TNPSC Thervupettagam

இந்திய ‘செஸ்’ஸின் எதிர்காலம்

August 11 , 2023 524 days 548 0
  • இந்தியாவில் செஸ் என்றால் சட்டென்று நினைவுக்கு வருபவர் விஸ்வநாதன் ஆனந்த். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய செஸ்ஸின் முடிசூடா மன்னராக விளங்கிய விஸ்வநாதன் ஆனந்தை ஓவர்டேக் செய்திருக்கிறார் 17 வயதேயான இளம் வீரர் குகேஷ். ஆமாம், இந்தியாவின் முதல் நிலை செஸ் வீரராக உருவெடுத்திருக்கிறார் இவர்.

நம்பர் 1 செஸ் வீரர்

  • செஸ் என்றால் விஸ்வநாதன் ஆனந்த் நினைவுக்கு வருவது போலவே, சென்னை மாநகரும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. சென்னையில் இருந்துதான் பல்வேறு திறமையான செஸ் வீரர்கள் உருவாகியிருக்கிறார்கள்.
  • 1987இல் இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் என்கிற பெருமையை வசப்படுத்தினார் விஸ்வநாதன் ஆனந்த். ‘டைகர் ஆஃப் மெட்ராஸ்’ என்றழைக்கப்படும் ஆனந்தின் 36 ஆண்டுக் கால சாதனையை இன்று 17 வயதேயான இளம் செஸ் வீரர் குகேஷ் முறியடித்திருக்கிறார். இவரும் சென்னையைச் சேர்ந்தவர் என்பது இன்னொரு சிறப்பு.
  • ஐந்து முறை உலக சாம்பியனான ஆனந்த், இந்தியாவிலும் குறிப்பாகச் சென்னையிலும் செஸ் விளையாட்டுப் பிரபலமடைய முக்கியக் காரணம். தனது அசாத்திய திறமையால் கடந்த 1991இல் முதல் முறையாக உலக செஸ் தரவரிசைப் பட்டியலின் டாப் 10 இடங்களுக்குள் நுழைந்தார். செஸ் விளையாட்டைப் பொறுத்தவரை ஒவ்வொரு வீரருக்கும் வழங்கப்படும் ‘லைவ் ரேட்டிங்’ மூலம் தரவரிசைப் பட்டியல் மாறும். போட்டியில் பங்கேற்கும் ஒரு வீரர் அப்போட்டியில் வென்றால் புள்ளிகள் அதிகமாகும். தோற்றால் புள்ளிகள் குறைவதுமே ‘லைவ் ரேட்டிங்’ முறை.
  • தற்போது அசர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை செஸ் தொடரில் பங்கேற்றிருக்கும் குகேஷ், இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்றார். இதன் மூலம் 2.5 புள்ளிகள் குகேஷுக்குக் கிடைத்தன. எனவே அவருடைய ‘லைவ் ரேட்டிங்’ 2755.9ஆக உயர்ந்தது. விஸ்வநாதன் ஆனந்தின் ‘லைவ் ரேட்டிங்’ 2754.0.
  • இதன் மூலம் உலகத் தரவரிசைப் பட்டியலிலும் இந்தியத் தரவரிசைப் பட்டியலிலும் ஆனந்தைப் பின்னுக்குத் தள்ளி இருக்கிறார் குகேஷ். உலகத் தரவரிசைப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் குகேஷூம், பத்தாவது இடத்தில் ஆனந்தும் உள்ளனர். இந்திய அளவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துவிட்டார் குகேஷ்.

விளையாட்டில் கவனம்

  • கடந்த 2019இல், தனது 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றார் குகேஷ். அப்போது உலகின் இரண்டாவது இளம் வயது கிராண்ட் மாஸ்டர் என்கிற சாதனையைப் படைத்திருந்தார். எனினும் உலக சாம்பியன் பட்டம் பெற வேண்டும் என்பதைக் தனது இலக்காகக் கொண்டிருந்தார் குகேஷ். அதை நோக்கியே ஓடிக்கொண்டிருக்கிறார்.
  • பள்ளிப் படிப்பைத் தாண்டி முழு நேரமும் செஸ் விளையாட்டில் கவனம் செலுத்தும் குகேஷ், 2017 முதல் பயிற்சியாளர் விஷ்ணு பிரசன்னாவிடம் பயிற்சி எடுத்து வருகிறார். அதிக முதிர்ச்சியும் விளையாட்டின் மீதான ஆர்வமும் பயிற்சியில் கவனமும் இருப்பதுதான் குகேஷின் பலம் எனச் சொல்கிறார் பயிற்சியாளர் விஷ்ணு. குகேஷின் சாதனை குறித்து பல்வேறு விஷயங்களை அவர் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.
  • “இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக குகேஷ் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த இடத்தை எட்டுவார் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால், குறுகிய காலத்தில் எட்டுவார் என நினைக்கவில்லை. தொடர்ந்து செஸ் விளையாட்டில் பயிற்சி எடுத்துக் கொண்டார்; கடினமாக உழைத்தார். பொதுவாக அடுத்தடுத்து செஸ் தொடர்களில் விளையாட வேண்டியுள்ளதால் அவ்வப்போது இடைவெளிவிட்டுப் பயிற்சி எடுத்துக் கொள்வோம். வெற்றியோ தோல்வியோ இரண்டையும் ஒரே நிலையில் வைத்துப் பார்க்க வேண்டுமென்பதைப் பற்றி பேசி இருக்கிறோம்.
  • அடுத்த இலக்கை நோக்கியே பயணப்படுகிறோம். உலகத் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்களைப் பொறுத்தவரை டாப் 100, டாப் 50 இடங்களில் திறமையான பலர் உள்ளனர். ஆனால், டாப் 10இல் நுழைவது எளிதல்ல. குகேஷ் இந்தச் சாதனையைப் படைத்திருக்கிறார் என்றால் அதற்கு அவரது தனித்திறமையே காரணம். இனி இந்த இடத்தைத் தக்கவைத்துக்கொள்வதுதான் குகேஷின் முன் இருக்கும் மிகப் பெரிய சவால். அதை அவர் சாதுரியமாகத் தக்க வைத்துக்கொள்வார் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார் விஷ்ணு.

இளம் வீரர்கள் கையில்

  • ஆனந்தை முன்மாதிரியாகக் கொண்டு செஸ் விளையாடத் தொடங்கிய பல இளம் வீரர்களில் குகேஷூம் ஒருவர். ஆனந்துக்கும் குகேஷூக்குமான இடைவெளியில் இந்தியாவிலிருந்து மட்டும் 58 கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகியுள்ளனர். நாளுக்கு நாள் புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும் செஸ் கிராண்ட்மாஸ்டர்களுக்கு ஆனந்த் தனது ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
  • குகேஷின் இந்தச் சாதனையை ‘வரலாறு’ எனக் குறிப்பிட்டிருக்கும் அவர், “இந்தியாவிலிருந்து இளம் வீரர் ஒருவர் சர்வதேச அரங்கில் டாப் 10இல் தடம் பதித்தது அதிக நம்பிக்கை அளிக்கிறது. குகேஷ் இத்துடன் நிற்கப் போவதில்லை. அவர் இன்னும் பல சாதனைகளைப் படைப்பார்” எனப் பாராட்டியுள்ளார் ஆனந்த்.
  • பலத்த போட்டிக்கு நடுவே நட்பு பாராட்டுவது இந்திய செஸ் வீரர்களின் தனிச்சிறப்பு. ஒரு சில புள்ளிகள் வித்தியாசத்தில் தரவரிசையில் முன் பின் இருந்தாலும், ஒருவரது சாதனையைப் பாராட்டவும், தோல்வியால் துவண்டுபோகும்போது தோள் கொடுக்கவும் செஸ் வீரர்கள் தவறுவதில்லை.
  • பல ஆண்டுகளாக நம்பர் ஒன் இடத்தில் இருந்த ஆனந்த் போன்ற சீனியர் வீரர்கள் களத்திலிருந்து விலகும் காலம் இது. அடுத்தத் தலைமுறை வீரர்கள் அந்த இடத்தை நிரப்ப வந்து கொண்டே இருக்கிறார்கள். இனி, சர்வதேச செஸ் அரங்கில் இளம் இந்திய வீரர்களின் தடம் அழுத்தமாகவே இருக்கும் என நம்பலாம்!

நன்றி: இந்து தமிழ் திசை (11  – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories