள் வெறும் பேச்சு வழக்கில் மட்டுமே உள்ளன. இவற்றில் பெரும்பாலான மொழிகளுக்கு எழுத்து வடிவமே இல்லை” என்றார். இந்தப் பதில் வெறும் தகவலாகவே கடந்துவிட்டதா? 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு விவரங்கள் ஆய்வாளர்களை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. அதன்படி நாட்டின் மக்கள்தொகை 121 கோடி. பேசப் படும் மொழிகள் 19,569. அதில் 10,000 அல்லது அதற்கு மேற்பட்டவர்களால் 121 மொழிகள் அதிகளவில் பேசப்படுகின்றன.
- இதில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள 121 மொழிகள் இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன. அங்கீகரிக்கப்பட்டவை 22 மொழிகள். அங்கீகரிக்கப்படாதவை என 99 மொழிகள் அட்டவணை இடப்பட்டுள்ளன. மொத்த மக்கள்தொகையில் 96.71% பேர் அட்டவணையிடப்பட்ட 22 மொழிகளில் ஒன்றைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். மீதமுள்ள 3.29% பேர், பிற மொழி பேசுபவராக உள்ளனர். இதுவே இறுதியானதல்ல; கணக்கு மேலும் வளர்ந்துவருகிறது.
மொழியியல் ஆய்வுகள்
- இந்திய மொழிகள் தொடர்பான இந்தப் புள்ளிவிவரங்கள் ஏன் வளர்ந்தன? இதற்குக் காரணம் பண்பாட்டுக் கலப்புகளும், மக்களின் இடப்பெயர்வுகளும் அல்லது மொழியைக் காப்பாற்றிக்கொள்ளத் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்ட மக்களையும் சுட்டிக்காட்டலாம். ஆயினும் இந்த விவரங்களை இந்திய அளவில் அதிகாரபூர்வமாக்கியவர், இந்தியக் குடிமைப் பணி அதிகாரியும் மொழியியல் ஆய்வாளருமான சர் ஜார்ஜ் ஆபிரகாம் கிரியெர்சன் (Sir George Abraham Grierson).
- 1886இல் வியன்னாவில் நடைபெற்ற 7ஆவது கீழை மொழியியல் மாநாட்டில் கலந்துகொண்ட ஜார்ஜ், அங்கே முன்வைத்த திட்டத்தின் அடிப்படையில், பிரிட்டிஷ் இந்திய அரசு 1894இல் இந்திய மொழியியல் கணக்கெடுப்பு (Linguistic Survey of India) என்கிற அமைப்பை உருவாக்கியது.
- இந்த அமைப்பு இந்தியா முழுமைக்கும் ஆய்வுசெய்து, 364 இந்திய மொழிகளைக் கண்டறிந்து, 12 தொகுதிகள் கொண்ட தொகுப்பை 1903-1923க்கு இடையில் வெளியிட்டது. மேம்படுத்தப்பட்ட அந்த ஆவணத்தின் மூலமாகத்தான் இந்திய மொழிகள் பற்றிய அதிகாரபூர்வமான எண்ணிக்கை தெரியவந்தது. இந்த அமைப்பு 1928இல் தனது பணியை நிறுத்திக்கொண்டது.
- இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் மூலம் மொழிகளின் எண்ணிக்கை மட்டுமே தொடர்ந்தது. ஆனால், மொழியியல் ஆய்வுகள் தொடரப்படவில்லை. இந்த நிலையில்தான், மாநில மறுசீரமைப்புக் குழு 1953 இல் அமைக்கப்பட்டு, 1955இல் தனது அறிக்கையை அளித்தது. அது விவாதிக்கப்பட்டு, 1956 ஆகஸ்ட் மாதம் சட்டமாக வெளியிடப்பட்டது.
- இக்குழுவின் பரிந்துரையின்படி 1957இல் சிறுபான்மை மொழியினர் ஆணையர் பதவி உருவாக்கப்பட்டது. அந்த ஆணையம் சிறுபான்மை மொழி பேசும் மக்களின் நலன் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் என்று சொல்லப்பட்டாலும், ஒவ்வோர் ஆண்டும் அந்த ஆணையர் அறிக்கைகளை வெளியிடுவதைத் தாண்டிப் பெரிதாக எதையும் செய்வதில்லை.
- இந்தச் சூழலில், 1894க்குப் பிறகு 364 மொழிகள் எனக் கணக்கிடப்பட்டு, 2011இல் 19,569 மொழிகள் இந்தியாவில் பேசப்படுவதாக வந்திருக்கும் புள்ளிவிவரம் மலைக்க வைப்பதில் ஆச்சரியமில்லை. இவ்வளவு மொழிகள் தோன்றும் அளவுக்கு இங்கு மொழிவளம் இருப்பதை எண்ணி நாம் பெருமைப்படலாம். ஆனால், அது எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பது தெரியவில்லை.
உரையாடல் தேவை
- இவ்வளவு பெரிய துணைக் கண்டத்துக்கு ஒரு பொது மொழி வேண்டும் என்று குரல்கள் ஒலிப்பதைப் பார்க்க முடிகிறது. தொழில்நுட்ப வசதிகள் தோன்றியிராத அக்காலத்தில், இதெல்லாம் கவர்ச்சிமிக்கதாக இருந்திருக்கலாம்.
- இப்போதும் அதே காரணத்தை முன்வைப்பது சரியல்ல. இப்போதைய தேவை இந்திய மொழிகளுக்கு இடையே ஓர் உரையாடல். அத்துடன் அதை முன்னெடுக்கும் ஓர் அகில இந்திய அமைப்பும் தேவை. ‘இந்திய மொழிகள் பேராயம்’ (Languages Assembly of India) என்ற தன்னாட்சி அமைப்பு இன்றைய காலத்தின் தேவை.
- இவ்வமைப்பில் எல்லா மொழிகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க முடியாது என்பது உண்மைதான் என்றாலும், குறைந்தபட்சம் அரசமைப்புச் சட்டத்தின் 8 ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத மொழிகளுக்கான பேரவையாக அது அமைய வேண்டும். படிப்படியாகப் பிற மொழிகளைச் சேர்க்கலாம்.
- இவ்வமைப்பின் மூலமான மற்ற மொழிகளின் வளங்கள் பரிமாறப்படவும், சிறுபான்மை மொழிகள் நசுக்கப்படாமல் பிற மொழியினரின் ஒத்துழைப்பைப் பெறவும் முடியும்.
- மொழி என்பது தகவல் பரிமாற்றத்துக்கான கருவி மட்டுமல்ல, அது உணர்வுப் பரிமாற்றத்துக்கும் சிந்திக்கும் ஆற்றலை வளர்த்துக்கொள்வதற்குமான இயற்கைக் கட்டமைப்பு. மொழிப் பரிமாற்றம் தொடர்பான இணைய வசதிகள் பெரும் திறப்பை உருவாக்கியுள்ள இக்காலத்தில், இந்திய மொழிகள் பேராயத்தின் பணிகள் மூலம் கவனிக்கப்படாத ஏதோ ஒரு மொழி எளிமையாகக் கவனம் பெற்று, அது உலக மொழியானாலும் ஆகலாம். இல்லையெனில், நாம் கவனிக்காமலே பல மொழிகள் சிதைவுற்று அழிந்தும் போகலாம்!
நன்றி: இந்து தமிழ் திசை (01 – 02 – 2024)