TNPSC Thervupettagam

இந்தியத் தத்துவம் மாக்ஸ் முல்லரும் அம்பேத்கரும்

December 6 , 2024 36 days 61 0

இந்தியத் தத்துவம் மாக்ஸ் முல்லரும் அம்பேத்கரும்

  • இந்தியத் தத்துவத்தின் நீண்ட பரப்பில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஆகப்பெரும் தாக்கத்தைச் செலுத்தியவர்கள் இருவர். ஒருவர் மாக்ஸ் முல்லர் (Max Müller), மற்றொருவர் அம்பேத்கர். இருவரும் இந்தியத் தத்துவத்தை முன்வைத்து எழுதியவை இந்தியாவின் சிந்தனை மரபை இருவேறு கோணத்தில் புரிந்துகொள்ள உதவுபவை. மாக்ஸ் முல்லர் இந்தியாவின் வேதம், மதம், தத்துவம் ஆகியன குறித்து ஆராய்ந்தவர்.
  • கீழைத் தேயங்களின் தத்துவங்கள் மீது ஈர்ப்புக் கொண்ட அவர் மரிக்கும்போது ஒன்பது வயதுச் சிறுவனாக இருந்த அம்பேத்கர், பின்னாளில் மாக்ஸ் முல்லர் தம் ஆய்வுக்குத் தேர்ந்துகொண்ட அதே வேதம், சமயம், தத்துவம் ஆகியவற்றையும் ஆய்வுக்குத் தேர்ந்துகொண்டார்.
  • பொதுவாக, மாக்ஸ் முல்லர் மீது ‘ஒருபக்கச் சார்புடையவர்’ என்கிற விமர்சனம் அம்பேத்கர் காலத்​திலேயே உருவாகி​விட்​டிருந்தது. அந்தக் கண்ணோட்​டத்​துடன் மாக்ஸ் முல்லரை அம்பேத்கர் அணுகவில்லை. மாறாக, இந்தியா​வுக்கு வெளியில் இருந்​து​கொண்டு ஐரோப்​பியர்​களால் இந்தியாவின் வேதங்​களும் மதங்களும் எப்படிப் பார்க்​கப்​பட்டன; பார்க்​கப்​படு​கின்றன என்பதைப் புலப்​படுத்து​வதற்கு அம்பேத்கர் சான்றாகத் தேர்ந்​து​கொண்​ட​வற்றில் மாக்ஸ் முல்லரின் ஆய்வும் ஒன்று.

மதத் தத்துவம்:

  • அம்பேத்கர் ‘மதத் தத்துவம்’ என்பதை விளக்கவோ, விளங்​கிக்​கொள்ளவோ, அறுதியாக வரையறுக்கவோ முடியாத சிக்கலான பொருண்​மையைக் கொண்ட சொல்லாகக் கருதி​னார். ‘மதத் தத்துவம் என்பது என்ன என்கிற தெளிவான நோக்கை நான் பெற முடிய​வில்லை என்பதை ஒப்புக்​கொள்​கிறேன்’ என்றார். ஆனால் அவரது வாசிப்பு, அறிதலின் அடிப்​படையில் ‘மதத் தத்துவம்’ என்பதற்குப் புதியதொரு வரையறையை உருவாக்க விரும்​பி​னார். அதற்கு நேர்/எ​திர்மறை என்னும் இரண்டு நிலைகளிலும் மாக்ஸ் முல்லரின் மதத் தத்துவம் பற்றிய கருத்தை எடுத்​துக்​கொண்​டார்.
  • மதம் பற்றிச் சொல்லும்போது மதம் வரையறைக்கு உட்பட்டது. தத்துவம் வரையறைக்கு உட்படாதது. மதமும் தத்து​வமும் எதிரெ​தி​ரானவை. பகையாளிகள் என்றுகூடச் சொல்லலாம். அனுபவத்தைப் பகுப்​பாய்வு செய்து விளக்கி​யுரைப்பதே தத்துவம் என்றெல்லாம் விளக்கும் அம்பேத்கர், இதற்கு மேலும் விரிக்க வேண்டாம் என்று கருதி​யதைப் போல மிகச் சுருக்கமாக அதே நேரத்தில் தெளிவாக, ‘அனுபவத்தைப் பகுப்​பாய்வு செய்து விளக்கி​யுரைப்பதே தத்து​வ​மாகும்.
  • மனிதர்​களின் தார்மிக ஒழுக்​க​முறையில் வாழும் சமுதாய அமைப்​பினைக் கொண்டு​வருவதை நோக்க​மாக​வும், குறிக்​கோளாகவும் கொண்ட தெய்விக ஆட்சியின் லட்சிய அமைப்பை விவரிப்பதே மதமாகும்’ என்று தத்து​வத்​துக்கும் மதத்துக்கும் விளக்கம் தந்து​விட்டு, ‘மதத் தத்துவம் என்பது ஒரு தனிப்பட்ட தரமான அறிவியல் ஆகிறது’ என்றார்.
  • அம்பேத்​கரைப் பொறுத்​தமட்டில் பொதுவான ‘மதத் தத்துவம்’ என்கிற ஒன்று இருப்பதாக அவர் கருதவில்லை. மதங்கள் ஒவ்வொன்​றுக்கும் அதற்கே​யுரிய தனித்​தன்​மை​யுடன் தத்து​வங்கள் இருப்பதாக நம்பி​னார். அதனாலேயே ‘மதத் தத்துவம்’ என்கிற கருத்​தி​யலின் இருப்பை மறுத்து, ஒரு மதத்தைப் பற்றிய தத்து​வம்தான் உள்ளது என்பதாகக் குறிப்​பிட்​டார்.

அநுக்​கிரமணி​கைகள்:

  • மிகப் பழைய வேத இலக்கி​யங்​களுக்கு அதன் உள்ளடக்கம் பற்றித் தொகுத்​தளிக்​கப்பட்ட பொருள் அடைவுக்கு ‘அநுக்​கிரமணி​கைகள்’ என்று பெயர். மதத் தத்துவ விவரிப்பின் ஒரு பகுதியாக வேதத்தைப் பற்றி விளக்​கும்போது மாக்ஸ் முல்லர் ‘அநுக்​கிரமணி​கைகள்’ பற்றிக் குறிப்​பிடு​வார். வேதத்தின் ஒவ்வொரு பகுதி​யையும் அதன் பூர்விகத் தன்மை​யினது இயல்பிலிருந்து அவர்காலத் திரிபு வரை நுட்பமாக விளக்​கிவரும் முல்லர், ஓரிடத்தில் ரிக் வேதத்​துக்குச் செய்யப்​பட்​டிருக்கும் பல அநுக்​கிரமணி​கை​களில் காத்தி​யாயனரால் செய்யப்பட்ட அநுக்​கிரமணி​கையைச் சிறப்பு​டைய​தாகச் சுட்டு​வார்.
  • இதன்வழி மாக்ஸ் முல்லர் ‘வேதங்கள் மனிதர்​களால் செய்யப்​பட்டவை’ என்னும் கருத்​துடையவர் என்பதை அறியலாம். இந்தக் கருத்தை எடுத்​துக்​கொள்ளும் அம்பேத்கர், அதை வலுவாக நிறுவும் பொருட்டு, வேதங்​களி​லிருந்தே முப்பதுக்கும் மேற்பட்ட சான்றுகளை எடுத்​துக்​காட்டி தம்முடைய கருத்தை முன்வைக்​கிறார் (‘டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பேச்சும் எழுத்​தும்’, தொகுதி 8, பக்கம் 34-37). இது மாக்ஸ் முல்லரின் கருத்தோடு அம்பேத்கர் உடன்படும் இடம்.
  • ஆனால் இது மோனியர் வில்லி​யம்ஸ், சார்லஸ் வில்கின்ஸ், சம்ஸ்​கிருத அறிஞரும் வடமொழி இலக்கிய வரலாற்றை எழுதி​ய​வருமான கா.கைலாச​நாதக் குருக்கள் உள்ளிட்​டோரின் ‘வேதங்கள் மனிதர்​களால் செய்யப்​ப​டாதது’ என்கிற கருத்​தி​யலுக்கான மறுப்​பாகும். மாக்ஸ் முல்லர், அம்பேத்கர் வரிசையில் ‘வேதங்கள் மனிதர்​களால் செய்யப்​பட்டவை’ என்கிற கருத்​துடைய பலர் இருந்த ​போ​திலும் அவர்களி​லிருந்தும் அம்பேத்கர் வேறுபட்​டார்.
  • மாக்ஸ் முல்லர், தியோடர் பென்ஃபே, ஆல்பிரட் லுட்விக் உள்ளிட்ட அறிஞர்கள் ‘வேதங்கள் மனிதர்​களால் செய்யப்​பட்டவை’ என்று சொல்லிக்​கொண்டே சமூகத்தில் வேதங்கள் செலுத்தும் அதிகாரத்தை ஏற்றுக்​கொள்ளவோ நியாயப்​படுத்தவோ தயங்கவில்லை. ஆனால், அம்பேத்கர் அதை நிராகரித்​தார். இந்த நிராகரிப்பின் நுணுக்கம்தான் மாற்றுப் பார்வையிலான சமூகவியல் ஆய்வு​களுக்கு அம்பேத்கரை நெருக்​க​மாகக் கொண்டு​வந்து சேர்த்தது.
  • கடவுள் குறித்த பார்வை:
  • வேதங்​களில் ஏராளமான கடவுள்கள் குறிக்​கப்​பட்​டிருக்​கின்றன. ஒவ்வொரு கடவுளையும் அவர்களின் தொழில், இயக்கம் சார்ந்து வகைப்​படுத்த முடியும். சதபத பிராமணத்​தின்படி கடவுளர்கள் தோற்றம் பெற்ற மூலத்தை வைத்து ஒரு நேர்கோட்டு வரிசையை உருவாக்கிப் பார்க்​கவும் செய்ய​லாம். இவை கடவுளின் இடம், தகுதி ஆகியவற்றை ஆய்வுசெய்​வதற்கு உதவும். இதே பார்வையைத் தங்களுடைய ஆய்வில் வேறொரு கோணத்தில் மாக்ஸ் முல்லரும் அம்பேத்​கரும் செலுத்​தி​யிருக்​கிறார்கள்.
  • கடவுளர்​களைத் தம்முடைய நூல்களின் பல இடங்களில் சிறிதும் பெரிதுமாக அம்பேத்கர் ஆய்வுக்கு உட்படுத்​தி​யிருந்​தா​லும், அதைவிட முக்கியமான இடம் மாக்ஸ் முல்லரின் கடவுள் குறித்த பார்வையை மறுக்​கக்​கூடிய பகுதி​யாகும். மாக்ஸ் முல்லர் ‘ஒவ்வொரு கடவுளும் பிற கடவுளர்​களின் சக்தி​யினால் கட்டுப்​படுத்​தப்​பட்​ட​வர்​களாகவோ உயர்ந்​தவர்​களாகவோ தாழ்ந்​தவர்​களாகவோ அவர்கள் கருதப்​பட​வில்லை.
  • எங்குமே எந்தக் கடவுளும் அடிமை​யாக்​கப்​பட​வில்லை’ என்றார். (Sacred Books of East. Part IV, Page.No.11). மாக்ஸ் முல்லர் தன்னுடைய ஆய்வுக்குப் பயன்கொண்ட முதன்மை ஆதாரம் எதுவோ அதைக்​கொண்டே இந்தக் கூற்றை அம்பேத்கர் மறுத்​தார். வேதங்​களில் பல இடங்களில் சில கடவுளர்கள் பிற கடவுளரைவிட உயர்ந்​தவர்​களாகவும் முழு முதலானவர்​களாகவும் கூறப்​படு​கிறார்கள். இரண்டாவது மண்டலத்தின் முதல் பாடலில் ‘அக்னி’ என்னும் கடவுள் பிரபஞ்​சத்தை ஆள்கிறவர், மனிதர்​களின் அரசர், தந்தை, சகோதரன், மகன், நண்பன் என எல்லா​மு​மாகக் கருதப்​படு​பவ​ராகக் குறிப்​பிடப்​படு​கிறார்.
  • பின்னர் வேறொரு இடத்தில் அக்னியின் இடத்தில் இந்திரன் வைக்கப்​படு​கிறார். வேத மந்திரங்​களிலும் பிராமணங்​களிலும் இந்திரன் மிகவும் வலிமையான கடவுளாகச் சித்திரிக்​கப்​படு​கிறார். பின்னர், இந்திரன் இடத்தில் சோமனும் வருணனும் வைக்கப்​படு​கிறார்கள். இந்நான்கு கடவுளுக்கும் நிரந்​தரமான வைப்பிடம் இல்லை.
  • அவர்களுக்குள் கீழ்மேல் நகர்வு இருந்தது. வேதங்​களில் கூறப்பட்ட முப்பது மூன்று வேதக் கடவுள்​களில் மேற்சொன்ன நான்கு கடவுளர்​களுக்கு அளிக்​கப்​பட்​டதைப் போன்ற உயர்வான இடம் பிற கடவுள​ருக்கு அளிக்​கப்​பட​வில்லை (‘டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பேச்சும் எழுத்​தும்’, தொகுதி 8, பக்கம் 110) என மாக்ஸ் முல்லரை மறுக்கும் அம்பேத்கர், சதபத பிராமண காலத்தில் கடவுளர்​களுக்கு இடையே தொடர்ந்து ஏற்றத்​தாழ்வு இருந்தது என்கிறார்.
  • இந்த மறுப்பு முக்கிய​மானது. பல சமூகங்கள் தமக்கான வரலாற்றை எழுதி​யபோது ஏதேனும் ஒரு கடவுளைத் தம்முடைய தோற்றுநராக வரிந்​து​கொண்டன. அந்த வகையில் வரலாற்றில் கடவுளர்​களின் ஏற்ற இறக்கங்​களைச் சமூகங்​களின் ஏற்ற இறக்கங்​களோடு பொருத்திப் பார்க்க முடியும். ஒரு சமூகத்தின் ‘சமூக இடம்’ எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க​வில்லை.
  • இருக்​கவும் முடியாது என்பதை அம்பேத்​கரின் மறுப்​பிலிருந்து நாம் வருவித்​துக்​கொள்​ளலாம். இந்தியத் தத்துவம் சார்ந்த எந்தவொரு ஆய்வுப்​பொருளிலும் இந்தியா​வுக்கு வெளியி​லிருந்தும் உள்ளிருந்தும் பார்ப்​பதால் உருவாகும் வேறுபாட்டு இடைவெளிகளை இனம் காண வேண்டு​மென்றால் மாக்ஸ் முல்லரும் அம்பேத்​கரும் அவசியத் துணையாவர்.
  • டிசம்பர் 6 - மாக்ஸ் முல்லரின் பிறந்த நாள்
  • (இரு நூற்றாண்டு நிறைவு);
  • அம்பேத்​கரின் நினைவு நாள்​

நன்றி: இந்து தமிழ் திசை (06 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories