TNPSC Thervupettagam

இந்திய விவசாயிகளின் வருமானம் ஏன் பரிதாபமாக உள்ளது?

October 18 , 2021 1135 days 729 0
  • இந்தியப் புள்ளியியல் அலுவலகத்தால் செப்டம்பா் 2021-ல் வெளியிடப்பட்ட இந்தியாவின் வேளாண் குடும்பங்கள் பற்றிய நிலை மதிப்பீடு-2019 அறிக்கை, விவசாயிகளின் பரிதாபமான வருமான அளவை வெளிப்படுத்தியுள்ளது.
  • ஜூலை 2018 முதல் ஜூன் 2019 வரையிலான காலகட்டத்தில், விவசாயக் குடும்பத்துக்கு மொத்தமாக வெவ்வேறு ஆதாரங்களிலிருந்து கிடைக்கும் சராசரி மாத வருமானம் ரூ.8,337. இதன்படி பார்த்தால், விவசாயக் குடும்பங்களின் நாள் வருமானம் வெறும் ரூ.277 மட்டுமே.
  • இதை வைத்து விவசாயக் குடும்பங்கள் வாழ முடியுமா? விவசாயிகளின் வருமானம் ஏன் இவ்வளவு குறைவாக உள்ளது? தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் வருமான நிலை என்ன?
  • வேளாண் பொருட்களின் மொத்த உற்பத்தியில் உலகத்தின் முன்னணி நாடாக இந்தியா உள்ள போதிலும், விவசாயக் குடும்பங்களின் வருமானம் தொடர்பான புள்ளிவிவரங்கள் 2002-03 வரை அரசால் வெளியிடப்படவில்லை.
  • விவசாயிகளின் பொருளாதார நிலையை மதிப்பிடுவதற்கு, வருமானம் ஒரு முக்கிய அளவாக இருப்பதால், வேளாண் அமைச்சகத்தின் முன்முயற்சியுடன், தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அமைப்பானது (NSSO), விவசாய வருமானம், அதன் தொடர்புடைய அளவுருக்கள் பற்றிய தரவை 2002-03-ல் முதன்முறையாக விவசாயிகளின் நடப்பு நிலை மதிப்பீடு (Situation Assessment Survey) என்ற பெயரில் வெளியிட்டது.
  • இதன் தொடா்ச்சியாக, விவசாயிகளின் நடப்பு நிலை மதிப்பீடு 2012-13-க்கும், தற்போது 2018-19-க்கும் வெளியிடப்பட்டுள்ளது.

அகில இந்திய நிலை

  • இந்திய விவசாயிகளின் வருமானம் தொடா்ந்து அதிகரித்துவந்தபோதிலும், அதன் வளா்ச்சியில் தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
  • இந்திய அளவில், அனைத்து மூலங்களிலிருந்தும் ஒரு விவசாயக் குடும்பத்துக்குக் கிடைக்கும் சராசரி ஆண்டு வருமானம் (தற்போதைய விலையில்) 2002-03-ல் ரூ.25,380-லிருந்து 2012-13-ல் ரூ.77,112 ஆகவும், 2018-19-ல் ரூ.1,22,616 ஆகவும் அதிகரித்துள்ளது.
  • ஆனால், 2002-03-க்கும் 2012-13-க்கும் இடையில், மொத்த வருமானத்தின் சராசரி ஆண்டு அதிகரிப்பு 20.38% ஆக இருந்தது, இது 2012-13-க்கும் 2018-19-க்கும் இடையில் 11.90% ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.
  • விவசாயக் குடும்பங்களுக்குக் கிடைக்கும் பல்வேறு வருமான ஆதாரங்களில் (கூலி, பயிர்ச் சாகுபடி, கால்நடைத் தொழில், விவசாயம் அல்லாத வணிகம்), பயிர்ச் சாகுபடியின் மூலம் பெறப்பட்ட வருமானத்தின் வளர்ச்சி 2012-13-க்கும் 2018-19-க்கும் இடையில் கடுமையாகக் குறைந்துள்ளது.
  • உதாரணமாக, பயிர்ச் சாகுபடி மூலம் கிடைக்கும் வருமானத்தின் சராசரி வருடாந்திர அதிகரிப்பு 2012-13-க்கும் 2018-19-க்கும் இடையில் வெறும் 4.65% மட்டுமே. அதே நேரத்தில், முந்தைய காலகட்டமான 2002-03-க்கும் 2012-13-க்கும் இடையில், இதன் வளா்ச்சி 21.80%.
  • ஆகவே, விவசாயக் குடும்பங்கள் எங்கிருந்து வருமானம் பெறுகின்றன என்ற கேள்வி எழலாம்? விவசாயிகளின் வருமானம் பெரும்பாலும் கூலி மற்றும் கால்நடை வளா்ப்புத் தொழில்களில் கிடைப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
  • 2012-13-க்கும் 2018-19-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில், சராசரியாக 19.24% மற்றும் 21.47% இவ்விரு ஆதாரங்களில் வருமானம் முறையே உயா்ந்துள்ளது.
  • ஒருவேளை, இவ்விரு ஆதாரங்களில் வளா்ச்சி ஏற்படாமல் இருந்திருந்தால், விவசாயக் குடும்பங்களின் வருடாந்திர வருமானம் அதன் முந்தைய காலத்தைவிட 2018-19-ல் கணிசமாகக் குறைந்து இருக்கும்.

மாநிலங்களின் நிலை

  • எதிர்பார்த்ததுபோலவே, வேளாண் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் 2018-19-ல் மாநிலங்களுக்கிடையே கடுமையாக வேறுபட்டுள்ளது. குறைந்தபட்சமாக ஒடிஷாவின் மாத வருமானம் ரூ.4,013 ஆகவும், அதிகபட்சமாக மேகாலயாவின் வருமானம் ரூ.26,265 ஆகவும் பதிவாகியுள்ளது.
  • தரவுகள் கொடுக்கப்பட்டுள்ள 28 மாநிலங்களில், 12 மாநிலங்களில் மட்டும் வருமானம் ரூ.10,000–க்கும் மேலாக உள்ளது. இவற்றில் நான்கு, வடகிழக்குப் பிராந்தியத்தைச் சோ்ந்தவை. மீதமுள்ள 16 மாநிலங்களின் வருமானம் ரூ.4,013–லிருந்து ரூ.9,995ஆக உள்ளது.
  • விவசாயத்தைப் பெரிதும் சார்ந்துள்ள பிஹார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிஷா, தெலங்கானா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 7 மாநிலங்களின் மாத வருமானம், தேசிய சராசரியைவிட மிகவும் குறைவாக உள்ளது. ரூ.10,448 மாத வருமானத்துடன் தமிழ்நாடு மாநிலங்களின் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ளது.
  • தரவுகள் கொடுக்கப்பட்டுள்ள 28 மாநிலங்களில், ஐந்தில் மட்டுமே, விவசாயக் குடும்பங்களின் மொத்த மாத வருமானத்தில், பயிர்ச் சாகுபடி வருமானப் பங்கு 50%-க்கும் அதிகமாக உள்ளது; 16 மாநிலங்களில், வருமானம் 40%-க்கும் கீழே உள்ளது.
  • குறிப்பாக, பயிர் வருமானத்தின் பங்கு 9 மாநிலங்களில் 25%-க்கும் குறைவாக உள்ளது. மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், தமிழ்நாட்டில் பயிர்ச் சாகுபடியின் மூலம் கிடைக்கும் வருமானம் வெறும் 20% மட்டுமே.
  • இந்தப் புள்ளிவிவரங்கள் சொல்வது என்னவென்றால், பெரும்பாலான மாநிலங்களில் பயிர்ச் சாகுபடி வருமானம் மிகவும் குறைவு.

அதிகரிக்க வழிகள்

  • இப்படிப்பட்ட மிகவும் குறைவான பயிர்ச் சாகுபடி வருவாயுடன், இந்திய அரசின் இலக்கான, 2022-23-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது மிகவும் கடினம். மேலும், இந்த வருமானத்துடன் விவசாயிகளை விவசாயத்தில் தக்க வைத்துக் கொள்வதும் எதிர்காலத்தில் கடினமாக இருக்கும்.
  • முதலில், மத்திய - மாநில அரசுகள் உற்பத்தியை மட்டும் உயா்த்தும் அணுகுமுறையிலிருந்து விலகி, வேளாண் சந்தையைச் செம்மைப்படுத்த வேண்டும். வேளாண் பொருட்களின் உற்பத்தி அதிகரிப்பால், நீா்ப்பாசனம் அதிகமுள்ள பகுதியில்கூட விவசாயிகளின் மேம்பட்ட வருமானத்துக்கு உத்தரவாதம் கிடைப்பதில்லை என ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
  • இரண்டு, கொள்முதல் உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்படாவிட்டால், பயிர்களுக்கு வழங்கப் படும் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) வெறும் அறிவிப்பாக மட்டுமே இருக்கும்.
  • நெல், கோதுமை தவிர, பெரும்பாலான பயிர்களின் கொள்முதல் அளவு மிகவும் மோசமாக உள்ளது. எனவே, விவசாயிகளின் வருமானத்தை உயா்த்த ஒவ்வொரு பயிரிலும் 20-25% உற்பத்தியைக் கொள்முதல் செய்வது அவசியம்.
  • தமிழகத்தின் நெல் கொள்முதல், நமது அண்டை மாநிலமான ஆந்திரம், தெலங்கானாவை விட மிகவும் குறைவாக உள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • மூன்று, இந்திய அரசு சந்தை விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கத்திலிருந்து, விவசாயிகளைக் காப்பாற்றுவதற்காக விலைக் குறைவுக்கேற்பப் பணம் செலுத்தும் திட்டத்தை (Price Deficiency Payment Scheme) அமல் படுத்தியுள்ளது.
  • இத்திட்டத்தில், சந்தை விலைகள் MSP-க்குக் கீழே போகும்போது விவசாயிகளுக்கு இழப்பீடு அளிக்கிறது. மாநில அரசுகள் இத்திட்டத்தை முழு மனதுடன் அமல்படுத்த வேண்டும்.
  • நான்கு, தமிழ்நாடு, ஆந்திரம் போன்ற மாநிலங்களில், உழவா் சந்தைகள் விவசாயிகளுக்குப் பெரும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே, தேசிய விவசாயக் கொள்கை 2000-ல் கோடிட்டுக் காட்டியுள்ளபடி, இச்சந்தைகளை நாடு முழுவதும் தொடங்க வேண்டும். ஐந்து, பேராசிரியர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 2007-ல் அமைக்கப்பட்ட விவசாயிகள் கடன்படுதல் பற்றிய நிபுணர் குழு பரிந்துரைப்படி, வேளாண் பொருள்கள் விலை சந்தையில் குறையும்போது சந்தைத் தலையீட்டு முறையை அமல்படுத்தி, குறிப்பிட்ட அளவு வேளாண் பொருட்களை அரசு வாங்க வேண்டும்.
  • ஆறு, இடு பொருட்களின் விலை உயர்வால் பயிர்ச் சாகுபடிச் செலவு தொடா்ந்து உயா்ந்து வருவதாக, வேளாண் செலவுகள் மற்றும் விலை ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
  • இதனால், விவசாயிகளுக்குப் பயிர்ச் சாகுபடி மூலம் கிடைக்கும் வருமானம் குறைகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, வேளாண் பொருட்களுக்கான MSP விலையை அதிகரிக்க வேண்டும்.
  • தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை விவசாயப் பணிகளோடு இணைப்பதன் மூலம் சாகுபடிச் செலவைக் கணிசமாகக் குறைக்க முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (18 - 10 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories