- உலகின் காலநிலையைச் சீராக வைப்பதில் பெருங்கடல்களுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு.அதே நேரம், காலநிலை மாற்றம் தீவிரமடையும்போது, பெருங்கடல்களும் சேர்ந்தே பாதிக்கப்படுகின்றன. ஆகவே, காலநிலை சார்ந்த உரையாடல்களின்போது கடலை ஒரு காரணியாகவும், பாதிக்கப்படக்கூடிய வாழிடமாகவும் ஒருசேர நாம் கவனித்தாக வேண்டும்.
- உலகின் மூன்றாவது பெருங்கடலாகக் கருதப்படும் இந்தியப் பெருங்கடலானது கிட்டத்தட்ட 7 கோடி சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. கடந்த சில ஆண்டுகளாகக் காலநிலை மாற்றத்துக்கும் இந்தியப் பெருங்கடலுக்கும் இடையே உள்ள தொடர்பு அதிகமாக ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.
- பிற கடற்பகுதிகளோடு ஒப்பிடும்போது இந்தியப் பெருங்கடலின் வெப்ப அதிகரிப்பு விகிதம் அதிகம் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் பின்னணியில், சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஓர் ஆய்வின் முடிவுகள் மிகவும் கவலை அளிப்பவையாக இருக்கின்றன.
- ‘உலகளாவிய காலநிலை அமைப்பில் இந்தியப் பெருங்கடலின் பங்கு’ என்கிற தலைப்பிலான புத்தகத்தில், ‘வெப்பமண்டல இந்தியப் பெருங்கடலுக்கான எதிர்காலக் கணிப்புகள்’ என்கிற தலைப்பில், இந்த ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டிருக்கிறது.
- வெப்பமண்டல வானிலை ஆராய்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த ராக்சி மேத்யூ கோல் என்ற காலநிலை விஞ்ஞானியின் தலைமையிலான ஆய்வுக் குழுவினர், இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கின்றனர். கடந்த பல பத்தாண்டுகளாக இந்தியப் பெருங்கடலில் சேகரிக்கப்பட்டிருக்கும் தரவுகளின் அடிப்படையில் இந்தக் கணிப்புகளை அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்தியப் பெருங்கடலில் அதிகரிக்கும் வெப்பம்:
- உலகளாவிய கடல்களில் ஏற்படும் வெப்ப அதிகரிப்பில் கால் பங்கு 1990ஆம் ஆண்டு முதல் இந்தியப் பெருங்கடலில்தான் ஏற்பட்டிருக்கிறது. பசிபிக் கடலிலிருந்து இந்தியப் பெருங்கடலுக்கு வெப்பம் கடத்தப்படுவது ஒரு முக்கியமான காரணமாகச் சொல்லப்படுகிறது.
- இந்தியப் பெருங்கடலில் நிரந்தரமாகவே 28 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை கொண்ட ஒரு வெப்பமான பகுதி உண்டு. இதை ‘உலகத்தின் வெப்ப இன்ஜின்’ என்று அழைக்கிறார்கள். காலநிலை மாற்றத்தால் இந்தப் பகுதியின் வெப்பம் அதிகரித்து, இந்தப் பகுதியின் பரப்பளவும் அதிகரித்துவருகிறது.
- 1951 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் ஆண்டுக்கு 0.15 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பு என்கிற விகிதத்தில் இந்தியப் பெருங்கடலின் சராசரி வெப்பம் 1 டிகிரி செல்சியஸ் அதிகரித்திருக்கிறது. இது இப்படியே தொடர்ந்தால் 2020 முதல் 2100 வரையிலான காலகட்டத்தில் இந்தியப் பெருங்கடல் மேற்பரப்பின் வெப்பமானது 1.4 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
- மேற்பரப்பில் மட்டுமல்லாமல், கடலின் ஆழமான அடுக்குகளிலும் வெப்பநிலை உயர்ந்துவருகிறது. 2,000 மீட்டர் ஆழம்வரையிலான கடற்பகுதியில் ஒரு தசாப்தத்துக்கு 4.5 ஜெட்டா-ஜூல்ஸ் (zetta-joules) அளவில் வெப்பம் அதிகரித்துவருகிறது. காலநிலை மாற்றம் தீவிரமடையும்போது ஒரு தசாப்தத்துக்கு 16 முதல் 22 ஜெட்டா-ஜூல்ஸ் என்கிற அளவில் இந்த விகிதம் மாறுபடும்.
- ஆய்வுக் குழுவின் தலைவரான ராக்சி கோல் இதை ஓர் உதாரணத்தோடு விளக்குகிறார். “ஒவ்வொரு நொடியும் ஒரு ஹிரோஷிமா அணுகுண்டு அளவிலான ஆற்றலைக் கடலில் சேர்ப்பதாகக் கற்பனை செய்துகொள்ளலாம். இப்படியே 10 ஆண்டுகளுக்கு ஆற்றலைச் சேர்த்தால் எந்த அளவுக்கு வெப்பமும் ஆற்றலும் கடலில் உயருமோ அதற்குச் சமமானது இந்தக் கணிப்பு” என்று அவர் விளக்குகிறார்.
- ஜெட்டா-ஜூல் என்கிற அலகு மூலமாக இந்த முடிவை அணுகுவதைவிட, ராக்சி கோல் தரும் அணுகுண்டு உதாரணத்தின் பின்னணியில் பார்த்தால் ஆய்வு முடிவுகள் பேரதிர்ச்சி தருபவை.
- இந்தியப் பெருங்கடலின் சராசரி வெப்பநிலை அதிகரிக்கும்போது, இதைச் சுற்றியுள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளின் காலநிலை தீவிரமான வகையில் பாதிக்கப்படும். தீவிர மழை, வறட்சி, பருவமழைக்கு முந்தைய வெப்ப அலைகள் போன்றவை அதிகரிக்கும். இந்தியப் பெருங்கடல் பகுதிகளிலிருந்து உருவாகும் புயல்கள் தீவிரப் புயல்களாக உருமாறும் வேகமும் இதன்மூலம் அதிகரிக்கலாம்.
கடலில் வெப்ப அலைகள்:
- நிலத்தைப் போலவே கடலிலும் வெப்ப அலைகள் ஏற்படுகின்றன. கடலின் வெப்பநிலை தீவிரமாக அதிகரித்து, அதே நிலையில் ஐந்து நாள்கள்வரை நீடித்தால், அது கடல்சார் வெப்ப அலை (Marine heatwave) என்று அழைக்கப்படுகிறது. வழக்கமாக, இந்தியப் பெருங்கடலில் ஆண்டுக்கு 20 நாள் வெப்ப அலைகள் காணப்படும்.
- ஆனால் 2050-க்குள் ஆண்டுக்கு 200 முதல் 250 நாள்கள் வரை வெப்ப அலைகள் நீடிக்கலாம் என்று இந்த ஆய்வு கணித்திருக்கிறது. அதாவது, ஆண்டில் மூன்றில் ஒரு பங்கு காலகட்டம் வெப்ப அலைக் காலகட்டமாக இருக்கும். வெப்ப அலை நாள்களையும் கடல் வெப்ப உயர்வையும் சேர்த்துப் பார்க்கும்போது, 2050-க்குப் பிறகு இந்தியப் பெருங்கடலானது நிரந்தரமான வெப்ப அலை கொண்டதாகவே இருக்கும் என்று ஆய்வுக் குழுவினர் விளக்குகிறார்கள்.
- ஒரு வெப்ப அலையின் சராசரி வெப்பநிலையும் இந்தக் காலகட்டத்துக்குள் கணிசமாக உயரும். கடலில் வெப்ப அலைகள் அதிகமாகும்போது மீன்களின் வலசை, பவளத்திட்டு வாழிடங்கள், கடல்சார் பல்லுயிரியம் போன்ற பல கூறுகள் பாதிக்கப்படும். இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் வாழும் 70 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களதுவாழ்வாதாரத்துக்குக் கடலை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். கடல் வெப்ப அலைகள் அதிகரிக்கும்போது இவர்களின் வருமானமும் பாதிப்புக்குள்ளாகும்.
வேதிக்கூறுகளில் மாற்றம்:
- பச்சையம் கொண்ட உயிரிகள் மூலமாக ஆற்றலானது உணவாக மாற்றப்படும் விகிதம் முதன்மை உற்பத்தித்திறன் (Primary productivity) எனப்படுகிறது. முதன்மை உற்பத்தித் திறன் என்பது ஒரு வாழிடத்தின் செழுமைக்கான குறியீடு. இது குறைந்துவிட்டால், அங்கே இருக்கக்கூடிய உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்படும்.
- இந்தியப் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் இருக்கும் அரபிக் கடல் உள்ளிட்ட கடற்பகுதியானது மிகவும் செழுமையானதாகக் கருதப்படுகிறது. 1998 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் இந்தப் பகுதியின் முதன்மை உற்பத்தித்திறன் 30% குறைந்திருக்கிறது. இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் அரபிக் கடல் பகுதியின் முதன்மை உற்பத்தித்திறன் 8-10% வரை மேலும் சரியும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
- கடல்நீர் அமிலமாதல் என்பது காலநிலை மாற்றத்தின் முக்கியமான கூறுகளில் ஒன்று. தொழிற்புரட்சிக்குப் பிந்தைய காலகட்டத்தில், கடலின் சராசரி அமில-காரக் குறியீடு (pH) அலகானது 8.16லிருந்து 8.06ஆகக் குறைந்திருக்கிறது. இது இன்னும் குறையும் என்றும், இந்த நூற்றாண்டின் முடிவில் இந்தியப் பெருங்கடலின் அமில-காரக் குறியீடு 7.7 வரை போகலாம் என்றும் இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
- கடலின் வேதிக்கூறுகள் மாறுபடும்போதும் முதன்மை உற்பத்தித் திறன் குறையும்போதும் மீன்வரத்து குறையும். இதனால் சிறு-குறு மீனவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். கடலின் அமிலத்தன்மை அதிகரிக்கும்போது பவளத்திட்டுகள், ஓடுள்ள மெல்லுடலிகள் ஆகியவை அதிகமாகப் பாதிக்கப்படும்.
- ஒட்டுமொத்தமாக இந்த ஆய்வின் முடிவுகள் இந்தியாவுக்குப் பெரும் கவலையளிப்பவையாக இருக்கின்றன. காலநிலை மாற்றத்துக்கான தீர்வைநோக்கி நாம் விரைவாகப் பயணிக்க வேண்டும் என்பதை ஆய்வு முடிவுகள் மீண்டும் ஒருமுறை அழுத்தமாக வலியுறுத்துகின்றன.
- நன்றி: இந்து தமிழ் திசை (10 – 05 – 2024)